மழைக்காலம்
வந்து விட்டால் வீட்டை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் வீட்டுக்குள் கிருமிகள் விஸ்வரூபமெடுத்து நமக்கு நோய்களை
ஏற்படுத்தி விடும். ஆகையால் வீட்டை கிருமிகளின் பாதிப்பில் இருந்து
விடுவித்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அதற்கு எளிய முறையில் எப்படி
பராமரிப்பை மேற்கொள்ளலாம் என்பது பற்றி பார்ப்போம்.
* மழைகாலம் என்றாலே தரையில் ஈரம்
தொற்றிக்கொள்ளும். அதுவும் நீர்நிலை அருகில் உள்ள பகுதியில் வீடுகள்
இருந்தால் தரை குளிர்ச்சியாகவே இருக்கும். அதனால் வழக்கம்போல் வீட்டை கழுவி
சுத்தம் செய்யக்கூடாது.
* தரையில் சிறிய அளவு தண்ணீர் விட்டு
உலர்ந்த துணிகளை கொண்டு துடைத்தால் ஈரம் பரவுவதை தவிர்க்கலாம். ‘மாப்பை’
கொண்டு சுத்தம் செய்தும் ஈரம் படியாமல் பார்த்து கொள்ளலாம்.
* மழைக்காலத்தில் கிருமிகள், கொசுக்கள்,
பூச்சிகள் ஆதிக்கம் அதிக அளவில் இருக்கும். ஆகையால் வீடு,
சுற்றுப்பகுதிக்கு அருகில் ஈரப்பதம் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க
வேண்டும். மழை நீரை தேங்க விடக்கூடாது. அதுவே கிருமிகள் மூலம் நோய்
பரப்பும் மூல காரணியாகி விடும்.
* துணிகளை துவைத்த பின்னர் நன்றாக உலர்த்த
வேண்டும். அதில் சற்று ஈரப்பதம் கலந்து இருந்தாலும் துர்நாற்றம் வீச
தொடங்கி விடும். வெயில் இருக்கும் சமயங்களில் துணியை உலர்த்தி எடுத்தால்
ஈரப்பதம் சேருவதை தடுக்கலாம். மழை நீடிக்கும் சமயங்களில் இரவில் தூங்கும்
அறையில் உள்ள மின்விசிறியில் துணிகளை உலர்த்துவதன் மூலம் மின்சாரத்தையும்
சிக்கனப்படுத்தலாம்.
* செருப்பு, ஷூ வைப்பதற்கான ஸ்டாண்டில்
அழுக்கு படியாமல் பார்த்து கொள்ள வேண்டும். காலணிகளில் சேறு, சகதி தஞ்சம்
அடைந்து விடக்கூடாது. வீட்டுக்கு வந்தவுடன் நீரில் கழுவி விட வேண்டும்.
* கழிப்பறையை மிகவும் சுத்தமாக வைத்து
கொள்ள வேண்டும். சுவர்களில் ஈரம் படியவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
துர்நாற்றம் வீசாதபடி கிருமி நாசினிகளை கொண்டு சுத்தம் செய்து வர வேண்டும்.
* மழைக்காலத்தில் மரக்கதவுகள், ஜன்னல்கள்
ஈரப்பதத்தால் இறுகிப்போய் இருக்கும். அதனால் திறந்து மூடுவதற்கு கடினமாக
இருக்கும். அடிக்கடி எண்ணெய் விட்டு பராமரித்து வந்தால் உபயோகப்படுத்த
எளிதாக இருக்கும்.
* வீட்டின் வாசல் பகுதியில் போடப்பட்டு
இருக்கும் ‘மேட்’டுகளில் ஈரம் சேரவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஒரே
கால் மிதியடியை போடாமல் 2 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி வர வேண்டும்.
துணியாலான மேட்டுகளில் தண்ணீர் அதிகம் சேரும் என்பதால் அவற்றை
பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
* எப்போதும் தண்ணீர் பயன்பாடு உள்ள
பகுதியான சமையல் அறையை கூடுதல் கவனம் செலுத்தி ஈரப்பதம் சேராமல் பார்த்து
கொள்ள வேண்டும். பாத்திரங்களை உடனுக்குடன் கழுவுவதுடன் அதில் இருக்கும்
தண்ணீரை வடிய வைத்து விட வேண்டும். அல்லது ஈரத்தை துடைத்து எடுத்து விடுவது
நல்லது.
* அலமாரிகள், கபோர்டுகள், பரண்கள் மீது
அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் பாத்திரங்கள், பொருட்களை அடிக்கடி எடுத்து
தூசி தட்டி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அங்கு பூச்சிகள் குடியேறி தொல்லை
கொடுக்க தொடங்கி விடும்.
No comments:
Post a Comment