வாழ நினைத்தால் வாழலாம்!
இந்தியா ஒரு பயங்கரமான பாதாளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.
“படிப்பதற்கு கல்லூரி இல்லை. படித்து வந்தாலும் வேலை இல்லை!” என்ற நிலைமை பெருகிக் கொண்டே போகிறது.
இனி எவ்வளவு பெரிய மேதைகள், ஞானிகள் ஆட்சி பீடம் ஏறினாலும், அந்தத் திண்டாட்டத்தை முழுக்க ஒழித்து விடுவதென்பது கடினமே.
ஆகவே, பட்டம் பெற்ற அத்தாட்சியை கையிலே வைத்துக் கொண்டிருக்கும் இளைஞன், வெறும் படிக்கட்டுகளில் தினம் தினம் ஏறி இறங்கிப் பயனில்லை.
‘குமாஸ்தா வேலையாவது கிடைத்தால் போதும்’ என்று கருதும் சுபாவமும் மாற வேண்டும்.
நமது நாட்டில் பெரிய மனிதர்கள் பெரும்பாலோர் மனிதாபிமானம் இல்லாதவர்கள்.
அவர்களிடம் போய்ச் சிபாரிசுகளுக்குக் கைக்கட்டி நிற்பது அடிமைத் தனமானது; அவமானகரமானது; ஆனாலும் பரவாயில்லை என்றாலோ பயனும் அற்றது.
அதைவிடச் சற்றுத் தனியாக உட்கார்ந்து, சுயபுத்தியோடு சிந்தியுங்கள்; வேலையில்லாத் திண்டாட்டத்தில் இருந்து விடுபட ஒரு நல்ல வழி உங்களுக்குத் தெரியும்.
இங்கே என் கதையை கொஞ்சம் சொல்வது பொருந்தும்.
நான் பன்னிரண்டு வயதிலேயே எட்டாம் வகுப்புப் படித்து முடித்தேன். அதற்கு மேல் படிப்பை எட்டிப் பார்க்க வசதியில்லை. ‘பிள்ளை ஊர் சுற்றுகிறானே, உருப்படாமல் போய்விடுவானே’ என்று பெற்றோர் கவலைப்பட்டார்கள். என் தந்தை, ஏ.எம்.கடையில் பர்மாவில் தலைமை நிர்வாகியாக இருந்தார். அதனால் என்னைச் சென்னைக்கு அழைத்து வந்து அவர்களுக்குரிய திருவொற்றியூர் ’அஜாக்ஸ்’ தொழிற்சாலையில் டெஸ்பாட்சிங் குமாஸ்தாவாகச் சேர்த்து விட்டார்.
வாரம் ஐந்து ரூபாய்ச் சம்பளம் எனக்குக் கட்டுப்படியாகத்தான் இருந்தது. ஆனாலும் அது வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை என்று நான் கருதினேன்.
கடிதங்களைப் பதிவு செய்யும் ரிஜிஸ்தருக்குள்ளேயே ஒரு நாற்பது பக்க நோட்டை வைத்துத் தினமும் கவிதை எழுதிக் கொண்டிருந்தேன்.
அப்போது அங்கே அக்கெளண்டண்டாக இருந்த பத்மநாபன் என்பவர், ‘கவிதை ஆத்மாவுக்குத்தான் திருப்தி; சோறு போடாது’ என்பார்.
பிறகு கதை எழுதிப் பார்த்தேன்.
பிறகு அந்த வேலையை விட்டு, அலைந்து திரிந்து ஒரு பத்திரிகையில் இடம் பிடித்துக் கொண்டே முன்னேறினேன்.
படிப்புக் குறைவாக உள்ள ஒருவன், ஏதாவது ஒரு வழியில் சுயமுயற்சியில் முன்னுக்கு வந்துவிட முடியும் என்றால் படித்தவர்களால் ஏன் முடியாது?
தலையில் இருக்கும் கையை எடுங்கள்.
உங்கள் அறிவு ஆராய்ச்சியில் இறங்கட்டும்.
ஏதோ ஒரு தொழில் உங்கள் கண்களுக்குத் தெரியும்.
சென்னை ஸ்டூடியோக்களிலே ஒரு நடுத்தர வயதுக்காரர் அடிக்கடி காணப்படுவார். கையில் ஒரு பெரிய பையிருக்கும். அதில் அப்பளம், வடாகம், ஊறுகாய், கருவேப்பிலைப் பொடி அனைத்தும் இருக்கும். அவை கடையில் வாங்கியவையல்ல; அவரும் அவர் மனைவியும் மக்களும் தயார் செய்தவை; எந்தப் புகழ் பெற்ற கம்பெனியில் வாங்கினாலும் அவ்வளவு சுவையாக இராது. ஸ்டுடியோவில் இசைக் குழுவினர், டைரக்டர்கள் ஆகியோரோடு, நானும் அதைத்தான் வாங்குவேன். எப்படியும் அறுபதில் இருந்து எழுபது ரூபாய்க்கு விற்று விடுவார். குறைந்தது இருபது ரூபாய் லாபம் கிடைக்கும்.
இவர் குடியிருக்கும் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள், தாங்கள் தேவைக்கெல்லாம் அவரிடம் தான் வாங்குவார்கள்.
மாதம் குறைந்தது எழுநூற்றைம்பது ரூபாய் கிடைக்கும்.
மனைவி, மக்களோடு வீட்டிலேயே உட்கார்ந்து அப்பளம் போடுவது, ஊறுகாய் போடுவது; காலையில் குழந்தைகள் பள்ளிக்குப் போகும்; மனைவி சமையல் செய்யத் தொடங்குவாள்; அவர் விற்பனைக்குப் புறப்படுவார்.
கைகட்டி நிற்காத அற்புதமான வாழ்க்கை.
இப்போது மிகப் புகழ் பெற்றிருக்கும் 777-ஆம் நெம்பர் திடீர்ச் சாம்பார், திடீர்த் தக்காளி சூப் உங்கள் நினைவுக்கு வரும்.
முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஸ்ரீராமபவன், தம்பு செட்டி தெருவில் ஒரு சிறு கட்டடத்தில் இருந்தது. குறிப்பிட்ட சிலரே உட்கார்ந்து சாப்பிடக்கூடிய அந்த இடத்தில், வெறும் இட்லி சட்னியில் தொடங்கிய அந்த வியாபாரம், இப்போது ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி விட்டது.
தொழிலில் எந்தத் தொழில் கேவலம்? ‘உட்லாண்ட்ஸ் ஹோட்டல்’ கிருஷ்ணா ராவ் அவர்கள் தன்னுடைய வரலாற்றை என்னிடம் சொன்னார்கள்.
முதலில் வீட்டில் பலகாரம் செய்து, அதைத் தட்டிலே தூக்கி விற்பனை செய்தாராம்.
அதிலே சிறுகச் சிறுக மிச்சமான பணத்தைச் சேர்த்துப் பழைய உட்லாண்ட்ஸைக் குத்தகைக்கு எடுத்தாராம். அந்தக் குத்தகைக் காலத்தில் மிச்சமான பணத்தைக் கொண்டு புது உட்லாண்ட்ஸை விலைக்கு வாங்கினாராம்.
(எலியட்ஸ் ரோட்டில் அந்தப் புது உட்லாண்ட்ஸ் இருக்கும் கட்டடம்தான் என்னை வேலைக்குச் சேர்த்துக் கொண்ட ஏ.எம்.எம். முருகப்பச் செட்டியாரின் கட்டடம்.)
இப்படி ஹோட்டல் தொழிலில் முன்னேறியவர்கள் பலர். சமையல் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர், ஒரு அசைவ ஹோட்டல் நடத்தத் தொடங்கி, ஐந்து டாக்ஸிகளும் ஒரு பங்களாவும் வாங்கியிருக்கிறார்.
சென்னை நகரில் சில கூர்க்காக்கள் உண்டு. இவர்களை யாரும் வேலைக்கு நியமித்ததில்லை. தாங்களாகவே இரவில் சில குறிப்பிட்ட தெருக்களில் தரையைத் தட்டிக்கொண்டு ‘ரோந்து’ வருவார்கள். தெருவாசிகளுக்கு தைரியம் கொடுப்பது போல் அடிக்கடி விசில் அடிப்பார்கள்; ஆபத்தில் வருவார்கள். மாதம் பிறந்தால் ஒவ்வொரு வீட்டுக்காரரும் இரண்டு ரூபாயிலிருந்து ஐந்து ரூபாய் வரை கொடுப்பார்கள். எப்படியும் ஒரு கூர்க்காவுக்கு முன்னூறு ரூபாய்க்கு மேல் சேர்ந்து விடும்.
பதினைந்து வருஷங்களுக்கு முன், ஒரு கையிழந்த முடவர் ஒருவர் என்னிடம் வேலை கேட்டார்.
நான் அவருக்கு ஒரு டிரங்க் பெட்டி வாங்கிக் கொடுத்து சுமார் இருநூறு ரூபாய் பெறுமானமுள்ள குடும்ப வாழ்க்கை பற்றிய புத்தகங்களை ஒரு பதிப்பகத்திலிருந்து வாங்கிக் கொடுத்தேன். குழந்தை வளர்ப்பு, சமையல் கலை போன்ற புத்தகங்கள் அவை.
வீட்டுக்கு வீடு போய், அந்தப் புத்தகங்களை விற்றார். முதல் நாளே நூறு ரூபாய்க்கு விற்பனை. அதற்குக் கமிஷன் இருபத்தைந்து ரூபாய், பிறகு அதையே அவர் தொடர்ந்தார்.
மாதம் அந்தத் தனி நபருக்கு ஐந்நூறு ரூபாய்க்குக் குறையாமல் வருமானம் வந்தது.
பிறகு வசதியான சாப்பாடு, தங்குவதற்கு ஒரு அறை; ஓரளவுக்குப் பணம் சேர்ந்ததும் கிராமத்தைப் பார்க்கப் போய்விட்டார்.
பெரும் பணத்தைச் செல்வழித்து, பி.ஏ., எம்.ஏ. என்று பட்டம் வாங்கி, குமாஸ்தா வேலைக்குக் குட்டிக்கரணம் போடுகின்ற மடத்தனத்தை விட, இத்தகைய சுய தொழில்கள் எவ்வளவு கெளரவமானவை.
சாப்பாட்டு விடுதி வைப்பது கெளரவக் குறைவா?
புத்தகத்தைத் தூக்கி விற்பது மரியாதைக் குறைவா?
‘வேலை கிடைக்கவில்லை, ஒரே துன்பம்’ என்று மூக்கைச் சிந்துவதை விட, இப்படி ஒரு முயற்சி செய்தால் என்ன?
சென்னையில் இருந்து திருச்சி போகும் வழியில் தோழுப்பேடு என்றொரு கிராமம். அங்கு ஒரு ‘ரயில்வே கேட்’ உண்டு. கேட் அடைத்திருக்கும் போது கார் நிற்க வேண்டி வரும். கிராமத்துப் பெண்கள் மோர் விற்பார்கள். ஒரு டம்ளர், பத்துக்காசு.
நான் இரண்டு டம்ளர் குடித்துவிட்டு, இரண்டு ரூபாய் கொடுப்பேன்; என் மனைவி கோபித்துக் கொள்வாள்.
“வேலை இல்லை என்று பல்லவி பாடாமல், பிச்சை எடுக்காமல் இப்படித் தொழிலைச் செய்கிறாளே ஒருத்தி, அதைக் கெளரவிக்க வேண்டுமல்லவா?” என்பேன்.
வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில்?
வேலை கிடைக்காதது ஒரு துன்பமல்ல; வேலை உங்களுக்குள்ளேயே இருக்கிறது.
முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் கண்டடைவீர்கள்.
மேஜையில் உட்கார்ந்து அழுக்குப் படாமல் எழுதிக் கொண்டிருப்பதுதான் கெளரவம் என்று கருதினால், கடன்காரனாகிக் கைகட்டி நிற்கும் போது, அந்தக் கெளரவம் முழுவதும் போய்விடும்.
சந்தோஷமாக ஒரு குடும்பம் முழுவதும் பார்க்கக் கூடிய தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, வீட்டுக்குள்ளேயே பெண்டாட்டி பிள்ளைகளோடு பேசிக்கொண்டு, லாபகரமானதாகவும் தொழில் நடத்த முடியும்.
சிவகாசி நகரில் ஒவ்வொரு குழந்தையும் ஒரு நாளைக்கு மூன்று ரூபாய் சம்பாதிக்கிறது. ஒவ்வொரு தாயும் ஐந்து ரூபாய் சம்பாதிக்கிறாள். தகப்பன் பத்து ரூபாய் வரை சம்பாதிக்கிறான்.
அந்த ஊரில் நீங்கள் சினிமா பார்க்கப் போனால், முண்டாசு கட்டி முதல் வகுப்பில் உட்கார்ந்திருக்கும் தொழிலாளிகளையும், அவன் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் முதலாளிகளையும் சந்திக்க முடியும்!
நம் வாழ்க்கையை நாமே நடத்திச் செல்லக் கடவுள் நாலாயிரம் வழிகளைத் திறந்து விட்டிருக்கிறார்.
இந்து தர்மப்படி, ஆயிரம் பேர்கள் வேலை பார்க்கும் ஒரு ஆபிஸில் குமாஸ்தாவாக இருந்து கூட்டத்தோடு கோவிந்தா போடுவதை விட, ஒரு சிறு தொழிலைச் சுய தர்மமாக ஏற்றுக் கொண்டு நடக்கிறவன் பொருளாதாரத்தில் மட்டுமல்ல; பக்தியோகத்திலும் வெற்றி பெற்று விடுகிறான்.
புராணத்தில் ஒரு கதையுண்டு.
கிருஷ்ணனுக்கு ஒரு முறை துலாபாரம் நடத்தினார்களாம். கிருஷ்ணன் தராசின் ஒரு தட்டில் ஏறி நின்றாராம். சத்தியபாமா மறுதட்டில் நகைகளை அனைத்தையும் டன் கணக்கில் அள்ளிக் கொட்டினாராம். எடை பூர்த்தியாகவில்லை. ருக்மிணி பக்தியோடு கிருஷ்ணனின் கால்களைத் தொட்டு வணங்கி, ஒரு துளசி இலையைக் கிள்ளி அந்தத் தட்டிலே வைத்தாளாம். உடனே கிருஷ்ணனுடைய தட்டு உயர்ந்து அந்தத் தட்டு தாழ்ந்து நின்றதாம்.
பக்தி சிரத்தையோடு செய்யப்படும் சுயகர்மமே சுயதர்மத்தின் முதற்படி.
சுயகர்மம் அளவுடையதாயினும், அதுவே அளவில்லாதது.
ராமனுக்கு நாடு இல்லாமல் போனபோதுகூட, குகனிடம் படகு இருந்ததை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நன்றி: அர்த்தமுள்ள இந்து மதம்
Engr.Sulthan
No comments:
Post a Comment