இந்தியாவின் இரும்பு மனுஷி இந்திரா காந்தி தன் காவலர்களாலே சுட்டுக் கொல்லப்பட்ட தினம் அக்டோபர் 31.
அடிப்படையில் பஞ்சாபி மொழி பேசும் மக்களை தனி மாநிலமாக அறிவிக்கவேண்டும் என்கிற கோரிக்கையோடு வலுப்பெற்றது சிரோன்மணி அகாலிதளம்; அதை நீர்க்கச் செய்ய பஞ்சாப் மாநிலத்தை மூன்றாகப் பிரித்து ஹரியானா, பஞ்சாப் மற்றும் இரண்டுக்கும் பொதுவாக சண்டிகரை வைத்தார் இந்திரா. இத்தனைக்குப் பிறகும் பஞ்சாபில் சிரோன்மணி அகாலிதளம் காங்கிரசின் வசமிருந்த ஆட்சியை எமெர்ஜென்சி காலத்துக்குப் பின்கைப்பற்றிக்கொண்டது.
அவர்களை ஒடுக்க, காலிஸ்தான் என்கிற (புனித பூமி என அர்த்தம் ) தனி நாடு கேட்ட பிந்தரன்வாலே கூட்டத்துக்கு ஆதரவும், உதவியும் அளித்தார் இந்திரா. அவர்கள் இயக்கம் ‘காலிஸ்தான் தேசிய முன்னணி’யை இந்திராவை சந்தித்த பின் உருவாக்கியது; நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் காலிஸ்தான் உருவாக்க விளம்பரம் கொடுத்து பல மில்லியன் டாலர் நிதி திரட்டினார்கள். ஜக்ஜித் நாராயண் என்கிற காங்கிரஸ் தலைவரை கொலை செய்த வழக்கில் பிந்தரன்வாலே கைது செய்யப்பட்டதும், இந்திராவுடன் தொடர்பை முறித்துக்கொண்டு பொற்கோயிலில் ஆயுதங்களோடு தங்களை வலுப்படுத்திக் கொண்டார்கள் ‘காலிஸ்தான்’கேட்டவர்கள்.
அங்கங்கே அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். வரிகள் வசூல் செய்தார்கள்; தனி அரசாங்கமே நடந்தது.பொற்கோயில் உள்ளே போன ஜனாதிபதியின் காதை குண்டு உரசிக்கொண்டு போனது. ‘வேறு வழியே இல்லை’ என்கிற நிலையில் ராணுவம் உள்ளே புகுந்தது. ‘ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்’ மூலம் பலர் பேர் கொல்லப்பட்டார்கள். பொற்கோயில் ரத்தபூமிஆனது.
இந்திராவின் பாதுகாப்புக்காக இரண்டு சீக்கிய வீரர்கள் இருந்தார்கள்; அப்போதைய பாதுகாப்பு மந்திரி ஒய்.பி சவான் அவர்கள் “இருவரையும் மாற்றி விடலாமா?”என்றார். “நாட்டின் இறையாண்மை மீது இந்த நாட்டின் பிரதமர் எனக்கேநம்பிக்கை இல்லை என்றால் எப்படி சவான் ?” என மறுத்துவிட்டார் இந்திரா; அவர்கள் இருவரும் சந்திக்காதவாறு தடுத்தார் சவான். எனினும் இந்திராவை 1984, அக்டோபர் 31 அன்று குண்டுகள் துளைத்தன.
அதற்குப்பின் டெல்லி முழுக்க ரேசன் கார்டை வைத்துக்கொண்டு தேடித்தேடி சீக்கியர்கள் பலர் கொல்லபட்டார்கள். இந்திரா இறுதி ஊர்வலத்தில் அவரின் மரணத்துக்கு பழி வாங்குவோம் என்று எழுந்த கோஷத்தை மீண்டும் மீண்டும் அரசு தொலைக்காட்சி காட்டியது. “பழுத்த மரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும்!” என்றார் பிரதமர் ராஜீவ். அரசாங்க மையங்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தன.
இந்திரா மறையும் முன்னர் கலந்து கொண்ட கூட்டத்தில், “I am alive today, I may not be there tomorrow. I shall continue to serve till my last breath and when I die every drop of my blood will strengthen India and keep a united India alive.” என்றார். இந்திராவின் மரணம், அவரின் ரத்தத்தை மட்டுமல்ல, எளியவர்களின் ரத்தத்தையும் சேர்த்தே சிந்தச்செய்தது !
No comments:
Post a Comment