இன்றைக்கெல்லாம் ஒருவருக்கு ஏதோ கொஞ்சம் எழுதத் தெரிந்து, சில ஆயிரங்கள் பணமும் இருந்துவிட்டால் ஒரு புத்தகம் தயாராகிவிடுகிறது. பெரும்பான்மை வாசகர்களின் மனநிலையும் இப்படித்தான். ஆர்வத்தோடு வாங்கப்படும் பெரும்பாலான புத்தகங்கள் பரண்களையும் பழைய புத்தகக் கடைகளையுமே சென்றடைகின்றன. உண்மையில் ஒரு புத்தகத்தின் பெறுமானம்தான் என்ன? புத்தகங்களோடு வாழும் இவர்கள் வாழ்க்கை அதைச் சொல்லும்!
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சின்ன கிராமமான கீழக்கலங்கலைச் சேர்ந்தவர் சண்முகவேல். 75 வயதாகிறது. சுற்றுப்புறக் கிராமங்களை நோக்கிக் காலை ஆறரை மணிக்கு வீட்டிலிருந்து புறப்படுகிறார் சண்முகவேல். சராசரியாக ஒரு நாளைக்கு 90 கி.மீ. தூரம் சைக்கிளில் பயணிக்கிறார்; புத்தகங்களுக்காகக் காத்திருக்கும் அவருடைய கிராமப்புற வாசகர்கள் “சிகப்புச் சட்டை தாத்தா வந்துட்டார்” என்கிறார்கள். ஒரு வீட்டில் புத்தக மூட்டையைப் பிரிக்கிறார். ஒவ்வொரு புத்தகமாக எடுத்து அதன் சிறப்புகளைப் பட்டியலிட ஆரம்பிக்கிறார். ஆளுக்கொன்றாக எடுக்க, மீதிப் புத்தகங்களுடன் அடுத்த கிராமத்தை நோக்கிப் பயணிக்கிறது அவருடைய சைக்கிள்.
“சாதாரண விவசாயக் குடும்பம் நம்மளோடது. நல்லாப் படிப்பேன். ஆனா, வீட்டுச் சூழ்நிலை படிப்பை நிறுத்தும்படியா பண்ணிட்டு. விவசாய வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். சின்ன வயசுலேயே இடதுசாரி இயக்கத்துல சேர்ந்துட்டேன். அன்னைக்கு ஆரம்பிச்சு சிகப்புச் சட்டைதான் இந்த உடம்புல. இந்தப் புஸ்தக ஆர்வம், வாசிப்பு இதுக்கெல்லாம்கூட அதுதான் ஆரம்ப விதை. பொதுவுடைமைப் புஸ்தகங்களைப் படிக்க ஆரம்பிச்சப்போ, இது நம்மளோட நிக்கக் கூடாது; நாலு பேருக்குப் போய்ச் சேரணும்னு வாங்கி, தெரிஞ்சவங்களுக்குக் கொடுத்தேன். ஒரு கட்டத்துல விவசாயம் கையைச் சுட்டப்போ, புஸ்தக வியாபாரமே தொழிலா மாறிடுச்சு. சின்ன அளவுல ஊருலேயே கடை ஒண்ணு இருக்கு; வேற எதுனா தொழில் செஞ்சும்கூடப் பொழைச்சுருக்கலாம். ஆனா, மனசுக்கு இதுல கெடைக்குற திருப்தி இருக்கே… அது வேற எதுலேயும் கிடையாது.
காலையில ஆறரை மணிக்கு சைக்கிளைக் கிளப்புவேன். ஊர்ஊரா வண்டி போகும். பெரும்பாலும் பள்ளிக்கூட ஆசிரியர்களும் பிள்ளைகளும்தான் என்னோட வாடிக்கையாளருங்க. நான் கொண்டுபோற புஸ்தகங்களையும் கொடுப்பேன்; அவுங்க முந்தின முறை கேட்ட புஸ்தகங்களையும் வாங்கிட்டுப் போவேன். பள்ளிக்கூடங்கள்லேயே கண்காட்சி போடுவேன். தள்ளுபடி கொடுப்பேன். மிச்சம் கிடைக்குறது கம்மின்னாலும், என் குடும்பத்துக்கு அது போதுமான தொகையா இருக்கு. ஏன்னா, என் மனைவி லட்சுமி, என் மகள்கள் ஜீவா, கல்பனா எல்லோரும் என்னை முழுசாப் புரிஞ்சுக்கிட்டு அதுக்கேத்த மாதிரி வாழ்க்கையை அமைச்சுக்கிட்டவங்க. எனக்குத் தனிப்பட்ட செலவுனு எதுவும் கிடையாது.
டீகூட குடிக்க மாட்டேன். வீட்டுலேயே சாப்பாடு கட்டிக்குவேன். எப்படியும் ரெண்டு நாளாவது போற ஊர்கள்லேயே தங்கிடுற மாதிரி இருக்கும். ‘என் வீட்டுல தங்கு, என் வீட்டுல சாப்புடு’ன்னு ஒரே போட்டியா இருக்கும். அப்படி ஒரு பிரியம் என் மேல கிராமத்துக்காரவங்களுக்கு. அப்புறம் என்ன? சந்தோஷமா போகுது பொழைப்பு.
இந்த சந்தோஷத்துல பெரிய சந்தோஷம் என்ன தெரியுமா? கிராமப்புறங்கள்ல இப்படிக் கொண்டுபோய் நாம கொடுக்குற புஸ்தகம் அவுங்கவுங்க வாழ்க்கையில ஏற்படுத்துற தாக்கம் இருக்கே… அதை நேரடியா உணர்ற பாக்கியம். சின்ன வயசுல இடதுசாரி இயக்கத்துல சேர்ந்தப்போ, சமுதாயத்துல ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கணும்கிற கனவுலதான் சேர்ந்தேன். சாதி, மதம், பணப் பாகுபாடுக்கு எதிரா ஒரு புரட்சியைப் பண்ணணும்கிற வெறி அப்போ. காலப்போக்குல இயக்கம் நீர்த்துப்போக நான் அதுலேர்ந்து வெளியேறிட்டேன்; ஆனா, புஸ்தகம் கொடுக்குறேன் பார்க்குறீங்களா, அதுல நான் விரும்புன மாற்றத்தை நேர்ல பார்க்குறேன். வெயில்லேயும் மழையிலேயும் வேர்க்க விறுவிறுக்க சைக்கிள் மிதிச்சு சுமந்துகொண்டுபோய்க் கொடுக்குற எல்லாக் கஷ்டமும் ‘தாத்தா போனவாட்டி கொடுத்த புஸ்தகத்தைப் படிச்சுட்டேன் தாத்தா; நல்லா இருந்துச்சு’னு சொல்ற ஒரு வாக்கியத்துலயோ, ‘அடுத்த முறை எப்போ தாத்தா வருவீங்க’னு கேட்குற ஒரு வாக்கியத்துலேயோ போய்டும். புஸ்தகம் சமுதாயத்தைத் திருத்த ஒரு வலுவான அகிம்சா ஆயுதம்னு சொல்வாங்க; என்னால முடிஞ்ச அளவுக்கு அந்த ஆயுதம் எல்லோர் கையிலேயும் கிடைக்க நான் உழைக்கணும். அவ்வளவுதான்.”
– சைக்கிளை வேகமாக மிதிக்க ஆரம்பிக்கிறார் சிகப்புச் சட்டை தாத்தா!
No comments:
Post a Comment