1947க்கு பின், இந்தியாவின் தலைமை முற்றிலுமாகத் தவறாக வழிநடத்தப்பட்டு, சோஷலிச சிந்தனை எனும் தவறான திருப்பத்தை எடுத்தது. ஆங்கிலேயர்களிடம் இருந்த அதிகாரத்தை முழுதாக எடுத்துக்கொண்ட ஒரு விஷயத்தில்தான் இந்தியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர்கள் மிகச்சரியாக நடந்துகொண்டார்கள்.
ஆனால், நாட்டை உருவாக்கும் பணிக்கு நுணுக்கம் தேவைப்பட்ட பல துறைகளில், பெரும்பாலும் அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக இல்லை.
அந்த அரசியல் தலைவர்கள் பெரும் கூட்டங்களைக் கூட்டுவதில் வல்லவர்களாக இருந்தாலும், அந்தக் கூட்டங்களை நாட்டை உருவாக்கும் பணியில் கூட்டுறவோடு செயல்பட வைப்பது எப்படி என்பதைத் தெரிந்திருக்கவில்லை. நாட்டை உருவாக்கும் பணிக்கு ஒரு மாறுபட்ட திறன் தொகுப்பு வேண்டும். ஆனால் அவர்கள் விஷயத்தில் அது இல்லாமல் போனது. அந்த அரசியல்வாதிகள் தங்களிடம் தேவையான நிபுணத்துவம் இல்லை என்பதைக் கூட உணராமல் இருந்ததுதான் கொடுமையான விஷயம்.
முன்னேற்றம் பாதிப்பு ஏன்:
அதே காலக்கட்டத்தில் பிற நாடுகள் அதிவேகமாக முன்னேறிக் கொண்டிருந்தன. இந்தியத் தலைவர்கள் செய்திருக்க வேண்டியது இதுதான். எப்படி ஏனையோர் அவர்கள் முன்னேற்ற நிரலில் முன்னேறி வருகின்றனர் என்பதைக் கண்டு, அதிலிருந்து கற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் நம் தலைவர்கள் அதைச் செய்ய மறுத்தனர். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு உள்ள அளவுக்கு மீறிய இறுமாப்பும், அறியாமையும் ஒரு ஆற்றல் வாய்ந்த அழிவுக் கலவை; அது உறுதியான பேரழிவுக்கான செயல்முறை.
'தன்னிறைவு' கொள்கை:
இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக, பொதுவாக விஷய ஞானம் அற்றவர்களாக இருந்ததால், தங்கள் தலைமை செய்த தவறுகளை சரியான முறையில் புரிந்துகொள்ளவில்லை. மக்கள் தங்கள் அரசியல் தலைவர்கள் மீது அபாரமான நம்பிக்கை வைத்து இருந்தனர்; அந்தத் தலைவர்களும், கேள்வியே கேட்காத மக்களின் நம்பிக்கையில் குளிர்காய்ந்து வந்தனர். மக்களும், அரசாங்கம் தங்களின் நலனைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றுள்ள, தரும சிந்தனை வாய்ந்த அமைப்பு என்ற பொதுவான அனுமானத்தில் இருந்தனர். அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையேயான உறவு ஆள்பவருக்கும், ஆளப்படுவோருக்கும் இடையில் இருப்பதைப் போன்று இருந்தது.
'அம்மா அப்பா' அரசாங்கம்:
அரசாங்கம், தன் குடிமக்களைப் பொறுப்பற்ற, முதிர்ச்சி பெறாத குழந்தைகளைப் போல நடத்தி வந்தது. எதை, எப்போது செய்ய வேண்டும் என்று மக்கள் வழிநடத்தப்பட வேண்டியவர்கள் என்ற அளவில் வைத்து இருந்தது. பதிலுக்கு, மக்களும் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் சலுகைகளை எதிர்பார்த்துக் கையேந்தி நின்றனர். அரசாங்கத்திடம் இருந்து அதிக அளவில் சலுகைகள் பெறுவதற்கு, மக்கள் சாதி மத அடிப்படையில் குழுக்களை அமைத்து, உரிமைகளுக்காகப் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர்.
ஓட்டு வங்கி சக்தி
அரசாங்கம் பலம் வாய்ந்ததாக இருந்தாலும் அது ஒரு ஒட்டுண்ணியாகவே இருந்தது. அது செல்வங்களை உருவாக்கவில்லை. மாறாக, வரியாக வசூலித்ததின் ஒரு பகுதியை தான் விழுங்கி, சிலவற்றைப் பொது விஷயங்களுக்கும், சிலவற்றை அரசியல் ஆதாயங்களுக்காக மறுவிநியோகம் செய்தும் வந்தது. கூடவே, கடுமையாகக் கடன் வாங்கி, பெரும் கடன் சுமைக்குள் வீழ்ந்து, இறுதியாக வரி செலுத்தும் மக்கள் அந்தக் கடன்களை அடைக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியது.
வரி போன இடம்:
பொதுவாக, ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் பட்சத்தில், பிரித்து விநியோகம் செய்யும் கடமை அரசாங்கத்துக்கு உண்டு. ஆனால், வெறுமனே பிரித்து விநியோகம் செய்வதை மட்டும் தொழிலாகச் செய்து, வளங்களின் உருவாக்கத்துக்குத் தேவையான உதவியை உதாசீனப்படுத்தி, உழைத்துச் செலுத்தும் வரியின் பெரும் பகுதியை வேலை செய்யாமல் இருப்பவர்களுக்குத் தூக்கிக் கொடுப்பதாக அரசாங்கம் இருப்பதால், உழைப்புக்கு அவ்வளவாக பெரிய சன்மானம் ஒன்றும் இல்லை என்பதை மக்கள் காலப்போக்கில் கண்டுகொள்கின்றனர். இப்படி இருக்கும்போது, மக்களின் ஊக்கம் அரசாங்கத்திடம் இருந்து சலுகைகள் பெற அதிக முயற்சியாக செலவிடப்பட்டு, வளங்களை உருவாக்கத் தேவையான உழைப்புக்கு நேரம் குறைந்து போகிறது.
நடுத்தர வர்க்கத்தின் நிலை:
இன்னொரு பக்கத்தில் இருக்கும் ஏழைகள் கண்டிப்பாக மாற்றத்தை விரும்புவார்கள் என்றாலும், தினசரி வாழ்வுக்கு ஓயாது பாடுபட வேண்டிய நிலையில் உள்ளனர். அப்படி இருக்க, தொலைநோக்கில் தங்களுக்கு நன்மையைக் கொண்டுவரப்போகும் மாற்றத்தை ஏற்படுத்த அவர்களால் முடியாது. அன்றாட வாழ்க்கைகான போராட்டம் காரணமாக அவர்களால் குறுகிய நோக்கோடு மட்டும்தான் சிந்தித்துச் செயல்பட முடியும்.
நடுத்தர வர்க்கமே, மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான கல்வியையும், வழிமுறைகளையும் கொண்டது. அவர்களே அதிகமாக நசுக்கப்படுபர்கள். செயல்படாத அரசாங்கத்தின் அழுத்தத்தைக் கூர்மையாக உணர்பவர்கள். பெரும்பாலும் நல்ல மாற்றம் என்பது, கல்வியறிவு பெற்ற நடுத்தர வர்க்கம் மாற்றத்தைக் உருவாக்க வெளியே காலடி எடுத்துவைக்கும் போதுதான் நடக்கிறது.
No comments:
Post a Comment