Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, October 2, 2014

திருநங்கைகள் மூன்றாம் பாலினமா?





''உனக்கு நானெல்லாம் சரிபட்டு வரமாட்டேன்; கிராமத்துல தேன்மொழி, கனிமொழின்னு யாராவது இருப்பாங்க.. அவங்களை கட்டிக்க!" - இந்த வசனம் ராஜா ராணி படத்தில் நடிகர் ஜெய்யைப் பார்த்து நடிகை நயன்தாரா பேசும் வசனம்.

சமீபத்தில் திருநங்கைகள் நடித்த நாடகத்தில் சில நிமிடங்கள் ஓடும் குறும்படம் திரையிடப்பட்டது. இந்த வசனத்தை பொதுமக்கள் சிலரைப் பேசச் சொல்லி படமாக்கியிருந்தார்கள். பின் இதே வசனத்தை திருநங்கைகள் பேசினால் எப்படி இருக்கும் என்று பேசிக் காட்டச் சொன்னார்கள். உடனே அவர்கள் உடலை வளைத்து, உதட்டைச் சுழித்துக்கொண்டு கொஞ்சம் அசூயை கலந்து இந்த வசனத்தை பேசிக் காட்டினார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால், அதில் ஒரு சிறுவனும் இருந்தான். திருநங்கைகள் பேசுவதுபோல என்றதுமே இப்படியான உடல்மொழியிலும் பேசும் பாவனையும் அந்த சிறுவனுக்கு யார் கற்றுத்தந்தார்கள்? எனும் கேள்வி நமக்குள் எழத்தான் செய்கிறது. பின் இதே வசனத்தை திருநங்கைகளைப் பேசச் செய்து படமாக்கியிருந்தார்கள். திருநங்கைகள் பொதுமக்கள் பேசுவதுபோல மிக இயல்பாக பேசியிருந்தார்கள்.

திருநங்கைகள் குறித்த புரிதல் பொதுமக்களிடம் தவறாக இருப்பது மட்டுமல்லாமல் கொஞ்சமும் கருணையில்லாமல் இருக்கிறது. வலி மிக்க போராட்டங்களுக்குப் பிறகு சமீபத்தில்தான் நீதிமன்றம் திருநங்கைகளை ஒரு பாலினமாக அங்கீகரித்திருக்கிறது. அதை பெரும்பான்மையோர் மூன்றாவது பாலினம் என்று குறிப்பிடுகிறார்கள். இது சரிதானா என்றால் ஒருவகையில் சரி. ஏனென்றால் ஏற்கனவே இரு பாலினங்கள் இருக்கையில் திருநங்கைகள் மூன்றாவது பாலினம் என்பது சரி.
ஆனால் படி நிலைப் படி இதை சிலர் குறிக்கும்போதுதான் தவறு என திருநங்கைகள் வருத்தம் கொள்கின்றனர். திருநங்கைகளுக்கு மூன்றாமிடம் என்றால் முதலிடம் யாருக்கு என்கிற கேள்வி எழுகிறது அல்லவா... பொதுவாக யார் பேசினாலும், எழுதினாலும் ஆண், பெண், மாணவ - மாணவியர், கணவன் - மனைவி எனக் குறிப்பிடுவது வழக்கம்தான். ஆனால் இந்த வரிசையை கொஞ்சம் உற்று நோக்கினால் இன்னோர் உண்மையும் புலப்படும். குறிப்பிடும் போதெல்லாம் ஆண் பாலினச் சொற்களை முதலிலும் பெண் பாலினச் சொற்களை அடுத்தும் குறிப்பிடுவதை இயல்பு போல மாற்றி அமைத்திருக்கிறது இந்த வரிசைப் படுத்தும் முறை.
இப்போது திருநங்கைகளை மூன்றாவதாக குறிப்பிடும் வழக்கம் தொடங்கியுள்ளது. பாலின வித்தியாசம் இருப்பதை, ஏற்றத் தாழ்வு என்கிற படிநிலைக்கு மாறிகொண்டிருப்பதை வழக்கத்தில் காண்கிறோம். ஏற்கனவே பொது சமூகத்தால் கேலிக்கு உள்ளாகி கொண்டிருக்கும் திருநங்கைகளுக்கு, உளவியலாகவும் இது பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதை உணரவேண்டிய காலக் கட்டத்தில் இருக்கிறோம்.
'லிவிங் ஸ்மைல்' வித்யா எனும் திருநங்கை, தனது அனுபவம் ஒன்றை பகிர்ந்திருப்பதை இங்கே பொருத்திப் பார்க்கலாம். 'பருத்தி வீரன்' திரைப்படம் வெளியான நேரத்தில், இவர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு சிறுவன் இவர் மேல் ஐஸை தூக்கி எறிந்துவிட்டு, அந்தப் படத்தில் வரும் பாடலை கிண்டலாக பாடியிருக்கிறான். சுற்றியிருந்த பெரியவர்கள் அந்த  சிறுவனைக் கண்டிக்காமல் சிரித்துக்கொண்டிருந்தார்களாம்.
பொதுமக்களில் பலரிடம் திருநங்கைகள் மதிப்பு இதுதான். இந்த மனநிலையோடு திருநங்கைகள் படிநிலை அடிப்படையில் மூன்றாம் பாலினமாக குறிப்பிடுவதை பார்க்க வேண்டும். சில எழுத்தாளர்கள் பெண் - ஆண் என்று தற்போது எழுதத் தொடங்கியிருக்கிறார்கள்.
சரி எப்படி எழுதினாலும் எந்த பாலினம் பெயரோ முதலிடத்திலும் மற்றவை பின்னாலும்தானே வரும் எனக் கேட்கலாம். பொது சமூகத்தால் புறக்கணிப்படும் பாலினத்தை முன்னிறுத்தி எழுதுவதும், குறிப்பிடுவதும் அவர்களுக்குள் தன்னம்பிக்கையை வளர்க்கும் என்பதாக இதை பார்க்கலாம்.

அடிமைப்பட்டு கிடந்த நாடு ஒன்றில், போராட்டக்காரர்கள் விடுதலை சாசனம் எழுதி பொதுமக்களிடம் படித்துக்காட்டி கருத்துக்களைக் கேட்டார்களாம். அப்படி ஒரு நாள் வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண்களிடம் அந்த சாசனத்தை படித்துக்காட்டிருந்தபோது, ஓர் இடம் வந்ததும் அந்த பெண்கள் படிப்பதை நிறுத்தச் சொல்லியிருக்கிறார்கள்.
'ஆணுக்குப் பெண் சமம்' எனும் வரியை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அதென்ன பெண்ணுக்கு அளவுகோலாக ஆணை நிறுத்துகிறீர்கள். ஆணும் பெண்ணும் சமம் என்று மாற்றுங்கள் என்றார்களாம். இதை அப்படியே நாம் திருநங்கைகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம். ஆணும் பெண்ணும் திருநங்கையும் சமம்.

வி.எஸ்.சரவணன்

Related Article

COMMENT(S):

 

No comments:

Post a Comment