சமையல் செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுப்பது ஒரு கலை.
ஆனால், இந்தக் காலத்தில் பெண்கள், ஆண்களுக்கு இணையாக, ஏன், அவர்களுக்கும்
மேலாக அலுவலகங்களில் சென்று பணியாற்றுகின்றனர். இதனால், அவர்களுக்கும்
விதம் விதமான உணவினைத் தயாரிப்பது குறித்துக் கற்றுக் கொள்ள நேரம்
இருப்பதில்லை. தங்கள் மகள்களுக்குக் கற்றுக் கொடுக்கவும்,
பழக்கப்படுத்தவும் முன் வருவதில்லை.
இதனாலேயே பல இணைய தளங்களில் உணவு
தயாரிக்கும் முறையினை (Recipe) வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு இணைய தளத்திலும்
ஒவ்வொரு வகையான உணவுகளைப் பட்டியலிட்டு அவற்றைத் தயாரிக்கும் முறையை
விளக்கியுள்ளனர். அனைத்து தமிழ் உணவுகளையும், அவற்றைத் தயாரிக்கும் முறையையும் அறிந்து கொள்ள எந்த இணைய தளம் செல்லலாம் என்று தேடினால், அனைத்தும் ஒரே தளத்தில் இல்லை என்றே சொல்லலாம். ஆனால், ஒருவர் தமிழ் உணவு பற்றிக் கூறும் தளம் அனைத்தையும் தேடி, அவற்றைப் பட்டியலிட்டு, அந்த தளங்களுக்கான லிங்க் அனைத்தையும் தன் வலைமனையில் தந்துள்ளார். அந்த தளத்தின் முகவரி http://tamilcuisine.blogspot.in/. இந்த வலைமனைத் தளத்தில் நுழைந்தவுடன் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவது இதன் வகைகள் தான்.
இடை இடையே சாப்பிட குழி பணியாரம், ஊத்தப்பம், வட கறி, புட்டு, அழகர் தோசை என 23 உணவுப் பண்டங்கள், அடுத்து சாதம் வகைகள் 13, கூட்டு வகைகள் 15, குழம்பு வகை 26, சாம்பார் ரசம் வகை 16, பொரியல், வறுவல் 27, முட்டை வகை 6, மீன் வகை 13, ஆட்டுக் கறி உணவு வகை 16, கோழிக் கறி உணவு 14, உணவிற்குப் பின் குடிக்க தாளிச்ச மோரில் தொடங்கி வெட்டி வேர் பானம் வரை 8 வகை பானங்கள், சட்னி, பொடி, ஊறுகாய் என ஒரு தொகுப்பு 24, இனிப்பு வகை 46, நொறுக்குத் தீனி 21 என விதம் விதமாய் உணவு வகைகளுக்கான லிங்க் தரப்பட்டுள்ளன. இவற்றில் கிளிக் செய்தால், நமக்கு அந்த தளங்கள் திறக்கப்பட்டு இவற்றைத் தயாரிக்கத் தேவையான பொருட்கள், முறை ஆகியன விளக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் அவ்வப்போது புதிய வகைகளும் இணைக்கப்பட்டு, எவை புதியவை எனவும் காட்டப்படுகின்றன.
அனைத்தையும் நாம் டவுண்லோட் செய்து ஒரு சிடியில் போட்டு, திருமணமாகி வெளிநாட்டுக்குச் செல்லும் நம் மகளிடம் கொடுத்து விடலாம். திருமணம் செய்திடாமல் தானே சமைத்து சாப்பிட திட்டமிடும் உங்கள் மகனிடமும் அந்த சிடியைக் கொடுக்கலாம். அல்லது இந்த தளம் குறித்த தகவலை அனுப்பலாம். என்ன ரெடியா? முதலில் நீங்கள் இவற்றைப் படித்து, உணவினைத் தயார் செய்து, உண்டு ருசித்து மற்றவருக்கும் பரிந்துரை செய்திடுங்கள்.
No comments:
Post a Comment