பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படும் "மால்" கலாசாரத்துக்கு அமெரிக்காவில் கூட மவுசு குறைந்து வருகிறது. ஆனால், நம்மூரில் கொடிகட்டிப்பறக்கிறது. "மால்" கலாசாரம் தவறில்லை தான் ஆனால், சத்தான உணவு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கும் நிலை மாறி, பாக்கெட், டப்பா கலாசாரம், உரம் போட்ட காய்கறிகள் என்று நாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம். ஆர்கானிக் காய்கறிகள், தானியங்கள், பழங்கள் என்பது பரம்பரையாக நாம் பின்பற்றி வந்ததுதான். நடுவில், உரம் போட்ட சமாச்சாரங்கள் தலைதூக்கி விட்டன. இப்போது மீண்டும் ஆர்கானிக்குக்கு மவுசு திரும்பி விட்டது. ஆர்கானிக் என்பது உரம் போடாத, ரசாயன கலப்பில்லாத உணவுப்பொருட்கள் சார்ந்தது. எது ஆர்கானிக், அதனால் எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது என்று பார்ப்போம்.
உப்பு:
இப்போது பலரும் பரவலாக பயன்படுத்துவது அயோடின் சத்துள்ள பாக்கெட் உப்புதான். சில ஆண்டுக்கு முன்வரை பயன்படுத்தி வந்த கல் உப்பு நினைவிருக்கிறதா? அதில் உள்ள கனிம சத்துக்கள் பற்றி பலருக்கும் தெரியாது. இதுதான் ஆர்கானிக் உப்பு. உடலில் அயோடின் சத்து தேவைதான். ஆனால், அயோடின் சத்து கிடைக்கும் நிலையில், உப்பு மூலமும் அது சேர்ந்தால் பிரச்சினைதான்.
ரீபைண்ட் ஆயில்:
செக்கில் ஆட்டிய எண்ணெயை யார் இப்போது பயன்படுத்துகின்றனர். நகரங்களில் எங்குப் பார்த்தாலும் பாக்கெட் உணவு எண்ணெய்தானே. அப்படியும் செக்கில் ஆட்டியெடுத்த கடலை, நல்லெண்ணெய் இன்னமும் சில இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் எந்த கலப்பும் இல்லாத ஆர்கானிக் எண்ணெய். ரீபைண்ட் என்பது, சூடாக்கி சமப்படுத்துவது. அதனால், வாணலியில் இரண்டாவது முறையாக சூடாக்கப்படுகிறது. இதனால், ரசாயன கலப்பு சேர்கிறது உடலில். இதுதான் நிபுணர்கள் கருத்து.
வெண்ணெய், நெய், வனஸ்பதி:
வெண்ணெய், நெய், வனஸ்பதி இவை மூன்றுமே கொழுப்பு சார்ந்ததுதான். அதிகம் பயன்படுத்தக்கூடாது. இதனால், கொலஸ்ட்ரால்தான் உடலில் சேரும். மாறாக, ஆர்கானிக் முறையில் இயற்கையாக உருவாக்கப்பட்ட ஆலிவ் ஆயில், செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய்தான் மிக நல்லது.
உலர்ந்த தானியங்கள்:
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உலர்ந்த பருப்பு உட்பட தானியங்கள்தான் பயன்படுத்துகிறோம். ஆனால், எந்த கலப்பும், செரிவூட்டலும் இன்றி, இயற்கையாக விளைவித்து எடுக்கப்பட்ட பருப்பு, தானியங்கள்தான் ஆர்கானிக் முறைப்படி நல்லது. நன்கு உலர்ந்த தானியங்களில் கொழுப்புதான் மிஞ்சும். ஆனால், ஆர்கானிக் முறையில் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.
பாலிஷ் அரிசி:
அரிசி சாதம், வெள்ளையாக இருக்க வேண்டும். பழுப்பாக இருந்தால் நகரங்களில் உள்ளவர்களுக்கு பிடிக்காது. ஆனால், புழுங்கல் அரிசி சாதம்தான் மிக நல்லது என்பது இப்போதுதான் பலருக்குத் தெரிய ஆரம்பித்துள்ளது. பாலிஷ் செய்யப்படாத புழுங்கல் அரிசி, முழு கோதுமை ஆகியவற்றில்தான் 100 சதவீத சத்துக்கள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.
சந்தை காய்கறி, பழங்கள்:
உரம், ரசாயன கலப்பு சார்ந்து விளைவிக்கப்பட்ட, செயற்கையாக பெரிதாக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் கண்களுக்கு கவர்ச்சியாக இருக்கலாம். விலை குறைவாக இருக்கலாம். ஆனால், உடலுக்கு கெடுதல்தான். உரம் கலப்பில்லாத காய்கறிகள், கீரைகள், பழங்கள் மூலம் கிடைக்கும் பலன், மருந்துகளில் கூட கிடையாது.
பால்:
பால் உடலுக்கு நல்லதுதான். ஆனால், நாம் சாப்பிடும் பாலில், கொழுப்புச் சத்து நீக்கப்பட்டதால் பரவாயில்லை. ஆனால், கால்நடைகளில் 90 சதவீதம் உரம், ரசாயன ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பெற்ற நிலையில்தான் உள்ளன என்பது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலே வருத்தத்துடன் கூறியுள்ளது. ஆர்கானிக் வகையில் இப்போது பல வகை மூலிகைகள் வந்துவிட்டன. பாலுடன் இவற்றையும் சாப்பிடலாம்.
கோலா, காபி, டீ:
இயற்கையான காபி, டீ இப்போது கிடைப்பதில்லை. எல்லாமே, உரக்கலப்பு மிக்கதுதான். அதிலும், பாக்கெட் பானங்களில் பெரும்பாலும் உடலுக்கு ஆரோக்கியமில்லாத விஷயங்கள்தான். மூலிகை டீ நல்லது. மூலிகை சார்ந்த பானங்கள் இப்போது உள்ளன. அவற்றை வாங்கி அருந்தலாம்.
சர்க்கரை:
சர்க்கரைக்கு பதில், வெல்லத்தைப் பயன்படுத்தலாம். காபி, டீ யில் கருப்பட்டி வெல்லம் போட்டு சாப்பிட்டால், உடலுக்கு நல்லது. எந்த கெடுதலும் வராது.
ஆர்கானிக் கோஷம் இன்னும், இந்தியாவில் பெரிய அளவில் எடுபடவில்லை. காரணம், இப்போதுள்ள உணவு பொருட்கள் விலையே விண்ணைத் தொடுகிறது. ஆர்கானிக் சமாச்சாரங்கள் விலை இன்னும் அதிகம். இருந்தாலும், காலப்போக்கில், உரக்கலப்பில்லா உணவுப்பொருட்கள் சாப்பிடும் நிலைக்கு வருவது மட்டும் நிச்சயம்.
No comments:
Post a Comment