சரி டைம் இல்’ இந்த வார்த்தையைப் பலரும் சொல்லியிருப்போம். இந்த வார்த்தையால் உறவுகள், நண்பர்கள், அலுவலகம் எல்லோரிடத்திலும் சங்கடங்களை உருவாக்கியிருப்போம்.
நேரம், இன்றைக்கு உலகின் மிகப் பெரிய தேவை. எல்லோருக்குமே இது அவசியத்
தேவை. நேரம் ஒரு பெரிய வளம். ஆனால் பணத்தைப் போல, பொருள்களைப் போல
நேரத்தைச் சேமித்துவைக்க முடியாது.
நேரத்தைக் கையாள முடியாத நாம் நேரமின்மையைப் பற்றிப் புலம்புவதைத் தினசரி
நடவடிக்கையாகக் கொண்டிருக்கிறோம். நமக்கு அன்னியோன்யமான நபர்கள்
பேசுவதைக்கூட நம்மால் காதுகொடுத்துக் கேட்க முடியாமல் போகிறது.
“நான் மொத்தம் 26 மணி நேரம் உழைக்கிறேன். அதாவது நான் அடுத்த நாளில்
இருந்து 2 மணி நேரத்தைக் கடன் வாங்கிக்கொள்வேன்.” இது மாதிரி வசனம் ஒரு
திரைப்படத்தில் நகைச்சுவைக் காட்சியின் இடையே வரும். ஆனால் அது வேடிக்கையான
விஷயமே அல்ல. நாம் எல்லோரும் சந்தித்துக் கொண்டிருக்கும் அனுபவம்.
நேரத்தின் பற்றாக்குறையால் இன்று நாம் அடுத்த நாளில் இருந்து நேரத்தைக்
கடன் வாங்குகிறோம். இந்த நேரத்தைக் கையாள முடியாத சூழ்நிலையால்தான் எல்லா
இடங்களிலும் நாம் ‘சாரி' சொல்கிறோம்.
சமூகச் சூழலும் நேரமும்
இன்றைக்குள்ள சமூகச் சூழல், வாழ்க்கையின் தேவைகளைப் பல மடங்கு
உயர்த்திவிட்டது. ஒரு காலத்தில் மிக ஆடம்பரமாக இருந்தவை இன்று அத்தியாவசித்
தேவைகளாகிவிட்டன. இத்தேவைகள் நம்மை நெருக்குவதால் அதிகமாக சம்பாதிக்க
வேண்டியுள்ளது. இரவுகளில் அதிக நேரம் உழைக்கிறோம். அதுபோல முன்பு ஒருவர்
ஒரே ஒரு வேலையில்தான் இருப்பார். இன்றைக்கு அப்படி அல்ல. ஒருவரே
வருமானத்திற்காகப் பல பணிகள் செய்கிறார். ஒரு பணியில் இருப்பவர்களுக்கும்
அந்தப் பணிக்குரிய வேலையையும் தாண்டி பல பணிகள் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்
உள்ளது. இவை இன்றைய சூழலில் தவிர்க்க முடியாதவை. ஆனால் இதன் பொருட்டுப்
பெரும்பாலானவர்கள் தங்கள் நேரங்களை அலுவலகத்திலேயே செலவிடுகிறார்கள்.
வீட்டில் இருந்தாலும் இணையத்திலேயே இருக்கிறார்கள்.
இந்த ஓட்டம் முடிவில்லாது நீண்டுகொண்டிருக்கிறது. இதனால் போதுமான நேரத்தைத்
தங்களின் வாழ்க்கைக்கு ஒதுக்க முடியாமல் போய்விடுகிறது. குழந்தை,
குடும்பத்துடன் ஒரு மாலைப் பொழுதைச் செலவிட நேரமில்லாமல் போகிறது. ஒவ்வொரு
மணித் துளிகளுக்கும் ஒரு பண மதிப்பைச் சொல்லிப் பழகி நம்முடைய செயலுக்கு
நியாயம் கற்பிக்கத் தொடங்குகிறோம்.
நேரமின்மையால் உருவாகும் குற்றவுணர்வு
நேரத்தைக் கையாள முடியாத நாம் நேரமின்மையைப் பற்றிப் புலம்புவதைத் தினசரி
நடவடிக்கையாகக் கொண்டிருக்கிறோம். காய்ச்சல், தலைவலி என்றால் மருத்துவரை
நாடிப் பரிசோதிக்க நேரமில்லை என மருந்துக்கடைகளில் நாமே ஒரு மாத்திரையை
விழுங்கிவிட்டுக் கிளம்புகிறோம். தொலைபேசியில் பேசிக்கொண்டே, இணையத்தைத்
துழாவிக்கொண்டே சாப்பிடுகிறோம். அப்போது நமக்கு அன்னியோன்யமான நபர்கள்
பேசுவதைக்கூட நம்மால் காதுகொடுத்துக் கேட்க முடியாமல் போகிறது.
நேரமின்மையால் உருவாகும் பரபரப்பால் நாம் எடுக்கும் முடிவும்
முழுமையில்லாததாகப் போகிறது. இதனால் நண்பர்களிடம், உறவினர்களிடம்,
வேலையிடத்திலும் அளிக்கும் வாக்குறுதிகளை மீற நேரிடுகிறது. முக்கிய
நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் தவறவிடுகிறோம். குழந்தைகளின் பிறந்த
நாளை மறக்கிறோம். அப்பாவின் மருத்துவப் பரிசோதனைக்கான நாளையும்
தவறவிட்டுவிடுகிறோம். வீட்டின் அத்தியாவசியமான தேவைகளையும் நிறைவேற்ற
முடியாமல் மொத்தத்தில் பெரும் குற்ற உணர்வுக்கு ஆளாகிவிடுவோம்.
குடும்பத்திற்குள் முரண்பாடு ஏற்படவும் இது காரணமாகிவிடும்.
நேரத்தைக் கைகொள்வோம்
ஒரு நாளில் நாம் என்னென்ன செய்கிறோம், எதற்கெல்லாம் முக்கியத்துவம்
கொடுக்கிறோம்? எனப் பிரித்துப் பார்த்தால் இதற்கான தீர்வு கிடைக்கும். ஒரு
நாளை நாம் முழுமையாகத் திட்டமிட வேண்டும். இந்த இடத்தில்தான் நாம்
நேரமேலாண்மை குறித்துச் சிந்திக்க வேண்டும்.
நேர மேலாண்மை என்பது நம்முடைய நேரங்களுக்காகத் திட்டங்களை ஒழுங்குபடுத்திச்
செயல்திறனை அதிகரிப்பதற்கான ஒரு முறை எனலாம். இம்முறை இன்று உலக அளவில்
பின்பற்றப்படுகிறது.
மருத்துவரின் ஆலோசனை
நேர மேலாண்மை குறித்து நாகர்கோவிலைச் சேர்ந்த மன நல மருத்துவர் அருள்பிரகாஷ் சில ஆலோசனைகளை வழங்குகிறார்.
முதலில் நம்முடைய கடிகாரத்தை நிறுத்தி ஒரு நிமிடம் நிதானமாகி, நாம் யார்,
எங்கு இருக்கிறோம் எனச் சிந்தியுங்கள். ஒரு நாளில் என்னென்ன செய்கிறோம்
என்பதை ஓர் அட்டவணைபோல் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள். அவற்றை முக்கியமானவை /
முக்கியமில்லாதவை என இரு வகையாகப் பிரித்து, முக்கியமானவற்றிலேயே எதற்கு
முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதையும் குறித்துக்கொள்ளுங்கள். அடுத்து
என்ன விதமான விஷயங்களுக்காக நேரம் செலவிடுவதை அறவே தவிர்க்க வேண்டும்
என்பதைக் குறித்தும் நாம் முடிவெடுக்க வேண்டும்.
இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும் உபயோகமற்ற பொருட்களைக் குப்பைத் தொட்டியில்
போட்டால்தான் அந்த இடத்தில் வேறு உபயோகமான பொருட்களை வைக்க முடியும்.
அதுபோலவே நம் நேரத்தை அடைத்துள்ள தேவையில்லாத காரியங்களையும் கைவிட நேரத்தை
நம்மால் சேமிக்க முடியாது. இடம் மாற்றம் மட்டுமே செய்ய முடியும். அதாவது
உங்களுக்கு முக்கியமில்லாத செயல்களுக்கான நேரத்தைப் பயனுள்ள ஒரு செயலுக்காக
மாற்ற முடியும். இதன் மூலம் நேரத்தை நீங்கள் வெற்றிகரமாகக் கையாள முடியும்
என்கிறார் மருத்துவர் அருள்பிரகாஷ்.
நேரத்தைச் சரிசெய்ய சரிசெய்ய வெளிப்புறமாக நடக்கும் மாற்றங்கள் உங்கள்
மனத்தையும் சீர்படுத்தும். உங்கள் ஆளுமையை அது வளர்க்கும். நேரம்
உங்களுக்கு வசப்படும்போது வெற்றி உங்களைத் தேடி வரும்.
முட்டைகளை மேலே வையுங்கள்
ஒரு மாணவன் எப்போதும் பள்ளிக்குத் தாமதமாக வருகிறான். ஒழுங்கான ஆடைகள்
அணிவதில்லை. காலை உணவைத் தவிர்த்துவிட்டுப் பரபரப்பாக வியர்த்து ஒழுகப்
பள்ளிக்கு வருவான். ஆசிரியர் அவனை அனுமதித்துக்கொண்டிருந்தார். கொடுக்கும்
வீட்டுப் பாடங்களையும் ஒழுங்காக முடிக்க மாட்டான். ‘மன்னியுங்கள்’என
எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பான். நாட்கள் செல்லச் செல்ல அவன் ஒரு விதமான
மனநோய்க்கு ஆளாகிவிட்டான்.
அவன் இயல்பான குணங்களின் மீது ஆசிரியருக்கு மரியாதை இருந்தது. அவர்
அவனுக்குப் பிரச்சினை இருப்பதை அறிந்துகொண்டார். அவனை அழைத்துக் கேட்டபோது,
அவன் எல்லாவற்றுக்கும் சேர்த்து “எனக்கு நேரம் இல்லை” என்னும் பதிலை
அளித்தான். “நீ உனக்கு இருக்கும் நேரத்தையெல்லாம் என்ன செய்கிறாய்?” என
ஆசிரியர் கேட்டார். அவனால் பதில் சொல்ல முடியவில்லை. ஆசிரியர் அவனைத்
தொடர்ந்து யோசிக்கச் செய்துள்ளார்.
“சிறிய கால இடைவேளைக்குப் பிறகு ஆசிரியர் அவனிடம், “உன்னுடைய நாள் என்பதை
ஒரு காய்கறிக் கூடையாகக் கற்பனை செய்துகொள். அதில் எல்லாவற்றுக்கும் இடம்
தருவது சரிதான். ஆனால் எதை முதலில் வைக்க வேண்டும், எதைக் கடைசியாக வைக்க
வேண்டும் என முறை இருக்கிறது.
முட்டையை முதலில் வைத்துப் பிற பொருட்களை வைத்தால் நமக்குத்தான் நஷ்டம்.
முட்டைகளை மேலே வைத்தால்தான் அது உடையாமல் இருக்கும். அதுபோல முக்கியமான
காரியங்களுக்கு முதலில் இடம் கொடு. அதை முதலில் செய்து முடி. அதைத்
தள்ளிப்போட்டால் வாழ்வில் உனக்குப் பெரிய நஷ்டம் ஏற்படும்” என்றார்.
No comments:
Post a Comment