ஆடி முடிந்தது. ஆவணி பிறந்தது. மனம் சிறகடிக்க திருமணம் முடிந்தது. அடுத்தது என்ன? தேன்நிலவு தான். எங்கே போவது? அருகிலேயே கடவுளின் தேசம் இருக்க குழப்பம் ஏன்? குமரகம். இங்கு குதூகலத்திற்கு அளவே இல்லை. இயற்கை அன்னை தன் செல்வங்களை எல்லாம் வாரி, வாரி இந்த குமரகத்திற்கு தானமாக கொடுத்து விட்டாளோ! என்ற எண்ணம் அங்கு சென்றதும் நிச்சயம் ஏற்படும். திரும்பிய இடமெல்லாம், நிலமங்கை பசுமை போர்வை போர்த்தி இருக்கிறாள். ஒரு புறம் செழித்து வளர்ந்த நெற்கதிர்களுடன் காணப்படும் வயல்கள்...
மறுபுறம், குலைகுலையாக இளநீர்களை சுமந்து நிற்கும் தென்னை மரங்களை கொண்ட தோப்புகள்... இவைகளுக்கு இடையே, மழை வளத்தால் தேங்கி நிற்கும் குட்டைகளில் பூத்திருக்கும் அல்லி மலர்கள்... உல்லங்கழிகள், அதில் மிதந்து செல்லும் கட்டுமரங்கள்...என்று பூலோக சொர்க்கமாக காண்போரின் கண்களையும், கருத்தையும் கவர்கிறது குமரகம். இதனால் தானோ என்னவோ, நேஷனல் ஜியோகிராபிக் குழுவை சேர்ந்த பயணி ஒருவர் இந்த குமரகத்தினை, உலகின் பத்து அழகிய இடங்களில் ஒன்றாக கணித்திருக்கிறார்.
கொச்சியில் இருந்து கார் மூலமாக பயணித்தால் 90 கி.மீ. தூரம். அதுவே கோட்டயத்தில் இருந்து என்றால் 16 கி.மீ. பயணம் தான். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, இந்த இடம் கொடியூர் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் இங்கு குமரக் கடவுளின் கோவில் ஒன்றை கட்டியிருக்கிறார்கள். இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என்ற மத பேதம் இன்றி அனைவரும் வழிபடும் குமரன் வாசம் செய்யும் இடமானதால் குமரகம் என்ற பெயர் பெற்றிருக்கிறது இவ்விடம்.
குமரகத்தை தன்னுள் அரவணைத்து வைத்திருக்கிறது வேம்பநாடு ஏரி. இந்தியாவிலேயே நல்ல தண்ணீரை கொண்ட மிகப்பெரிய ஏரி இது தானாம். இதன் பரப்பளவு 205 சதுர மீட்டர். பம்பா, மீனசில், மணிமாலா. அச்சன்கோவில், பெரியார், மூவாட்டு புழா எனும் ஆறு ஆறுகளின் சங்கமமே இந்த வேம்பநாடு ஏரி என்ற செய்தி மலைக்க வைக்கிறது. பல திசைகளிலிருந்து ஓடிவரும் இந்த தண்ணீர், அழகிய கால்வாய்களாக உருவெடுத்து பின் இந்த ஏரியில் கலக்கிறது. இந்த கால்வாய்களில் படகு சவாரி செய்து மகிழலாம். கால்வாயில் கரைகளில் குமரகத்தை சேர்ந்த விவசாயிகள் வீடு கட்டி வாழ்கிறார்கள். வீடுகளில் இருந்து படி இறங்கினாலே தண்ணீர் தான். வாழ்நாளில் மறக்க முடியாத சுக அனுபவம் இது.
மீன்கள் நிறைந்து காணப்படும் இந்த ஏரியில்... மழைக்காலமான ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தண்ணீர் உப்பு தன்னையில்லாமல் இருக்குமாம். இந்த ஏரியை சுற்றியுள்ள சதுப்பு நில மரங்களில், பல நாடுகளில் இருந்து வந்த பறவைகள் கூடு கட்டி வாழ் கின்றன. இந்த பறவைகள் சரணாலயத்தை கேரள சுற்றுலாத்துறை பராமரிக்கிறது. குமரகத்தில் வாழ்பவர்கள், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் செல்ல படகுகளை உபயோகிக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டில் முன்னும் கார், ஸ்கூட்டர் நிறுத்துவது போல அவர்களுடைய சொந்தப் படகுகளை நிறுத்தி வைக்கின்றனர். இதை பார்த்தால் நமக்கு வெனீஸ் நாடு நினைவுக்கு வரும். குமரகத்தை தென்னிந்தியாவின் வெனீஸ் என்று அழைத்தால் கூட அது மிகையாகாது.
அரபிக்கடவுள் உருவாகியிருக்கும் உப்பங்கழிகளின் கரைகளின் பல சொகுசு ஹோட்டல்கள் உள்ளன. இந்த ஹோட்டல்களின் உணவு வகைகள் அற்புதமானவை. சுவை நிறைந்தவை. இங்கு பல விதமான ஆயுர்வேத மசாஜ்களும் செய்கிறார்கள். மாலை நேரத்தில் ஹோட்டல்களில் இருந்து, படகுகளில் நம்மை அழைத்து சென்று சூரிய அஸ்தமானத்தை காட்டுகிறார்கள். சிலுசிலு காற்று முகத்தில் அறைய... அந்த மாலை நேர வானத்தில் , சிறகு பூரித்து கூடு திரும்பும் பறவைகளின் காட்சியை பார்க்கும் பொழுது, இனம் புரியாத இன்பத்தில் மனம் நிறைகிறது.
படகு வீடுகளில் தங்கி மகிழ நாம் காஷ்மீர் செல்ல வேண்டியதில்லை. இங்குள்ள ஹோட்டல்களுக்கு சொந்தமான கெட்டுவலம் என்றழைக்கப்படும் சொகுசு படகுகளில் தங்கினாலே போதும். பழமையும் புதுமையும் கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படகுகளில் ஒரு 5 நட்சத்திர ஹோட்டல்களில் கிடைக்க கூடிய எல்லா வசதிகளுகளும் இருக்கின்றன.
இயற்கை விரும்பிகளுக்கு.... குறிப்பாக தேனிலவு தம்பதியர்களுக்கு சொர்க்க பூமி இந்த குமரகம்.
No comments:
Post a Comment