திருச்சி ரெயில்வே கோட்டத்தில் முதன்முறையாக நெல்லையை சேர்ந்த பெண் டிரைவர் ஒருவர் சரக்கு ரெயிலை விருத்தாசலத்துக்கு ஓட்டி சாதனை புரிந்துள்ளார்.
அபரிதமான வளர்ச்சி
இன்றைய அதிநவீன உலகில், ஆண்களுக்கு இணையாக பெண்களும் போட்டிப் போட்டு வளர்ந்து வருகின்றனர். கல்வி, விளையாட்டு, தொழில் துறைகள் என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் பெண்களுக்கென தனி இடம் என்பதும், அவர்களுக்கான வளர்ச்சி என்பதும் அபரிதமாக உள்ளது.
முதல் முறையாக புதிய துறைகளில் நுழையும் பெண், அவர்களுக்கு பின் வருபவர்வகளுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார்.
கடினமானதாகக் கருதப்படும் ஓட்டுனர் பணியில் பெண்கள் களமிறங்கி சாதனை படைத்து வருவது துணிச்சலான ஒரு வேலையாகும். இதில் விழிப்புடன் இருப்பது அவசியமாகும். கொஞ்சம் கவனம் தவறினாலும் நம்மை நம்பி வருவோரும் கடும் இன்னலுக்கு ஆளாகும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.
நெல்லை பெண்
ஆனால், இந்த துறையிலும் நாங்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை உணர்த்தும் வகையில் தற்போது பெண்கள் ஆழமாக காலுன்றி வருகின்றனர். சைக்கள், மோட்டார் சைக்கிள் என்று தொடங்கி கார், பஸ் என்று ரெயில் ஓட்டுனர்கள் வரையில் பெண்கள் வளர்ச்சி கண்டுவிட்டனர்.
ரெயில் துறையைப் பொருத்தவரையில் திருச்சி ரெயில் கோட்டத்தில் தற்போது முதன்முறையாக திருநெல்வேலியை சேர்ந்த ஒரு பெண்,அவருக்கு உதவியாக தூத்துக்குடியை சேர்ந்த மற்றொரு பெண் என 2 பெண்கள் துணிச்சலாக இந்த ரெயில் இயக்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சரக்கு ரெயில்
நேற்று இவர்கள் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் இருந்து ஈச்சங்காட்டில் உள்ள ஒரு தனியார் சிமெண்டு ஆலைக்கு சரக்கு ஏற்ற ரெயிலை இயக்கிச் சென்றனர். அங்கு சரக்கு ஏற்றி முடித்த பின், அங்கிருந்து புறப்பட்ட ரெயில் அங்கிருந்து புறப்பட்டு விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு நேற்று மதியம் 12.15 மணி அளவில் வந்தடைந்தது.
திருச்சியில் முதல் பெண்...
இதில் ரெயில் டிரைவர்களாக திருநெல்வேலியை சேர்ந்த கணேசன் மனைவி நாராயணவடிவு (வயது33). இவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் ரெயில்வேயில் கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
ஆரம்பத்தில் ரெயில் என்ஜினில் உதவி டிரைவராக பணிபுரிந்து வந்த இவர் பின்னர், நன்கு பயிற்சி பெற்று ரெயில் நிலையத்திற்குள் என்ஜின்களை மட்டும் இயக்கும் பணியில் ஈடுபட்டார்.
நாளடைவில், இவருக்கு பதவி உயர்வு கிடைத்து தற்போது, சரக்கு ரெயில் டிரைவராக பணியில் சேர்ந்துள்ளார். இது திருச்சி ரெயில்வே கோட்டத்தைப் பொருத்தவரையில் இவரே முதல் பெண் ரெயில் டிரைவர் ஆவார்.
முதல் பயணம்
இவரது முதல் பயணத்தை நேற்று விருத்தாசலத்தில் இருந்து தொடங்கி, ஈச்சங்காட்டிற்கு சென்று சிமெண்டு மூட்டைகளை ஏற்றிய சரக்கு ரெயிலை விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு ஓட்டிவந்தார்.
இவருக்கு உதவியாளராக, தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தை சேர்ந்த சந்தனசேகர் மனைவி ஜான்சிராணி என்பவரும் உடன் வந்தார். இவர் பணியில் சேர்ந்து ஏறக்குறைய 6 மாதங்கள் தான் ஆகுகிறது.
ஆண்களுக்கு...
தற்போது சரக்கு ரெயில் இயக்கத் தொடங்கி இருக்கும், நாராயணவடிவு நாளடைவில் இதில் நன்கு அனுபவங்களை கற்றுத்தேர்ந்த பின், பயணிகள் ரெயிலை இயக்குவதற்கான பதவி உயர்வு கிடைக்கும் என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஆண்களால் நிரம்பி வழிகின்ற ஓட்டுனர் பணியில் தனித்து நின்று கவனத்தை ஈர்த்து வருகின்றனர் பெண்கள். அந்த வழியில் தற்போது ரெயில்வேயிலும் நாராயணவடி, ஜான்சிராணியை போன்ற பெண்கள் தனித்து நின்று செயல்பட்டு வருவதற்கு அவர்களுக்கு ஒரு சபாஷ் சொல்லலாம்.
No comments:
Post a Comment