நம்
சமுதாயம் எந்த அளவுக்கு போலித்தனமான சமுதாயமாக இருக்கிறது என்பதற்கு
ஆண்டுதோறும் டிசம்பர் 3-ஆம் தேதியை மாற்றுத் திறனாளிகள் தினமாகக்
கொண்டாடுவது சிறந்த எடுத்துக்காட்டு. தேசிய அளவில் சாதனை புரிந்த மாற்றுத்
திறனாளிகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்பு
அமைச்சகத்தின் சார்பில் குடியரசுத் தலைவர் விருது வழங்கிப்
பாராட்டுவதிலும், எல்லா மாநிலங்களிலும் விழா எடுத்துக் கொண்டாடுவதிலும்
குறைவே இல்லை. ஆனால், அவர்களது நியாயமான உரிமைகளை சலுகைகளாகக்கூட வழங்க
மனமில்லாத சமுதாயமாகத் தொடர்கிறோமே, அந்தப் போலித்தனத்தை யாரிடம் போய்ச்
சொல்வது?
இல்லையென்றால்,
ஊனமுற்றோர் சமவாய்ப்பு சட்டம் 1955 இன்படி மாற்றுத் திறனாளிகளுக்கு இந்திய
ரயில்வே அளித்துள்ள பயணச் சலுகைகளைப் பெற, அரசு அடையாள அட்டை
வைத்திருந்தால் மறுக்காமல் அரசு மருத்துவர்கள் சான்றிதழ் வழங்க வேண்டும்
என்று தமிழக சுகாதாரத் துறை செயலர் வழிகாட்டு உத்தரவு வழங்க வேண்டிய அவல
நிலைமை ஏற்பட்டிருக்குமா? மாற்றுத் திறனாளிகளுக்குச் சான்றிதழ் வழங்க அரசு
மருத்துவர்கள் விரும்பாமல் இருப்பதோ, இல்லை அவர்களிடமிருந்தும்கூட கையூட்டு
எதிர்பார்ப்பதோதானே இதற்குக் காரணமாக இருந்திருக்க முடியும்?
மாற்றுத்
திறனாளிகளை உலகின் மிகப் பெரிய சிறுபான்மையினர் என்று குறிப்பிடுகிறது உலக
சுகாதார நிறுவனம். இந்தியாவும் கையெழுத்திட்டிருக்கும் ஐ.நா. சபையின்
கொள்கைத் தீர்மானங்களில் முக்கியமானவை, மாற்றுத் திறனாளிகளின் தேவைகளை
உரிமையாகக் கருதுவதும், அவர்களுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு முடிவு
கட்டுவதும். ஆனால், இந்தக் கொள்கை முடிவுகள் எந்த அளவுக்குக்
கடைப்பிடிக்கப்படுகின்றன? மாற்றுத் திறனாளிகளில் 40
விழுக்காட்டினருக்குக்கூட நாம் இன்னும் அடையாளச் சான்றிதழ் வழங்கவோ,
அவர்கள் பற்றிய முறையான கணக்கெடுப்பு சேகரிக்கவோ இல்லை என்பதுதான் உண்மை.
ஊனமுற்றோர்
(சம வாய்ப்பு, உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு) சட்டம் 1955
நிறைவேற்றப்பட்டு நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1996-இல்தான் நடைமுறைக்கு
வந்தது. நடைமுறைக்கு வந்தது என்பதாலேயே, செயல்படத் தொடங்கியது என்று
நினைத்துவிட வேண்டாம். தேசிய ஊனமுற்றோர் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு
மையத்தின் புள்ளிவிவரப்படி, அரசு வேலைவாய்ப்பில் 0.5 விழுக்காடும், தேசிய
அளவில் எடுத்துக்கொண்டால் 0.4 விழுக்காடும்தான் மாற்றுத் திறனாளிகளுக்கு
வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
ஊனமுற்றோருக்காக
1955-இல் கொண்டுவரப்பட்ட சட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தக் கோரி தேசிய
பார்வையற்றோர் கழகம் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
உயர்நீதிமன்றமும் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால் மத்திய அரசு செய்ததுதான் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. நீதிமன்ற
உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, மத்திய சட்ட அமைச்சகம், அந்த
உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. எதற்காக
தெரியுமா? மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்பு, உரிமைகள் பாதுகாப்பு
மற்றும் முழுப் பங்கேற்பு அளிக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருக்க!
நல்ல
வேளை உச்சநீதிமன்றம் மத்திய அரசின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல்,
உயர்நீதிமன்றத் தீர்ப்புப்படி மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில்
3 விழுக்காடு ஒதுக்கீடு அளிப்பதை மூன்றே மாதத்திற்குள் உறுதிப்படுத்துமாறு
உத்தரவிட்டிருக்கிறது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு
செய்தது ஏன், அதற்கு யார் யார் காரணம், மத்திய சட்ட அமைச்சர் அதற்கு ஏன்
உடன்பட்டார் என்பதையெல்லாம் மக்கள் மன்றத்தில் விளக்க அரசு
கடமைப்பட்டிருக்கிறது.
மாற்றுத்
திறனாளிகளுக்கு இன்னின்ன வேலைகள் ஒதுக்கப்படலாம் என்று இனம் காணும்படி
சட்டம் வழிகாட்டுகிறது. அரசோ, வெறும் நூறு வேலைகளை மட்டும்
பட்டியலிட்டுவிட்டு, மாற்றுத் திறனாளிகள் வேலையில் சேராமல் பார்த்துக்
கொள்கிறது. எல்லா தேர்விலும் இரண்டு இந்திய அரசுப் பணி அதிகாரிகள் வெற்றி
பெற்றும்கூட, காலில் சற்று ஊனம் இருந்ததால் அவர்கள் நிராகரிக்கப்பட்டதும்,
மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டதால்
அவர்கள் பதவி பெற்றதும், எந்த அளவுக்கு நமது நிர்வாகம் மாற்றுத்
திறனாளிகளுக்கு எதிராக செயல்படுகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.
உச்சநீதிமன்றத்
தீர்ப்பு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
அடுத்த மூன்று மாதத்திற்குள் மத்திய, மாநில அரசுகள் மட்டுமல்லாமல் அரசு
நிறுவனங்களும் மாற்றுத் திறனாளிகளுக்கு என்னவெல்லாம் வேலைவாய்ப்புகள்
சாத்தியம் என்பதையும், கடந்த 18 ஆண்டுகளில் நிரப்பப்படாத இடங்கள் எத்தனை
என்பதையும் தெரிவித்தாக வேண்டும்.
நியாயமான
உரிமைக்காக மாற்றுத் திறனாளிகள் தெருவில் இறங்கிப் போராட வேண்டிய
துர்பாக்கியத்திற்காக இந்திய சமுதாயம் தலைகுனிய வேண்டும்! அரசு வெட்கப்பட
வேண்டும்!
No comments:
Post a Comment