மரங்கள் இயற்கை நமக்கு அளித்த வரம் என்று நினைக்கிறோம். ஆனால், நமது மாநில மரம் என்ற பெருமை கொண்ட பனை மரங்கள் செங்கல் மற்றும் சுண்ணாம்புச் சூளைகளில் பற்றி எரிவதைப் பார்க்கையில் மனம் பதறுகிறது. தென் மாவட்டங்களில் சொற்ப விலைக்கு வாங்கப்பட்டு, சூளைகளில் கொட்டப்படும் பனை மரங்களில் கசியும் ஈர வாசனை மனதை உலுக்குகிறது.
புற்றாளி, புற்பதி, போந்து, பெண்ணை, தாளி, தருவிராகன், கரும்புறம், காமம், தாலம், ஓடகம் என்று அழைக்கப்பட்ட பனைமரம் இன்றைக்கு சூளைகளில் வெந்து தணிகிறது. பனை மட்டையில் வண்டியோட்டும் குழந்தைகள் இன்றில்லை! சுட்ட பனம் பழம் சுவைப்பவர் இல்லை!
பனஞ்சாறு, பனஞ்சிராய், பானகம், பனாட்டு, காவோலை, பனை ஈர்க்கு, பனங்கிழங்கு, பனைவெல்லம், பனம் கற்கண்டெல்லாம் புதிய தலைமுறைக்கு புரியாத வார்த்தைகள். பனையில் செய்யப்பட்ட கிலுகிலுப்பை, கூடைகள், பாய், தூரிகைகள் இன்று பயன்பாட்டுப் பொருளாய் இல்லை. நான்கைந்து தலைமுறைக்கு முன்புவரை சற்றேறக்குறைய 843க்கும் மேற்பட்ட பனை சார்ந்த பொருள்கள் தமிழர்களிடம் பயன்பாட்டில் இருந்துள்ளன. தும்பு, ஈக்கு, விறகு, ஓலை, நாரென மனிதர்களுக்கு அட்சயப்பாத்திரமாய் அள்ளித்தந்த பனை, எறும்பு, பூச்சி, பல்லி, பறவைகளென நூற்றுக்கும் மேலான உயிரினங்களுக்கு வாழ்க்கையும் அளித்தது.
ஒரு பனை ஆண்டுக்கு 180 லிட்டர் பதநீர் தரும். அதில் 25 கிலோ பனைவெல்லம், 16 கிலோ பனஞ்சீனியைப் பெறலாம். பனைபடு பொருள்கள் உணவாக மட்டுமல்ல மருந்தாகவும் பயன்பட்டன. பனங்கருப்பட்டியுடன் கடுக்காய், பால், இளநீர், சுண்ணாம்பு சேர்த்து நமது பாட்டனும், பாட்டியும் கட்டிய வீடுகளில் சில பேரன்களும், பேத்திகளும் வாழவே செய்கிறார்கள். பனங்கீற்று வேயப்பட்ட குடிசைகளும் எஞ்சியிருக்கின்றன. பிடித்த மீன்களைப் பாதுகாக்க பனையோலைகளில் பின்னிய "பறிகளை" பரதவர்கள் சிலர் பத்திரப்படுத்தியும் இருக்கக்கூடும்!
இப்படி மனிதர்களுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மரம் என்பதால், பனையை கற்பகத் தரு என்கிறோம்.
நீர் உறிஞ்சும் பயிரான கரும்பு உற்பத்தி கடந்த 50 ஆண்டுகளில்தான் தமிழகத்தில் தீவிரம் அடைந்தது. வெள்ளைச்சீனி பயன்பாட்டுக்கு வந்த பிறகு காபிக் கடைகள் நாட்டுச்சர்க்கரை கலந்த தேநீரை "சாதா டீ" என்று தரம் தாழ்த்தின. அடுத்து வந்த கோக்கும் பெப்சியும் பதநீரைப் பறித்துக்கொண்டுவிட்டன.
இவ்வளவுக்கும் பனையை பயிரிட்டுப் பேணி வளர்க்க வேண்டியதில்லை. நீர் பாய்ச்சி, நஞ்சு தெளிக்க வேண்டியதில்லை. வெப்ப மண்டல நிலத்தில் தன்னியல்பாக வளரக்கூடியது. பனை வளர்ந்து பலன் தரப் பதினைந்து ஆண்டுகள் ஆகும்.
பனை உண்மையில் மரமல்ல, அது புல்லினத்தைச் சேர்ந்தது. இதைத் தொல்காப்பியமே உறுதிப்படுத்தியுள்ளது. "புறக்காழனவே புல்லெனப்படுமே" என்ற பாடலில் பனையை ஒருவித்திலைத் தாவரம் என்று தொல்காப்பியம் கூறுகிறது. தாவரவியல் பெயர் Borassus flabellifer.
மேற்கு ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட பனைகள் நீர்வழியாகவோ, கடல் வணிகம் மூலமாகவோ இந்தியா, இலங்கை, மியான்மர், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, சீனா ஆகிய நாடுகளுக்குப் பரவியிருக்கலாம்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழகத்தில் சுமார் ஐந்து கோடிப் பனைகள் இருந்தன. மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகம் காணப்பட்ட பனைகள், படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகின்றன.
வறட்சியை எதிர்கொண்டு வாழும் பனையும், பனை சார்ந்த தொழிலும் நலிந்து போனது குறித்து கவலைப்படும் இந்த நேரத்தில் இன்னொன்றையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 900 அடியிலிருந்து 1,300 அடிக்கு கீழிறங்கிப் போனதற்கு பனைகள் அருகிவருவதும் ஒரு காரணம்! நமது முன்னோர்கள் குளத்தைச் சுற்றிலும் பல ஆயிரம் பனைகளை நட்டு வைத்திருந்தனர். கரைகளில் பனைகள் உயிர் வேலியைப் போல் காட்சியளித்தது மட்டுமில்லாமல், இன்றியமையாத சூழலியல் பங்களிப்பையும் செய்துள்ளன.
மற்ற மரங்களின் வேர்கள் பக்கவாட்டில் பரவும் வேளையில், பனையின் வேர்கள் செங்குத்தாக நிலத்தடி நீர்ப்பாதையைத் தேடிச்செல்லும், குழல் போன்ற தனது வேரால் தரைப் பகுதியில் உள்ள நீரை நிலத்தடிக்குக் கொண்டுசென்று நிலத்தடி நீர்மட்டத்தை நிலையாக வைத்திருப்பதுடன், நீரை ஊற்றாகக் கசியச் செய்து பல சதுர கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள வற்றாத நீர்நிலைகளை வளம் குன்றாமல் பாதுகாத்தன. பனைகளை வெட்டவெட்ட கிணறும் குளமும் வறண்டு நிலம் காய்ந்து தரிசாகிவருவதை கண்கூடாகப் பார்க்கிறோம். தமிழக நீர்நிலைகள் எங்கும் பனை மரங்களை நட்டு வைத்தால், நமது நீர்நிலைகள் மீண்டும் உயிர் பெறும்.
அது மட்டுமில்லாமல், தற்போது பெயரளவில் உள்ள பனைத்தொழிலாளர் வாரியத்துக்கு உயிர் கொடுத்து பனைப்பொருள் வளர்ச்சிக் கழகத்தை உருவாக்கினால் பதநீர் இறக்குதல், வெல்லம் காய்ச்சுதல், கைவினைஞர்கள், விற்பனையாளர்கள் எனக் குறைந்தது 10 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.
திருக்குறளில் கூறப்பட்ட இரண்டு மரங்களில் ஒன்று பனை. பனையின் பயன்களை உணர்ந்துதான் வள்ளுவர் "தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக் கொள்வார் பயன் தெரிவார்" என்று கூறினார். அந்த உண்மையை என்றைக்கு உணரப் போகிறோம்?
No comments:
Post a Comment