"தேசத்திற்கான புத்தாண்டு பரிசு!" ஜனவரி 5ஆம் தேதி இந்தியக் கிரயோஜெனிக் எஞ்சினுடன் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிகழ்வு, இப்படித்தான் உற்சாகமாக வர்ணிக்கப்பட்டது.
இந்த வெற்றிக்குப் பின்னே இருபது ஆண்டு கால உழைப்பு இருக்கிறது. இடையே ஏற்பட்ட தோல்விகளால் தளர்ந்துபோகாமல் நமது விண்வெளி விஞ்ஞானிகள் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
இதன் மூலம், கிரயோஜெனிக் எஞ்சின் ஆற்றல் கொண்ட வெகு சில நாடுகள் பட்டியலில் இந்தியா சேர்ந்துள்ளது. இதன் மூலம் 2 டன்னுக்கும் கூடுதல் எடை கொண்ட செயற்கைக்கோள்களை இந்தியாவால் செலுத்த முடியும். விண்வெளி ஆய்வில் இது முக்கியமான பாய்ச்சல்.
சில மாதங்களுக்கு முன் செவ்வாய் கிரக ஆய்வுக்கு மங்கள்யான் விண்கலத்தை இந்தியா செலுத்தியது. இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ விண்வெளிக்கு மனிதரை அனுப்புவது உட்படப் பல்வேறு திட்டங்களில் தற்போது சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறது. இந்தத் திட்டங்கள் அனைத்துக்கும் அடிப்படையாக இருப்பது ராக்கெட்கள்.
இஸ்ரோவைப் பொறுத்தவரை பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஜி.எஸ்.எல்.வி. உள்ளிட்ட ராக்கெட்களும் பயன்படுத்தப்படுகின்றன.
செயற்கைக்கோள்கள் அவசியமா?
செயற்கைக்கோள்கள் குறித்துப் பெருமிதம் கொள்பவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், எத்தனையோ முக்கியப் பிரச்சினைகள் இருக்க ராக்கெட் விடுவது முக்கியமா? ஏழை நாடான இந்தியா அடிப்படையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தாமல் ராக்கெட் செலுத்துவதிலும், நிலவுக்கு விண்கலத்தை அனுப்புவதிலும் பெருமிதம் கொள்வது சரியா என்று கேட்பவர்களும் இருக்கின்றனர். ராக்கெட் மூலமாகச் செலுத்தப்படும் செயற்கைக்கோள்களால் உண்மையில் என்ன பயன்?
அன்றாட வாழ்வில்...
நம் அன்றாட வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் செயற்கைக்கோள்களின் பங்களிப்பு இருக்கிறது. அவை நமக்குப் பாதுகாப்பைத் தருகின்றன. புதிய வசதிகள் மூலம் வாழ்க்கையை மேம்படுத்துகின்றன. ஆய்வுகள் மூலம் வளம் தருகின்றன.
நம்மால் டிவி பார்க்காமல் இருக்க முடியுமா? செல்போனில் பேசாமல் இருக்க முடியுமா? இந்த வசதிகள் எல்லாமே செயற்கைக்கோள்கள் மூலம்தான் சாத்தியமாகின்றன. இந்தப் பணிகளுக்கு உதவும் செயற்கைக்கோள்கள், தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்கள் எனப்படுகின்றன. சூடான செய்திகளை உடனுக்குடன் பார்க்க முடிவதும், விளையாட்டுப் போட்டிகளை நேரடியாகக் கண்டுகளிப்பதும் இந்தச் செயற்கைக்கோள்களின் புண்ணியத்தால்தான்.
இருப்பிடத்தை உணர்த்தும் சேவையை வழங்கும் ஜி.பி.எஸ். வசதியைச் சாத்தியமாக்குவதும் செயற்கைக்கோள்கள்தான். மழைக்காலங்களில் புயல் மையம் கொள்வதையும் சூறாவளி சீறி வருவதையும் உரிய நேரத்தில் எச்சரித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ள உதவுவது விண்ணில் இருந்து புவியைக் கண்காணித்துக்கொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள்தான். கடந்த ஆண்டு ஒடிசா மாநிலத்தில் பைலின் புயல் தாக்கியபோது, உரிய நேரத்தில் லட்சக்கணக்கானோரைப் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றி உயிர் காக்க உதவியது செயற்கைக்கோள் புகைப்படங்கள்தான்.
இன்னும் எத்தனையோ வகைகளில் செயற்கைக்கோள்கள் சத்தமே இல்லாமல் பயன்படுத்தப் பட்டுவருகின்றன. இவற்றில் முக்கியமானது ரிமோட் சென்ஸிங் எனப்படும் தொலைஉணர்வு செயற்கைக்கோள்கள். இத்தகைய 11 செயற்கைக்கோள்களை இஸ்ரோ செலுத்தியுள்ளது. இந்தச் செயற்கைக்கோள்கள் மீனைப் பிடிக்கக் காத்திருக்கும் கொக்கைப் போல, பூமியைக் கண்காணித்து அதன் பரப்பில் ஏற்பட்டுவரும் மாற்றங்களைப் புகைப்படங்கள், வரைபடம் வழியே அறிய உதவுகின்றன. வரைபடமாக்கல், ஆய்வுப் பணிகளில் இந்த விவரங்கள் பேருதவியாக இருக்கின்றன. நிலத்தடி நீர் மட்டத்தை அறியவும், பாசன வசதி பற்றிய விவரங்களைப் பெறவும் கைகொடுக்கின்றன. விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க இவை உதவுகின்றன. பருவநிலை மாற்றம், வறட்சிக்கான அறிகுறிகளை அறிந்து முன்கூட்டியே திட்டங்கள் வகுப்பதையும் சாத்தியப்படுத்துகிறது.
சுற்றுச்சூழல் நன்மை
இதேபோலக் காடுகளின் பரப்பை அறியவும் அவற்றில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்ளவும் செயற்கைக்கோள் விவரங்கள் உதவுகின்றன. கனிம வளங்களை அறியவும், சுற்றுச்சூழல் பாதிப்பை உணர்ந்து நடவடிக்கை எடுக்கவும் தேவையான விவரங்களை அவை அளிக்கின்றன. செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்படும் படங்கள் ஒரு மீட்டர் முதல் 500 மீட்டர் வரையிலான துல்லியத்துடன் நிலத்தின் மேற்பரப்பைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இந்த விவரங்கள் நகர்ப்புறத் திட்டமிடலைச் சிறப்பாக மேற்கொள்ள உதவுகின்றன.
ஆழ்கடல் மீன்வளத்தை உணர்த்தி மீன்பிடித்தலிலும் செயற்கைக்கோள்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. மண்ணின் தன்மை, புவியியல் கூறுகள், மழை அளவு, பாறைகளின் அமைப்பு, நிலப் பயன்பாடு போன்றவற்றிலும் செயற்கைக்கோள் படங்களுக்கும் விவரங்களுக்கும் முக்கியப் பங்கிருக்கிறது. ராணுவ நோக்கிலான கண்காணிப்பில் ஈடுபட்டு, தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியையும் கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் மேற்கொண்டுவருகின்றன. இப்படியாக, செயற்கைக்கோள்கள் நமக்குச் சம்பந்தமில்லாத ஆய்வு சங்கதிகள் என்று அலட்சியப்படுத்த முடியாதவை.
பொருளாதாரப் பலன்கள்
நேஷனல் கவுன்சில் பார் அப்லைடு எகனாமி ரிசர்ச் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, கடந்த ஆண்டுகளில் ரிமோட் சென்ஸிங் செயற்கைக்கோள் தகவல்கள் மூலம் மீன்பிடி தொழிலில் ரூ.24,000 கோடி, விவசாயத்தில் ரூ. 50,000 கோடி அளவுக்கு நன்மை கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கிறது.
செயற்கைக்கோள்களால் கிடைக்கும் நன்மைகளை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. விண்வெளி ஆய்வில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டிருக்காவிட்டால் இந்த விவரங்களுக்கு எல்லாம் அந்நிய நாடுகளின் செயற்கைக் கோள்களிடம் கையேந்தி இருக்க வேண்டியிருக்கும். இந்திய விண்வெளி ஆய்வின் தந்தை எனப் போற்றப்படும் விக்ரம் சாராபாய் கூறியது போல, "தேசிய அளவிலும் உலக நாடுகள் மத்தியிலும் நாம் அர்த்தமுள்ள பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்றால், சமூகம், சாமானிய மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் நாம் பின்தங்கிவிடக் கூடாது".
No comments:
Post a Comment