Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, December 4, 2013

ஓரவஞ்சனை!

 
கொச்சியிலிருந்து தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக பெங்களூருவுக்கு இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்வதற்கான குழாய்களை விவசாய நிலங்களின் ஊடாகப் பதிக்க இந்திய எரிவாயு ஆணைய நிறுவனத்துக்கு ("கெயில்') அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

கொச்சியிலிருந்து தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களின் வழியாக பெங்களூருவுக்கு இயற்கை எரிவாயுவை குழாய்கள் மூலம் கொண்டு செல்லும் ரூ. 3,000 கோடி மதிப்பீட்டிலான திட்டத்தை "கெயில்' நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதன் முதல் கட்டமாக கேரளத்தின் கொச்சியிலிருந்து குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. அந்த மாநிலத்தில் இந்தக் குழாய்கள் தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரமாகப் பதிக்கப்பட்டுள்ளன.
ஆனால், தமிழகத்தில் 310 கி.மீ. தொலைவுக்கு விவசாய நிலங்களின் ஊடாக குழாய்கள் பதிக்க ரூ. 685 கோடியை "கெயில்' நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது. விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களைப் பதித்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என விவசாயிகளும், விவசாய அமைப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனினும், விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி, கெயில் நிறுவனம் விளை நிலங்கள் வழியாகக் குழாய்கள் பதிக்கும் நடவடிக்கையில் இறங்கியது.
இதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, தமிழகத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் 7 மாவட்டங்களிலும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து, சென்னையில் தலைமைச் செயலர் தலைமையில் விவசாயிகளின் கருத்தறியும் கூட்டத்துக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்தது.
எரிவாயுக் குழாய்களை விவசாய நிலங்கள் ஊடாகக் கொண்டு செல்வதற்குப் பதிலாக, கேரளத்தில் செயல்படுத்தியது போல தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரம் வழியாக குழாய்களைப் பதிக்கலாம் என விவசாயிகள் யோசனை தெரிவித்தனர். அவர்களது கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து, விவசாய நிலங்கள் ஊடாக எரிவாயுக் குழாய்கள் பதிக்க "கெயில்' நிறுவனத்துக்குத் தடை விதித்து, கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், இந்தத் திட்டத்துக்காக ஏற்கெனவே விளை நிலங்களில் தோண்டப்பட்ட பள்ளங்களை மூடி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு "கெயில்' நிறுவனம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து "கெயில்' நிறுவனம் தொடுத்த வழக்கில்தான், சென்னை உயர் நீதிமன்றம் சர்ச்சைக்குரிய இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது. பெரும்பாலான மக்களின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த "கெயில்' நிறுவனத்துக்கு அனுமதி அளிப்பதாகவும், இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தால் 7 மாவட்டங்களில் சுமார் 50,000 ஏக்கர் விவசாய நிலங்களும், லட்சக்கணக்கான விவசாயிகளும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய சூழல் உள்ள நிலையில், இது எந்த விதத்தில் மக்களின் வளர்ச்சிக்கானது என்பது புரியவில்லை. மேலும், கேரளத்திலும், தில்லியிலும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் எரிவாயுக் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் விவசாய நிலங்களின் ஊடாகத்தான் கொண்டு செல்வோம் என "கெயில்' நிறுவனம் முரண்டு பிடிப்பது ஏன்? என்றும் தெரியவில்லை.
சாலையோரங்களில் எரிவாயுக் குழாய்களைப் பதித்தால் பெரும் விபத்து நேரிடலாம் என்கின்றனர் கெயில், ஓஎன்ஜிசி நிறுவனங்களின் அதிகாரிகள். அது உண்மையானால், விவசாய நிலங்களின் வழியாக எரிவாயுக் குழாய்களைப் பதித்தால் மட்டும் விபத்து நிகழாதா என்ன?
உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மீண்டும் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாகவும் பல்வேறு விவசாய அமைப்புகளின் நிர்வாகிகளும், அரசியல் கட்சியினரும் கூறியுள்ளனர். உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதுதான் இப்போதைக்கு தமிழகத்தின் ஏழு மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ஒரே வழி.
கேரளத்தில் முடியுமானால் தமிழகத்தில் மட்டும் அது ஏன் முடியாது? மக்களின் வளர்ச்சி பற்றி அக்கறை தெரிவிக்கும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு இதுபற்றி ஏன் யோசிக்கவில்லை?

http://dinamani.com

2 comments:

  1. Mun naal CM C N A avarkal kaytta Thiravida naadu korikkai niraiveri irunthal ithu pondra "oravanchanai" nadakkaathu irukkumo...???

    ReplyDelete
  2. Mun naal CM C N A avarkal kaytta Thiravida naadu korikkai niraiveri irunthal ithu pondra "oravanchanai" nadakkaathu irukkumo...???

    ReplyDelete