பார்ப்பதற்கு அழகாக இருக்கும் உணவுகளில் கூட, ருசி இல்லையயன்றால் அதனை நாம் திரும்பிக் கூட பார்ப்பதில்லை.
ஏனெனில் உணவை சுவையாக உட்கொண்டே நாம் பழகி விடுகிறோம். பிறந்த குழந்தை கூட தாய்ப்பாலின் ருசிக்கு மயங்கி பல மாதங்கள் வரை வேறு எந்த சுவையையும் விரும்பாமல் தாய்ப்பாலை மட்டும் உட்கொண்டு வருவதுண்டு. நாம் உண்ணும் உணவின் ருசியை மூளைதான் நமக்கு உணர்த்துகிறது என்றாலும், உணவின் தன்மையை நாக்கின் சுவை அரும்புகளே புரிந்துக் கொண்டு உணவின் ருசியை மூளைக்கு கொண்டுச் செல்கின்றன. நாக்கின் சுவை அரும்புகள் பழுதுபட்டால் உணவின் சுவையை உணர முடியாமல் சுவை நரம்புகள் தத்தளிக்கின்றன. இதனால் ருசியான உணவாக இருந்தாலும் கூட உணவை உட்கொள்ள பிடிக்காமல், உணவின் மேல் வெறுப்பு உண்டாகிறது
.
சுவை நரம்புகள் பல காரணங்களால் தனது சுவை உணரும் தன்மையை இழக்கின்றன. சுரம், காமாலை, வயிற்று கிருமிகள், இரத்தச்சோகை, சிறுநீரக பாதிப்பு போன்ற நோய் நிலைகளில் நாவின் சுவை நரம்புகள் தற்காலிகமாக தங்கள் பணியை நிறுத்திக்கொள்வதால் உணவின் சுவை தெரிவதில்லை. ஆனால் நோய் சரியானதும் மீண்டும் சுவை நரம்புகள் சீராக பணிபுரிகின்றன. பக்கவாதம், முகவாதம், உமிழ்நீர் கோளவீக்கம், புற்றுநோய் போன்றவற்றில் நிரந்தரமாகவே நாவின் சுவை அரும்புகள் செயலிழந்து விடுகின்றன. நாவில் ஏற்படும் புண்களும், வயிற்றின் கூடுதல் அமிலச் சுரப்பும், நாவில் வளரும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை கிருமிகளும் கூட நாவின் சுவையை மாற்றிவிடுகின்றன.
உண்ணும் உணவின் சுவை தெரியாமலும், உணவின் மேல் விருப்பம் இல்லாமலும், பசியின்மையாலும் தோன்றும் ருசியின்மையை சித்த மருத்துவம் அரோசகம் என குறிப்பிடுகிறது. தூங்கிக்கொண்டிருக்கும் நாவின் சுவை அரும்புகளை தட்டி எழுப்பி, கபால நரம்புகளை தூண்டி உண்ணும் உணவின் ருசியையும், தன்மையையும் நாவிற்கும், மூளைக்கும் உணர்த்த ஏராளமான உணவுப் பொருட்களை நமது முன்னோர்கள் உண்ணும் உணவில் பல்லாண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். அருநெல்லி, பிரண்டை, எலுமிச்சை, நாரத்தை, துருஞ்சி போன்ற உணவுக்குப் பயன்படும் பல மூலிகைகள் சர்பத், ஊறுகாய் போன்ற பல வடிவங்களில் பக்குவப்படுத்தப்பட்டு உண்ணும் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளப்பட்டு படுகின்றன. இவை நாவின் சுவை நரம்புகளை தூண்டி அரோசகத்தை நீக்குகின்றன. இந்த உணவுகளில் சிறுநெல்லி எனப்படும் அருநெல்லிக்காயே நாவிற்கு ருசியை உண்டாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.
பிலன்தஸ் டிஸ்டிகஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட யுபோர்பியேசியே குடும்பத்தைச் சார்ந்த அருநெல்லி நாவிற்கு ருசியை தருவது மட்டுமின்றி அரோசகம் எனப்படும் ருசியின்மைக்கு காரணமான இரத்த சீர்கேட்டை நீக்கி மீண்டும் உணவின் மேல் வெறுப்பு ஏற்படாமல் காக்கிறது. அருநெல்லிக்காயில் அசிடிக் அமிலம் மற்றும் லூப்பியால் என்னும் வேதிப்பொருள் நாவின் சுவை அரும்புகளை தூண்டி, தளர்ந்த சுவை நரம்புகளை பலப்படுத்துகின்றன.
அரு நெல்லிக்காயை அலசி, இடித்து, கொட்டை மற்றும் காம்பு நீக்கி நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வெந்தயம், மிளகாய்வற்றல் மற்றும் பெருங்காயத்தை நன்கு வறுத்து, பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சட்டியில் நல்லெண்ணெயை ஊற்றி, அதில் கடுகை போட்டு வெடித்தவுடன் அருநெல்லிக்காயை நன்கு வதக்க வேண்டும். பின்பு பொடித்து வைத்த மிளகாயத்தூள், வெந்தயப்பொடி, பெருங்காயப்பொடி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி எடுத்து சூடாறியதும் கண்ணாடி பாட்டிலில் அடைத்து பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையுடைய இந்த அருநெல்லி ஊறுகாயை உணவுக்கு தொட்டுக் கொள்ள பயன்படுத்தலாம். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மசக்கையினால் ஏற்படும் வாந்தி, குமட்டமல் நீங்க அரைநெல்லிக்காயுடன் உப்பு சேர்த்து உட்கொள்ளலாம்.
No comments:
Post a Comment