Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, December 4, 2013

தீர்ப்பும் தவறும்

வரும் வியாழனன்று தொடங்க இருக்கும் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திருத்தம் பற்றியது. இந்திய அரசுக்கு எதிராக லில்லி தாமஸ் தொடர்ந்த வழக்கில் கடந்த ஜூலை 10, 2013 அன்று வழங்கிய அதிரடி உத்தரவின் மூலம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன் பிரிவு (8) 4, அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்கிற பாட்னா உயர்நீதிமன்றத் தீர்ப்பை, உறுதி செய்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பு வரை, நீதிமன்றங்களால் தண்டனை வழங்கப்பட்ட சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அடுத்த மூன்று மாதங்களுக்குள் மேல் முறையீடு செய்து, தண்டனைக்குத் தடையுத்தரவு பெற மக்கள் பிரதிநித்துவச் சட்டத்தில் வழிகோலப்பட்டிருந்தது. ஜூலை 10, 2013 தீர்ப்புக்குப் பிறகு, தண்டனை வழங்கப்பட்டது முதலே அவர்கள் வகித்து வந்த உறுப்பினர் பதவியை இழந்து விடுவார்கள். அத்துடன் முடிந்துவிடுவதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமான தண்டனை வழங்கப்படும்போது, சிறை தண்டனை முடிந்து விடுதலையானாலும், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு எந்தத் தேர்தலிலும் அவர்கள் போட்டியிடவும் முடியாது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நமது உறுப்பினர்களின் பின்னணி மெச்சும்படியாக இல்லை என்பது உலகறிந்த ஒன்று. இந்தியாவிலுள்ள மொத்தம் 4,807 தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களில் 1,460 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அவர்களே வேட்புமனுவைத் தாக்கல் செய்யும்போது ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். 543 மக்களவை உறுப்பினர்களில் 162 பேர்மீது, அதாவது 30 விழுக்காட்டினர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதில் 14 விழுக்காடு உறுப்பினர்கள்மீது வன்புணர்ச்சி, கொள்ளை, கொலை முயற்சி போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் விசாரணையில் இருப்பதாக அவர்களே தெரிவித்திருக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் மட்டும்தான் இந்த நிலை என்பதில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களில் 31%, அதாவது 4,032 பேரில் 1,258 பேர், கிரிமினல் வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருப்பவர்கள்தான். இதில் வேடிக்கை என்னவென்றால், கிரிமினல் குற்றப் பின்னணி உடைய உறுப்பினர்கள் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதும், தேர்தலுக்குத் தேர்தல் அவர்களது சொத்து மதிப்பு அதிகரித்து வருவதும்தான்!
2004 தேர்தலுக்குப் பிறகான புள்ளி விவரப்படி, எம்.பி., எம்.எல்.ஏ. பதவிக்காக முன்னணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட 62,847 வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 1.37 கோடி. வெற்றி பெற்றவர்களின் சொத்து மதிப்பு ரூ. 3.83 கோடி. கிரிமினல் வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 4.30 கோடி.
மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புப் பெற்ற 4,181 வேட்பாளர்களில், 3,173 பேரின் சொத்து மதிப்பு, கடந்த தேர்தலின் போது இருந்ததைவிடக் கணிசமாக அதிகரித்திருப்பது தெரிகிறது. அதுவும் கொஞ்சம் நஞ்சமல்ல. சராசரியாக, ரூ. 2.85 கோடி! அதாவது, ஐந்தே ஆண்டுகளில் 134 விழுக்காடு அதிகரிப்பு!
பண பலமும், கிரிமினல் பின்னணியும் உள்ள உறுப்பினர்கள்தான் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்துகிறார்கள் என்று அரசியல் கட்சிகள் தெரிந்து வைத்திருப்பதால், அவர்களுக்கே மீண்டும் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கும் போக்கும் அதிகரித்து விட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு, அரசியல் கட்சிகளை சற்று யோசிக்க வைக்கும். குற்றப் பின்னணி உள்ளவர்கள் தண்டிக்கப்பட்டால், உடனடியாகப் பதவி பறிபோவதுடன் இடைத்தேர்தலுக்கும் தயாராக வேண்டும் என்பதால், அப்படிப்பட்டவர்களுக்கு வாய்ப்பளிக்க அரசியல் கட்சிகளின் தலைமை இனிமேல் தயங்கக் கூடும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் ஒரு கருத்து நெருடலாக இருக்கிறது. ஒருவர், சிறையில் இருப்பதாலேயே அவர் பதவி நீக்கப்படுவது என்பது சரியானதாகப் படவில்லை. சிறையிலிருப்பதால் வாக்களிக்கத் தடைஇருக்குமே தவிர, அவர் போட்டியிடும் தகுதியை இழந்து விடுவதில்லை. உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் பாட்னா உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஒருவர் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தாலே, அவர் போட்டியிடும் தகுதியை இழக்கிறார். விசாரணை முடிந்து தண்டிக்கப்பட்டால்தான் ஒருவர் தகுதி இழப்புப் பெற வேண்டுமே தவிர, குற்றம் சாட்டப்பட்டதாலேயே தகுதி இழப்பது இயற்கை நீதிக்கு எதிரானது. இதையே ஆளும்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, ஏதாவது காரணம் கூறி ஒருவரைக் கைது செய்து போட்டியிலிருந்து அகற்றி நிறுத்திவிட முடியும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் இந்தப் பகுதியை, சட்டத் திருத்தம் செய்து நாடாளுமன்றம் அகற்றியாக வேண்டும்.
விஷயம் விவாதப் பொருளாகி இருக்கிறதே, அதுவரை மகிழ்ச்சி. விவாதத்தின் முடிவில், கிரிமினல்களிடமிருந்து அரசியல் காப்பாற்றப்பட்டால் அதைவிட மகிழ்ச்சி!

--

No comments:

Post a Comment