வயதான மூத்தக் குடிமக்களைப் பாதுகாத்து பராமரிக்க வேண்டியது குடும்ப உறுப்பினர்களின் சட்டபூர்வ கடமையாக்கப்பட்டுள்ளது.
எனினும் போதிய சட்ட விழிப்புணர்வு இல்லாததால் பிள்ளைகளால் கைவிடப்படும்
மூத்த குடிமக்கள் பலர் சட்ட ரீதியான நிவாரணம் பெற முடியாமல்
தவிக்கிறார்கள். தள்ளாத வயதில் வீட்டை விட்டு வெளியேறி மூத்த குடிமக்கள்
காணாமல் போகும் செய்திகளும், அடைக்கலம் தேடி முதியோர் இல்ல கதவுகளைத்
தட்டும் நிகழ்வுகளும், தொலை தூரத்துக்குச் சென்று ஆதரவற்றவர்களாக
மரணமடையும் அவலங்களும் இந்த நாட்டில் நிறையவே நடக்கின்றன.
இத்தகைய மூத்த குடிமக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கென்றே மூத்த குடிமக்கள்
மற்றும் பெற்றோர்கள் பராமரிப்புச் சட்டம் கடந்த 2007-ம் ஆண்டில்
இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, தன் சொந்த வருமானம் அல்லது தனக்கு
சொந்தமான சொத்துகள் மூலம் தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள இயலாத வயதான
ஒருவரை பராமரிக்கும் சட்டபூர்வமான கடமை அவரது மகன்கள், மகள்கள் உள்ளிட்ட
சட்டபூர்வமான வாரிசுகளுக்கு உள்ளது.
தன்னை பாதுகாத்து பராமரிக்காமல் குடும்ப வாரிசுகள் கைவிடும் நிலையில்
மாவட்ட ஆட்சியரிடம் மூத்த குடிமக்கள் புகார் செய்யலாம். தன்னை பராமரிக்கும்
கடமையைச் செய்யுமாறு தன் சட்டபூர்வ வாரிசுகளுக்கு உத்தரவிடக் கோரி உரிமை
கோரலாம்.
இத்தகைய புகார்கள் தொடர்பாக மாவட்ட அளவிலான தீர்ப்பாயம் விசாரணை நடத்தி,
பிறப்பிக்கும் உத்தரவுகள் குடும்ப வாரிசுகளால் நிறைவேற்றப்பட வேண்டும்.
மாறாக மூத்த குடிமக்களை கைவிடும் வாரிசுகளுக்கு 3 மாத சிறைத் தண்டனை, ரூ.5
ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க சட்டத்தில் வழிவகை
செய்யப்பட்டுள்ளது. எனினும் இந்த சட்டம் குறித்த விழிப்புணர்வு 75
சதவீதத்துக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களிடம் இல்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து ஹெல்ப் ஏஜ் இந்தியா அமைப்பின் மூத்தோர் நலன்களுக்கான ஆலோசகர்
ஆர்.முத்துகிருஷ்ணன் கூறியதாவது: இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல்
நவம்பர் 30-ம் தேதி வரையிலான காலத்தில் சென்னையில் மட்டும் பிள்ளைகளால்
கைவிடப்பட்ட 44 வயதானவர்கள் உதவி கேட்டு எங்கள் ஹெல்ப் லைன் எண் 1253-ல்
தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களில் பலருக்கு சட்ட ரீதியான நிவாரணம் கிடைக்க
நாங்கள் உதவியுள்ளோம்.
2007-ம் ஆண்டின் சட்டம் குறித்து போதிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை.
விழிப்புணர்வு உள்ள மூத்த குடிமக்களில் கூட பலர் பிள்ளைகள் மற்றும்
குடும்பத்தினர் மீதான பாசம், குடும்ப உறவுகள் பாதிக்கப்படுமோ என்ற கவலை
போன்றவற்றால் வாரிசுகள் மீது புகார் அளித்து நிவாரணம் தேட விரும்புவதில்லை
என்றார். தான் புறக்கணிக்கப்பட்டாலும் கூட வாரிசுகள் மீது சட்ட ரீதியான
நடவடிக்கை வேண்டாமெனக் கருதும் வயதானவர்களின் மன நிலையை தங்களுக்கு
சாதமாக்கிக் கொள்ளும் பிள்ளைகள் மாற வேண்டும். இதற்கான பிரச்சாரங்கள்
தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
மூதாட்டி தீக்குளித்த பரிதாபம்
மாதவரம் தபால் நிலையம் அருகே எரிந்து உடல் கருகிய நிலையில் சுமார் 65 வயது
மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைப்
பார்த்த பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் விரைந்து
வந்து மூதாட்டியை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் இறந்துவிட்டார்.
காவல் துறையினர் அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது மனதை உருக்கும் தகவல்கள்
கிடைத்தன. இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், “கடந்த ஒரு
மாதத்துக்கு முன்புதான் இந்த மூதாட்டி மாதவரம் பகுதிக்கு வந்திருக்கிறார்.
சாலையில் படுத்துக் கொண்டும், யாராவது கொடுக்கும் உணவை உண்டும்
வாழ்ந்திருக்கிறார். மூதாட்டியின் 2 மகன்கள் சென்னையில்தான் வசிக்கின்றனர்.
அவரின் உறவினர்களும் சென்னையில்தான் உள்ளனர். ஆனால் அவர்கள் குறித்த எந்த
விவரங்களையும் மூதாட்டி தெரிவிக்கவில்லை. மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்த போதும், அவர்களில் ஒருவரது பெயரையும் அவர்
தெரிவிக்கவில்லை.
ரத்த சொந்தம் உள்பட அனைத்து உறவுகளும் இருந்தும் உணவு கொடுக்கவும்,
கவனிக்கவும் ஆளில்லாததால் யாரிடமிருந்தோ மண்ணெண்ணெய் கடன் வாங்கி வந்து,
உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்திருக்கிறார். உயிர் பிரியும்
நேரத்திலும், தன்னால் தனது உறவுகளுக்கு பாதிப்பு நேரக்கூடாது என்று
மூதாட்டி நினைத்ததால் ஒருவருடைய பெயரைக் கூட தெரிவிக்க மறுத்துவிட்டார்”
என்றனர்.
No comments:
Post a Comment