Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, May 30, 2012

சுய தொழில்கள்-17.1 கோழி வளர்ப்பு


கோழி பண்ணையில் கொழிக்குது பணம்!





சத்துக்களை அள்ளித் தரும் ஆரோக்கியமான உணவு முட்டை. மாணவர்கள் சத்துணவிலும் வழங்கப்படுகிறது. கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் கூட, மஞ்சள் கருவை தவிர்த்துவிட்டு வெள்ளைக் கருவை சாப்பிடலாம். தேவை அதிகம் இருப்பதால், கோழிப்பண்ணை அமைத்து முட்டை உற்பத்தி செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வேப்பங்கொட்டை பாளையத்தில் கிருத்திகா கோழி பண்ணை நடத்தி வரும் வெங்கடாசலம். அவர் கூறியதாவது:

நான் ஒரு விவசாயி. பாசன நீர் பற்றாக்குறை காரணமாக முட்டைக்கோழி வளர்ப்பை பிரதான தொழிலாக செய்து வருகிறேன். இதற்கு வங்கிக் கடன் உதவி எளிதாக கிடைப்பதால், பண்ணை அமைத்து கூண்டு முறையில் 24 ஆயிரம் கோழிகளை வளர்க்கிறேன். கோழி வளர்ப்பில் முதல் வளர்பருவம் வரை உற்பத்தி செலவுக்கு முதலீடு இருந்தால் போதும். முட்டைப்பருவ காலத்தில் கிடைக்கும் முட்டைகளை விற்று அதன்மூலம், அடுத்தடுத்த உற்பத்தி செலவுகளை சமாளிக்கலாம். அரவை இயந்திரம் வாங்கி தீவனத்தை நாமே அரைத்து கொண்டால் செலவு மிச்சமாகும். தீவனத்துக்கு தேவையான தானியங்கள் விலை குறையும்போது வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளலாம்.

நாமக்கல், பல்லடம் ஆகிய இடங்களில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு உள்ளது. இங்கு திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் மொத்த முட்டை கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. வியாபாரிகள் நேரில் வாங்கி செல்கின்றனர். சில நேரங்களில் நல்ல லாபமும், சில நேரங்களில் குறைந்த லாபமும் கிடைக்கும். முறையாக வளர்த்தால், கோழி இறப்பு, முட்டை உற்பத்தி குறைவு ஆகியவற்றை தவிர்க்கலாம். ஒரு கோழி வாரத்தில் 6 நாள் முட்டை இடுவதால், தினசரி நல்ல வருவாய் பார்க்கலாம்.

வெளிநாடுகளுக்கு சிலர் மட்டுமே ஏற்றுமதி செய்கிறார்கள். முட்டைகளை தரப்பரிசோதனை செய்து தகுதியான முட்டைகளை அனுப்பினால் ஏற்றுமதியிலும் ஜொலிக்கலாம். கோழிப்பண்ணைகளுக்கு மின் கட்டணம் வணிக கட்டண பிரிவின் கீழ் விதிக்கப்படுகிறது. கோழி வளர்ப்பை மேம்படுத்த பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரி வருகிறோம்.

எப்படி வளர்ப்பது?

முட்டைக்கோழிகளை வளர்க்க ஆழ்கூளம், கூண்டு வளர்ப்பு என 2 முறைகள் உள்ளன. கூண்டுகளில் வளர்ப்பதே சிறந்தது. குஞ்சு பொரித்தது முதல் 8 வாரம் வரை குஞ்சு பருவம். அதற்கடுத்த 8 வாரங்கள் வளர் பருவம், பின்னர் 56 வாரங்கள் முட்டை உற்பத்தி பருவம். 3 பருவ கோழிகளையும் தனித்தனி கூண்டுகளில் வளர்க்க வேண்டும். கூண்டுகளில் கோழிகளின் பருவத்துக்கு ஏற்ப வெப்பம், காற்றோட்டம், ஈரப்பதம் இருக்குமாறு வசதி ஏற்படுத்த வேண்டும். குஞ்சு பருவத்தில் தீவனம் வீணாவதை தடுக்கவும், ஒன்றையொன்று கொத்திக் கொள்ளாமல் இருக்கவும் அதன் அலகுகளை 7 முதல் 10 நாட்களுக்குள் வெட்ட வேண்டும்.

குஞ்சு பருவத்தில் நோய் எதிர்ப்பு சக்திக்கு சுத்தமான தண்ணீரில் வைட்டமின் கே, சி மற்றும் சோடியம் சாலிசிலேட் கலந்து கொடுக்க வேண்டும். தடுப்பூசிகள் போட வேண்டும். சோயா, கம்பு, மக்காச்சோளம், கருவாடு, கிளிஞ்சல்கள் ஆகியவற்றுடன் நுண்ணூட்ட சத்துகள் நிறைந்த கலவை தீவனம் கொடுக்க வேண்டும். குஞ்சுப்பருவத்தில் குருணை தீவனம் கொடுப்பது எடையை அதிகரிக்கும்.

600 கிராம் எடையுடன் இருக்கும். குஞ்சு, வளர் பருவத்தில் 1100 கிராம் எடையை அடையும். முறையாக பராமரித்தால் 60 கிராம் எடையுள்ள முட்டைகளை கோழி இடும். ஒரு கோழி வாரத்துக்கு 6 முட்டை இடும். அதை விற்பனைக்கு அன்றன்றே அனுப்பிவிட வேண்டும்.

ஆலோசனை பெறலாம்!

கால்நடை பராமரிப்பு துறையின் மாவட்ட கால்நடை வளர்ப்பு மற்றும் ஆராய்ச்சி மையங்களில் முட்டைகோழி வளர்ப்பு தொடர்பான அறிவுரைகள், ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் அளிக்கின்றனர். முட்டை கோழிக் குஞ்சுகள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களின் தலைமை இடங்கள் நாமக்கல், பல்லடம், பொங்கலூர் ஆகிய இடங்களில் உள்ளது. இவற்றின் கிளைகள் முக்கிய நகரங்களில் உள்ளன. அங்கு கோழிக் குஞ்சுகளை வாங்கலாம். அங்கு கோழித் தீவன உற்பத்தியாளர்கள், கூண்டு தயாரிப்பவர்கள் மற்றும் கோழி வளர்ப்பு குறித்த விவரங்களை அளிக்கின்றனர்.

கட்டமைப்பு வசதிகள்

கூண்டு முறையில் முட்டைக் கோழி வளர்க்க 42க்கு 30 அடி நீள, அகலமுள்ள 3 கட்டிடங்கள் தேவை. இவற்றில் தலா 2 ஆயிரம் கோழி வீதம் 6 ஆயிரம் கோழி வளர்க்கலாம். கட்டிடத்துக்கு மொத்தம் ரூ.4.5 லட்சம் செலவாகும். 3 கட்டிடத்துக்கும் கூண்டு அமைக்க தலா ரூ.30 ஆயிரம் வீதம், ரூ.90 ஆயிரம் செலவாகும். கட்டிடத்தில் 3 அடுக்குகளை கொண்ட 6 இரும்பு கூண்டுகள் பொருத்த வேண்டும். மொத்தம் 18 அடுக்குகள் அமையும். 2 ஆயிரம் கோழிகள் இடம்பெறும். தீவனம் இருப்பு வைக்கவும், முட்டைகளை அடுக்கவும் தனித்தனி அறைகள் அமைக்க வேண்டும். கட்டமைப்புக்கு மொத்தம் ரூ.5.4 லட்சம்.

உற்பத்தி செலவு

குஞ்சு விலை சராசரி ரூ.21 வீதம் 2 ஆயிரம் குஞ்சுகள் ரூ.42 ஆயிரம். தீவனம் ஒரு கோழிக்கு 50 கிலோ தேவை. தீவனம் கிலோ விலை ரூ.15. 2 ஆயிரம் கோழிக்கு ரூ.15 லட்சம். தடுப்பு மருந்து உள்ளிட்ட பராமரிப்பு செலவுகள் ரூ.10 வீதம் ரூ.20 ஆயிரம். ஒரு வேலையாளுக்கு தினசரி ரூ.350 வீதம் ரூ.89 ஆயிரம் சம்பளம். மின் கட்டணம் ரூ.13 ஆயிரம் என உற்பத்தி செலவுக்கு மொத்தம் ரூ.16.64 லட்சம் தேவை.

வருவாய் எவ்வளவு?

ஒவ்வொரு கோழியும் வளர்ந்த 17வது வாரத்தில் இருந்து 72வது வாரம் வரை முட்டை இடும். முட்டையிடும் பருவமான 55 வாரங்களில் (385 நாட்களில்) 320 முட்டைகள் இடும். முட்டை சராசரி விலை ரூ.2.50. 2 ஆயிரம் கோழிகள் மூலம் முட்டை விற்பனை வருவாய் ரூ.16 லட்சம். 72 வார முடிவில் வயதான முட்டை கோழிகள் விற்பனை 2 ஆயிரம் கோழிகள்(3500 கிலோ எடை) கிலோ ரூ.50 வீதம் வருவாய் ரூ.1.75 லட்சம். கோழி எரு தலா 15 கிலோ வீதம் 2 ஆயிரம் கோழிகள் மூலம் 30 டன் கிடைக்கும். இதன் மூலம் ரூ.24 ஆயிரம் வருவாய். மொத்த வருவாய் ரூ.17.99 லட்சம். லாபம் ரூ.1.35 லட்சம். முட்டை, எரு, கோழி விலை கூடினால் லாபமும் அதிகரிக்கும்.

சந்தை வாய்ப்பு!

தமிழகத்தில் முட்டை உற்பத்தி பெரும்பகுதி நாமக்கல்லிலும், ஓரளவு கோவை, திருப்பூர் மாவட்டத்திலும் உள்ளது. பரவலாக முட்டை உற்பத்தி மேற்கொண்டால் அந்தந்த பகுதிக்குரிய தேவையை பூர்த்தி செய்யலாம். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். முட்டை கோழி எரு ரசாயன உரத்துக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. ரப்பர், தேயிலை தோட்டங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. கோழி எருவை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். முட்டை பருவம் முடிந்த கோழிகளை வியாபாரிகளிடம் விற்கலாம்.

கோழி வளர்ப்பு (மேலதிக விபரங்கள்)
பொதுவாக கோழி வளர்ப்பில் இரு வகை முறைகள் பின்பற்றப்படுகின்றன.
  • கூண்டு முறை / கொட்டகை முறை
  • ஆழ்கூள முறை
கொட்டகை முறை
கோழி ஒன்றுக்கு 0.6-0.75 சதுர அஎ அளவு வீதம் இருக்கும்படி கோழிக் கொட்டகை அமைக்கவேண்டும். இம்முறைதான் நன்கு பலன் தரக்கூடிய கோழி வளர்ப்பு முறையாகும். கூரை ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கொண்டு அமைக்கலாம். சிறு சிறு அறைகளாகத் தடுத்து ஓர் அறைக்கு 300 குஞ்சுகளுக்கு மிகாமல் வளர்க்கலாம்.
CAGE SYSTEM

பயன்கள்
  • ஒரு குறிப்பிட்ட குறைந்தளவு இடத்தில் நிறைய கோழிகளை வளர்க்கலாம்.
  • பதிவேடுகளை சரியாகப் பராமரிக்க முடியும்.
  • சரியான வளர்ச்சியுற்ற உற்பத்திக் குறைந்த கோழிகளைப் பிரித்தெடுத்தல் எளிது.
  • இம்முறையில் தான் கோழிகள் அதன் முட்டை மற்றும் ஊண் உண்ணுதலைத் தடுக்க முடியும்.
  • இம்முறையில் சுத்தமான முட்டைகள் பெறப்படுகின்றன.
  • அழுத்தக் காரணிகள் குறைவு.
  • இரத்தக்கழிச்சல், குடற்புழுக்கள் போன்ற ஒட்டுண்ணிகளின் நோய்த்தாக்குதல் கட்டுப்படுத்த முடியும்.
  • தீவனங்கள் அதிகம் வீணாகாமல் தடுக்கப்படுகிறது.
  • மிதவெப்பமண்டலப் பகுதிகளில் கோழி வளர்ப்பிற்கு கீழ்க்கண்ட மருந்துகளில் கோழிகளை அமிழ்ந்தவை அல்லது மருந்தை தூவுவதற்கோ பயன்படுத்தலாம். மழைக்காலங்களில் அமிழ்த்துதல் நல்லதல்ல. மேலும் கோழியின் தலையை நனைப்பதும் தவிர்க்கப்படவேண்டும்.
  • மேலும் குஞ்சுகளை வளர்ந்த கோழிகளிடமிருந்து பிரித்து வளர்த்தல், கொட்டகை மற்றும் அனைத்து சாதனங்களையும் சுத்தமாக வைத்திருத்தல், பார்வையாளர்களை உள்ளே அனுமதிக்காமல் இருத்தல், இறந்த கோழிகளை முறையாக அப்புறப்படுத்துதல், எலி மற்றும் பிற பறவைகளின் நடமாட்டத்தைப் பண்ணையிலிருந்து நீக்குதல் போன்ற முறையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும். அதோடு பயனற்ற பறவைகளை நீக்குதல் போன்றவையும் நல்ல பலன் தரக்கூடிய பராமரிப்பு முறைகளாகும்.
ஆழ்கூள முறை
இம்முறை உலகம் முழுவதம் பின்பற்றப்படும் முறை ஆகும்.
Poultry_Deep litter System

பயன்கள்
  • மூலதனம் குறைவு.
  • சுகாதாரமானது, அதோடு கோழிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது.
  • இதில் பயன்படுத்தப்படும் கூளமானது ரிஃபோஃபிளேவின் மற்றும் விட்டமின் பி 12 ஆகிய சத்துக்களை கோழிக்கு அளிக்கிறது.
  • நோய்க் குறைபாடுகளைக் கட்டுப்படுத்துதல் எளிது.
  • உற்பத்தித் திறனை அதிகப்படுத்துகிறது.
  • நெல் உமி, உலர்ந்த இலைகள், நறுக்கிய வைக்கோல் மற்றும் வேர்க்கடலை தழைகள் போன்ற கிடைக்கும்பொருட்களை கூளமாக உபயோகிப்பதால் இடுபொருள் செலவு குறைவு.
ஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை
  • கூளங்கள் அதிக ஈரம்படாமல் எப்போதும் உலர்ந்த நிலையில் இருக்கவேண்டும்.
  • குறிப்பிட்ட அளவுக் கோழிகளையே வளர்க்க முடியும்.
  • நல்லக் காற்று வசதி இருக்கவேண்டும்.
  • கூளங்கள் வாரத்திற்கொரு முறை மாற்றப்படவேண்டும். ஏதேனும் ஈரமான கூளங்கள் இருப்பின் அவற்றிற்குப் பதில் புதிய உலர்ந்த கூளங்கள் போடப்படவேண்டும்.
  • ஒரு சரிவிகிதத் தீவனம் கோழிகளுக்குக் கொடுக்கப்படவேண்டும்.
  • கோடைக்காலத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பே கூளங்கள் போடப்பட்டு தயார் செய்யப்படவேண்டும். அப்போது தான் சூட்டில் பாக்டீரியாக்கள் நன்கு செயல்புரிந்து கூளங்கள் தயாராகும்.
  • தண்ணீர் வைக்கும் இடங்களில் நீர்க்கூளத்தின் மீது சிந்தி ஈரமாக்கிவிடாதவாறு எப்போதும் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும்.
(ஆதாரம்: டாக்டர். பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், வேளாண் கல்லூரி, மதுரை.)
தனிமையில் வளர்த்தல்
வணிக ரீதியில் அளவில் வைப்பதை விடப் பெரிய பண்ணைகளே அதிக லாபம் தரக்கூடியவை, முட்டை உற்பத்திக்கு 2000 பறவைகள் கொண்ட பண்ணை அமைப்பு சிறந்தது. இறைச்சிக்கென வளர்க்கப்படும் கோழிகள் வாரத்திற்கு 250 குஞ்சுகள் புதிதாக சேர்க்கப்படவேண்டும்.

கோழிகள்
கோழிக்குஞ்சுகள் வாங்கும் போது நல்ல தரமானவைகளாகப் பார்த்து வாங்கவேண்டும். சில நாட்களான இளம் பெட்டைக் குஞ்சுகளை வாங்குதல் நலம். இறைச்சிக்கென வளர்க்கும் கோழிகள் நன்கு வளர்ந்து ஓடக்கூடிய நிலையில் இருக்கலாம்.
கோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை
இந்திய அரசு, பெங்களூர், மும்பை, புவனேஸ்வர் மற்றும் டெல்ஹி ஆகிய நான்கு இடங்களில் முட்டை மற்றும் இறைச்சிக் கோழிக்கான மாதிரி சோதனை ஆய்வகங்களை நிறுவியுள்ளது. இதன் மூலம் வருடந்தோறும் பல இனக்கோழிகளை இவ்விடங்களில் வைத்துச் சோதனை செய்து முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம் சூழ்நிலைக்கேற்றவாறு இனங்களைத் தேர்ந்தெடுத்து வளர்க்கலாம்.

இருக்க வேண்டிய எண்ணிக்கை
கோழிகளில் இறப்பு, தேவையற்ற / பயனற்ற கோழிகளின் நீக்கம் போக ஒவ்வொரு பகுதியிலும் 1000 கோழிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அதாவது 1000 கோழிகளுக்கு 1100 கோழிகள் தேர்ந்தெடுத்து வாங்கவேண்டும். ஒரு நாள் வயதான இளம் கோழிக்குஞ்சுகள் 1100 வளரும் இளம் குஞ்சுகள் 1050, தயார் நிலையில் குஞ்சுகள் / கோழிகள் 1000 என்ற எண்ணிக்கையில் இருக்கவேண்டும். இறைச்சிக்கான கோழிகளில் 6-7 வார வயதில் 250 கோழிகள் சந்தைக்கு அனுப்பத் தயார் நிலையில் இருக்கவேண்டும்.

நலம் தரும் நாட்டு கோழி பண்ணை!!!



நாட்டுக் கோழியின் விலை இன்றைக்கு ஒரு கிலோ 250 ரூபாய். காரணம், நாட்டுக்கோழி அவ்வளவாக கிடைப்பதில்லை. இதனால் இதன் இறைச்சியும் விலை அதிகமாக இருக்கிறது.நாட்டுக் கோழி ஏன் டிமாண்ட் ஆக இருக்கிறது? நாட்டுக் கோழிகளை யாரும் "பிராய்லர்" கோழிகள் போல் லட்சக்கணக்கில் பண்ணை முறையில் வளர்ப்பதில்லை. கிராமங்களில் பெண்கள் இவற்றை புழக்கடையில் தான் வளர்க்கிறார்கள். அதனால் இந்த கோழிகள் பெருமளவில் கிடைப்பதில்லை. ஆனால் பிராய்லர் கோழிகளை இன்குபேட்டர் முறையில் பொரிக்க வைத்து எடுப்பதால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகளை பெற முடிகிறது. அவற்றை வளர்த்து கறிக்கோழிகளாக மாற்ற முடிகிறது.இந்த பிராய்லர் கோழிகள் செயற்கையாகவே பிறந்து ஊக்கமருந்துகளால் உப்பிய பலூன் போல பெருத்து 47 நாட்களில் 2 கிலோவை தாண்டி விடுகிறது. இந்த கோழிகளின் நோய் எதிர்ப்பு சக்திக்காக செலுத்தப்படும் மருந்துகள் மனித உடலில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது பற்றி இன்னும் சரியான விளக்கம் இல்லை.



ஆக..இந்த நிலையில் நாட்டுக்கோழிகளை அதிக அளவில் உற்பத்தில் செய்தால் ஏராளமாக நாட்டுக் கோழிகள் விற்பனை ஆகும். நாட்டுக் கோழி பண்ணை வைப்பவருக்கு இதனால் லாபம் கொட்டும்.மேலும் நாட்டு கோழி பண்ணை அமைக்க பிராய்லர் கோழிகளை போல மிக அதிக செலவிலான செட் போட தேவையில்லை,சாதாரண மிக சிறிய அளவிலான ஓட்டைகள் கொண்ட கம்பி வலை 'பெண்சிங்' போதுமானது.இதனை கணக்கில் கொண்டு "தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்' கிராமப்புற பெண்களுக்கும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும் நாட்டுக் கோழி வளர்ப்பது பற்றிய 3 மாத கால தொலை தூர படிப்பை வழங்க உள்ளது. தபால் வழியில் கற்பிக்கப்படவுள்ள இந்த பாடத்திட்டத்தில் கோழியினங்கள், தீவனங்கள்,நோய் கண்டறியும் முறை, பண்ணை அமைத்தல் உள்பட எளிதாக நாட்டுக் கோழிகளை வளர்ப்பது பற்றி சொல்லித் தர போகிறார்கள்.

இந்த பாடத்தை படித்து விட்டால், கிராமப்புறத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் சிறிய அளவில் பண்ணையை தொடங்கி நடத்தலாம். பிறகு வெற்றிகரமாக பெரிய பண்ணைகளை தொடங்கலாம். இந்த நாட்டுக் கோழி வளர்ப்பு தபால் வழி படிப்பில் சேர 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். தமிழில் எழுதப்படிக்க ெத்ரிந்திருக்க வேண்டும். இவ்வளவு தான் தகுதி.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேசிய வங்கி ஒன்றில் 220 ரூபாய்க்கு கல்வி இயக்குநர், தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழகம், மாதவரம், சென்னை. என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து கூடவே ஒரு கடிதத்தில் தங்கள் பெயர்,முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை எழுதி இதே முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அவர்கள் பாடத்திட்டங்களை அனுப்புவார்கள். படித்து பாஸாகலாம்.
இது பற்றி மேலும் விவரங்கள் அறிய 044-2555 4375, 2555 1586, 2555 1587என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தகவல்கள்: இணையதளங்களிலிருந்து திரட்டியவை
Engr.Sulthan

3 comments:

  1. நாட்டுக்கோழி பண்ணை அமைக்க, எங்களிடம் தரமான நாட்டுக்கோழி குஞ்சுகள் கிடைக்கும். நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விரும்புவோர் நேரில் வந்து கோழிகுஞ்சுகள் மற்றும் அதன் தரத்தினை பார்த்து வாங்கி செல்லவும்
    தொடர்புக்கு -9944209238

    ReplyDelete
  2. நாட்டுக்கோழி பண்ணை அமைக்க, எங்களிடம் தரமான நாட்டுக்கோழி குஞ்சுகள் கிடைக்கும். நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விரும்புவோர் நேரில் வந்து கோழிகுஞ்சுகள் மற்றும் அதன் தரத்தினை பார்த்து வாங்கி செல்லவும்
    தொடர்புக்கு -9944209238

    ReplyDelete