முடிவெடுக்கும் முன்
சிந்திக்க...
இது வரை ஈமு கோழி வளர்ப்பு பற்றி எனக்கு கிடைத்த தகவல்களைத் தந்துள்ளேன். இனி ஈமு கோழி வளர்ப்பு பற்றிய எதிர் மறை (Risk factors) கருத்துக்களையும் இங்கு தந்திருக்கிறேன். சிந்தித்து செயல் பட வேண்டியது வாசகர்களின் பொறுப்பு. ஒரு சில கம்பெனிகளின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாந்து போகாமல், நமக்கென்று சொந்தமாக தொழில் செய்வது நல்லது என நினைக்கிறேன்.தகவல்கள் அனைத்தையும் திரட்டி தந்து விட்டேன். இனி தொழில் தொடங்குவதா? வேண்டாமா? என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
Engr.Sulthan
ஈமு...!
ஈமு கோழி வளர்ப்பு பற்றி பலருக்கு சந்தேகங்கள் உள்ளது. அவற்றை பற்றி ’பசுமை விகடன்’ இதழில் வந்துள்ள கட்டுரைகளும், மற்றும் சிலரின் கட்டுரைகளும்....
"நான் படிச்சிட்டு வேலையில்லாம இருக்கிறேன். ஈமு கோழி வளர்க்கச் சொல்றாரு எங்க மாமா. அது லாபகரமானதா இருக்குமா?""ஐயா, வேலையாட்கள் பற்றாக் குறையால விவசாயத்தைச் சரியா செய்ய முடியல. அதனால ஈமு கோழிப் பண்ணை வைக்கலாம்னு பார்க்கிறேன். இதன் மூலமா ‘குபேரன்' ஆகலாம்னு சொல்றாங் களே... அது நிசம்தானா?"குறைந்தபட்சம் ஒரு வாசகராவது 'பசுமை விகடன்’ அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் தினசரி இப்படி விசாரிப்பது வாடிக் கையாகி விட்டது. கடிதங்கள்... மின்னஞ்சல்கள்... குறுஞ்செய் திகள்... வருவது தனிக்கதை!கடந்த சில ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் பரவலாக வளர்ந்து வரும் கால்நடைப் பண்ணைத் தொழிலில் ஒன்றுதான் ஈமு வளர்ப்பு. 'ஈமு வளர்த்தால் குபேரனாகலாம்...', 'கோடீஸ் வரனாகலாம்...' என்று வரும் விளம்பரங்கள், பலரையும் இந்தப் பக்கம் கவனத்தைத் திருப்ப வைத்துள்ளது. ஆங்காங்கே, சிறிய மற்றும் பெரிய பண்ணைகள் உருவாகிக் கொண்டுள்ளன.அதேசமயம், "ஈமு வளர்ப் பெல்லாம் சுத்த பேத்தல்... இதுல இறங்கினா... குபேரனாக முடியாது, குசேலனாத்தான் இருக்கமுடியும். இப்போதைக்கு ஈமு வளர்க் கறவங்க பலரும், தன்கிட்ட இருக்கற முட்டைகளையும், குஞ்சுகளையும் எப்படியாவது வித்தா போதும்னு அடுத்தவங்ககிட்ட தள்ளிவிட்டுக்கிட்டே இருக்காங்க. இது அப்படியே 'பணச் சங்கிலி' (பணத்தை வைத்து நடத்தப்படும் 'மணி லிங்க்') மாதிரி வளர்ந்துகிட்டே போகுது. இந்தச் சங்கிலி நல்லபடியா போனா தப்பிச்சாங்க. அது இல்லாம ஏதாவது ஒரு இடத்துல அறுந்தா... அவ்வளவுதான்'' என்று எதிர்மறையான கருத்துக் களைக் கொண்டோரும் இருக்கிறார்கள். இவர்களில் பலர், இந்தத் தொழிலை மேற்கொண்டு கரையேற முடியாமல் கைவிட்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது!சரி... ஈமு வளர்ப்பு என்பது உண்மையிலேயே லாபகரமான தொழிலா... இல்லையா? அந்தத் தொழிலின் தற்போதைய உண்மை நிலவரம் என்ன..? என்பது பற்றியெல்லாம் அலசி ஆராயத் தீர்மானித்து களத்தில் இறங்கினோம்.திருச்சி மாவட்டம், பாடாலூர் அருகே இருக்கிறது 'கணேஷ் ஈமு பண்ணை’. அதன் உரிமையாளர் தியாகராஜன் (அலைபேசி: 98659-63514). முதலில் அவரைச் சந்தித்து, ஈமு வளர்ப்புத் தொடர்பாகக் கேட்டோம்.ஒரு முட்டை இரண்டாயிரம் ரூபாய்!"எனக்குச் சொந்த ஊர், தஞ்சாவூர். கல்யாணத்துக்குப் பிறகு திருச்சிக்கு வந்துட்டேன். ஆரம்பத்துல வெளிநாடு போய் வேலை பார்த்துட்டு, பிறகு திருச்சியில கேபிள் தொழில் செய்துகிட்டிருந்தேன். அதுல நட்டம் வந்ததால, ஈமு வளர்ப்புக்கு மாறிட்டேன். ஏழு வருஷமா இதுதான் தொழில். ஆரம்பத்துல, சென்னையில் இருக்கிற பிரபலமான ஒரு பண்ணையில மூணு மாச வயசுடைய பத்து ஜோடி ஈமு கோழிகளை, ஜோடி பதினஞ்சாயிரம் ரூபாய்னு வாங்கினேன். கொஞ்சத்தை நான் வெச்சுக்கிட்டு, மீதியை வித்துட்டேன். ஒரு வருசத்துக்கு மேல ஆகியும் என்கிட்ட இருந்த கோழிங்க முட்டை போடவேயில்லை. ரொம்ப கலக்கத்துல இருந்தேன். ஆனா, ஏற்கெனவே வேற ஆளுக்கு நான் வித்த கோழியில ஒண்ணு, இருபத்திமூணு முட்டை போடவும், அதை என்கிட்ட கொண்டு வந்தார். கொஞ்சம் நம்பிக்கை வந்துது. சென்னையில இருக்கற அந்தப் பண்ணைக்காரங்ககிட்ட நான் கொண்டுபோய் கொடுத்ததும், ஒரு முட்டை ஆயிரம் ரூபாய் வீதம் விலை வெச்சி எடுத்துக்கிட்டாங்க. இதுக்காக எனக்குக் கொஞ்சம் கமிஷன் தொகையும் கொடுத்தாங்க.கொஞ்ச நாள்லயே என்னோட கோழிகளும் முட்டையிட ஆரம்பிச்சுது. ஆனா, சென்னையில இருக்கற அந்தப் பண்ணைக்காரங்க, ஒப்பந்தபடி நடந்துக்காம என்னை ஏமாத்திட்டாங்க. அதனால மத்த பண்ணைகளோட தொடர்பு வெச்சிக்கிட்டு முட்டை, குஞ்சு இதையெல்லாம் விக்க ஆரம்பிச்சேன். இங்குபேட்டர் வெச்சு முட்டை பொறிக்கற வேலையையும் ஆரம்பிச்சேன். இப்ப என்னோட தொடர்புல 45 பண்ணைகளுக்கு மேல இருக்கு. ரொம்ப மந்தமாவே இருந்த ஈமு வளர்ப்பு, 2007-ம் வருச ஆரம்பத்துல இருந்து திடீர்னு சூடுபிடிக்க ஆரம்பிச்சிடுச்சி. ஏகப்பட்ட பேர் தொழில்ல இறங்கிட்டதால குஞ்சு, முட்டை இதெல்லாத்துக்கும் நிறைய தேவை உண்டாயிடுச்சி. ஒரு முட்டை இரண்டாயிரம் ரூபா வரை விலைபோகுது.எதிர்காலத்துல ஜெயிக்கும்!பெரும்பாலும் கறிக்காகத்தான் இந்த ஈமுவை வளர்க்கறாங்க. ஆனா, இப்போதைக்கு தமிழ்நாட்டுல கறி அவ்வளவா கிடைக்கறதில்ல. நாமக்கல், ஈரோடுல மட்டும் கிடைக்கிறதா சொல்லிக்கிறாங்க. இந்தக் கறியில கொழுப்பு இருக்காது. எல்லாருமே தாராளமா சாப்பிடலாம். அதனால எதிர்காலத்துல ஈமு கறிக்கு பெரிய தேவை இருக்கும்கிறதுல சந்தேகமே இல்லை.ஈமுவோட உடம்புல இருக்கற கொழுப் பெல்லாம் முதுகு பக்கத்துல தனியா சேர்ந் திருக்கும். நல்லா வளர்ந்த ஒரு கோழிகிட்ட ஆறு கிலோ வரை கொழுப்பு எடுக்கலாம். கொழுப்பைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுற எண்ணெய் மூலமா... மூட்டுவலித் தைலம், முக அழகு க்ரீம், சோப்; தோலைப் பயன் படுத்தி... சட்டை, பை; இறகைப் பயன்படுத்தி... கிளீனிங் பிரஷ்னு இருபத்தஞ்சி வகையான பொருட்கள் ஈமுவை வெச்சி வெளிநாட்டுல தயாரிக்கப்படறதா சொல்றாங்க. தமிழ் நாட்டுல இதுவரை எந்தத் தொழிலும் வரல. இப்போதைக்கு குஞ்சுகளாவே நல்ல விலைக்கு போயிக்கிட்டிருக்கு. கோழிங்க பெருகுனதும் உபதொழில்களும் இங்க வர ஆரம்பிக்கும்னு நினைக்கிறேன். இப்போதைக்கு நாங்களே கொழுப்பு எண்ணெய் தயாரிக்கலாம்னு யோசனையில இருக்கோம்" என்று நீண்ட விளக்கம் அளித்த தியாகராஜன்,கால்ல அடிபட்டா காலி!"பதினெட்டு மாசம் வளர்ந்த பிறகு முட்டையிட ஆரம்பிக்கும். தனித்தனி ஜோடியா பிரிச்சு வெச்சா சீக்கிரம் பருவத் துக்கு வந்துடும். ஒரேயரு ஜோடியை மட்டும் வளர்க்காம... ரெண்டு, மூணு ஜோடி களா வளர்த்தாதான் சீக்கிரம் பருவத்துக்கு வந்து, இனப் பெருக்கம் செய்யும். முதல் வருசத்தில் இருபது முட்டை வரை போடும். அடுத்தடுத்த வருசத்துல எண்ணிக்கை கூட ஆரம்பிச்சி, அதிகபட்சம் நாப்பது முட்டை வரை கிடைக்கும்.ஒரு முட்டை குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய்க்கு மேல விலை போறதால அப்படியே வித்துடலாம். அல்லது இங்குபேட்டர் மூலமா பொறிச்சி, குஞ்சா விக்கலாம். ஈமுவைப் பொறுத்தவரை ஆண் கோழிதான் அடைகாக்கும். ஆனா, தமிழ்நாட்டுல வளர்ற இந்தக் கோழிங்க பெரும்பாலும் அடைகாக்கிறது இல்லை. நோய்த் தாக்குதலும் பெரிசா வர்றதில்ல. கால்ல அடிபடாம பாத்துக் கறது ரொம்ப ரொம்ப முக்கியம். அடிபட்டு நடக்க முடியாம போனா.... கோழி இறந்து போறதுக்கு வாய்ப்பிருக்கு. பிளாஸ்டிக், கல், மண் இதையெல்லாம் சாப்பிடாம பாத்துக்கணும். சாப்பிட்டா அஜீரணக் கோளாறு ஏற்பட்டு, மருந்து கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.ஈமு வளர்ப்பைப் பொறுத்தவரை தமிழ்நாட்டுல நிறைய ஏமாத்து வேலை நடக்கறதால, ஈமுனு சொன்னாலே நிறைய பேருக்கு பயமாத்தான் இருக்கு. அதனாலயே இந்தத் தொழில் மேல ஒரு கெட்ட அபிப்ராயம் வந்திருக்கு. உண்மையில எதிர்காலத்துல அருமையான லாபம் தரக்கூடிய தொழிலா வளந்துகிட்டிருக் குங்கறதுல சந்தேகம் இல்ல. ஈமு வளர்ப்புக்கு நான் இலவச ஆலோசனை கொடுக்கிறேன். என்னோட தொடர்புல இல்லாதவங்களுக்கும் கூட தேவையான உதவிகளைச் செய்யத் தயாரா இருக் கேன். குஞ்சு, முட்டை இதையெல்லாம் கூட நியாயமான விலைக்கு கொடுக்க ஏற்பாடு செய்யத் தயார்'' என்றவர், வளர்ப்பு முறைகளைப் பற்றியும் சொன்னார்.இன்னும் அஞ்சாறு வருஷம் ஆகும்!உடுமலைப்பேட்டையில் ஈமு பண்ணை வைத்திருக்கும் வின்சென்ட் (அலைபேசி: 94420-73923), "போன வருசம்தான் நானும் டாக்டர் கௌரி பரமசிவமும் சேர்ந்து இந்தப் பண்ணையை ஆரம்பிச்சோம். மொத்தம் பன்னிரண்டு ஜோடி இருக்கு. இப்பதான் முட்டையிடும் பருவத்துக்கு வந்திருக்கு. தீவனத்துக்காக மட்டுமே மாசம் நாலாயிரம் ரூபாய் வரை செலவாகுது. இதுவரைக்கும் ரெண்டு லட்சம் வரை செலவாயிருக்கு. முட்டை போட்டாத் தான் வருமானம் கிடைக்கும். வருசத்துக்கு பன்னிரண்டு ஜோடி மூலமா முன்னூறு முட்டை கிடைச்சாலே... மூணு லட்ச ரூபாய் கிடைச்சிடும். இந்தக் கோழியே கறிக்காகனு சொல்றாங்க. இன்னும் அஞ்சாறு வருசம் கழிச்சிதான் கறி பிரபலமாகும்னு எல்லாரும் சொல்றாங்க.ஈமுவை மட்டும் நம்பி தனியா பண்ணை வெச்சா கட்டாயம் நட்டம் வரலாம். அதனால மாடு, கோழி, ஆடு இதுமாதிரியான பண்ணை வெச்சிருக்கவங்க... உபத் தொழிலா ஈமுவையும் வளர்க்கலாம். அப்பத்தான்... பராமரிப்புச் செலவு கையைக் கடிக்காது. நாங்க மாடு வெச்சு, பால்பண்ணைத் தொழிலையும் வெச்சிருக்கறதால... பெரிசா பிரச்னை இல்லை.தமிழகத்துல இந்தக் கோழிங்க பெருகிட்டா... அதோட விலை கட்டாயம் குறையற ஆபத்தும் இருக்கு. அதைச் சமாளிக்கற தெம்பும் இருந்தாத்தான் ஈமு வளர்ப்புல இறங்கணும்'' என்று ரொம்பவே எதார்த்தமாகச் சொன்னார்.கறி கடையேறினா... நாமளும் கரையேறலாம்!'தமிழ்நாடு ஈமு வளர்ப்போர் கூட்டமைப்பு' சமீபத்தில் தொடங்கப் பட்டுள்ளது. அதன் தலைவர் ரங்கசாமியிடம் (அலைபேசி: 94426-81557) நாம் பேசியபோது, "பலரும் ஈமு பண்ணை ஆரம்பிக்கிற ஆர்வத்துல இருக்கறாங்க. அவங் களுக்கு குஞ்சுகளை விற்பனை செய்யறதாலதான் ஏற்கெனவே இருக்கற பல பண்ணைகளோட காலம் ஓடிக்கிட்டிருக்கு. யாருமே கறிக்காகவோ, வேற உபயோகத்துக் காகவோ இன்னமும் விற்பனையை ஆரம்பிக்கல. பண்ணையில கூடுதலா இருக்கற ஆண் கோழி, வளைந்த கால் உள்ள கோழி இதையெல்லாம் மட்டும் கறியாக்கி கிலோ முந்நூறு ரூபாய்னு இப்போதைக்கு கொடுக் கறாங்க. அதிக அளவுல கறி விற்பனை ஆகும் போதுதான் எந்த அளவு விற்பனை வாய்ப்பு இருக்கும்கிறது தெரியும்'' என்றார் வெளிப் படையாக!"அம்பானி கூட, 'ஐயோடா'னு ஓடிடுவாரு!''இவர்களுக்கு நடுவே... "ஈமுவா... அது சாமானியப்பட்ட வேலையில்ல..'' என்கிறார், பல்லடம் அருகேயுள்ள கண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா கவுண்டர். "32 ஈமு கோழிங்களை வெச்சி பண்ணை நடத்தினவங்க நாங்க. இது பெரிய அளவுல செய்றவங்களுக்குத்தான் நல்ல தொழில். சின்ன அளவுல செய்தா சிரமம் ஏற்படும். ஒரு கோழி இறந்தா கூட பெரிய இழப்பு ஏற்படும். ஏன்னா, அந்த அளவுக்கு விலை அதிகம். இனப்பெருக்க காலத்துல பெண் கோழிங்க சண்டை போடும். அதனால காயம் ஏற்பட்டு, உயிரிழப்பு வரும். அதனால ஆண்-பெண் அடை யாளம் கண்டு ஜோடி ஜோடியா வளர்க்கணும்.கறிக்கோழி வளர்க்கற மாதிரியெல்லாம் தீவனத்தைப் போட்டுட்டு ரொம்ப நேரத்துக்கு கண்டுக்காம விட்டுடமுடியாது. தொடர்ந்து கண்காணிச்சிக்கிட்டே இருக்கணும். பராமரிப்பும் அதிகம். வருமானம் கிடைக்க ஆண்டுக் கணக்குல ஆகும்.அதேபோல விற்பனை வாய்ப்பும் பரவலா கிடையாது. எல்லாத்துக்கும் தனியார் நிறுவனங்களை நம்பித்தான் இருக்கணும்கிறது கட்டாயமாயிடுது. இதுல இடைத்தரகர்கள் புகுந்து கவர்ச்சி ஆசையைக் காட்டி ஈமு குஞ்சுகளை விற்பனை பண்ணிட்டு போயிடறாங்க. அவங்களோட மல்லுக் கட்ட நம்மால முடியல. இதுக்கு முதலீடு அதிகம்கிறதால... சாமான்யருங்க இதுல இறங்கி கையைச் சுட்டுக்கக் கூடாது.மற்ற கோழிங்கனா நுகர்வோர் அதிகம். ரோட்டுக் கடையில கூட கோழி பிரியாணி கிடைக்குது. ஆனா, ஈமு கறியோட விலை சாதாரண மக்கள் வாங்கிச் சாப்பிட முடியாத அளவுக் குத்தான் இருக்கு. கிலோ 750 ரூபாய். இந்த விலையைச் சொன்னா... அம்பானி கூட, 'ஐயோடா'னு ஓடிடுவாரு.இதெல்லாம் நூறு, இருநூறு கோழிங்க வெச்சிருக்கறவங்களுக்கு தான் சரிப்பட்டு வரும்னு ஈமு வளர்ப்பையே மூட்டைக் கட்டி வெச்சிட்டோம். இப்ப ஆசைக்காக ரெண்டு கோழிகளை வளர்த்துக் கிட்டிருக்கோம். இந்த கோழிங்கள பார்த்துக்கிட்டிருந்த பேரன், இப்ப திருப்பூருக்கு வேலைக்குப் போயிட் டான். ஈமு விஷயத்துல விற்பனை வாய்ப்பு எங்க இருக்குனே தெரியல... எல்லாமே மர்மமா இருக்கு'' என்றார்.இவரைப்போல பலபேர், 'சட்டிசுட்டதடா' கதையாக ஈமுவைக் கைவிட்டாலும், சம்பந்தபட்ட நிறுவனங்கள், இவர்களின் நஷ்டத்தை ஓரளவுக்கு ஈடுகட்டும் வகையில் பணத்தை அள்ளிவிட்டிருப் பதால், வாயை மூடிக்கொண்டுவிட்டனர். அந்த நிறுவனங்களோ... தொடர்ந்து 'கல்லா' கட்டிக் கொண்டுள்ளன.நூறு, இருநூறு கோழிகளை வைத்துக் கொண்டு 'குபேரன்... குசேலன்' விவாதம் சூடுபிடிக்க... ஆயிரம் ஈமுக்களை வளர்க்கும் அபூர்வ சிந்தாமணியும் இருக்கிறார். அவரின் அனுபவம்.... தியாகராஜன் சொல்லும் ஈமு வளர்ப்பு ஆலோ சனைகள், ஈமு வளர்ப்பு நிறுவனங்களின் கருத்து, ஈமு பற்றி அக்டோபர் 6-ம் தேதி சென்னையில் நடக்க இருக்கும் கருத்தரங்கு... இவை பற்றியெல்லாம்...அடுத்த இதழில்படங்கள்: என்.ஜி.மணிகண்டன், தி.விஜய்
ஈமுவுக்காக ஒரு கருத்தரங்கு!ஈமு வளர்ப்பு பற்றி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் தங்கராஜூ என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?
"தமிழகம் முழுக்க ஈமு பண்ணைகள் உருவாகி வருவ தால், இந்தத் தொழிலின் வளர்ச்சிக் குறித்து, புதுக்கோட்டை யிலிருக்கும் எங்களின் கால்நடைப் பண்ணையில் விரிவான ஆய்வு நடக்கிறது. எதிர்காலத்தில் இந்தத் தொழில் எப்படி இருக்கும், வெளிநாடுகளில் எப்படி நடக்கிறது என்பது குறித்தெல்லாம் விசாரித்து வருகிறோம். இந்தியாவைப் பொறுத்தவரை பண்ணைகள் உருவாவதற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், இறைச்சி விற்பனையில் இல்லை.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு அக்டோபர் 6-ம் தேதியன்று, சென்னை, வேப்பேரியில் உள்ள கால்நடைக் கல்லூரியில் ‘இந்தியாவில் ஈமு பண்ணைத் தொழிலுக் கான வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு மற்றும் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பண்ணையாளர்கள், தொழில்முனைவோர் கலந்துகொண்டு விவாதிக்க உள்ளனர். வருங்காலத்தில் ஈமு வளர்ப்புத் தொழில் வளர்ச்சிக்கு அடிப்படையாக இந்தக் கருத்தரங்கு அமையும்" என்று சொன்னவர், "இது குறித்த மேல் தகவல்களுக்கு, கால்நடை உற்பத்திக் கல்வி மையத்தை 044-25555386 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்" என்றும் குறிப்பிட்டார்.
"இப்படியே போனால்...ஈமு பண்ணைகள் சரியும்!"
எச்சரிக்கிறது பல்கலைக்கழகம் அக்டோபர்-6... சென்னை, கால்நடை மருத்துவக் கல்லூரி... 'எதிர்காலம் எப்படி இருக்குமோ?' என்ற எதிர்பார்ப்புகளுடன் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கூடியிருக்க, 'இந்தியாவில் ஈமு பண்ணைத் தொழிலுக்கான வாய்ப்புகள்' என்ற கருத்தரங்கு காலை 10 மணிக்குத் தொடங்கியது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். ப. தங்கராஜு, "இந்திய அளவில் ஈமு கோழி ஆராய்ச்சியில் நமது பல்கலைக்கழகம் முன்னோடியாக உள்ளது. தற்போதைய நிலையில்... ஆந்திர பிரதேசம், தமிழகம், மகராஷ்டிரா என்று கிட்டத்தட்ட 360 பண்ணைகள் துவங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இன விருத்தியை அடிப்படையாகக் கொண்டுதான் செயல்படுகின்றன. எதிர்காலத்தில் இந்தத் தொழில் எப்படி செல்லும்... எப்படி செல்ல வேண்டும் என்பதை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்திருக்கின்றனர். இதுநாள் வரை ஈமு தொழில் குறித்து நீங்கள் எண்ணி வந்தவற்றையெல்லாம் மாற்றி, புதிய கோணத்தில் சிந்திக்க இந்தக் கருத்தரங்கு உதவும் என்று நம்புகிறேன்" எனச் சொல்லி கருத்தரங்கைத் துவக்கி வைத்தார்.சிறப்புரையாளராக வந்திருந்த கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர்.வே. ஞானப்பிரகாசம், எதார்த்தமான பல விஷயங்களை எடுத்து வைத்துப் பேசியது, வந்திருந்தோரை ஈர்த்தது."எந்தத் தொழிலாக இருந்தாலும் அதில் ஏற்ற-தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். அதை அறிவுப்பூர்வமாக அணுகி செயல்பட்டால் வெற்றி நடைபோட முடியும். ஈமு கோழிகளின் தாயகமான ஆஸ்திரேலியாவில் கூட ஈமு வளர்ப்பு தள்ளாடிக் கொண்டுதான் இருக்கிறது. என்னடா இது, எடுத்ததுமே எதிர்மறையாகப் பேசுகிறானே... என்று நினைத்துவிட வேண்டாம். ஆஸ்திரேலியாவில் 1994-ம் ஆண்டு 1,330 ஈமு பண்ணைகள் இருந்தன. இப்போது வெறும் 130 பண்ணைகள்தான் உள்ளன. பண்ணையை இப்படித்தான் நடத்தவேண்டும் என்ற சட்ட திட்டங்கள்கூட அங்கு உண்டு. அப்படியிருந்தும் பண்ணைகள் ஏன் குறைந்துவிட்டன என்பதைச் சிந்திக்க வேண்டும்.எந்தத் தொழில் என்றாலும் ஆரம் பத்தில் நுரையைப் போல பொங்கி வரும். ஆனால், திடீரென ஒரு நாள் கீழே விழும். இப்போது இந்தியாவில் கூட அபரிமிதமான வளர்ச்சி காணப் படுகிறது. நாளைக்கு இங்கேயும் சரிவு ஏற்படலாம். அதை மனதில் வையுங்கள். உற்பத்தி மட்டும் லாபத்தை தந்துவிடாது. ஈமு இறைச்சியை எப்படி, எங்கே விற்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். விற்பனை வாய்ப்பு தெரியாமல் எந்தத் தொழிலிலும் இறங்க வேண்டாம்" என்று அறிவுரைகளை வழங்கினார் ஞானப்பிரகாசம்.அடுத்து, "சாமீ... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்? என்பது போல எல்லோரும் இங்கே வந்திருப்பது நன்றாகவே புரிகிறது" என்று கலகலப் பாக தன் பேச்சை ஆரம்பித்த கால்நடை உற்பத்திக் கல்வி மைய இயக்குநர் முனைவர். இரா. பிரபாகரன்,"இந்தியாவில் இப்போது ஈமு முட்டை ஒன்றின் விலை ரூ.1,200. குஞ்சு ஒன்றின் விலை ரூ.4,000 என்று விற்கப்படுவதால் பண்ணைகள் தொடங்க பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையும், விலையும் தொடர்ந்து நீடிக்குமா என்பது கேள்விக்குறிதான். குஞ்சுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யக் கூடிய நோக்கம்தான் அதிகமாக உள்ளது. இன்று இந்தியாவில் இரண்டு லட்சம் ஈமுக்கள் உள்ளன. இதில் ஒரு லட்சம் பெட்டைக் கோழிகள் இருக்கும். இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து... அதாவது, 2010-ம் ஆண்டுவாக்கில் அவற்றில் இருந்து தலா 10 குஞ்சுகள் கிடைக்கிறது என்று வைத்துக் கொண்டால்கூட மொத்தம் 10 லட்சம் குஞ்சு களாக பெருகிவிடும். அவை 2 ஆண்டு காலத்தில் பருவம் அடைந்த பிறகு, அதாவது 2012-ம் ஆண்டு குறைந்தபட்சம் 50 லட்சம் குஞ்சுகளாக வலம் வர ஆரம்பித்துவிடும். அந்தச் சூழ்நிலையில் ஒரு குஞ்சு ரூ. 4,000 என்று விற்க முடியுமா என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.குஞ்சுகளை விற்பனை செய்து பணம் பண்ணுவதில் மட்டுமே இங்கே குறியாக உள்ளோம். இந்த நிலை நீடிக்காது. ஈமு இறைச்சி, ஆயில், தோல் என்று அதன் பிறபொருட்களுக்கான விற்பனை வாய்ப்பை கண்டறிய வேண்டும். இல்லை என்றால் 90-களில் வேகமாக வளர்ந்து கீழே விழுந்த முயல் பண்ணைத் தொழில் போல ஈமுவின் கதையும் பரிதாபமாகிவிடும். முயல் பண்ணை நடத்தியவர்கள் எல்லாருமே குட்டிகள் உற்பத்தியில் மட்டும்தான் கவனம் செலுத்தினார்கள். இறைச்சி, தோல் விற்பனையில் கவனம் செலுத்தவில்லை. அதனால், அந்தத் தொழில் இன்று கிட்டத்தட்ட இல்லாமலே போய்விட்டது. கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று உண்மையைப் போட்டு உடைத்தவர்,"ஈமு இறைச்சி, தோல், எண்ணெய் போன்றவற்றை ஏற்றுமதி செய்ய இந்தியாவில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பது பற்றி பேசுவதற்காக, 'அபீடா' (Apeda) என்று அழைக்கப்படும் மத்திய அரசு நிறுவனமான வேளாண் பொருட்கள் ஏற்றுமதி அமைப்பைத் தொடர்பு கொண்டோம். அவர்களோ... 'இந்தியாவில் இருந்து எந்த நிறுவனமும் ஈமு சம்பந்தப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதாக எங்களுக்குத் தெரியவில்லை. ஆகவே, அதுபற்றி கருத்தரங்கில் பேச எங்களிடம் எந்தத் தகவலும் இல்லை. எதிர்காலத்தில் வேண்டுமானால் பார்க்கலாம்' என்று சொல்லிவிட்டார்கள் (சேலம் மாவட்டம், ஆத்தூரில் 'மகாத்மா மார்டன் ஃபார்ம்' என்ற பெயரில் ஈமு பண்ணை நடத்திவரும் மணிவண்ணன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு ஈமு இறைச்சியை ஏற்றுமதி செய்வதாக நம்மிடம் கூறியது, 37-ம் பக்கத்தில் வெளியாகிருக்கிறது). இப்படிப்பட்ட சூழ்நிலையில், உலக அளவில் ஈமு பொருட்களை விற்பனை செய்யக்கூடிய வாய்ப்புகளை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியது முக்கியம்.இந்தத் தொழிலைப் பொறுத்தவரை இறைச்சியின் விலை குறைய வேண்டும். அப்போதுதான் நம் நாட்டு மக்கள் ஆர்வத்துடன் உண்பார்கள். இதற்கு உதவும் வகையில் செயற்கை முறை கருவூட்டல், தீவன மேலாண்மை... எனக் குறைந்த செலவிலான தொழில்நுட்பங்களை பல்கலைக்கழகம் வழங்கத் தயாராக இருக்கிறது" என்று சொன்னார் பிரபாகரன்.முயல்-ஆமை கதை நாமறிந்ததுதான். எனவே, முயல் விஷயத்தில் நடந்தது... ஈமு விஷயத்திலும் எதிரொலிக்காமல் இருக்க... ஆமை போல வெற்றியை நோக்கி அடியெடுத்து வைப்பதே உத்தமம்!ஈமு வளர்ப்புக்குத் தடை வருமா?
புரளும் கோடிகள்... புலம்பும் விவசாயிகள்...சர்ச்சை
ஜி.பழனிச்சாமி''ஈரோடு மாவட்டத்தில், 'ஒப்பந்த முறையில் ஈமு கோழி வளர்ப்பு' என்று சொல்லி ஒரு தனியார் நிறுவனம், விவசாயிகளிடமிருந்து 500 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளது’' என்று ஆகஸ்ட் 26-ம் தேதி ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் சிலர் படித்த புகார், கிர்ரென்று சுழல ஆரம்பித்து... 'ஈமு வளர்ப்புக்கே தடை வருமோ?' என்கிற அளவுக்கு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இதனால் ஈரோடு, கோயம்புத்தூர் உட்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஈமு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பலரும் பீதியில் உறைந்துள்ளனர்.
தற்போது, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் கிளப்பி, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் கொடுத்தவர்களில் ஒருவரான தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் சுப்பு என்கிற முத்துசாமியிடம் அதுபற்றி கேட்டோம்.இந்தக் கதைக்குள் நுழையும் முன்பாக, ஒரு பின்னோட்டத்தை கொஞ்சம் பார்த்துவிடுவோம். ஈமு வளர்ப்பு பற்றி அக்டோபர்-10, 2008 தேதியிட்ட இதழில் 'ஈமு... எதிர்காலம் என்ன... குபேரனா... குசேலனா..?’ என்ற தலைப்பில் விரிவாகவே ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தோம். அடுத்த இதழில் 'இப்படியே போனால்... ஈமு பண்ணைகள் சரியும்’ என்ற தலைப்பிலும் ஒரு கட்டுரை வெளியானது. ''குஞ்சுகளை விற்பனை செய்து பணம் பண்ணுவதில் மட்டுமே குறியாக உள்ளோம். இந்த நிலை நீடிக்காது. ஈமு இறைச்சி, ஆயில், தோல் என்று அதன் பிறபொருட்களுக்கான விற்பனை வாய்ப்பை கண்டறிய வேண்டும். இல்லையென்றால், 90-களில் வேகமாக வளர்ந்து, கீழே விழுந்த முயல் பண்ணைத் தொழில்போல, ஈமுவின் கதையும் பரிதாபமாகிவிடும்'' என்று கால்நடைத்துறை நிபுணர்கள் எச்சரித்ததையும் வெளியிட்டிருந்தோம்! இந்நிலையில், அடுத்தடுத்த காலகட்டங்களில் இந்த ஈமு வளர்ப்பு விஸ்வரூபம் எடுத்து, இன்றைக்கு 'மோசடிப் புகார்' என்கிற நிலை வரை வளர்ந்து நிற்கிறது.
''ஈமு வளர்ப்புல ஈடுபட்டிருக்கற அந்த நிறுவனம், 'ஈமு இருந்தாலும் ஆயிரம் பொன்... இறந்தாலும் ஆயிரம் பொன்; ஒருமுறை முதலீடு செய்தால், வாழ்நாள் முழுதும் வருமானம் பெறலாம்'னெல்லாம் கவர்ச்சிகரமா விளம்பரம் செஞ்சு, ஏகப்பட்ட பேரை ஈமு வளர்க்கறதுக்கு இழுத்துட்டு இருக்கு. தங்கக் காசெல்லாம் பரிசு கொடுக்குறதா வேற அறிவிச்சுருக்கு.
ஒப்பந்த முறையில ஈமுக்கோழி வளர்க்க நினைக்கற விவசாயி, ஒண்ணரை லட்ச ரூபாயை அந்தக் கம்பெனியில டெபாசிட் செய்யணும். அதுக்கப்பறம் கம்பெனி ஆட்களை அனுப்பி விவசாயியோட தோட்டத்துல கம்பிவேலி போட்டுக் கொடுத்து, மூணு மாச வயசுல... மூணு ஆண் குஞ்சு, மூணு பெண் குஞ்சுனு மொத்தம் ஆறு ஈமு குஞ்சுகள கொடுப்பாங்க. ஒரு வருஷம், ரெண்டு வருஷம், மூணு வருஷம்னு ஒப்பந்தம் போட்டு, அதுக்குத் தகுந்தபடியான பணத்தைக் கொடுத்து விவசாயிங்க அதை வளர்க்கணும்.
கோழிகளுக்கான தீவனத்தை கம்பெனியே கொடுத்துடும். வளர்க்கறதுக்குக் கூலியா விவசாயிக்கு மாசம் 6,000 ரூபாயை கம்பெனி கொடுக்கும். ஒவ்வொரு வருஷமும் ஊக்கத் தொகையா
20 ஆயிரம் ரூபாய் வேற தனியா கொடுக்கும் கம்பெனி. ரெண்டு வருஷத்துல முட்டையிடுற பருவத்துக்கு வந்ததும், ஆறு கோழிகளையும் கம்பெனியே எடுத்துக்கும். டெபாசிட் பணத்தையும் திரும்பக் கொடுத்துடும்.
இப்படித்தான் ஒப்பந்தப் பத்திரம் போட்டுக் கொடுக்குறாங்க. 'வட்டிக்கு விட்டா கூட இவ்வளவு பணம் கிடைக்காதே’ங்கிற ஆசையில, ஆயிரக்கணக்கான விவசாயிக வாயைக் கட்டி வயித்தைக் கட்டி சேர்த்து வெச்ச பணத்தை, இதுல முதலீடு செஞ்சுக்கிட்டுருக்காங்க. 'இது எப்படி சாத்தியம்?’னு சந்தேகத்தோட அந்தக் கம்பெனியில கேட்டப்ப... 'ஒரு ஈமு, வருஷத்துக்கு 30 முட்டை வரை இடும். சேதாரம் போக,
22 முட்டை தேறிடும். ஒரு முட்டையோட விலை 1,500 ரூபாய். இதன் மூலமாவே 33 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒரு கோழி 30 கிலோ எடை இருக்கும். கறி மூலமா 9,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒரு கோழியில இருந்து 3 கிலோ கொழுப்பு கிடைக்கும். அந்தக் கொழுப்புல இருந்து எடுக்குற எண்ணெய், தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்து. இந்தக் கொழுப்பு மூலமா 7,500 ரூபாய் வருமானம் கிடைக்கும். எலும்பு, நகம், சிறகெல்லாம் அலங்காரப் பொருட்களா உபயோகப்படுது.
அதன்மூலமா 5,000 ரூபாய் கிடைக்கும். ஆகக்கூடி ஒரு கோழியில இருந்து 54,500 ரூபாய் வருமானம் கிடைக்கும். கறி, மத்த பொருட்கள் எல்லாத்தையும் அமெரிக்கா, ஃபிரான்ஸ் மாதிரியான நாடுகளுக்கு நாங்க ஏற்றுமதி பண்ணிக்கிட்டிருக்கோம்’னு சொன்னாங்க.
இவங்க கொடுக்கற மூணு ஆண் கோழி, மூணு பெண் கோழி மூலமா... இவங்க சொல்ற மாதிரியே கறி, முட்டை எல்லாம் கிடைச்சாகூட...
2 லட்சத்து 28 ஆயிரம் வருமானம் கிடைக்கும். ஆனா, ரெண்டு வருஷத்துக்கும் சேர்த்து விவசாயிக்குக் கொடுக்கப் போறதா சொல்ற ஊக்கத் தொகை மட்டுமே 1 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய்.
இதில்லாம ரெண்டு வருஷத்துக்கு தீவனச் செலவையும் கம்பெனியே ஏத்துக்குமாம். ரெண்டு வருஷம் கழிச்சு டெபாசிட் பணத்தையும் கொடுத்துடுவாங்களாம். எப்படிப் பாத்தாலும், அவங்க சொல்ற கணக்கு உதைக்குது. கோழி மூலமா மகசூலே ரெண்டு வருஷத்துக்கு அப்புறம்தான் ஆரம்பிக்கும்.
அந்த சமயத்துல கோழியை இவங்க வாங்கிப்பாங்களாம். ஆனா... அதுக்கு முன்ன ரெண்டு வருஷம் வரைக்கும் ஊக்கத் தொகை, தீவனம்னு கொடுப்பாங்களாம். நிலமே இல்லாதவங்க... மொத்தமா ஒண்ணரை லட்ச ரூபாயைக் கொடுத்துட்டா, அவங்க பேர்ல இவங்களே கோழியை வளர்த்து, ரெண்டு வருஷம் கழிச்சு, லாபத்தோட முதலீட்டைத் திரும்பக் கொடுப்பாங்களாம். இதுலயும் நிறைய பேர் முதலீடு பண்ண ஆரம்பிச்சுருக்காங்க.
ஏற்கெனவே, 'தேக்கு மரம் வளர்க்கறோம்... பாக்கு மரம் வளர்க்கறோம்'னு நிறைய நிறுவனங்க மோசடி செஞ்சுருக்காங்க. கிட்டத்தட்ட அதே கதையாத்தான் ஈமு வளர்ப்பும் சுத்த ஏமாத்து வேலையா இருக்கும்கறதுதான் எங்களோட முடிவு.
ஈரோடு மாவட்டத்துல மட்டுமே இப்படி 15 கம்பெனிங்க ஈமு வளர்ப்புல இறங்கியிருக்கு. அதனாலதான் கலெக்டர்கிட்ட புகார் கொடுத்தோம்'' என்று விளக்கமாகவே சொன்னார். புகார் கொடுத்தவர்களில் மற்றொருவரான தடப்பள்ளி-அரக்கன்கோட்டை நீர்ப்பாசன விவசாயிகள் சங்கச் செயலாளர் சுபி. தளபதி, ''மகாராஷ்டிரா மாநிலத்துல 'ஈமு இண்டியா லைஃப் பிரைவேட் லிமிடெட்’ங்கற கம்பெனி, ஒப்பந்த ஈமு வளர்ப்பு மூலமா
2,000 விவசாயிகள்கிட்ட 200 கோடி ரூபாயை மோசடி செஞ்சுருக்கு. அதனால, அந்த மாநிலத்துல ஒப்பந்த ஈமு வளர்ப்புக்குத் தடை பண்ணியிருக்காங்க.
நம்ம ஊரு கால்நடைப் பல்கலைக்கழகத்துல, 'தமிழ்நாட்டுல ஈமு கோழிக்கான ஏற்றுமதி வாய்ப்பு இல்லை’னு கடிதம் மூலமாவே பதில் கொடுத்திருக்காங்க. அப்படியிருக்கறப்ப... இந்த மாதிரி ஏமாத்துக்காரங்கள அரசாங்கம் எப்படி வேடிக்கை பார்த்துட்டு இருக்குதுனு தெரியல. உடனடியா தடை பண்ணணும்'' என்றார் ஆவேசமாக!
புகாரைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் காமராஜ், இதுபற்றி விசாரிக்கும்படி கோட்டாட்சியருக்கு உத்தரவிடவே, விஷயம் பரபரப்பாகிவிட்டது. தற்போது தன்னுடைய விசாரணையையும் தொடங்கியிருக்கிறார் கோட்டாட்சியர்.
ஈமு வளர்ப்பின் உண்மை நிலையை அறிய குற்றம் சாட்டப்படும் 'சுசி ஈமு ஃபார்ம்ஸ்’ நிர்வாக இயக்குநர் எம்.எஸ். குருசாமியைத் தேடி அவருடைய அலுவலகத்துக்குச் சென்றோம். அங்கே அவர் இல்லை. இதையடுத்து, அலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டபோது, 'ஒப்பந்த முறையில ஈமு கோழி வளர்க்கற நிறுவனத்தை, ஏழு வருஷமா நடத்திக்கிட்டுருக்கேன்.
இதுவரைக்கும் எந்தப் புகாரும் வரல. ஒப்பந்தத்துல சொன்னபடி நிச்சயமா விவசாயிங்ககிட்ட நாங்க நடந்துக்குவோம். இதுல ஏமாத்துறதுக்கு எதுவும் இல்ல.
சத்தியமங்கலம் பக்கத்துல கீழ் மாதேஸ்வரன் மலைப்பகுதியில ஈமுக்கோழியைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யுறதுக்கு நிறுவனத்தைக் கட்டிக்கிட்டிருக்கேன். மூணு மாசத்துல வேலை முடிஞ்சுடும். அதுக்கப்பறம் ஏற்றுமதி சூடுபிடிக்க ஆரம்பிச்சுடும்'' என்றவரிடம்,
''உங்களுடைய விளம்பரத்தில் 'பிரான்ஸ் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு ஈமு இறைச்சியை ஏற்றமதி செய்கிறோம்' என்று கூறியுள்ளீர்களே?'' எனக்கேட்டோம்.
''உள்ளூர்லயே தேவை அதிகமா இருக்குது. இப்போதைக்கு நாங்க உற்பத்தி செய்யற கோழியில கிடைக்கற கறி தமிழ்நாட்டுக்கே போதல. அதனாலதான் ஏற்றுமதியெல்லாம் செய்யல. உற்பத்தி இப்பத்தான் அதிகரிச்சுருக்கு.
அதனால அடுத்த மாசம் ஈரோட்டுல ஈமு ரெஸ்டாரென்ட் திறக்கப் போறோம். கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்துலெல்லாம் அடுத்தடுத்து திறக்கப் போறோம். பிறகு, ஏற்றுமதியெல்லாம் ஆரம்பமாயிடும்'' என்று சொன்னவர், சட்டென்று பேச்சின் போக்கை மாற்றியவராக...
''நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவன். சொந்தமா ஒரு தொழிலைத் தொடங்கி இந்தளவுக்கு முன்னேறி இருக்கறது இந்தப் பகுதியில இருக்குற ஆதிக்க சாதிக்காரங்களுக்கு பிடிக்கல.
குறிப்பா... கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், கொங்கு பேரவை மாதிரியான இயக்கத்துக்காரங்கதான் இதுமாதிரி பிரச்னைகளைக் கிளப்பி விடுறாங்க'' என்றார். 'ஊக்கத்தொகை, மாதாந்திரத் தொகை கொடுப்பதெல்லாம் எப்படிச் சாத்தியம்?’ என்று கேட்டோம்.
''அதெல்லாம் சாத்தியம்தான். ஆனால், அதிலும் சந்தேகம் கிளப்புறது ஆதிக்க சாதிக்காரங்களோட சதிதான்'’ என்று சொல்லி அலைபேசி இணைப்பைத் துண்டித்தார் குருசாமி.
'தமிழ்நாடு ஈமு அசோசியேஷன் தலைவர் ராஜேந்திரகுமார், கடந்த பத்து ஆண்டுகளாக ஈமு வளர்த்து வருகிறார்.
அவருடைய அனுபவத்தைக் கேட்டபோது, ''ஒப்பந்த அடிப்படையில் ஈமுக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு மனநிறைவைத் தராது. எனக்குத் தெரிஞ்சவரை ஈமு கறியோ, மத்த பொருட்களோ இதுவரைக்கும் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதியாகல.
பதப்படுத்துற தொழிற்சாலைகளும் இங்க இல்ல. ஈமு வளர்க்கற எல்லாருமே... இப்போதைக்கு குஞ்சுகளா வித்துதான் லாபம் பார்த்துக்கிட்டிருக்காங்க. ஈமு கறி சாப்பிடுறது இப்பத்தான் அதிகரிச்சுட்டு வருது'' என்றவர்,
''எது எப்படி இருந்தாலும், கால்நடைப் பல்கலைக்கழகத்தோட ஆலோசனையைக் கேட்டு வளர்க்கறதுதான் நல்லது'' என்றார் முத்தாய்ப்பாக!
'முயல் பண்ணைத் தொழில்போல, ஈமுவின் கதையும் பரிதாபமாகிவிடும்’ என்று அக்டோபர் 25, 2008 தேதியிட்ட இதழிலேயே நம்மிடம் சொல்லியிருந்தார் கால்நடை உற்பத்திக் கல்வி மைய இயக்குநர். டாக்டர். ஆர். பிரபாகரன். இப்போது, இவர் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கிறார்.
தற்போதையச் சூழலில் பிரச்னைக் குறித்து அவர் என்ன சொல்கிறார்? ''அன்று நான் சொன்னதுதான் இன்றும் நடந்து வருகிறது. இன்னும்கூட காலம் கடந்துவிடவில்லை. ஈமு குஞ்சுகள் விற்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், இறைச்சி, ஆயில், தோல்... போன்றவை விற்பனை செய்ய வேண்டும்.
மேலும், சந்தையில் எவ்வளவு இறைச்சி தேவை உள்ளதோ? அதற்கு தக்கப்படியே, கோழிகளின் எண்ணிக்கை இருக்கவேண்டும். கூடுதலாக இருந்தால், விலைச் சரிவு ஏற்பட்டு, நஷ்டம்தான் வரும்.
இந்தச் சூழ்நிலையிலும் இறைச்சிக்கான விற்பனை வாய்ப்பை உருவாக்கவில்லை என்றால், நிச்சயம் இந்தத் தொழில் பாதிப்பைத்தான் ஏற்படுத்தும்'' என்றார் எச்சரிக்கையாக!
''ஈமு வளர்ப்புல ஜெயிக்க முடியாது!'''ஈமு கோழி வளர்ப்பது... 'பேராசை, பெரும் நஷ்டம்' என்பதற்கு சரியான உதாரணம்'' என்று புலம்பித் தீர்க்கிறார்... ஈமு கோழி வளர்த்து பாதிக்கப்பட்ட கோபிச்செட்டிபாளையம் அடுத்துள்ள கூகலூர் பேரூராட்சித் தலைவர் நஞ்சப்பன்.
''2008-ம் வருஷம், 'ஈமுக்கோழி வளருங்க... லட்சாதிபதியாகலாம்... கோடீஸ்வரனாகலாம்'னு விவசாயிகள சந்திச்சி, பிரசாரம் செய்தாங்க ஒரு கம்பெனிக்காரங்க. அதை நம்பி, நிறைய விவசாயிங்க வளர்த்தாங்க. ஒரு குஞ்சு 9,000 ஆயிரம் ரூபாய்ங்கிற விலையில 53 குஞ்சுகள,
4 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் பணத்தை ரொக்கமா கொடுத்து நான் வாங்கினேன். ஒரு வருஷம் வளர்த்து கொடுத்தா... ஒரு கோழிக்கு 13,000 ரூபாய் விலை கொடுத்து கம்பெனியே திருப்பி எடுத்துக்கும்; தீவனத்தையும் கம்பெனியே கொடுக்கும்ங்கறது ஒப்பந்தம். ஆனா, ஒரு கட்டத்துல கம்பெனியையே மூடிட்டு ஓடிட்டாங்க. இப்பவும் அது தொடர்பா கோர்ட்ல கேஸ் நடந்துட்டிருக்கு.
இதுக்கு நடுவுல அங்கே... இங்கேனு ஆள் பிடிச்சு, கெஞ்சி கூத்தாடி கோழி ஒண்ணு 7,000 ஆயிரம் ரூபாய்னு கேரளா வியாபாரிக்கு வித்து தொலைச்சேன். ஆகக்கூடி என்னோட முதல் பணத்துலயே ஒண்ணரை லட்ச ரூபாய் நஷ்டம். இதைத் தவிர என்னோட உழைப்பு, இடத்துக்கான வாடகை, தீவனம்னு கணக்கெடுத்தா... பல லட்சம் வரும்'' என்றவர்,
''நான் விசாரிச்ச வகையில ஈமுக்கோழி வளர்ப்புல ஜெயிக்கறதுக்கு எந்த முகாந்திரமும் இல்ல'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.
''எல்லாம் நல்லாத்தான் போயிக்கிட்டிருக்கு!''சுசி நிறுவனத்திடம் ஒப்பந்த முறையில் ஈமுகோழி வளர்ப்பை செய்து வரும் விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள்?
கோயம்புத்தூர் மாவட்டம், ஜே.கிருஷ்ணாபுரம், கணேஷ், ''ஒரு வருஷமா வளர்த்துக்கிட்டு இருக்கேன். 20 ஆயிரம் ரூபாய் போனஸ்கூட வாங்கியாச்சு. கோழிகளுக்கான தீவனத்தையும் கொடுத்துடறாங்க. மருத்துவமும் பார்க்கறாங்க. இன்ஷூரன்ஸ் செய்து கொடுத்திருக்காங்க. நான் முதலீடா போட்டது 1.5 லட்ச ரூபாய். மூணு வருஷ முடிவுல... வளர்ப்புக் கூலி 2.16 லட்சம், போனஸ்
60 ஆயிரம்... ஆகமொத்தம் 2.76 லட்சம் ரூபாய் லட்டு மாதிரி கிடைக்கும். நான் போட்ட முதலீட்டையும் திரும்பக் கொடுத்துடுவாங்க'' என்றவரிடம்,
''ஈமு கோழிக்கு எந்த விற்பனை வாய்ப்பும் இல்லை என்று கால்நடைப் பல்கலைக்கழகமே சொல்கிறது. இந்தச் சூழலில், சொன்னபடி பணம் கைக்கு வரும் என்று நினைக்கிறீர்களா?'' என்றோம்.
''இதுவரை வளர்ப்புக் கூலியா 72 ஆயிரம் ரூபாய்... ஒரு வருஷ போனஸா 20 ஆயிரம் ரூபாய்... ஆகமொத்தம் 92 ஆயிரம் கை நீட்டி வாங்கியாச்சு. நான் கட்டின பணத்துல இன்னும் 58 ஆயிரம்தான் பாக்கி. அதுக்கு ஈடா இப்ப என்கிட்ட ஈமு கோழிங்க இருக்குது. எல்லாம் நல்லபடியாதான் போய்க்கிட்டிருக்கு'' என்று நம்பிக்கையோடு சொன்னார்.
ஈமு கோழிவளர்ப்பு
ஈமு
கோழிவளர்ப்பு: ஈமு
கோழி ஆஸ்திரேலியா கண்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட பறவை. இது பறக்க இயலாத பறவை. ஆனால்
48 கி.மீ. வேகத்தில் ஓடக்கூடியது. வருடத்திற்கு 50 முதல் 60 கிலோ எடை வரை
வளரக்கூடியது. ஒன்றரை வருடத்தில் 5 முதல் 6 அடி உயரம் வரை வளரக்கூடியது. சுமார் 30
ஆண்டுகள் வரை வாழக்கூடியது. ஈமு கோழிகள் மனிதர்களுடன் நெருங்கி அன்புடன் பழகும்
குணம் கொண்டவை. நன்றாகப் பழகிய கோழி நாம் செல்லும் இடங்களுக்கெல்லாம் கூட
பின்தொடர்ந்து வரும்.
மருந்து கொடுப்பதற்காகவோ
அல்லது உடல் சோதனை செய்வதற்காகவோ அவற்றை பிடிக்க வேண்டி விரட்டிப்பிடிக்க
முயலக்கூடாது. எனவே அவற்றை மெதுவாக கொட்டகையின் மூலைப்பகுதிக்கு
விரட்டிச்செல்லலாம். கோழியின் இரண்டு இறக்கையைப் பிடித்துக்கொண்டு அதன் பின்பகுதி
பிடிப்பவரின் 2 கால்களுக்கிடையில் அழுத்தமாக இறுக்கிக்கொள்ள வேண்டும். இந்த
நிலையில் இதனை எளிதாக சோதனை செய்யலாம். ஈமு கோழி முன்பக்கமும், பக்கவாட்டிலும்
தாக்கக்கூடியது. எனவே எப்பொழுதும் ஈமு கோழியின் பின்பக்கம் நின்று பிடிக்க முயல்வது
பாதுகாப்பானது. வளர்ந்த ஈமு கோழிகளில் பெண் கோழிகள் ஆண் கோழிகளைவிட சற்று பெரியதாக
இருக்கும். ஆண் கோழியின் கால்பகுதி பெண் கோழியைவிட சற்று பெரியதாக
இருக்கும்.
பொதுவாக ஈமு கோழிகள் 18
முதல் 24 மாத வயதில் பருவத்திற்கு வந்து இனச்சேர்க்கை செய்து முட்டையிடத்
தொடங்கும். குறைந்த பட்சம் 16 வருடங்கள் தொடர்ந்து முட்டையிடும். பொதுவாக ஈமு
கோழிகள் வருடத்தில் 6 மாதங்கள் மட்டும்தான் முட்டையிடும். வருடத்திற்கு ஒரு கோழி 30
முதல் 40 முட்டைகள் வரை இடும். மாலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள் முட்டையிடும்.
முட்டை கரும்பச்சை நிறத்தில் இருக்கும். முட்டையின் எடை 475 முதல் 650 கிராம் வரை
இருக்கும். 3 நாட்களுக்கு ஒரு முறை முட்டையிடும். அடைக்காலம் 48 முதல் 52
நாட்களாகும். இனச்சேர்க்கை செய்து பெறப்பட்ட முட்டைகளை ஆண் ஈமுகோழிகள்தான்
அடைகாத்து குஞ்சு பொரிக்கும். பெட்டை ஈமு கோழி அடை உட்காராது. செயற்கை முறையில்
இயந்திரப் பொரிப்பான் மூலம் ஈமு கோழி முட்டைகளை
பொரிக்கலாம்.
இயற்கை சூழலில் ஈமு கோழி
மா இலை, விதைகள், பழங்கள், பூச்சிகள் போன்றவற்றை உண்ணும். ஈமு கோழிகள் உணவுடன் சரளை
மற்றும் கூழாங்கற்களையும் உண்ணக்கூடிய பழக்கமுடையவை. இந்த கற்கள் அதன்
வயிற்றுப்பகுதியில் உணவினை நன்கு அரைப்பதற்கு பயன்படுகின்றன. ஈமு கோழிப்பண்ணைகளில்
உணவு தயாரித்து கொடுக்கப்படுகிறது. இவை தானியம், புண்ணாக்கு, தவிடு, தாது உப்பு
கலந்த கலவையாகும். இத்துடன் மா இலை, கீரைகள் மற்றும் காய்கறிகளையும் கொடுக்கலாம்.
வளர்ந்த கோழி ஒரு நாளைக்கு 900 கிராம் உணவு உட்கொள்ளும். ஈமு இறைச்சி மற்ற இறைச்சி
வகைகளைவிடக் குறைவான கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் அதிக அளவு புரதச்சத்து கொண்டது.
14 முதல் 18 மாத வயதில் இறைச்சிக்காக பயன்படுத்தலாம். அப்போது அதன் எடை 40 முதல் 50
கிலோ வரை இருக்கும். (தகவல்: டாக்டர் வெ.செந்தில்குமார், டாக்டர் பி.ஜ.கணேசன்,
டாக்டர் டி.லூர்து ரீத்தா, மண்டல ஆராய்ச்சி மையம்,
புதுக்கோட்டை-4).
-டாக்டர்
கு.சௌந்தரபாண்டியன்.
ஈமு கோழி பண்ணை அமைக்க
விரும்புகிறவர்கள் ஈமு கோழி வளர்ப்பதற்கு எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? எவ்வளவு
வருமானம் கிடைக்கும் என்பதை அறிந்திருக்க வேண்டியது மிக அவசியம். ஈமு கோழிகளை
முட்டைக்காக வளர்ப்பது மிகவும் லாபகரமானது. ஈமு கோழிகள் சுமார் 16 ஆண்டுகள் வரை
முட்டையிடும் திறன் பெற்றவை.
அனுமானங்கள்
ஈமு கோழிகளின்
முட்டையிடும் பருவ வயது 21 மாதங்கள்
1 வருடத்தில் 1 ஈமு
கோழியின் முட்டை உற்பத்தி 30-33 முட்டைகள்
முட்டை உற்பத்தி காலங்கள்
செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை (6 மாதங்கள்)
குஞ்சு பொரிப்பு காலம்
49-52 நாட்கள்
குஞ்சு பொரிக்கும்
சதவீதம் 70%
இறப்பு சதவீதம்
0.05%
18 மாத பருவமடைந்த ஈமு
கோழியின் விலை 15,000 ரூபாய்
ஈமு கோழி முட்டை ஒன்றின்
விலை 1,000 ரூபாய்
1 மாத ஈமு குஞ்சின் விலை
3,000 ரூபாய்
வேலையாள் கூலி 1500
ரூபாய்/ மாதம்
மின்சார செலவு நாள்
ஒன்றுக்கு 7 யூனிட் (குஞ்சு பொரிப்பகத்திற்கு)
நிரந்தர முதலீடு
(ரூபாயில்)
18 மாத வயதுடைய 10
ஈமு
கோழிகளின் விலை
ரூ.15,000 x 10= 1,50,000
மின்சார அடைகாக்கும்
இயந்திரம் = 3,00,000
10 ஈமு கோழிகளுக்கான
கொட்டகை
செலவு 5000 ச.அ x ரூ.500 =
2,50,000
தீவனம் மற்றும் தண்ணீர்
தொட்டிகள் செலவு ரூ.500 x 10 = 5,000
மொத்தம் =
7,05,000
நடைமுறை
செலவு
10 ஈமு
கோழிகளுக்கான
தீவன செலவு 1 x 3,651 து ரூ.12.00 =
43,800
1 மாதம் வரை
குஞ்சுகளுக்கான
தீவன செலவு =
47
மின்சார செலவு 6
மாதத்திற்கு = 7,000
மருத்துவ மற்றும் பிற
செலவுகள் ரூ.250 x 12
= 3,000
வேலையாள் கூலி 2 நபர்கள்
= ரூ.3,000/- மாதம் x 12 = 36,000
நிரந்தர முதலீட்டுக்கான
வட்டி ரூ.7,05,000 x 15% =
1,05,750
மொத்தம் =
1,95,597
வருமானம்
முட்டை விற்பனை,
குஞ்சுகள் விற்பனை, ஈமு எச்சம் விற்பனை மூலம் மொத்த வருமானம் =
2,70,000
நிகர லாபம் = வருமானம் -
நடைமுறைச்செலவு = ரூ.2,70,000 - ரூ.1,95,597 = ரூ.74,403
1 மாத நிகர லாபம் =
ரூ.6,200
1 ஜோடி கோழிகள்
மூலம்
நிகர லாபம் =
ரூ.1,240
தொடர்பு:
ப.ராஜபாண்டியன்,
மொபைல்:
94422-22848
-கே.சத்யபிரபா,
ஈமு கோழி வளர்ப்பு : கவர்ச்சிகரமான மோசடி!
ஈமு கோழியின் இறைச்சி தொடங்கி இறகு வரை அனைத்தையும் விற்று இலாபம் பார்க்கலாம் என்ற விளம்பரத்திற்கு எந்தவிதமான அடிப்படையும் கிடையாது.
நான்கு ஆண்டுகளுக்கு முன் சேலம் மாவட்டம், வெள்ளையனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்ற விவசாயி, தன் குடும்பத் தேவைக்காக இரண்டரை ஏக்கர் நிலத்தில் இரண்டு ஏக்கரை எட்டு லட்ச ரூபாய்க்கு விற்றார். மகள்களின் திருமணச் செலவும் மகனின் படிப்புச் செலவும் போக கையில் சுமார் 2 லட்ச ரூபாய் இருந்தது. இந்தத் தொகையைக் கொண்டு அரை ஏக்கர் நிலத்தில் ஏதேனும் தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார்.
இந்நேரத்தில் பத்திரிக்கைகளில் ஈமு கோழியைப் பற்றிய விளம்பரம் வந்திருந்தது. ஈமு கோழிக் குஞ்சுகளை வாங்கி வளர்த்து முட்டை உற்பத்தி செய்து கொடுத்தால், முட்டை ஒன்றை 2000 ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறோம் என்று அந்த விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டிருந்து. அந்த விளம்பரத்தைப் பற்றி அக்கம் பக்கத்தில் விசாரித்து நம்பிக்கை பெற்ற மாணிக்கம், 2 லட்ச ரூபாயை ஈமு கோழி வளர்ப்பில் முதலீடு செய்தார். ஈமு கோழிகளும் வளர்ந்தன. முட்டையும் இட்டன. ஆனால், இப்பொழுது 1000 ரூபாய்க்குக்கூட முட்டை வாங்க ஆளில்லை; வெளியிலும் விற்க முடியவில்லை. ஈமுவுக்குத் தீவனம் போட்டே ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் கடனாளியாகியிருக்கிறார். இன்று இவரைப்போல நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஈமு கோழிப் பண்ணை அமைத்துக் கடனாளியாகி நிற்கிறார்கள்.
விவசாயத்தில் இடுபொருட்களின் கிடுகிடு விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை, நிச்சயமற்ற பருவ காலங்கள், விவசாயப் பொருட்களுக்கு சந்தையில் நிச்சயமற்ற விலை, இவற்றால் தொடர் நட்டம் முதலானவற்றின் காரணமாக விவசாயிகள் நொடிந்து போயுள்ளனர். விவசாயம் செய்வது தற்கொலைக்குச் சமம் என்று கருதிப் பலரும் மாற்றுத் தொழிலைத் தேட நிர்பந்திக்கப்படுகின்றனர். இப்படி நடுத்தர சிறு விவசாயிகள் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கான வாழ்வாதாரங்கள் பிடுங்கப்பட்ட பின்னணியில், ஈமு பண்ணை முதலாளிகள் இந்தச் சூழலைப் பயன்படுத்தி விவசாயிகளை ஏய்த்துக் கொள்ளையிடக் கிளம்பியுள்ளனர். தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை சுசி பார்ம்ஸ் முதற்கொண்டு இருபதுக்கும் மேற்பட்ட ஈமு நிறுவனங்கள் அதிரடித் திட்டங்களை அறிவித்து விளம்பரம் செய்து வருகின்றன. “”ஒன்றரை முதல் இரண்டு லட்ச ரூபாய் முதலீடு செய்தால், உங்கள் நிலத்தில் எங்கள் நிறுவனத்தின் செலவில் கோழிகளுக்கான கொட்டகை போட்டு அதில் ஆறு குஞ்சுகள் விடப்படும்; அதற்கான தீவனமும் வழங்கப்படும்; ஈமு கோழி வளர்ப்புக்கு மாதக் கூலியாய் ரூ. 6000 முதல் 9000 வரை கொடுக்கப்படும்” என்றும், “”கோழிகளுக்கு இரண்டு வயதாகி முட்டையிடும் தருவாயில் கோழியை எடுத்துக்கொண்டு, முதலீட்டுப் பணத்தைத் திருப்பித் தருவோம்” என்றும் இந்நிறுவனங்கள் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து வருகின்றன.
மறுபக்கம், விவசாயிகளோ இரண்டு லட்ச ரூபாயை விவசாயத்திலோ அல்லது வங்கியிலோ போடுவதற்குப் பதிலாக இத்திட்டத்தில் முதலீடு செய்தால் கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்ற எண்ணத்துடன், இத்தகைய ஈமு கோழிப் பண்ணை நிறுவனங்களின் வாயிலில் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது மாற்றுத் தொழிலாகவும், விவசாயிகள் காலங்காலமாக செய்து வரும் கால்நடை வளர்ப்பை ஒத்ததாக இருப்பதாலும் இத்தொழிலை விவசாயிகள் பெருத்த நம்பிக்கையுடன் பார்க்கின்றனர். தமிழகத்தில் ஈரோடு, திருச்சி, பல்லடம், புதுக்கோட்டை, வாலாஜாபாத், கொடைக்கானல் முதலான பகுதிகளில் இத்தகைய ஈமு வளர்ப்புப் பண்ணைகள் அதிகரித்து வருகின்றன. தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரி, ஆந்திரா, கோவா, மகாராஷ்டிரா, ஒரிசா, ம.பி. முதலான மாநிலங்களிலும் ஈமு கோழிப்பண்ணைகள் விரிவடைந்து வருகின்றன.
உண்மை நிலவரம் என்னவென்றால், ஈமுவின் தாயகமான ஆஸ்திரேலியாவில் 1987ஆம் ஆண்டில்தான் வணிகரீதியான ஈமு பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அங்குள்ள ஈமு பண்ணைகள் ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான கோழிகள் இருந்தன. இப்படிப் பல ஆண்டுகளாக இத்தொழில் இருக்கும் அந்நாட்டில் ஈமு கோழியின் இறைச்சிக்கான நவீன தொழிற்சாலைகளோ, பதப்படுத்தும் நிறுவனங்களோ இல்லை. ஆஸ்திரேலியாவின் உள்ளூர்ச் சந்தையிலே மதிப்பிழந்த பொருளாக ஈமு மாறிவிட்டதால், 1996இல் ஆஸ்திரேலியப் பண்ணைகளில் 2 லட்சமாக இருந்த ஈமு கோழிகளின் எண்ணிக்கை 2005இல் 18,600 ஆகக் குறைந்துவிட்டது. ஆனால், இங்குள்ள நிறுவனங்களோ உள்ளூர் சந்தை விரிவடைகிறது; ஏற்றுமதி செய்கிறோம் எனக் கூசாமல் புளுகி, விவசாயிகளை ஏய்த்து வருகின்றன.
ஐந்தாண்டுகளுக்கு முன் 3 மாத வயது கொண்ட ஒரு ஜோடி குஞ்சை 15,000 முதல் 20,000 ரூபாய் வரை இந்நிறுவனங்கள் விவசாயிகளிடம் விற்றன. குஞ்சுகள் வளர்ச்சி அடைந்து முட்டை இடும்பொழுது முட்டையை ரூ.1500 முதல் 2000 வரை கொள்முதல் செய்ய உத்திரவாதம் கொடுத்தன. ஆனால் இப்போது ரூ. 1000க்குக்கூட முட்டையை வாங்க மறுக்கின்றன. மேலும், கொள்முதல் என்பதே அரிதாகத்தான் நடக்கிறது. இந்நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த முட்டையிலிருந்து குஞ்சு உற்பத்தி செய்து மீண்டும் புதிதாக வரும் விவசாயிகளிடம் விற்கின்றன. முட்டை கொள்முதல் குஞ்சு உற்பத்தி விநியோகம் முட்டை கொள்முதல் என்ற சுழற்சிதான் தொடர்ந்து நடந்தேறி வருகிறது. ஈமு கறி ஏற்றுமதி என்பது நடப்பதில்லை. ஈமு கோழித் தீவன நிறுவனங்களோ, கறியை வெட்டிப் பதப்படுத்தும் நிறுவனங்களோ, தோலை உரித்துப் பதப்படுத்தும் நிறுவனங்களோ, கறியிலிருந்து எண்ணெய் எடுக்கும் நிறுவனங்களோ இந்தியாவில் இல்லை. கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் ஈமு கோழியின் உடற்கூற்றியல், மருத்துவம், நோய்கள் பற்றிய எந்தப் பாடமும் இல்லை.
“”நன்கு வளர்ச்சியடைந்த ஈமு கோழி 5-6 அடி உயரமும் 50 முதல் 60 கிலோ வரை எடையும் கொண்டதாக இருக்கும். அதில் குறைந்தபட்சம் 35 கிலோ கறி தேறும். சுவைமிக்க ஈமு கறி விலை ஒரு கிலோ ஏறத்தாழ ரூ. 450 ஆகும். ஈமு கோழிகள் கொழுப்பு கொலஸ்ட்ரால் இல்லாதது; ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், ஆஸ்த்துமா உள்ளவர்கள் தாராளமாக இதன் இறைச்சியை உண்ணலாம். இக்கோழியின் தோல் சாயமிடுவதற்குப் பயன்படுகின்றன. இதன் இறகுகள் பிரஷ் தயாரிக்கப் பயன்படுகின்றன. முட்டை ஓடுகள் அலங்கார வேலைகளுக்குப் பயன்படுகிறது. ஈமு கோழியின் எண்ணெய் மருத்துவத்துக்குப் பயன்படுகிறது. கோழிக்கறி, ஆட்டுக்கறிக்கு இணையாக ஈமு கோழிக்கறி இனி இந்தியாவில் செல்வாக்கு பெறும்” என்று ஈமு பண்ணை நிறுவனங்களும் ஊடகங்களும் ஆரூடம் கூறுகின்றன. ஆனால், ஈமுவின் இறைச்சியை மிகவும் சொற்பமானவர்களே சாப்பிடுகிறார்கள். அப்படிச் சாப்பிடுபவர்கள் கூடச் சோதனை அடிப்படையில்தான் சாப்பிடுகிறார்களே தவிர, ஈமு கோழி இறைச்சியை ருசிப்பதற்காக அல்ல.
அப்படியென்றால் ஈமு கோழிப்பண்ணை நிறுவனங்கள் எப்படித் தொழில் நடத்த முடிகிறது என்ற கேள்வி எழலாம். இத்திட்டத்தில் ஆரம்பத்தில் சேரும் விவசாயிகளுக்கு , அடுத்தடுத்து வந்துசேரும் விவசாயிகளின் முதலீட்டு பணத்திலிருந்து எடுத்துக் கொடுக்கப்படுகிறது. “”எனக்கு முறையாகப் பணம் கிடைத்துவிட்டது” என்று ஆரம்பத்தில் இத்திட்டத்தில் சேரும் விவசாயி தெரிவிப்பதால், மற்றவர்களும் நம்பிக்கை பெற்று பணத்தைக் கட்டுகிறார்கள். இது சங்கிலி போல் தொடர்கிறது. முன்னால் வந்தவனுக்கு பின்னால் வந்தவனின் முதலீட்டுப் பணத்திலிருந்து கொடுக்கப்படுகிறது. விவசாயிகள் அனைவரும் இக்கோழியை வளர்த்து முட்டைகளை விற்கின்றனர். முட்டை வியாபாரம் மட்டும்தான் நடக்கிறதே தவிர, கறி வியாபாரம் எதுவும்நடப்பதில்லை.
ஈமு வளர்ப்புக்கு நிலமும் நேரமுமில்லாதவர்களுக்கு, நிறுவனங்களே முதலீடு செய்பவரின் சார்பாக ஒரு இடத்தில் பண்ணையை அமைத்து கோழிகளைப் பராமரிக்கும் திட்டத்தை வைத்துள்ளன. இத்திட்டத்திலும் கணிசமானவர்கள் இணைந்துள்ளார்கள். முதலீடு செய்தவர்கள் அவ்வப்பொழுது தங்கள் பண்ணையைப் பார்வையிட்டு வரலாம். இப்படி முதலீடு செய்தவர்கள் பார்வையிடச் செல்லும் பொழுது, ஒரே பண்ணையை திருப்பித் திருப்பி முதலீட்டாளர்களுக்கு காட்டி, “”இதுதான் உங்கள் பண்ணை” என்று முதலீட்டாளர்களை இந்நிறுவனங்கள் ஏமாற்றுகின்றன. இப்படி ஈமு வளர்ப்பைக் கொண்டு, விவசாயிகளை ஏய்த்தும் பல மோசடித் திட்டங்களின் மூலமாகவும் இந்நிறுவனங்கள் பல கோடிகளைச் சுருட்டியுள்ளன.
இன்றைய சந்தை நிலவரப்படி வளர்ச்சியடைந்த ஈமுவின் இறக்கை முதல் நகங்கள் வரை அனைத்தையும் விற்றாலும் கூட, அதனின் மொத்த மதிப்பு ரூ.25,000/ ஐக்கூடத் தாண்டாது. ஆகையால் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நிற்கும் பொழுது முட்டை கொள்முதலும் நிறுத்தப்பட்டு, கம்பெனியும் காணாமல் போய்விடும். முதலீட்டு பணமும் திரும்பி வராது. இந்த மோசடியில் ஈமு வெறும் கண்கட்டு வித்தையாக மட்டும் பயன்படுகிறது.
இப்படிப்பட்ட மோசடிகள் தினந்தோறும் நடந்து வருகின்றன. ஏற்கெனவே அனுபவ் தேக்கு மர வளர்ப்புத் திட்டம், சந்தன மரம் வளர்த்தல், கண்வலி கிழங்கு விவசாயம், முயல் வளர்ப்பு, மருந்துநறுமணச் செடிகள் வளர்ப்பு முதலான மோசடித் திட்டங்கள் மூலம் தமிழகத்தில் விவசாயிகள் ஏ#க்கப்பட்ட கதை யாவரும் அறிந்தது. இதேபோல கோல்ட் குயிஸ்ட், டேட்டா என்டரி, இரிடியம் சுரங்கம் தோண்டுதல் , திருப்பூர் பாசி நிறுவன மோசடி, ஸ்பீக் ஆசியா ஆன் லைன், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் லாட்டரி பரிசு, மல்டி லெவல் மார்க்கெட்டிங் முதலானவை நகர்புறத்தின் படித்த மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை ஏய்ப்பதற்கான மோசடி திட்டங்களாகும். இப்படிப் புதுப்புது உத்திகளில் ஆண்டுதோறும் மோசடிகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இவ்வகையான திட்டங்களுக்கு முன்னோடி, அமெரிக்காவைச் சேர்ந்த போன்சி என்ற மோசடிப்பேர்வழித்தழானழ். இவன் 1930களில் அமெரிக்கா பெரும் பொருளாதார மந்தத்தில் சிக்கி இருந்தபோது, அங்கு ஈமு வளர்ப்பை ஒத்த பல மோசடிகளை மேற்கொண்டு பல நூறு கோடி டாலர்களைச் சுருட்டிய பின்னர் பிடிபட்டான். ஆகையால், இவ்வகை மோசடிகள் “”போன்சி திட்டம்” என்றழைக்கப்படுக்கின்றன.
உலகமயமாக்கலின் விளைவாக மக்களின் வேலை வாய்ப்புகள், வாழ்வாதாரங்கள் பிடுங்கப்படுகின்றன. அதேநேரத்தில் மக்களை நுகர்வு வெறியில் இழுத்து, உழைப்பின் மேலிருந்த மதிப்பீடுகள் ஒழிக்கப்பட்டு, சம்பாதிப்பதற்கான நெறிமுறைகள் உடைக்கப் படுவதும் நடந்து வருகிறது. இந்தச் சூழல் ஈமு வளர்ப்பு போன்ற போன்சி திட்டங்களுக்கு உரமாக அமைகிறது. ஆகையால், விவசாயிகளும் உழைக்கும் மக்களும் உலகமயமாக்கலுக்கு எதிராக நின்று, இழந்து வரும் வேலைவாய்ப்புகளையும் வாழ்வாதாரங்களையும் மீட்க, மோசடியை மூதலனமாகக் கொண்டுள்ள ஈமு கோழி வளர்ப்பு போன்ற திட்டங்களை எதிர்த்துப் போராட முன்வரவேண்டும்.
________________________________________________
- புதிய ஜனநாயகம், நவம்பர் – 2011
ஈமுகோழி வளர்ப்பு தொடர்பு கொள்ள மின்னஞ்சல்
மின்னஞ்சல்: portal@tnau.ac.in
Engr.Sulthan
No comments:
Post a Comment