Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, October 3, 2014

ஆரோக்கியத்தின் அரண்மனை!


சென்னை தேனாம்பேட்டை, முக்கால் கிரவுண்டு நிலத்தில் பச்சைப் பசேல் என கண்ணுக்கு குளிர்ச்சியாக வீட்டுத் தோட்டம் நம்மை வரவேற்கிறது. போர்டிகோவை அடுத்து, வேலி, காம்பவுண்டு சுவர், வாசல் கேட் என எங்கும் பசுமையின் சாயல். செடிகள், கொடிகள், பூக்கள் என மிக ரம்யமான சூழல்.  தொட்டியில் சிரிக்கும் சிவப்பு ரோஜாக்கள்.  இப்படி, ஆரோக்கியத்தின் அரண்மனையாக வீற்றிருக்கிறது, உஷா ஸ்ரீதரின் இல்லம்.
''தோட்டத்தினால் வீட்டுக்கு அழகு மட்டுமல்ல, உடல், மன ஆரோக்கியத்துக்கு நல்ல மருந்தாக இருக்கிறது” என்கிறார் உஷா. ''சின்ன வயசிலிருந்தே மரம், செடி, கொடிகளோடே வளர்ந்தேன். எங்க அப்பா ஒரு தோட்டப் பிரியர். இங்கே வீடு கட்டியதும், முன்புறம் இருந்த மண் தரையில் முதலில் லான் (பச்சைப் புல்வெளி), குரோட்டன்ஸ் மாதிரியான செடிகள்தான் வெச்சிருந்தோம். ஆனால், அதெல்லாம் சும்மா அழகுக்குத்தான். வீணாக இடத்தை அடைச்சிட்டு இருக்கோன்னு தோணுச்சு. வீட்டுக்கு உபயோகமா காய்கறி போட்டால் என்னன்னு நினைச்சு, இப்ப அஞ்சு வருஷமா, காய்கறித் தோட்டத்துல இறங்கிட்டேன். அந்தந்த சீஸனுக்கு ஏத்த மாதிரி, காய்கறி விதைகளைப் போட்டு, தண்ணி பாய்ச்சி, முழுக்க முழுக்க நானே பராமரிப்பேன்!


கொத்துமல்லிக் கீரை, தக்காளி, குடமிளகாய், பீர்க்கங்காய் எல்லாம் சீஸனில் மட்டுமே வரக்கூடிய காய்கறிகள். ஆனா, கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், காராமணி இந்த மாதிரிக் காய்களுக்கு எல்லாம் சீஸன் கிடையாது. எல்லாக் காலத்திலும் வளரும். வெயில் காலத்துல ஒரு பாத்தி முழுக்க கீரை வகைகளைப் போடுவேன்.

ஆர்கானிக் உரம்தான் பயன்படுத்தறேன். உரம் போட்டு வரும் காய்கள் மாதிரி, இயற்கை விவசாயத்தில் வர்ற காய்கள் பளபளன்னு இருக்காது. ஆனா, உயிர்ச்சத்துக்கள் அதில்தான் வீணாகாம நமக்குக் கிடைக்கும். நான் போடற ஒரே உரம் ஆட்டுப்புழுக்கைதான். கொஞ்சம் விலை அதிகம். ஆனால், சிறந்த உரம். மாட்டுச்சாணத்துல கூட ஒவ்வொரு சமயம் புழுக்கள் இருக்கும். ஆனா, ஆட்டுப்புழுக்கையில் அப்படி எந்தப் பிரச்னையும் இல்லை. அப்பப்போ ஒரு கை அள்ளிப் போட்டிருவேன். பூச்சி அதிகமா வர்றதில்லை. அப்படியும் வந்தா, மாட்டுக் கோமியம்தான் மருந்து!

பாட்டில் மூடியில் சிறு துளை போட்டு, பூச்சி வர்ற மாதிரித் தெரிஞ்சா, உடனே, கோமியத்தை செடிகள் மேல தெளிச்சுவிடுவேன், பன்னீர் தெளிக்கிற மாதிரி தான். அடுத்த நாளே பூச்சி, கொசு இருந்தால் கூட போயிடும்! சாம்பலைப் பொடி பண்ணி, அதைச் செடிகள் மேல தூவலாம். இதெல்லாம் இயற்கையான பூச்சிக்கொல்லிகள்! ரொம்ப எளிமையான வழியும் கூட!" என மூச்சு விடாமல் படபடவென்று பேசியபடியே காய்கள் பறித்தார் உஷா.

வீட்டின் பக்கவாட்டுச் சுவரில் படர்ந்து இருந்த வெற்றிலைக் கொடியைப் பார்த்ததும் நமக்கு ஆர்வம் மேலிட, பறித்துக் கொடுத்த வெற்றிலையை வாயில் போட்டால், கும்பகோணம் வெற்றிலையின் வாசத்தில் வாய் மணத்தது. ''சுவரோரமா வெத்தலை நாத்து ஒண்ணு வச்சாப் போதும். அதுபாட்டுக்கு நல்லா வளரும். தொட்டியில் கூட வைக்கலாம். சாப்பிட்டதும் ரெண்டு வெத்தலையை மென்னு சாப்பிட்டோம்னா, ஜீரணத்துக்கு நல்லது. கால்சியம் சத்தும் கிடைக்கும். அதுமாதிரி கறிவேப்பிலை, கத்தாழை வச்சிருக்கேன். கத்தாழை மடலைக் கீறி, அதுக்குள்ள இருக்கிற வெள்ளை நிறச் சோற்றைச் சாப்பிட்டால், எப்படிப்பட்ட வயித்துப் புண்ணும் சரியாயிடும். உடல் உஷ்ணத்தைக் குறைச்சு, குளிர்ச்சியைக் கொடுக்கும். தலையில் பொடுகு இருந்தாலும் போடலாம். சர்வ ரோக நிவாரணி கத்தாழை! அதையும் ஒரே ஒரு இணுக்கு வச்சாலே நல்லா வந்துடும்!

இஞ்சி, புதினா, மஞ்சள், துளசி, கற்பூரவல்லினு இங்க இருக்கிற எல்லாமே  மருத்துவ குணம் வாய்ந்த தாவரங்கள் தான். இதெல்லாம் வீட்டில் இருந்தால், சளி, இருமல், ஜலதோஷம், காய்ச்சல் எல்லாத்துக்குமே மருந்தா பயன்படும்" வீட்டை வலம் வந்தபடியே வாசல் பகுதிக்கு வந்தால், அங்கே இருந்த நித்யமல்லியின் வாசம் மனதை மயக்கியது.

''நித்யமல்லி கடையில் கிடைக்காது. பூஜைக்கு உகந்தது. தோட்டவேலை பார்க்கிறதால, தேவையில்லாத கலோரிகள் குறைஞ்சு, உடம்பு லேசா இருக்கு. எனக்கு அதுதான் யோகா, எக்ஸர்சைஸ் எல்லாம்! நாலு களையைக் கொத்திட்டு நிமிர்ந்தா, வேர்த்துக் கொட்டும். ஸ்ட்ரெஸ் இருந்தாலும், தோட்டத்தில் இருக்கிற புல்லைப் பிடுங்கறதுல மனபாரம் குறைஞ்ச மாதிரி லேசா இருக்கும்!

புல்லை வேகமாகப் பிடுங்கிப் போடறப்போ, ஏதோ நெகட்டிவ் எனர்ஜி நம்மை விட்டுப் போற மாதிரி ஒரு ஃபீலிங்! அதை உணர்ந்த என் வீட்டுக்காரரும் இப்போ, களையெடுக்க வந்துடறார். எங்க ஆரோக்கியத்துக்கு காரணமே இந்தத் தோட்டம்தான்” என்கிற உஷா, முள்ளங்கி, கேரட், பீட்ரூட், பேபி கோஸ் (கிளைகோஸ்) என்று எல்லாக் காய்களையுமே விளைவித்து, வெற்றி கண்டிருக்கிறார். தேவை போக மீதம் உள்ளதை அக்கம் பக்க வீடுகளுக்கு மற்றும் நண்பர்கள், உறவினர்கள், வேலை செய்யும் பணியாளர்களுக்கும் வழங்குகிறார்.

''உடலுக்கு ஆரோக்கியம்... மனசுக்கு ஆசுவாசம்.. வயிற்றுக்கு நல்ல காய்கள்.. கண்ணுக்குக் குளுமை.. பொழுதும் போகும்.. இத்தனையும் கொடுக்கிற ஒரே விஷயம் தோட்டம் தான்" தோட்டத்தில் பறித்த காய்கறிகள் போல `ஃப்ரெஷ்’ஷாகச் சிரிக்கிறார் உஷா.

No comments:

Post a Comment