ஒரு காலத்தில் ஓஹோவென ஒரு பொருள் பயன்படுவதும், பின்னர்
அது புழக்கத்தில் இல்லாமல் போவதும் புதிய விஷயமல்ல. 18ஆம் நூற்றாண்டில்
நவீன உலகம் கட்டமைக்கப்பட்டபோது பயன்படுத்தப்பட்ட எத்தனையோ கட்டுமானப்
பொருட்கள் இன்று காணாமல் போய்விட்டன. அதில் ஒன்றுதான் செம்பாறாங்கல்,
சிவப்பு கப்பிக்கல் எனத் தமிழில் பல பெயர்களில் அழைக்கப்படும் லேட்ரைட்
(laterite)கற்கள்.
நவீனம் எனத் திருநாமம் சூட்டப்பட்டு வந்த புதிய கட்டுமானப்
பொருட்களுக்கு இது ஈடு கொடுக்க முடியாமல் போனாலும், லேட்ரைட் மூலம்
கட்டப்பட்ட எத்தனையோ பழமையான கட்டடங்கள் இன்றும் கம்பீரமாகக்
காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.
சிவப்பு கப்பிக்கல் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில்
பரவலாகக் காணப்படுகின்றன. தமிழகத்தில் உதகமண்டலம், பழநி, கொடைக்கானல்,
ஏற்காடு, கொல்லிமலை என மலைப்பிரதேசங்களிலும், தஞ்சையில் வல்லம் பகுதியிலும்
காணப்படுகின்றன. இந்தக் கற்களுக்கு எனத் தனிச்சிறப்பு உள்ளது என்கின்றனர்
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நில அறிவியல் துறை பேராசிரியர் பாஸ்கரன்.
‘‘ இந்தக் கற்கள் ஈரமாக இருக்கும் போது மட்டுமே வெட்ட
முடியும். காய்ந்த பிறகு கல்லை உடைக்க முடியாது. சுத்தியால் அடித்தால் கூட
உடையாது. அந்தளவுக்குக் கடினமானது. இந்தக் கற்களில் நுண் துளைகள்
இருக்கும்.. எனவே இந்தக் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட வீடுகள், கட்டடங்களில்
கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் தெரியாது. குளுமையாக இருப்பது போன்று
இருக்கும். உள்ளே உள்ள குளுமையான காற்றும் வெளியே செல்லாது. அந்தளவுக்கு
இந்தக் கற்களுக்கு வெப்பத்தைத் தாங்கும் திறன் அதிகம். மழைக்காலத்திலும்,
குளிர்காலத்திலும் வெளியே எவ்வளவு குளிர் இருந்தாலும், இந்தக்
கட்டடத்துக்குள் கதகதப்பாகத்தான் இருக்கும்’’ என்கிறார் பாஸ்கரன்.
இந்தக் கற்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட சுவரில் ஆணிகூட
அடிக்க முடியாது. இந்தக் கற்களுக்கு இப்படி ஒரு தனிச் சிறப்பு இருக்க என்ன
காரணம்? இந்தப் பாறைகள் உடைந்து, சிதைந்து அதில் உள்ள வேதிப்பொருள்கள்
வெளியேறிய பிறகு மிச்சமுள்ள பொருள்கள்தான் இந்தச் சிவப்பு கப்பிக்கல்.
இதில், இரும்புத் தன்மை 48 சதவீதம் இருக்கும். பலத்த மழை
பெய்யும்போது அக்கற்களில் உள்ள இரும்பு கரைந்து நிலத்துக்குள் செல்லும்.
இதில், தேவையில்லாத மூலப்பொருள்கள் தண்ணீரில் கரைந்துவிடும். சிறு, சிறு
துவாரம் வழியாக மேல் நோக்கி வரும்போது சிறு, சிறு உருண்டைகளாக உருவாகின்றன.
தொடர்ந்து, ஹைட்ரைடு அயர்ன் ஆக்ஸைடு செறிவூட்டப்பட்டுச் சிவப்பு கப்பிக்
கற்களாக மாறுகின்றன.
இந்தக் கல்லின் தன்மையை உணர்ந்த நம் முன்னோர்கள் அதைக்
கட்டடம் கட்டப் பயன்படுத்தியுள்ளனர். நீலகிரி, கொல்லிமலை உள்ளிட்ட மலைப்
பகுதி மக்கள் இந்தக் கற்களைப் பயன்படுத்தி கட்டப்பட்ட வீடுகள் நிறைய உள்ளன.
கோட்டைகள் உள்படப் பழமையான கட்டடங்கள் இந்தக் கற்களில் நிறைய
கட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இன்றளவும் இந்தக் கற்களைக் கட்டுமானத்துக்காகப்
பயன்படுத்துகின்றனர். பண்டைய கிரேக்க நாகரிகத்திலும் இந்தக் கற்களைப்
பயன்படுத்திக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
பருவ நிலைக்கு ஏற்றார்போல் மாறிக்கொள்ளும் தன்மையுடைய
இந்தக் கல் இன்று புழக்கத்திலேயே இல்லை. விலை குறைவாகவும், புதிய
தொழில்நுட்பங்களில் உருவாகும் கட்டுமான கான்கிரீட் கற்கள் சுலபமாக
கிடைப்பதாலும் சிவப்புக் கப்பிக்கல்லை கட்டுமானத் தொழிலில்
ஈடுபட்டுள்ளவர்கள் மறந்து விட்டனர்.
இந்தக் கற்களால் கட்டப்பட்ட வீடுகளில் சுவர் சொரசொரப்பாக
இருக்கும். பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும். இதன் காரணமாகவும் இந்தக்
கற்களை யாரும் விரும்புவதில்லை. இப்படி பயன்பாடு குறைந்ததால் இந்தக்
கற்களைத் தயாரிப்பதும் இப்போது குறைந்துவிட்டது.
பழையன கழிதலும், புதியன புகுவதும் என்பது இதுதானோ!
No comments:
Post a Comment