தட்டச்சு இயந்திரங்களைத் தயாரிக்கும் கோத்ரெஜ் நிறுவனம் தட்டச்சு தயாரிப்பதை நிறுத்திவிட்டதாக அண்மையில் ஒரு செய்தி வந்தது.இப்போது எங்கு பார்த்தாலும் கணினிகள் வந்துவிட்டன. அதிலேயே அச்சுப் பணிகள் எல்லாம் நடக்கின்றன.பிறகு எதற்கு தட்டச்சுகள்? அதன் தேவை குறைந்து விட்டதால் தயாரிப்புகளும் நிறுத்தப்படுகின்றன. ஆனால்,இந்த தட்டச்சுகள் கடந்த இரு நூறு ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த மிக முதன்மையான இயந்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா? கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை இன்று கணினி வகுப்புகளுக்குச் செல்வதைப் போல் மாணவ, மாணவிகள் தட்டச்சுப் பயிற்சி பெறச் சென்றார்கள்.
அதில் வைக்கப்படுகின்ற தேர்வுகளில் (Higher, Lowyer) தேர்ச்சி பெற்றால் மட்டுமே அலுவலகங்களில் (Clerical line) பணியுரிய முடியும் என்ற நிலை இருந்தது.
கணினியின் ஆதிக்கம் அதிகமாக அதிகமாகத் தட்டச்சு பயில்வோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. கணினியில் வேகமாகத் தட்டச்சு செய்வதற்கு சிலர் தட்டச்சு வகுப்புகளுக்குச் சென்றனர்.
தற்போது பெரும்பாலும் கணினியிலேயே தட்டச்சு செய்து பயின்று கொள்கின்றனர்.
தட்டச்சு இயந்திரம் யாரால் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
எந்த ஒரு சாதனமும் தனிப்பட்ட ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதன்று. முதலில் ஒருவரால் அறிமுகப்படுத்தப்படும். பின்பு பலரின் முயற்சியால் தக்க வடிவம் கொடுக்கப்படும். பின்பு, மேலும் மேம்படுத்திப் பல புதிய வசதிகளைச் சேர்ப்பர். தட்டச்சு இயந்திரமும் இப்படித்தான் வளர்ச்சியடைந்துள்ளது.
தட்டச்சு இயந்திரம் கண்டுபிடிக்க மூல ஆதாரமாக இருந்தது கூடன்பர்க் வடிவமைத்த அச்சு இயந்திரமாகும். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹென்றி மில் என்பவர் முதன்முதலில் கி.பி. 1714 ஆம் ஆண்டில் தட்டச்சு இயந்திரம் போன்ற ஒரு சாதனத்தை வடிவமைத்தார். பின்பு, அதற்கான காப்புரிமையையும் பெற்றார். அதற்குப் பிறகு அதனை மேம்படுத்த எவ்வித முயற்சியும் அவர் மேற்கொள்ளவில்லை.
கி.பி. 1829 இல் வில்லியம் பர்ட் என்பவர் ஒரு கருவியினை வடிவமைத்து டைப்போகிராபர் (Typographer) என்ற பெயர் கொடுத்தார். இந்தக் கருவியில் எழுத்துகள் சுற்றக்கூடிய ஒரு சட்டத்தில் அமைக்கப்பட்டிருந்தன. உபயோகப்படுத்திப் பார்த்த போது பல நடைமுறைச் சிக்கல்கள் எழுந்தன. ஆகையால், இவரது முயற்சி தோல்வியில் முடிந்தது.
1867 இல் கிறிஸ்டோபர் ஷோல்ஸ் என்பவர் தட்டச்சு இயந்திரத்தை வடிவமைத்தார். இது ஒரு வெற்றிகரமான கருவியாக அமைந்தது. காப்புரிமை பெற்று, பெற்ற காப்புரிமையை நியூயார்க் நகரின் புகழ்பெற்ற நிறுவனமான ரெமிங்டன் அண்ட் சன்ஸ்க்கு வழங்கினார்.
இந்த நிறுவனம் உலகின் முதல் வியாபார ரீதியிலான வெற்றிகரமான தட்டச்சு இயந்திரங்களைத் தயாரித்து உலகிற்கு வழங்கியது.
ஷோல்சின் மெக்கானிக்கல் தட்டச்சு இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு தாமஸ் ஆல்வா எடிசன் 1872 இல் உலகின் முதல் எலக்ட்ரிக் தட்டச்சு இயந்திரத்தை வடிவமைத்தார். இது 1950 வரை அவ்வளவாக நடைமுறையில் இல்லை. இதன் விலை அதிகம் என்பதால் யாரும் அதிக விலை கொடுத்து வாங்க முன்வரவில்லை. பின்பு, 1978 இல் உருவாக்கப்பட்ட எலக்ட்ரானிக் தட்டச்சு இயந்திரத்தில் தகவல்களைச் சேகரிக்கும் மெமரி வசதி அமைக்கப்பட்டது.
ஷோல்ஸ் வடிவமைத்த தட்டச்சு இயந்திரத்தில் எழுத்துகளும் எண்களும் வரிசைகளில் அமைக்கப்பட்டிருந்தன. ரப்பரினாலான ஒரு உருளையும் மரத்திலான ஒரு இடைவெளி விடுவானும் (Space Bar) அமைக்கப்பட்டிருந்தன. எழுத்துகள் தற்போது உள்ளதுபோல சிறிய (Small letters) மற்றும் பெரிய (Capital letters) எழுத்துகள் அப்போது இல்லை. அனைத்தும் பெரிய எழுத்துகளாக (Capital) அமைந்திருந்தன.
இந்தக் குறையானது கி.பி. 1878 ஆம் ஆண்டு ரெமிங்டன் நிறுவனத்தால் நீக்கப்பட்டது. ஒரு ஷிப்ட் கீ அமைக்கப்பட்டு சிறிய மற்றும் பெரிய எழுத்துகள் அமைக்கப்பட்டன.
கி.பி. 1893 வரை மேலும் ஒரு பெரிய குறை இருந்து வந்தது. தட்டச்சு செய்பவருக்குத் தான் என்ன வாத்தையினைத் தட்டச்சு செய்கிறோம் என்பது தெரியாமலேயே இருந்தது. தற்போது இருக்கும் வசதி அப்போது அமைக்கப்படவில்லை. எனவே, தட்டச்சு செய்பவர்கள் சிரமத்தைச் சந்தித்தார்கள். தான் தட்டச்சு செய்வது சரியா தவறா என்பதே தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
இந்தக் குறைபாடு பிரான்சஸ் வாக்னர் என்னும் ஜெர்மானியரால் 1890 இல் நிவர்த்தி செய்யப்பட்டது. ஜான் அண்டர்வுட் என்பவர் தற்போது உபயோகத்தில் இருக்கும் இங்க் ரிப்பனையும், கார்பன் பேப்பரையும் கண்டுபிடித்தார்.
எனினும், தட்டச்சு செய்யும்போது தவறு நேர்ந்தால் சரி செய்வது சற்று கடினமே. சரி செய்தாலும் தவறு தெரியும்.
கணினியில் வார்த்தைகளில் பிழையைக் கண்டுபிடிக்கும் அமைப்பின் மூலம் கண்டுபிடித்து எளிதில் திருத்திவிடலாம். மேலும் தட்டச்சு இயந்திரத்தில் ஒரு நேரத்தில் அதிகபட்சமாக 5 பிரதிக்கு மேல் எடுக்க முடியாது. முதல் பிரதி தவிர மற்ற பிரதிகளில் எழுத்துகள் தெளிவாக இருக்காது. எனவே, படிப்பதில் சிரமம் ஏற்படும். கணினியில் இந்தப் பிரச்சினை இல்லை.
மேலும், கணினி ஆவணங்களை ஒரு கோப்பின் மூலம் சேமித்து வைத்து எத்தனை முறை வேண்டுமானாலும் பிரதி எடுக்கலாம். இத்தனை வசதிகள் கொண்டிருந்தாலும், கணினி கீ போர்டு தட்டச்சு இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டதே. மேற்கத்திய நாடுகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பே தட்டச்சு காணாமல் போய்விட்டது. இந்தியாவில் தற்போது சில இடங்களில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் படிப்படியாகக் குறைந்து இன்று கணினியின் ஆதிக்கம் மேலோங்கிவிட்டது. எனவே, தட்டச்சுத் தயாரிப்புத் தொழிற்சாலைகள் பல மூடப்பட்டன.
எனினும் கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ் நிறுவனம் மட்டும் தொடர்ந்து தட்டச்சுகளைத் தயாரித்து வந்தது. உலகின் கடைசித் தட்டச்சுத் தொழிற்சாலையாகத் திகழ்ந்த இந்த நிறுவனமும் மூட வேண்டிய நிலைக்கு உள்ளானது. இந்தத் தயாரிப்பு மய்யத்தில் அரபி மொழித் தட்டச்சுகள் 200 மட்டுமே உள்ளனவாம். வேறு வழி இல்லாததால் தயாரிப்பு மய்யம் மூடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment