Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, January 20, 2014

உணவுப் பழக்கம் தனிமனித உரிமை

நீலாங்கரையிலுள்ள சக்தி மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் மீன் சந்தை அமைப்பதை எதிர்த்து, அந்தக் கோயிலின் பக்தர் என்று ஒருவர் கூறிக்கொண்டு தொடர்ந்த பொதுநல வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து அரசுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது. வழக்கைத் தொடர்ந்தவர் கூறிய காரணம்: கோயில் நிலத்தில் மீன் சந்தை வைப்பது பக்தர்களின் உள்ளத்தைப் புண்படுத்துமாம். மீனவர்கள் குடியிருப்பு அதிகம் உள்ள அந்தக் கிராமத்தின் உபதேவதைக் கோயில் ஒன்றில் மீன் சந்தை வைப்பது பக்தர்களின் மனதை எப்படிப் புண்படுத்தும் என்று தெரியவில்லை. வழக்கின் அடிப்படையான வாதம் ‘அம்மனும் சைவமா?’ என்பதுதான்.

கண்ணப்ப நாயனாரின் பன்றிக்கறி
சைவ மதத்தின் பெரிய புராணத்தில் கண்ணப்ப நாயனாருக்கும் (பன்றிக்கறி படைத்தவர்), சிறுத்தொண்ட நாயனாருக்கும் (பிள்ளைக்கறி படைத்தவர்) சிறப்பான இடத்தைக் கொடுத்துவிட்டு, கடவுளரைச் சைவமாக்க முயற்சிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. பெரிய புராணத்தில் கண்ணப்ப நாயனார் காளத்திநாதனிடம் வேண்டுவதாக இவ்வாறு பாடப்பட்டுள்ளது:
“நாதனே! அமுது செய்ய
  நல்லமெல் லிறைச்சி நானே
கோதறத் தெரிந்து வேறு
  கொண்டிங்கு வருவே னென்பார்!”
சைவ உணவுமயமாக்கல்
சமீப காலங்களில் சைவ, அசைவ உணவுகள் பற்றிய பட்டிமன்றங்கள் பொதுவெளிகளில் பிரபலமாகியுள்ளன. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவைச் சத்துணவுத் திட்டம் என்று அறிவித்த அரசு, ஏழைக் குழந்தைகளின் புரதச்சத்து போதாமையைக் கருதி, வாரத்தில் மும்முறை, அவித்த முட்டைகளை அளித்து வருகிறது. இதற்குத் தமிழகத்தில் எதிர்ப்பேதும் இல்லாதது மட்டுமன்றி, தமிழகக் குழந்தைகளின் உடல்நலம் பெரிதும் முன்னேறியுள்ளது. முட்டை எடுத்துக்கொள்வதைத் தடுக்கும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு, மாற்று உணவாக வாழைப்பழம் வழங்கப்பட்டுவருகிறது. எனினும் மதிய உணவில் முட்டையைத் தவிர்க்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சொற்பமே.
பா.ஜ.க. மூன்றாவது முறையாக ஆட்சி நடத்தும் மத்தியப் பிரதேசத்திலும் குழந்தைகளுக்கு சத்துணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தைச் சீராய்வு செய்த நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில், வாரம் மும்முறை அவித்த முட்டைகள் அளிக்கப்பட்டன. இந்து மதத்தின் பாதுகாவலன் என்று அவதரித்துள்ள அந்த அரசு, பள்ளிக் குழந்தைகளுக்கு முட்டைகள் போடுவதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. பா.ஜ.க. அமைச்சர் ஒருவர், மத்தியப் பிரதேசத்தில் பெரும்பான்மையானோர் சைவர்கள் என்றும், பெற்றோர்கள் அந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மாட்டார்கள் என்றும் விளக்கம் கூறினார். இதைப் பற்றி விமர்சனம் செய்த ஊடகங்கள் மத்தியப் பிரதேசத்தில் 35 சதவீதத்தினரே சைவர்கள் என்று கூறியது. இந்து மதத்தை ஒருமுகப்படுத்தும் செயல்திட்டத்தில் சரஸ்வதி வந்தனம், சூரிய நமஸ்காரம், கோ பூஜை என்று தொடர்ச்சியாகப் பள்ளிக்கூடங்களைத் தங்களது சோதனைக்கூடங்களாக்கியுள்ள பா.ஜ.க-வினரின் அடுத்த முயற்சியே சைவ உணவுமயமாக்கல் திட்டமாக இருக்கலாம்.
சம்ஸ்கிருதமயமாக்கல்
சைவ, வைணவ மதங்களில் மறுமலர்ச்சி என்று சொல்லக்கூடிய 10-ம் நூற்றாண்டுக்குப் பிறகு, சமண மதத்துடன் கருத்துப் போர் நடத்திய பின் ஏற்பட்ட புதிய மாறுதலே சைவ உணவையும் மத வழக்கங்களுடன் பிணைக்கும் செயல். பக்தி மார்க்கத்தைப் பலதரப்பட்டவர்களிடமும் எடுத்துச் சொல்லும் முயற்சியில் எழுதப்பட்டவையே நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களின் வாழ்க்கைப் புராணங்கள். அனைத்துச் சாதியினரையும் இணைக்கும் வகையில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அவர்களுடைய வாழ்க்கை, புராணங்களாக்கப்பட்டது. இன்றும் சைவ உணவுப் பழக்கம் என்பது, சாதிக்கட்டுமானத்தின் உயர்நிலையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு சில சாதியினரைத் தவிர்த்து, மற்றவர்களிடம் காணப்படுவதில்லை. சாதிக்கட்டுமானத்தில் உள்ள ஒவ்வொரு சாதியினரும் தங்களை அடுத்த உயர்கட்டத்துக்கு எடுத்துச் செல்வதை ‘சம்ஸ்கிருதமயமாக்கல்’ என்று சமூகவியல் அறிஞர் எம்.என். னிவாஸ் குறிப்பிட்டுள்ளார். அசைவ உணவு உண்டுவந்த சில சமூகத்தினரும் சைவ உணவுக்கு மாறிவிட்டனர். அதுபோலவே “நீங்களும் உஜாலாவுக்கு மாறவில்லையா?” என்று கேட்பது தவறு.
பிராமணர்கள் அசைவம் உண்பார்களா?
உணவுப் பழக்கம் தனிமனித விருப்பு வெறுப்புக்கு உட்பட்டது. அதைச் சமயக் கட்டுப்பாடாக ஆக்கவும் அதையொட்டி மனித உறவுகளைப் பிரித்துக்கொள்வதும் ஏற்கத் தக்கதல்ல. வேத காலத்திய பிராமணர்கள் புலால் உண்டிருக்கிறார்கள். அதேபோல், இன்றைக்கும் வடஇந்திய பிராமணப் பிரிவுகள் சிலவற்றில் மீன் மற்றும் ஆட்டுக்கறி உண்பது பழக்கத்தில் உள்ளது. அதையெல்லாம் மூடிமறைத்து, சைவ உணவுப் பழக்கத்துக்கு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் திருப்ப முனைவது வீண் செயல். ‘சர்வதேச சைவர்கள் காங்கிரஸ்’ கூட்டங்களில் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொண்ட பிரமுகர்களைப் பேசச் சொல்வதும் அது மட்டுமே உலகத்தின் மிகச் சிறந்த நெறிமுறை என்று பிரச்சாரம் செய்வதும் பலரது மனதையும் புண்படுத்தும். வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே மிருகங்களைப் பலியிடுவதைத் தடைசெய்யச் சட்டம் இயற்றிய தமிழக அரசு, மக்களின் கோபக் கனலைக் கண்டு விரைவிலேயே அந்தச் சட்டத்தை ரத்துசெய்ததை இங்கு நினைவுகூரலாம்.
உணவுப் பழக்கத்தை வைத்து மனிதர்களைத் தனிமைப்படுத்துவதும், அந்தப் பழக்கங்களைக் கேலிசெய்வதும் விரும்பத் தக்க செயல் அல்ல. இன்றைக்குச் செய்திப் பத்திரிகைகளில் ‘வாடகைக்கு வீடு’பற்றி வரும் வரி விளம்பரங்களைப் பார்த்தாலே தெரியும். நகர வீட்டு உரிமையாளர் பலர் தங்கள் வீட்டில் குடியிருக்க வருவோர் சைவமாக இருக்க வேண்டும் என்ற விளம்பரங்கள்தான் பெரும்பான்மையானவை. உணவுப் பழக்கத்தை வைத்து பிராமணர் அல்லாதவர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களைத் தவிர்க்கவே இத்தகைய புத்திசாலித்தனமான ஏற்பாடு. அசைவர்கள் வாடகை வீடு பிடிக்க எங்கு செல்வார்கள்? என்ற கேள்விக்கு யாரும் பதில் கூறுவதில்லை. அரசு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள், நிறுவனங்களின் குடியிருப்புகள் போன்றவற்றில் குடியிருப்போருக்கு இடையே இந்தப் பிரச்சினைகள் எழுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சைவ நீதிமன்றம்
உயர் நீதிமன்றத்தின் மதுரை வளாகத்தில் உள்ள சிற்றுண்டி விடுதிகளில் அசைவ உணவு கிடைப்பதில்லை என்று அங்குள்ள வக்கீல்கள், வழக்கறிஞர் ரத்தினத்தின் தலைமையில் போர்க்கொடி உயர்த்தினார்கள். அவர்களது கோரிக்கைக்கு செவிமடுக்காத நிர்வாகத்தை எதிர்த்து வளாகத்தில் உள்ள விடுதியில் ஒரு நாள் அவர்களே அசைவ உணவை விநியோகிக்க முற்பட்டனர். ஈத் பண்டிகை அன்று ஒட்டகங்களை வெட்டக் கூடாதென்று ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. ஒட்டகங்கள் மிருகங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வராததோடு மட்டுமல்லாமல், மதச்சார்பான பண்டிகைகளின்போது வெட்டப்படும் மிருகங்களுக்கு அந்தச் சட்டத்தில் விதிவிலக்கு உண்டென்று கூறி, உயர் நீதிமன்றம் அந்த வழக்கைத் தள்ளுபடிசெய்தது. சிறைக் கைதிகளை எல்லாம் அரசு சைவபட்சியாக மாற்றிவிடாமல் இருக்கவும், அந்தக் கைதிகளுக்கும் புரதச் சத்து தேவை என்பதாலும் தமிழகச் சிறைகளிலும் வாரம் ஒருமுறை அசைவ உணவு கொடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவை ஏற்று சிறைக் கைதிகளுக்கும் இப்போது அசைவ உணவு வழங்கப்படுவது பாராட்டத் தக்க செயல்.
மத உணர்வும் கறிக் கடைகளும்
சமண மதத்தினரின் ‘பர்யூஷான்’ விரதத்தின்போது 18 நாட்கள் கறிக் கடைகளை மூடச் சொல்லி அகமதாபாத் நகராட்சி போட்ட உத்தரவை எதிர்த்து, கறிக் கடைக்காரர்கள் போட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் 2008-ல் தள்ளுபடி செய்தது. அந்தத் தீர்ப்பில் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே கறிக் கடைகளை மூடும்படியான உத்தரவு ஒரு சிறுபான்மை மதத்தினரைப் புண்படுத்தாமல் இருப்பதற்காக என்பதால், அதில் தவறில்லை என்றும் அதே சமயம், ஆண்டு முழுவதும் மக்கள் எவ்வித உணவு உட்கொள்ள வேண்டும் என்பதை அரசாங்கம் நிர்ப்பந்திக்க முடியாது என்றும், அது தனிமனித சுதந்திரத்துக்கு உட்பட்டதென்றும் கூறப்பட்டது. நகராட்சிக்கு உட்பட்ட கறிக் கடைகளில் மாமிசம் வாங்கிப் பழக்கப்பட்ட மக்கள், அதற்காகத் தொலைதூரங்களுக்குச் செல்ல முடியாது என்றும் குறிப்பிட்டது.
சாத்தான்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மீனும் கோழியும் விற்பனைசெய்த கடைகளை மூடிவிட்டு, பேரூராட்சிக்கு வெளியில் கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு இடம்பெயர்ந்து செல்லுமாறு போட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது. சாதாரண முட்டை வாங்குவதற்குக்கூட ஊருக்கு வெளியில் போக வேண்டும் என்று வற்புறுத்துவது தவறென்றும், அது பொருட்களின் விலையை உயர்த்தவே தூண்டுமென்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. ஈரோடு மாவட்டத்தில், கவுந்தம்பாடி வாரச் சந்தையில் மாட்டுக்கறி விற்ற அருந்ததியர் குடும்பத்திடம், கடையை மூடச்சொன்ன ஊராட்சித் தலைவருக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் செய்வதைத் தடைசெய்த காவல் துறை துணைக் கண்காணிப்பாளரின் உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்துசெய்ததோடு மட்டுமல்லாமல், உணவுப் பழக்கங்களில் அரசின் தலையீட்டைக் கண்டித்தது.
வேறு மாநிலங்களிலிருந்து சுகாதாரக் கேடான மாமிசங்கள் நகராட்சிப் பகுதிக்குள் வருவதை, சுகாதாரத் துறை தடைசெய்வதுடன், உள்ளூரில் உள்ள ஆட்டுத்தொட்டியை நவீனப்படுத்தி, உடல்நலக் கேடு விளைவிக்காத வகையில் நல்ல சுகாதாரமான மாமிசப் பொருட்களை வழங்கும்படி தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளும் மாநகராட்சிகளும் சட்டப்படி கடமைப்பட்டுள்ளன.
சந்துரு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி,
சமூக விமர்சகர்.

No comments:

Post a Comment