பூம்புகார் :பூம்புகாரை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர் ஆளில்லாத சிறிய ரக உளவு விமானத்தை வடிவமைத்துள்ளார். நாகை மாவட்டம் பூம்புகார் அருகே குரங்குபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் பெரம்பலூர் ரோவர் இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிகல் இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவர் சிறிய ரக ஆளில்லா விமானத்தை வடிவமைத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: இந்த விமானங்களை ராணுவம், விவசாயம், தட்பவெப்பநிலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிகளவில் ஈடுபடுத்த முடியும். முழுவதும் அலுமினியத்தாலான இந்த விமானம் சூரிய ஒளியை முழுமையாக கொண்டு இயங்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதை தயாரிக்க ரூ.2 லட்சம் செலவானது. நம் நாட்டில் இயற்கை வளங்கள் எந்தெந்த இடங்களில் உள்ளது என்பதை இந்த விமானங்கள் மூலம் துல்லியமாக கண்டறியமுடியும்.
மேலும், விவசாயத்திற்கு மருந்து அடிப்பதற்கு, காட்டில் ஏற்படும் தீயை அணைப்பதற்கும் இதை பயன்படுத்தலாம். பாதுகாப்பு துறையில் முக்கிய பங்கு வகிக்கும். குறிப்பாக மாவோயிஸ்ட், நக்சலைட்கள், தீவிரவாதிகள் பிரச்னைகள் நம் நாட்டில் அதிகளவில் உள்ளது. இந்த ஆளில்லாத விமானங்கள் மூலம் காடுகள், மலைகள் ஆகிய பகுதிகளில் தங்கியுள்ளவர்களை கண்டுபிடிக்கமுடியும். இந்த விமானத்தை கடந்த 3 ஆண்டுகளாக சுமார் 100க்கும் அதிகமான விஞ்ஞானிகளின் ஆலோசனையுடன் வடிவமைத்தேன். இவ்வாறு பிரேம்குமார் கூறினார்.
No comments:
Post a Comment