இயற்கையின் அருட்கொடைகள் தான் மரங்கள், செடி, கொடிகள். இவை ஒவ்வொன்றுமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. மேலும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படும் பிராண வாயு அதாவது ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் மரங்கள். மழையை வருவிக்கும் வருணபகவானாக மரங்களும், செடிகளும் உள்ளன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் பல வகைகள் உள்ளன. இந்த மரங்களில் புங்க மரத்தின் மருத்துவப் பயன்களை அறிந்து கொள்வோம்.
ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்து புங்க மரம்தான். எந்தப் பகுதியிலும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடியவை. அதிக நிழலை தரக்கூடியது. பசுமை படர்ந்த மரமாக காட்சியளிக்கும். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படும். சாலை ஓரங்களில் நிழல் தரவும்,, மண் அரிப்பைத் தடுக்கவும் புங்கை மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
புவி வெப்பமயமாதலை தடுக்கும் தன்மையுள்ள மரங்களில் புங்க மரமும் ஒன்று. வெப்பத்தின் தன்மையை உறிஞ்சி சீரான சீதோஷ்ண நிலையை ஏற்படுத்தும் குணம் இதற்கு உண்டு.
புங்க மர விதையிலிருந்து பயோடீசல் (Biodisel) உருவாக்கும் திட்டத்தைப் பற்றி மஹாராஷ்டிர அரசு ஆலோசனை செய்து வருகிறது. இந்த விதைகளிலிருந்து 30 – 40 சதவீத எண்ணெய்ச் சத்து உள்ளதாக கண்டறிந்துள்ளனர்.
மருத்துவப் பயன்கள்
இலைகளின் சாறு – இருமல், சளி, பேதி, வயிற்றுப் பொருமல், பசியின்மை போன்றவற்றைப் போக்கும்.
விதைகள் – தோல் வியாதிகளை அகற்றும்.
வேர்கள் – பற்கள் மற்றும் ஈறு சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும்.
மரப்பட்டை – மூல வியாதிக்கு சிறந்த மருந்து.
பூக்கள் - உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
விதையின் பொடி – காய்ச்சல், இருமல், நெஞ்சுச் சளியைப் போக்கும்.
வித்துகளில் உள்ள எண்ணெய் வாத வியாதிகளுக்கும், மூட்டு வலிக்கும் இந்திய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
புங்க மரத்தின் இலை, பூ, வேர், விதை, எண்ணெய் அனைத்துமே மருத்துவப் பயன் கொண்டது. இதற்கு புன்கு, பூந்தி, கரஞ்சகம், கரஞ்சம் என்ற வேறு பெயர்களும் உண்டு.
புங்கம் பூ எடுத்து நெய்விட்டு வதக்கி தூளாக செய்து தினமும் 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் மேக நோய்கள் வராது. மேலும் மேக நோயின் பாதிப்புகள் முற்றிலும் நீங்கும். இதைத் தொடர்ந்து ஒரு மண்டலம் உண்டு வருவது நல்லது. இக்காலங்களில் புளி, புகை வாயுவை அதிகரிக்கும் உணவுகள் முதலியவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
புங்கம் பூ, புளியம்பூ, வசம்பு, சின்ன வெங்காயம், சீரகம், வெட்பாலை அரிசி, நன்னாரி என வகைக்கு 35 கிராம் எடுத்து 3/4 லிட்டர் பாலில் கொதிக்க வைத்து 1 லிட்டர் புங்க எண்ணெய் விட்டு காய்ச்சி கரப்பான், நாள்பட்ட ஆறாத புண்கள் மீது தடவினால் அவை எளிதில் குணமாகும்.
தீக்காயம், நாள்பட்ட ஆறாத புண்கள், வடுக்கள், தழும்புகள், கரப்பான் நோய்கள், சொரி, சிரங்கு இவற்றிற்கு புங்க எண்ணெயை லேசாக சூடாக்கி அவற்றின் மீது பூசி வர மேற்கண்ட நோய்கள் அனைத்தும் தீரும்.
புங்க வேரின் தோலை நீக்கி, மெல்லியதாக சீவி சாறு பிழிந்து அதற்கு சமமான அளவு தேங்காய்பால் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு, ஒரு மெல்லிய துணியில் நனைத்து, பிளவை, ஆறாத புண்கள், பால்வினை நோய்களால் ஏற்பட்ட புண்கள் மீது தடவிவந்தால் புண்கள் எளிதில் ஆறும்.
புங்க எண்ணெய் சருமத்தை பாதுகாப்புடன் பளபளக்கச் செய்யும். தினமும் உடலில் புங்க எண்ணெய் தடவி வந்தால் சரும நோய்கள் ஏதும் அணுகாது.
புங்க எண்ணெய் , வேப்ப எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், புன்னை எண்ணெய் இவைகளை வகைக்கு 700 மி.லி. எடுத்து அதனுடன் சின்ன வெங்காயம், வசம்பு, பெரிய வெங்காயம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், கிராம்பு, சதகுப்பை, கடுகுரோகிணி, சித்திரமூலம் வகைக்கு 17.0 கிராம் எடுத்து இவைகளை காடி நீர்விட்டு அரைத்து மேற்கூறிய எண்ணெய்களுடன் கலந்து, மேலும் சிறிது காடி நீர் சேர்த்து அடுப்பேற்றி எரித்து மெழுகு பதத்தில் இறக்கி வைத்துக்கொண்டு சருமத்தில் தடவி வந்தால் மேக நோய், சூலைநோய், இசிவி சூதக வலி போன்ற நோய்கள் தீரும்.
புங்க இலையை வதக்கி வீக்கங்களுக்கு கட்டலாம்.
புங்கமரத்தின் பால் புண்களையும், வாய்வையும் நீக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு பொன்போன்ற நிறத்தைக் கொடுக்கும்.
புங்க மரத்தின் பயன்கள் ஏராளம். அதன் பயனை முழுமையாக அடைய நிறைய மரங்களை நாமும் நட்டு வளர்த்து பயன் பெறுவோம்.
SOURCE:http://senthilvayal.wordpress.com/
No comments:
Post a Comment