Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, May 30, 2012

சுய தொழில்கள் 20.3 கெண்டை மீன்கள் வளர்ப்பு

 
கெண்டை மீன்கள் வளர்ப்பு
1. கெண்டை வளர்ப்பு
2. கெண்டை பொரிப்பக முறை
3. கெண்டைக்கு தீவன ஊட்டம்
4. நோய் மேலாண்மை
5. அறுவடை
கெண்டை மீன் வளர்ப்பு

மீன்கள் தனிச்சுவையும் ஊட்டச்சத்துக்களும் மிகுந்த சிறந்த மாமிச உணவாகும். மீன்களில் பொதுவாக 60 – 80 விழுக்காடு ஈரப்பதமும், 15 – 24 விழுக்காடு புரதச்சத்தும், 3 – 5 விழுக்காடு கொழுப்புச்சத்தும், 0.4 – 2.0 விழுக்காடு தாது உப்புக்களும் உள்ளன. தாது உப்புக்களைப் பொருத்த அளவில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, அயோடின், குளோரின், கந்தகம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், தாமிரம், துத்தநாகம், கோபால்ட், ஆர்செனிக் மற்றும் ஃபுளோரின் போன்றவை முக்கியமானவைகள் ஆகும். மீன்களில் மேற்கூறப்பட்ட ஊட்டச் சத்துக்கள் தவிர வைட்டமின் ஏ, டி, இ மற்றும் பி போன்ற உயிர்ச்சத்துகளும் நிறைந்துள்ளன. நமது உடல் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பெற தேவையான அளவில் புரதச்சத்துக்களை உணவின் மூலம் பெறுவது இன்றியமையாதது ஆகும். நமது புரதத் தேவையின் பெருமளவை நாம் தாவர புரதங்களில் சில இன்றியமையாக அமினோ அமிலங்கள் மிகக் குறைவான அளவிலேயே உள்ளன. எனவே தாவர உணவுகளிலிருந்து பெறும் புரதம் குறைபாடு கொண்டதாகவே கருதப்படுகிறது. ஆனால் விலங்குகளிலிருந்து பெறும் பால், முட்டை, மாமிசம், போன்ற உணவுகளில் உள்ள புரதங்களில் தாவரப்புரதங்களில் காணப்படும் குறைபாடுகள் இருப்பதில்லை. எனவே, நமது உணவில் தேவையான அளவில் மாமிசப் புரதங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் நமது புரதச்சத்து தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும். தரமான மாமிசப் புரதங்களை நமக்கு அளிப்பதில் மீன்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. பொதுவாக பிற மாமிசங்களின் விலைகளை ஒப்பிடும் போது மீன்களின் விலை குறைவாகவே உள்ளதால் உலகளவில் மலிவான விலையில் தரமான மாமிசப் புரதத்தை அளிக்கும் உணவாக மீன்கள் கருதப்படுகின்றன.

கொழுப்புச்சத்து உணவிற்கு சுவையையும், நமது உடலுக்கு சக்தியையும் அளிக்கக்கூடிய உணவாக இருப்பினும், ஆடு மற்றும் மாடுகளின் இறைச்சியில் உள்ள கொழுப்புகளில் கொலஸ்டீரால் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பு நிறைய உள்ளது. எனவே இவ்வகை இறைச்சிகளை உண்ணும் போது மாரடைப்பு மற்றும் பலவகை இதய நோய்கள் ஏற்படுகின்றன. மாறாக மீன்களின் இறைச்சியில் உள்ள கொழுப்புகளில் நமது உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும் பொருட்கள் இல்லை. இவ்வாறாக மீன்கள் நமக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களையும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காத தன்மையும் கொண்டுள்ளதால் அவை சிறந்த ஆரோக்கியமான உணவாகக் கருதப்படுகின்றன. பிறவகை மாமிச உணவுகளோடு ஒப்பிடும்போது எளிதாக செரிமானமாகும் தன்மையும் கொண்டுள்ளதால் மீன்கள் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சிறந்த ஆரோக்கிய உணவாகும். பல்வேறு ஆராய்ச்சிகளும் மருத்துவக் கண்டுபிடிப்புகளும் மீன்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. எனவே உலகளவில் மீன்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

தற்போது உலகளவில் மீன் உற்பத்தி ஏறத்தாழ 142 மில்லியன் மெட்ரிக் டன்கள் என்ற அளவில் உள்ளது. உலக மொத்த மீன் உற்பத்தியில் ஏறத்தாழ 68 விழுக்காடு அளவு மீன்பிடிப்பு மூலமாகவும், 32 விழுக்காடு அளவு மீன் வளர்ப்பு மூலமாகவும் பெறப்படுகிறது. மீன் பிடிப்பு மூலமாக பெறும் மீன் உற்பத்தி பெரும்பாலும் கடல்களிலிருந்தே பெறப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே நாம் கடல்களிலிருந்து பெறும் மீன் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்காமல் ஒரே அளவிலேயே உள்ளது. எனவே இந்த சூழ்நிலையில் பெருகிவரும் மக்கள் தொகையின் தேவையை பூர்த்தி செய்வதற்கு மீன் வளர்ப்பு மட்டுமே ஒரு சாத்தியமான வழிமுறையாக உள்ளது. எனவே இன்று சர்வதேச அளவில் மீன்வளர்ப்பு வேகமாக வளரும் ஒரு தொழிலாக விளங்குகிறது. மீன் வளர்ப்பினை பொறுத்தமட்டில் சீனா உலக அரங்கில் முதல் நிலையையும் இந்தியா இரண்டாம் நிலையையும் வகிக்கின்றன. பெரும்பான்மையான பகுதிகளில் மித வெப்பநிலை நிலவுகின்ற நமது நாட்டில் மீன் வளர்ப்புத் தொழில் மிகப் பெரிய அளவில் வளருவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

மீன் வளர்ப்பினை நன்னீர், உவர்நீர் மற்றும் கடல்நீர் ஆகிய மூன்று வகை நீர்களிலும் மேற்கொள்ளலாம். நமது நாட்டில் உவர்நீர் மற்றும் கடல்நீர் வளங்களைப் பயன்படுத்தி இறால்கள் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. இறால் தவிர நண்டுகள், இங்கி இறால்கள், சில வகை உவர் மற்றும் கடல்நீர் மீன் இனங்கள், சிலவகை கடற்பாசிகள், நுண்பாசிகள் மற்றும் மிதவை உயிருணவு இனங்களை வளர்க்கும் வாய்ப்புகளும் தற்போது பெருகி வருகின்றன.

நமது நாட்டில் ஏறத்தாழ 29,000 கி.மீ நீளத்திற்கு ஆறுகளும், 3.15 மில்லியன் எக்டர் பரப்பளவு நீர்த்தேக்கங்களும், 0.2 மில்லியன் எக்டர் பரப்பளவு வெள்ளை நீர் தேங்கும் சமவளப்பகுதிகளும், நன்னீர் மீன் வளர்ப்பினை மேற்கொள்வதற்கேற்ற பொது வளங்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இத்தகைய பொதுநீர் வளங்களின் உற்பத்தித் திறன் மிகக்குறைவாகவே உள்ளது. எனவே இத்தகைய வளங்களில் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்களை உரிய முறையில் பயன்படுத்துவதன் மூலம் இவற்றின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதோடு மொத்த மீன் உற்பத்தியையும் பெருமளவில் அதிகரிக்கலாம்.

நமது நாட்டில் மீன்வளர்ப்பு மூலம் தற்போது பெறும் மீன் உற்பத்தி 2.5 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கும் கூடுதலாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த உற்பத்தியில் கிட்டத்தட்ட 95 விழுக்காடு நன்னீர் மீன்வளர்ப்பு மூலமே பெறப்படுகிறது. எனவே இந்திய துணைக்கண்டத்தில் மொத்த மீன் உற்பத்தியில் நன்னீர் மீன்வளர்ப்பு ஒரு முக்கிய இடம் வகிக்கிறது.

நமது நாட்டில் நன்னீர் மீன் வளர்ப்பிற்கு பல மீன் இனங்கள் ஏற்றவையாக கருதப்படுகின்றன. இவற்றுள் கெண்டை, விரால், கெளுத்தி மற்றும் நன்னீர் இறால் இனங்கள் போன்றவை முக்கியமானவை ஆகும். இருப்பினும் பலவேறு காரணங்களால் நன்னீர் மீன்வளர்ப்பு மூலம் பெறும் உற்பத்தியில் 85 விழுக்காட்டிற்கும் அதிகமான உற்பத்தி கெண்டை மீன்கள் மூலமே பெறப்படுகிறது. பிற வளர்ப்பு இனங்களின் குஞ்சுகள் வர்த்தக ரீதியில் தேவையான அளவிற்கு உற்பத்தி செய்யப்படாத நிலையும், அவற்றின் வளர்ப்பு குறித்த தொழில் நுட்பங்கள் சரிவர பரப்பப்படாமல் இருப்பதும் இதற்கு முக்கியக் காரணமாகும்.

கெண்டை மீன் வளர்ப்பில் மூன்று உள்நாட்டு பெருங்கெண்டை இனங்களும், மூன்று வெளிநாட்டு பெருங்கெண்டை மீன் இனங்களும் வளர்ப்பிற்கேற்ற இனங்களாகக் கருதப்படுகின்றன. இருப்பினும் நமது நாட்டில் பெருங்கெண்டை இனங்களான கட்லா, ரோகு மற்றும் மிர்கால் போன்ற இனங்களே அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கெண்டை மீன்வளர்ப்பு நமது நாட்டில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு வேளாண் தொழிலாகும். இத்தொழிலிலுள்ள பல அனுகூலங்களே இத்தகைய பெரும் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். அந்த அனுகூலங்கள் பின்வருமாறு:
  1. கெண்டை மீன்கள் நமது தட்ப வெப்ப சூழலுக்கு மிகவும் ஏற்றவை. நமது சூழலில் குறுகிய காலத்திலேயே வேகமாக வளர்ந்து விற்பனை எடையைப் பெறும் தன்மை கொண்டவை.
  2. இவற்றின் வளர்ப்பு மற்றும் குஞ்சு உற்பத்தி தொழில் நுட்பங்கள் நிலைப்படுத்தப்பட்டுள்ளன. மீன் குஞ்சுகள் தட்டுப்பாடின்றி கிடைக்கின்றன
  3. கெண்டை மீன்களின் தேவை உற்நாட்டிலேயே அதிகமாக உள்ளதால் விற்பனை செய்வது எளிது
  4. இம்மீன்கள் தாவரப்பொருட்கள், கழிவுகள் மற்றும் சிறிய விலங்கினங்களை உண்ணும் தன்மை கொண்டுள்ளதால் குறைந்த செலவில் அதிக அளவில் உற்பத்தி செய்யலாம். எனவே இத்தொழிலுக்கு அதிக முதலீடு தேவை இல்லை
  5. இம்மீன்கள் ஓரளவு பல்வேறு நோய்களுக்கு எதிர்ப்புத் தன்மை கொண்டுள்ளதாலும், சுற்றுப்புற சூழலிலுள்ள பல இடர்பாடுகளைத் தாங்கி வளரும் தன்மையும் கொண்டுள்ளதால் வளர்க்கப்படும் சூழலில் பெருவாரியாக இறந்து நஷ்டம் ஏற்படும் வாய்ப்புகள் மிகக்குறைவு.
எனவே கெண்டை மீன் வளர்ப்பு நடைமுறையில் உள்ள பல நன்னீர் மீன் வளர்ப்புத் தொழில் நுட்பங்களுக் குறைந்த செலவில் அதிக உற்பத்தியும் தனி இன வளர்ப்பை விட பல பெருங்கெண்டை மீன் இனங்களை ஒரே குளத்தில் இருப்புச் செய்து வளர்க்கும் பல இன மீன்வளர்ப்பு முறையாகவே மேற்கொள்ளப்படுகிறது. இம்முறையினை கூட்டு மீன் வளர்ப்பு என அழைக்கிறோம்.

கூட்டுமீன் வளர்ப்பு:


ஒரு நீர் நிலையில் வெளியிலிருந்து இடுபொருட்கள் இடாத நிலையிலும் அங்கு மீன்களுக்கு எணவாகப் பயன்படக்கூடிய பல வகையான பொருட்கள் உற்பத்தியாகின்றன. இவை மாறுபட்ட தன்மைகளைக் கொண்டதோடு குளத்தின் பலவேறு மட்டங்களிலும், நிலைகளிலும் உருவாகின்றன. குளத்தின் அடிமட்ட மண்ணில் சேரும் அங்ககக் கழிவுகள் இதற்கு அடிப்படை ஆதாரமாக உள்ளன. குளத்தடி மண்ணிலுள்ள அங்ககக் கழிவுகளை பாக்டீரியா நுண்ணுயிர்கள் சிதைப்பதால் அக்கழிவுகளிலிருந்து உரச்சத்துக்கள் வெளியாகி நீரில் கரைக்கின்றன. கரைந்த உரச்சத்துக்களைப் பயன்படுத்தி பல வகையான தாவர இனங்கள் நீரில் உருவாகிப் பெருகுகின்றன. இவற்றுள் தாவர நுண்ணுயிர் மிதவைகள், நுண் தாவரங்கள் மற்றும் பல விதமான நீர்த்தாவரங்கள் அடங்கும். இவ்வாறு நீரில் உருவாகும் தாவரங்கள் முதல் நிலை இயற்கை உணவாக விளங்குகின்றன. அதன் பின்னர் இத்தாவரங்களை உணவாகப் பயன்படுத்தும் சிறு விலங்கு இனங்கள் உற்பத்தியாகிப் பெருகுகின்றன. இவ்வகை உயிரினங்கள் இறந்தபின் அடிமட்டத்தில் கழிவுகளாக சேர்கின்றன. அங்கு அவற்றைப் பயன்படுத்தும் பாக்டீரியா நுண்ணுயிர்களும் பல வகை புழு இனங்களும் உற்பத்தியாகின்றன. இது தவிர நீரில் வளரும் தாவரங்கள் மீதும் பிற திடப்பொருட்கள் மீது பலவகை ஒட்டி வளரும் உயிரினங்கள் சேர்ந்து பெருகுகின்றன. இவ்வாறு ஒரு இயல்பான குளத்தில் மீன்களுக்கு உணவாகப் பயன்படும் பல வகையான இயற்கை உணவுகள் உருவாகி நீரில் பல்வேறு மட்டங்களில் பரவிக் கிடக்கின்றன. இவற்றுள் தாவர வகை உணவுகளே அதிக அளவில் உற்பத்தியாகின்றன.

மீன் வளர்ப்பிற்குப் பரிந்துரைக்கப்படும் பல வகையான பெருங்கெண்டை இனங்கள் ஒவ்வொன்றும் மாறுபட்ட உணவுப் பழக்கம் கொண்டவை. எனவே குளங்களில் ஒரு பெருங்கெண்டை இனத்தை மட்டும் தனி இனமாக வளர்க்கும் போது அந்த இனம் அதன் தன்மைக்கேற்ற இயற்கை உணவை மட்டுமே பெருமளவில் பயன்படுத்தும். இந்நிலையில் நீரில் உற்பத்தியாகும் பிற இயற்கை உணவு வகைகள் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் வீணாகிக் கழிவுகளாகவே போகும். இந்நிலையைத் தவிர்க்க நீரில் இயல்பாகவே உருவாகும் மாறுபட்ட தன்மை கொண்ட பல வகை இயற்கை உணவுக்காக ஒரே இடத்திற்குச் சென்று போட்டியிடாமல் நீர்மட்டத்தில் அவற்றிற்கான இயற்கை உணவு கிடைக்கும் இடங்களுக்குச் சென்று அவற்றின் உணவுத் தேவையை பூர்த்திச் செய்கின்றன. இதனால் அவற்றினிடையே உணவிற்காகவோ இடத்திற்காகவோ போட்டிக்ள ஏற்படுவதில்லை. இதுவே கூட்டு மீன் வளர்ப்பின் அடிப்படைத் தத்துவமாகும். எனவே இம்முறையில் நீரில் பல நிலைகளிலும் உருவாகும் அனைத்து வகையான இயற்கை உணவு வகைகளும் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதால் அதிக மீன் உற்பத்தி கிடைக்கிறது. ஆக கூட்டு மீன் வளர்ப்பில் குளங்களில் இயற்கையாக உருவாகும் பல வகை இயற்கை உணவு வகைகளை உண்டு வளரும் மாறுபட்ட உணவுப் பழக்கங்களைக் கொண்ட வேக வளர்ச்சி பெருங்கெண்டை மீன் இனங்களை விகிதாச்சார அடிப்படையில் இருப்புச் செய்து வளர்க்கின்றோம். கூட்டு மீன் வளர்ப்புமுறை இயற்கையில் உருவாகும் பலவகை உணவுகளை முழுமையாக பயன்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு இருந்தாலும் நடைமுறையில் இம்முறையில் உற்பத்தியைப் பெருக்குவதற்கு நாம் மேலுணவும் அளிக்கிறோம். இதனால் மீன்களின் வளர்ச்சி அதிகரித்து அதிக உற்பத்தியும், வருவாயும் கிடைக்கிறது.

கெண்டைமீன் – வளர்ப்பு இனங்கள்:


கூட்டுமீன் வளர்ப்பிற்கு பெருங்கெண்டை மீன் இனங்களே பரிந்துரைக்கப்படுகின்றன. அதற்கு பல காரணங்கள் உள்ளன. பெருங்கெண்டை மீன் இனங்கள் தாவர உணவுகளையும், கழிவுகள் மற்றும் சிறிய விலங்கினங்களையும் உண்ணுகின்ன. எனவே இவ்வகை மீன்களை வளர்த்து அதிக உற்பத்தி பெறுவது எளிதாகும். மாறாக பிற மீன் இனங்களை உண்டு வளரும் மாமிசபட்சி இனங்களான விரால் போன்ற இனங்களை வளர்க்கும் போது குறைவான உற்பத்தியே கிடைக்கிறது. எனவே கெண்டை மீன் இனங்களை வளர்க்கும் போது அதிகளவில் உற்பத்தித் திறனை பெற முடியும். பல வகை கெண்டை இனங்களுள் வேகமாகவும், அளவில் பெரியதாகவும் வளரும் பெருங்கெண்டை மீன் இனங்களே வளர்ப்பிற்காக பரிந்துரைக்கப்படுகிறது. நமது நாட்டில் கட்லா, ரோகு, மிர்கால், ஆகிய இந்தியப் பெருங்கெண்டை ஆகிய அயல்நாட்டு பெருங்கெண்டை இனங்களும், வெள்ளிக்கெண்டை, புல்கெண்டை மற்றும் சாதாக்கெண்டை ஆகிய அயல்நாட்டு பெருங்கெண்டை மீன் இனங்களும் கூட்டு மீன் வளர்ப்பில் பரிந்துரைக்கப்படுகின்றன. இம்மீன் இனங்களின் பொதுவான பண்புகளை இப்பகுதியில் பார்ப்போம்.

இந்தியப் பெருங்கெண்டை இனங்கள்:


கட்லா:

கங்கை ஆற்றை பூர்வீகமாகக் கொண்ட கட்லா இனம் இந்தியப் பெருங்கெண்டை இனங்களுள் மிகவும் வேகமாக வளரும் தன்மை கொண்டது. பெரிய தலையையும், அகன்ற உடல் அமைப்பையும் கொண்ட இம்மீன் இனம் நீரில் மேற்பரப்பில் அதிகமாகக் காணப்படும். விலங்கின் நுண்ணுயிர் மிதவைகள் எனப்படும் சிறிய விலங்கினங்களை உண்டு வளரும் தன்மை கொண்டது. இதன் உணவுப் பழக்கத்திற்கு ஏற்ற வகையில் இதன் வாய் சற்று மேல் நோக்கி அமைந்திருக்கும். விலங்கின நுண்ணுயிரி மிதவைகள் தவிர பாசிகள் மற்றும் மக்கிய பொருட்களை இம்மீன் இனம் உண்ணும். அதிக அளவில் அங்கக உரங்கள் சேரும் குளங்களில் இம்மீன் இனம் வேகமாக வளருவதால் பொதுக் குளங்கள் மற்றும் குட்டைகளிலும் இம்மீன் வளர்க்கப்படுகிறது. இது தவிர குளங்களில் மிதவை உயிரினங்களால் ஏற்படும் கலங்கல் தன்மையை குறைக்க நன்னீர் இறால் வளர்ப்பு மற்றும் குறைந்த அளவு உப்புத் தன்மை கொண்ட உவர் நீர் வளர்ப்பில் (நீரில் உப்பின் அளவு சுமார் 3- 4 கிராம் / லிட்டருக்கு) கடல் இறால்களோடும் கட்லா இனம் இணைத்து வளர்க்கப்படுகிறது. கட்லா இனம் கூட்டு மீன் வளர்ப்பில் குளங்களின் தன்மை மற்றும் வளர்ப்பு முறைகளுக்கேற்ப மொத்தம் இருப்புச் செய்யும் குஞ்சுகளின் எண்ணிக்கையில் 10 – 30 விழுக்காடு அளவிற்கு மாறுபடும். குளங்களில் முறையான எண்ணிக்கையில் விட்டு இம்மீன்களை வளர்க்கும் போது ஓராண்டில் ஒரு மீனின் எடை 1 முதல் 1 ½ கிலோ கிராம் வரை கூடுகிறது. இம்மீன் பொதுவாக இரண்டு வயதிற்கு மேல் இனப்பெருக்கம் செய்யும் திறனை பெறுகிறது.

ரோகு:

கெண்டை மீன் இனங்களுள் ஏகமனதாக சுவையில் சிறந்த இனமாக ரோகு கருதப்படுகிறது. இந்த இனத்தின் தலை சிறியதாகவும். வாய் நேராகவும், கீழ் தாடையில் உதட்டில் சுருக்கங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். வளர்ந்த மீன்கள் ஓரளவு நீளத்துடன் உருண்ட உடலமைப்புடன் இருக்கும். வளர்ந்த மீன்களின் செதில்களில் சிவப்பு கலந்த நிறம் கொண்டதாக இருக்கும். இம்மீன் இனம் அழுகும் தாவரங்களையும், மிதக்கும் பாசிகளையும், நீரில் திடப் பொருட்களில் படிந்து வளரும் பாசி இனங்களையும் விரும்பி உண்ணும். இது தவிர நாம் அளிக்கும் மேலுணவு வகைகளையும் விரும்பி உண்ணும் தன்மை கொண்டது. இம்மீன் இனத்தை மேலுணவு மட்டுமே அளித்து கூட வளர்க்கலாம். இத்தன்மையால் கெண்டை மீன் வளர்ப்பில் ரோகு இனம் தனி இனமாக பல இடங்களில் வளர்க்கப்படுகிறது. ரோகு மீன்களுக்கு விற்பனை வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் கூட்டு மீன் வளர்ப்பில், மீன்களின் எண்ணிக்கையில் 25 – 50 விழுக்காடு அளவிற்கு ரோகு மீன் இருப்புச் செய்யப்படுகிறது. இம்மீன் இனம் ஓராண்டில் ¾ - 1 கஜலோ கிராம் எடை வரை வளருகிறது.

மிர்கால்:


நீரின் அடிமட்டத்தில் வாழும் இம்மீன் இனம் அடிமட்டத்திலுள்ள கழிவுகளையும், மட்கும் பொருட்களையும், சேற்றிலுள்ள சிறிய விலங்கினங்களையும் உண்டு வளருகிறது. இதன் வாய் சற்று உள்ளடங்கி கீழ்நோக்கி அமைந்து இருக்கும். இம்மீன் நீண்ட உடலமைப்புடனும், வால் துடிப்பின் கீழ்ப்பகுதி சிவப்பு நிறத்துடனும் காணப்படும். ஓராண்டு வளர்ப்புக் காலத்தில் மிர்கால் சுமார ½ - ¾ கிலோ கிராம் எடை வரை வளருகிறது.
carpcat carproh carpmri
கட்லா
ரோகு
மிர்கால்
அயல்நாட்டு பெருங்கெண்டை இனங்கள்:

வெள்ளிக் கெண்டை:


இம்மீன் சீன நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும். இம்மீனின் உடல் பக்கவாட்டில் தட்டையாகவும், வெள்ளி போன்ற சிறிய பளபளப்பான செதில்களையும் கொண்டிருக்கும். நீரின் மேல்மட்டத்திலுள்ள தாவர நுண்ணுயிர் மிதவைகள் (phytoplankton) இம்மீனின் முக்கிய உணவாகும். இதற்கேற்ப இம்மீனின் வாய் மேல்நோக்கி அமைந்திருப்பதோடு செவுள் அரும்புகளும் மிகவும் சிறியவையாகவும் நெருக்கமாகவும் அமைந்திருக்கும். தாவர நுண்ணுயிர் மிதவைகள் தவிர விலங்கு நுண்ணுயிர் மிதவைகள், அழுகிய தாவரங்கள் போன்றவற்றையும் வெள்ளிக் கெண்டை ஓரளவு உண்ணும். இம்மீன் ஓராண்டு வளர்ப்புக் காலத்தில் 1 ½ - 2 கிலோ கிராம் எடை வரை வளரும்.

புல்கெண்டை:


இம்மீன் சிறிய தலைமையும், நீண்ட உடலையும் கொண்டது. இதன் உடலில் மேல்பகுதி சாம்பல் கலந்த பச்சை நிறத்துடனும், வயிற்றின் அடிப்பாகம் வெண்மையாகவும் இருக்கும். சீன நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட புல் கெண்டை மீன் நீரிலுள்ள தாவரங்களையும், புல் இனங்களையும், பாசிகளையும் விரும்பி உண்ணும். இவை தவிர நாம் அளிக்கும் காய்கறிக் கழிவுகள், மரவள்ளி இலைகள், வாழை இலை மற்றும் மேலுணவு போன்றவற்றையும் விரும்பி உண்ணும். இதன் உணவுப் பழக்கத்தால் இம்மீன் இனம் நீர் நிலைகளில் அபரிதமாக வளருகிற நீர்த்தாவரங்களை கட்டுப்படுத்தவும் வளர்க்கப்படுகிறது. ஓராண்டு வளர்ப்பு காலத்தில் சராசரியாக சுமார் 1 - 1 ½ கிலோ எடை வரை வளருகிறது. இம்மீன் இனம் நுகர்வோர்களால் விரும்பி உண்ணப்படுகிறது.
கட்லா, ரோகு, மிர்கால், வெள்ளிக்கெண்டை மற்றும் புல்கெண்டை ஆகிய இனங்கள், இரண்டாம் வயது முடிவில் இனவிருத்திக்குத் தயாராகின்றன. இணக்கமான தட்பவெப்ப சூழலில், ஆறு போன்ற ஓடுநீர் நிலைகளில், இயற்கையாகவே இனவிருத்தி செய்யும் இம்மீன்களை, குளங்களில் தகுந்த தட்பவெப்ப சூழ்நிலை நிலவும் போது, தூண்டுதல் இனப்பெருக்க முறை மூலம் இனப்பெருக்கம் செய்யலாம்.

சாதாக் கெண்டை:


சாதாக் கெண்டையில் மூன்று வகைகள் உள்ளன. அவற்றுள் கண்ணாடிக் கெண்டை சமவெளிப்பகுதிகளில் பெருமளவில் வளர்க்கப்படுகிறது. இம்மீன் தாய்லாந்திலுள்ள பாங்காக்கிலிருந்து நமது நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டது. சாதாக் கெண்டை உருண்டு திரண்டு அடிவரையும் வெளிறிய மஞ்சள் கலந்த சிவப்பு நிறம் கொண்ட பெரிய செதில்களையும், பருமனான வாய் அமைப்பையும் கொண்டிருக்கும். இம்மீன் குளத்திலுள்ள தாவரங்கள் அடிமட்டத்திலுள்ள கழிவுகள், புழுப்பூச்சிகள், சாணம் போன்றவற்றை விரும்பி உண்ணும் அனைத்துண்ணியாகும். சாதாக் கெண்டை ஒரே ஆண்டில் 1 - 1 ½ கிலோ எடை வரை வளரும் திறனுடையது. இருப்பினும் இதன் வயிறு பெருத்து குடல் பகுதி அதிகமாகக் காணப்படுவதால் இதன் விற்பனை விலை பெரும்பாலும் குறைந்து விடுகிறது. தவிர இம்மீன் உணவைத் தேடி குளக்கரைகளை சதா குடைந்து சேதப்படுத்துவதால் சில இடங்களில் இம்மீன் விரும்பி வளர்க்கப்படுவதில்லை. இனப்பெருக்கத்தைப் பெற்றுவிடுகிறது. இனவிருத்தி அல்லது முதிர்ச்சி பெற்ற மீன்கள் தூண்டுதல் இல்லாமல் தாமாகவே குளத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன.

முன்கூறப்பட்டுள்ள ஆறு இனங்களுமே கூட்டு மீன்வளர்ப்பிற்கு ஏற்றவை. இருப்பினும் பெரும்பாலான பண்ணைகளில் மூன்று அல்லது நான்கு இனங்கள் மட்டுமே வளர்க்கப்படுகின்றன. கட்லா, ரோகு, மிர்கால் மற்றும் புல்கெண்டை ஆகிய இனங்களே பெரும்பாலும் வளர்க்கப்படுகின்றன. இருப்பினும் கூட்டு மீன் வளர்ப்பில் முழுமையான உற்பத்தியைப் பெற ஆறு வகையான மீன்களையுமே சேர்த்து வளர்ப்பது அவசியமாகும்.
carpsilver1
cgrass
crapcommon
வெள்ளிக் கெண்டை
புல்கெண்டை
சாதாக் கெண்டை
மீன் பண்ணை அமைப்பு

மீன் பண்ணை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும்போது பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். இதனால் அதிக இடர்பாடுகளின்றி அதிக செலவில்லாமல் தரமான மீன் வளர்ப்புக் குளங்களை அமைத்துக்கொள்ளலாம். மீன் பண்ணை அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் போது கீழ்க்காணும் குறிப்புக்களை கவனத்தில் கொள்வது நல்லது:
  1. குளம் அமைக்கத் தகுதியான இடம். பாறைகள் இல்லாமல் அதிக மேடு பள்ளங்கள் மற்றும் தாவரங்களின்றி சமமான சிறிதளவு சாய்தளத்தோடு இருத்தல் நல்லது. மண்ணின் கார அமிலத்தன்மை (PH) 6.5 முதல் 9.00 வரை இருக்கும் நிலங்கள் கெண்டை மீன் வளர்ப்பிற்கு ஏற்றவை
  2. குளம் அமைக்கத் தகுதியான இடம் நீரைத் தேக்கி வைக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். களி, வண்டல் மற்றும் மணல் கலந்த மண் வகை கொண்ட நிலம், மீன் பண்ணை அமைக்கச் சிறந்தது. களியின் அளவு மிகக்குறைவாக உள்ள நிலங்களில், நீர்க்கசிவு மூலம் நீர் இழப்பு அதிக அளவு ஏற்படும். எனவே சுமார் 30 முதல் 40 சதம் களித்தன்மையுடைய நிலம் மீன் பண்ணைகள் அமைக்க ஏற்றது. எனவே தாழ்வான நிலப்பகுதியில் நீர் தேங்கும் நிலங்கள், களர் நிலம், களர் மற்றும் உவர் மண் தன்மை கொண்ட நிலங்களையும் கெண்டை மீன் வளர்ப்பிற்கு பயன்படுத்தலாம்
  3. மீன் வளர்ப்பிற்குத் தேவையான நீர் ஆதாரங்களான ஆறுகள், குளங்கள் மற்றும் நல்ல தரமான நிலத்தடி நீர்வளம் கொண்ட பகுதிகள் மீன் வளர்ப்பிற்கு ஏற்றவை. மீன் பண்ணைக்கான நீர் ஆதாரம் ஏரி, குளம், மற்றும் ஆறு போன்றவைகளாக இருப்பின் குறைந்த பட்சம் அவற்றிலிருந்து 6 மாத காலத்திற்கு நீர் கிடைக்குமாறு இருத்தல் நல்லது.
  4. நீரை வடிப்பிற்குத் தேவையான வடிகால் வசதிகளும் சாலை வசதிகள் தொடர்பு கொண்ட இடமாகவும் இருந்திடல் வேண்டும்
மேலே குறிப்பிடப்பட்ட தகுதிகள் கொண்ட இடமாயிருப்பின், அவற்றில் அதிகச் செலவின்றி மீன் பண்ணைகள் அமைத்து இலாபம் பெற்றிடலாம். குறிப்பிடப்பட்ட தகுதிகளில் ஏதேனும் குறைந்திருப்பின் சற்றுக்கூடுதல் செலவுகள் செய்து அத்தகைய இடங்களிலும் மீன் பண்ணை அமைக்கலாம்.

ஒரு மீன் வளர்ப்புக் குளத்தைக் குறைந்தது ¼ ஏக்கர் (1000 ச.மீ) பரப்பிலாவது அமைத்தால், இலாபகரமாக மீன் வளர்ப்பை மேற்கொள்ளலாம். மீன் வளர்ப்புக் குளங்களைச் செவ்வக வடிவத்தில் சுமார் 1 ஏக்கர் முதல் 2.5 ஏக்கர் (1 எக்டர்) கொண்டவைகளாக அமைத்துக் கொள்ளலாம். குளங்களைச் சதுர வடிவில் அமைக்கும் போது அமைக்க வேண்டிய கரையின் நீளம் குறைகிறது. இருப்பினும், மீன்களை எளிதாக அறுவடை செய்வதற்கு செவ்வக வடிவ குளங்களே ஏற்றவை. தற்போது தண்ணீர் பற்றாக்குறை அதிகரிப்பதால் குளங்களை ¼ முதல் 1 ஏக்கர் பரப்பளவு கொண்டவைகளாகவும் அமைத்துக் கொள்ளலாம்.

பெரும்பாலான மீன் வளர்ப்புக் குளங்கள் தோண்டி கரை அமைக்கப்பட்ட குளங்களாகவே உள்ளன. இத்தகைய குளங்கள் அமைத்திட குறைவான செலவே ஆகிறது. ஒரு இடத்தைக் குறியிட்டு அதில் ஓரளவிற்கு மண்ணைத் தோண்டி எடுத்து, பின்னர் தோண்டி எடுத்த மண்ணைக் கொண்டே குளங்களுக்குக் கரை அமைத்திடலாம். இம்முறையில் ஒரு ஏக்கர் குளம் அமைத்திட சுமார் ரூ. 30,000 முதல் ரூ. 40,000 வரை செலவாகிறது. இத்தகையக் குளங்களின் பயன் என்னவெனில் பிற்காலத்தில் மீன் வளர்ப்புத் தொழிலைத் தற்காலிகமாக மாற்ற நினைத்தால் கரை மண்ணை குளத்தினுள் நிரப்புவதன் மூலம் விவசாய நிலமாக மாற்றிவடலாம். வயல்களில் அமைக்கப்படும் மீன்வளர்ப்புக் குளங்கள் பெரும்பாலும் இந்த வகையினைச் சார்ந்ததே.

மீன் வளர்ப்புக் குளங்கள் அமைக்கும் போது கரை அமைக்கத் தேவையான அளவிற்குக் குளத்திலிருந்து மண் எடுத்து அதனை சுற்றுப்புறக் கரை அமைக்கப் பயன்படுத்த வேண்டும். குளங்களின் கரைகளை அமைக்கும் போது நீர் உள்(வரத்து) மடை மற்றும் நீர் (வெளியேற்ற) வடிமடை போன்ற அமைப்புக்கள் அமைப்பது நல்லது. பெரும்பாலும் ஆழ்குழாய் கிணறு வகை கொண்ட பண்ணைகளில் நிலத்தடி நீர் குழாய் மூலமே பாய்ச்சப்படுகிறது. அதனால் அத்தகைய சூழல்களில் உள்வரத்துக் குழாய்களுக்கு தடுப்பு வலைகள் தேவையில்லை. ஆயினும் குளம், ஆறுகள், கால்வாய், போன்ற வெளிநீர் நிலைகளிலிருந்து நீர் எடுத்து மீன்வளர்ப்புக் குளங்களுக்குப் பாய்ச்சும் போது உள்வரத்துக் குழாய்களிலும் கண்டிப்பாக தடுப்பு வலைகள் வைக்க வேண்டும். இது தவிர அனைத்து குளங்களிலும் வடிமடை குழாய்களுக்கு தடுப்பு வலைகள் அத்தியாவிசியமான ஒன்றாகும். குளம் அமைக்கும் போது குளத்தின் அடித்தளத்தை மேடு பள்ளமின்றி வடிமடைப்பகுதியை நோக்கி சிறிதளவு சரிவுடன் (1:300 என்ற விகிதாச்சரத்தில்) அமைத்தல் வேண்டும். இதனால் தேவையான போது குளத்துநீரை வடிப்பது எளிதாகும். அதுமட்டுமின்றி குளங்களின் அடிமட்டத்தில் சேரும் கழிவுகளும் குளம் முழுவதும் பரவாமல் வடிமடை பகுதியிலேயே அதிகமாக சேரும்.

குளத்தின் கரை அமைக்கும் போது கரையின் உயரத்தை குளத்தில் தேக்க இருக்கும்அதிகபட்ச நீர் மட்டத்தை விட குறைந்த பட்சம் 1½ அடி உயரம் அதிகமாக இருக்குமாறு அமைத்திட வேண்டும். குளம் வெட்டும் போது கரையின் பக்கச்சரிவுகளை மண்ணின் தன்மைக்கேற்ப கரையின் உயரம் மற்றும் சாய்தளத்தின் அடிப்பகுதியின் அகலம் 1: 1½ அல்லது 1:2 என்ற விகிதத்தில் இருத்தல் வேண்டும். தேவையான அளவுக்குக் களித்தன்மை கொண்ட நிலங்களில் 1: 1½ என்ற விகிதம் போதுமானது. கரையின் வெளிப் பக்கச் சரிவினை மண்ணின் தன்மைக்கேற்ப 1:1 அல்லது 1: 1½ என்ற விகிதத்தில் அமைத்துக் கொள்ளலாம். குளத்தின் ஆழம் 6 முதல் 8 அடி அளவிற்கு இருப்பது நல்லது.

கரையின் மேற்பகுதியின் அகலம் 4 முதல் 6 அடி என்ற அளவில் இருப்பது நல்லது. பண்ணையின் சுற்றுப்புறக் கரை வாகனங்கள் செல்வதற்கு வசதியாக, கூடுதல் அகலத்துடன் அமைக்கப்படுதல் வேண்டும். குளங்கள் அமைப்பதற்கு வேலையாட்களை பயன்படுத்துவதை விட இயந்திரங்களை பயன்படுத்தும்போது செலவுகள் குறையும்.

சற்று அதிக பரப்பளவில் மீன் பண்ணைகளை அமைக்கும் போது மீன் வளர்ப்புக்குளம் அதாவது இருப்புக்குளம் மட்டுமின்றி நுண்மீன் குஞ்சு வளர்ப்புக் குளம் மற்றும் இளம்மீன் குஞ்சுகள் வளர்ப்புக் குளம் போன்றவற்றையும் பண்ணைகளில் அமைத்துக் கொள்ளலாம், இத்தகைய குளங்களை 0.1 ஏக்கர் பரப்பளவு முதல் 0.25 ஏக்கர் பரப்பளவு கொண்டவைகளாகவும் 5 முதல் 6 அடி ஆழம் கொண்டவையாகவும் அமைத்துக் கொள்ளலாம். இத்தகைய குளங்கள் நமது பண்ணைக்குத் தேவையான மீன் குஞ்சுகளை குறைந்த செலவில் தட்டுப்பாடின்றி நமது பண்ணையிலேயே வளர்க்கவும். விற்பனை எடையை அடையாத நிலையிலுள்ள மீதமான மீன்களை பராமரிக்கவும் உதவும்.

நன்னீர் மீன் வளர்ப்புக் குளங்களைத் தயார் செய்தலும் மீன்களை இருப்புச் செய்தலும்:
மீன்களைக் குளங்களில் இருப்புச் செய்வதற்கு முன் குளங்களை முறைப்படித் தயாரிப்பது, மீன் வளர்ப்பில் இன்றியமையாத ஒரு அடிப்படைப் பணியாகும். மீன் வளர்ப்புக் குளங்களில் அதிக உற்பத்தியைப் பெறுவதற்குப் பண்ணை மேலாண்மை எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவிற்குக் குளங்களை முறையாகத் தயார் செய்தலும் முக்கியமாகும். மீன்வளர்ப்புக் குளங்களின் தயாரிப்பில் முக்கிய நிலைகள் பின்வருமாறு.
  1. குளங்களைக் காயவிடுதல்
  2. வண்டல் பொறுக்குகளை அகற்றுதல்
  3. உழவு செய்தல்
  4. சுண்ணாம்பு இடுதல்
  5. சாண மற்றும் இரசாயன உரமிடுதல்
  6. மீன் குஞ்சுகளை இருப்புச் செய்தல்
இப்பொழுது மீன் வளர்ப்புக் குளங்களைத் தயாரிப்பது குறித்து விபரமாகப் பார்க்கலாம்.
1. குளங்களைக் காயவிடுதல்:
குளங்களில் மீன்களை அறுவடை செய்த பின்பு நீரை முழுமையாக வடித்துிவட்டு குளங்களின் அடிப்பகுதியில் வெடிப்புகள் உண்டாகும் அளவிற்கு குளங்களை வெயிலில் நன்றாகக் காயவிட வேண்டும். இதனால், குளங்களின் அடிப்பகுதியிலுள்ள அங்ககக் கழிவுகள் மற்றும் சேற்றிலுள்ள நச்சுயிரினங்கள், போன்றவை அழிக்கப்படுவதோடு, அடிப்பகுதியிலுள்ள நச்சு வாயுக்களும் வெளியேறுகின்றன. குளத்தை வடித்த நிலையில் கரிய நிறத்துடனும் துர் வாடையுடனும் காணப்படும் அடிப்பகுதி காய்ந்த பிறகு அங்குள்ள நச்சுத்தன்மை குறைவதால், நிறம் மாறி துர்வாடையின்றி இருக்கும். குளங்களை வருடம் ஒருமுறை நன்கு காயவிடுவதால், குளங்களின் உற்பத்தித் திறனைச் சிறப்பாகப் பராமரிக்கலாம்.
2. வண்டல் பொறுக்குகளை அகற்றுதல்:
குளங்களின் அடிப்பகுதியில் அதிகமான அளவிற்கு உரச்சத்துக்கள் இருப்பது குளங்களில் அதிக அளவில் பாசிபடர்வுகள் தோன்றி நீர் மாசுபடுவதற்கும் அடிப்பகுதியில் நச்சுத்தன்மை ஏற்படுவதற்கும் காரணமாக அமையும். எனவே குளங்கள் நன்றாக காய்ந்த பிறகு வண்டல் கலந்த மேல் மண்ணை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்.
3. உழவு செய்தல்:
 
குளத்தயாரிப்பில் அடுத்த கட்டமாக குளங்களை நன்றாக உழுதல் வேண்டும். சுமார் 10 முதல் 15 செ.மீ ஆழம் வரை உழுவதால் அடிமட்ட மண் மேலே வருகிறது. இதனால் குளத்தரையின் கீழ் சேர்ந்துள்ள கழிவுகள் வெளிப்படுத்தப்பட்டு அவற்றிலுள்ள நச்சுயிரிகள் அழிக்கப்படுவதோடு நச்சு வாயுக்களும் வெளியேறுகின்றன. எனவே குளங்களை வருடம் ஒரு முறை நன்கு காயவிட்டு உழுவு செய்வதால் குளத்திலுள்ள மண்ணில் நல்ல காற்றோட்டம் ஏற்பட்டுத் தூய்மையடைகிறது.
4. சுண்ணாம்பு இடுதல்:
 
குளங்களுக்கு சுண்ணாம்பு இடுவுது பல்வேறு நல்விளைவுகளை ஏற்படுத்துகிறது. நீருக்கு போதுமான கார மற்றும் கடினத்தன்மைகளை அளித்தல் நச்சுயிரிகளை அழித்தல் குளத்தின் அடிப்பகுதியில் ஏற்படும் நச்சுத்தன்மைகளை குறைத்தல் நீருக்கு ஓரளவு நிலையான கார அமிலத்தன்மையை அளித்தல் மற்றும் நீரில் கலங்கல் தன்மையையும் பாசிப் படர்வுகளையும் குறைத்து நீரில் ஒளி ஊடுருவும் ஆழத்தை அதிகரித்து அதிக அளவில் உயிர்வளி உற்பத்தி ஏற்படுதல் போன்றவை சுண்ணாம்பு இடுவதன் மூலம் ஏற்படும் நன்மைகளாகும். மீன் வளர்ப்புக்குளங்களுக்கு இட வேண்டிய சுண்ணாம்பின் அளவு மண்ணின் கார அமிலநிலை மற்றும் குளங்களில் சேரும் கழிவுகளின் அளவிற்கேற்ப மாறுபடுகிறது. மிதமான கார மற்றும் அமிலத்தன்மை கொண்ட மண்ணிற்கு ஏக்கருக்கு 80 முதல் 120 கிலோ கிராம் சுண்ணாம்பு பரிந்துரைக்கப்படுகிறது. உழவு செய்தபின் குளங்களில் பரவலாக சுண்ணாம்பை தூவி விட வேண்டும். குளத்தின் பள்ளமான பகுதிகளிலும் வண்டல் கழிவுகள் அதிகம் சேரும் இடங்களிலும் அதிக அளவில் சுண்ணாம்பு இட வேண்டும்.
5. சாணம் கரைத்தல்:
குளங்களுக்குச் சுண்ணாம்பு இட்ட, ஒரு வாரத்திற்குப் பிறகு சுமார் 1 அடி வரை நீர் நிறைத்து, பின்னர் குளத்திற்கு அடியுரமாகச் சாணம் அல்லது கோழி எரு இடலாம். ஒரு எக்டர் பரப்பளவு கொண்ட குளத்திற்கு வருடத்திற்கு சுமார் 12 முதல் 15 டன்கள் வரை சாணமோ அல்லது 5 டன்கள் என்ற அளவில் கோழி எருவோ இட வேண்டும். சாணத்தைப் பொறுத்த மட்டில் உலர்ந்த சாணத்தைவிட மட்கிய அல்லது ஈரமான சாணம் மேலானது. கோழி எருவைப் பொறுத்த மட்டில் மக்கிய ஆழ்கூள எரு (Deep Litter) நல்லது. மொத்தப் பரிந்துரையில் 6ல் ஒரு பங்கை அடியுரமாக நீரில் நன்கு கரைக்க வேண்டும். மொத்த அளவில் ஆறில் ஒரு பங்கை அடியுரமாக இட்ட பின் மீதத்தை வளர்ப்புக் காலத்தில் குளங்களுக்கு பகிர்ந்து மேலுரமாக இடலாம்.
6. இரசாயன உரம் இடுதல்:
சாணம் கரைத்த பின்பு சுமார் பத்து நாட்கள் சென்றதும் நீர் மட்டத்தை சுமார் 1மீட்டர் அளவிற்கு உயர்த்த வேண்டும். பின்னர் அடியுரமாக பரிந்துரை செய்யப்பட்ட இரசாயன உரங்களைக் கரைக்க வேண்டும். ஒரு எக்டர் குளத்திற்கு வருடத்திற்கு 200 கிலோ யூரியா, 250 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 40 கிலோ பொட்டாஷ் என்ற அளவில் இரசாயன உரங்கள் பரிந்துரை செய்யப்படுகின்றன. பரிந்துரை செய்யப்பட்ட உரத்தில் ஆறில் ஒரு பகுதியை நீரில் கரைத்து குளம் முழுவதும் பரவலாக நன்கு தெளிக்க வேண்டும். மீதத்தை மாதாமாதம் (அல்லது) 15 நாட்களுக்கு ஒரு முறை பிரித்துக் குளத்திற்கு இட வேண்டும். நிலம் களர் மண்ணாக இருப்பின் யூரியாவிற்கு பதிலாக அதே அளவு தழைச்சத்து அளிக்கக்கூடிய அளவிற்கு அமோனியம் சல்பேட் உரம் இடுவது நல்லது.
இவ்வாறு முறையாக நன்கு தயார் செய்யப்பட்ட குளத்தில் இரசாயன உரமிட்ட சுமார் 7 நாட்களில் தாவர நுண்ணுயிர் மிதவைகளும், விலங்கு நுண்ணுயிர் மிதவைகளும் தோன்றி நீரின் நிறம் பழுப்பு கலந்த பச்சை நிறமாகக் காட்சியளிக்கும். இந்நிலை மீன்குஞ்சுகளை இருப்புச் செய்வதற்கு மிகவும் உகந்ததாகும்.
களை மீன்கள் மற்றும் பகை மீன்கள் இருக்கின்ற குளங்களில் வளர்ப்பு மீன் குஞ்சுகளை இருப்புச் செய்வதற்கு முன்பு களை மீன்கள் மற்றும் பகை மீன்களை அழித்துவிட வேண்டும். இல்லையெனில், களை மீன்களால் வளர்ப்பு மீன்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு பகை மீன்கள் ஏற்படுத்தும் இழப்பால் வளர்ப்பு மீன்களின் எண்ணிக்கையும் குறைந்துவிடும். எனவே களை மற்றும் பகை மீன்களை அழிப்பதற்கு குளத்தில் பலமுறை இழுவலை கொண்டு இழுத்து இத்தகைய தேவயைற்ற மீன்களைப் பிடித்து அழிக்க வேண்டும். களை அல்லது பகை மீன்களைப் பிடித்து அழிப்பதுசாத்தியமில்லாத சூழ்நிலைகளில் மீன் கொல்லிகளைப் பயன்படுத்தலாம். இதற்கென இலுப்பைப் புண்ணாக்கு பிளீச்சிங் பவுடர் மற்றும் குறிப்பிட்ட சில பூச்சிக்கொல்லிகள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. மீன் கொல்லிகளைப் பயன்படுத்தும் போது அவற்றை குளங்களுக்கு சாணமிடுவதற்கு முன்னரே போட வேண்டும். பூச்சிக்கொல்லியின் விஷத்தன்மை சுமார் இரண்டு அல்லது மூன்று வார காலம் நீரில் இருக்கும். எனவே குளத்தில் மீன்கொல்லிகளின் நச்சுத்தன்மை முழுமையாக நீங்கிய பின்னரே மீன் குஞ்சுகளை இருப்புச் செய்தல் வேண்டும்.
spawnprodtn
fishfeed
சீன பொரிப்பக முறையில் மீன் சினை உற்பத்தி
மீன் சினைகளுக்கான தீவனம்
மீன் குஞ்சுகளை இருப்புச் செய்தல்:

குளங்களில் மீன் குஞ்சுகளை இருப்புச் செய்வதற்கு முன்னர் நாம் திட்டமிட்டு இருக்கக்கூடிய வளர்ப்பு காலம், குளங்களுக்கு நீர் கிடைக்கும் காலத்தின் அளவு தீவனத்தின் தன்மை மற்றும் எதிர்பார்க்கும் அறுவடை எடை போன்றவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். வளர்ப்புக் காலம் சுமார் 10 மாதங்கள் என்று வைத்துக்கொண்டால் நாம் இடும் உரம் மேலுணவு இவற்றைக் கருத்தில் கொண்டு, ஒரு எக்டர்க்கு 5,000 முதல் 10,000 வரை விரலளவு வளர்ந்த குஞ்சுகள் என்ற அளவில் இருப்புச் செய்யலாம். மீன்குஞ்சுகளைப் பொறுத்தமட்டில் குறைந்தபட்சம் 3 - 4 அங்குல நீளும் வளர்ந்தவையாக இருத்தல் நல்லது. தவிர சுமார் 6 மாத காலம் முதல் ஓராண்டு வயதான வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்ட குஞ்சுகளை எக்டருக்கு 5000 – 6000 குஞ்சுகள் இருப்புச் செய்யலாம். வளர்ப்புக் குளத்தில் அதிக காலம் பராமரிக்கப்பட்ட மீன்கள் இருப்புக் குளங்களில் இருப்புச் செய்யப்படும்போதே சுமார் 15 முதல் 20 செ.மீ நீளத்தையும் சுமார் 50 டுதல் 100 கிராம் எடையையும் அடைந்துவிடும். இத்தகைய வளர்ந்த குஞ்சுகள் சுமார் 3 முதல் 5 மாதங்களில் சராசரியாக ½ கிலோ எடைக்கும் அதிகமாக வளரும். எனவே நன்கு வளர்ந்த மீன் குஞ்சுகளைக் குளங்களில் இருப்புச் செய்யும்போது அவற்றை சுமார் 6 மாதங்களிலேயே அறுவடை செய்துவிடலாம். எனவே மீன் வளர்ப்பிற்குத் தேவையான நீர் கிடைக்கும் கால அளவு விற்பனைக்கான வாய்ப்புகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு வளர்ப்புக் காலத்தை நிர்ணயிக்க் வேண்டும். மீன்களின் வளர்ப்புக்காலம் மற்றும் நாம் குளங்களுக்கு இடும் உரம் மற்றும் மேலுணவு இவற்றைக் கருத்தில் கொண்டு குஞ்சுகளின் இருப்படர்த்தியை நிர்ணயிக்க வேண்டும்.

குளங்களில் பல இன மீன்களை இருப்புச் செய்யும் போது இன விகிதாச்சாரம் முக்கியமான ஒன்றாகும். பொதுவாக முன்பு குறிப்பிடப்பட்டுள்ள பல இனக் கெண்டை மீன்களை இருப்புச் செய்யும்போது தாவர மற்றும் மக்கிய கழிவுகளை உண்ணும் மீன் இனங்களான வெள்ளிக்கெண்டை ரோகு, மிர்கால், மற்றும் சாதாக்கெண்டை போன்ற இனங்களை அதிக அளவில் இருப்புச் செய்தல் வேண்டும். புல் மற்றும் நீர்த்தாவரங்கள் நிறைந்துள்ள குளங்கள் மற்றும் புல் அல்லது காய்கறிக் கழிவு போன்றவற்றை கொடுக்க வாய்ப்புள்ள இடங்களில்புல் கெண்டையைச் சுமார் 5 விழுக்காடு இருப்புச் செய்யலாம். சில மாதிரி இருப்பு விகிதாச்சாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளதைக் காண்க.
மீனினங்கள்
மீன் இன எண்ணிக்கை
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
கட்லா
30
25
25
10
ரோகு
40
40
30
30
மிர்கால்
30
30
20
20
வெள்ளிக்கெண்டை
-
-
-
25
சாதாக்கெண்டை
-
-
20
10
புல்கெண்டை
-
5
5
5
stockfish
சாதா கெண்டை குஞ்சுகளை அடைப்பு வலைக்குள் இருப்புச்செய்தல்
மேலே கொடுக்கப்பட்டுள்ள மாதிரிகள் அனைத்து நீர் நிலைகளுக்கும் ஏற்றவை எனக் கூற இயலாது. ஏனெனில் மீன்களின் வளர்ச்சியை நிர்ணயிப்பதில் குளத்தில் இயற்கையிலேயே உற்பத்தியாகும் பல்வேறு நுண்ணுயிர்த் தாவர இனங்களும் பாசி இனங்களும் மற்றும் விலங்கின நுண்ணுயிர் மிதவை இனங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய இயற்கை உயிரினங்களின் உற்பத்தி மண்ணிலுள்ள உரச்சத்து, அதன் கார அமிலத்தன்மை மற்றும் தண்ணீரின் தன்மைகள் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து அமைகிறது. எனவே நமது குளத்தில் நமது சொந்த அனுபவங்களைக் கூட்டு மீன் வளர்ப்பில் அதிக உற்பத்தி பெற வெள்ளிக்கெண்டை இனத்தை இருப்புச் செய்வது இன்றியமையாதது. ஆனால் நடைமுறையி் வெள்ளிக்கெண்டை இனத்திற்கு குறைந்த விற்பனை விலையே கிடைப்பதால் அம்மீன் இனம் இருப்புச் செய்யப்படுவுதில்லை.

மீன் குஞ்சுகளை வாங்கும்போது நல்ல தரமான குஞ்சுகளைப் பார்த்து வாங்குதல் வேண்டும். உடல் ஊனம் வெளிப்புற காயங்கள் செதில்கள் இழந்து இருத்தல் சுறுசுறுப்பின்மை மெலிந்த நிலை ஒட்டுண்ணிகள் இருத்தல் போன்ற அறிகுறிகளுடன் காணப்படும் மீன் குஞ்சுகளை தவிர்க்க வேண்டும். மீன் குஞ்சுகளை மிதமான வெப்பம் நிலவும் காலை, மாலை மற்றும் முன் இரவு வேலைகளில் இருப்புச் செய்வது நல்லது.

வெளிப்பண்ணைகளிலிருந்து வாங்கிச் செல்லும் குஞ்சுகளை உடனே குளங்களில் விட்டுவிடாமல் முதலில் அவற்றை நமது நீர்நிலையில் சுழலுக்கு இணங்கச் செய்தல் வேண்டும் பின்னர் குஞ்சுகளை 0.05 விழுக்காடு பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசலிலோ 2 முதல் 3 விழுக்காடு உப்புக்கரைசலிலோ 2 முதல் 5 நிமிடக் குளியல் சிகிச்சை அளித்து பின்னர் அவற்றைக் குளங்களில் இருப்புச் செய்தல் வேண்டும்.
harvest
மீன் அறுவடைச்செய்தல்
fcatch
அறுவடைச்செயப்பட்ட மீன்கள்

இணைய தளத்திலிருந்து திரட்டியவை
Engr.Sulthan

No comments:

Post a Comment