மதச் சடங்குப் புகையால் உருகும் இமய மலைப்பாறைகள்.
மதச் சடங்குகளின்போது வெளியேறும் கரியமில வாயு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் புவி வெப்பமடைதலுக்கு காரணமாக அமைந்துள்ளன. அதன் காரணமாக இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருகின்றன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
காற்று மாசுபடுவதற்கு இந்தியா, நேபாளம் உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் மேற்கொள்ளப்படும் மதச் சடங்குகளின்போது வெளிப்படும் புகையும் ஒரு காரணம் என்று நீண்ட நாள்களாக சூழலியலாளர்களிடையே கருத்து நிலவி வந்தது.
இது தொடர்பாக அமெரிக்காவின் நெவாடா பாலைவன ஆய்வு மையமும், சத்தீஸ்கரின் பண்டிட் ரவிசங்கர் சுக்லா பல்கலைக்கழகமும் இணைந்து ஆய்வு நடத்தியது. அதில், புதை படிம எரிபொருளை மனிதன் எரிக்கும்போது வெளியாகும் வாயுக்களின் மூலம் காற்று மாசுபடுவதற்கான துகள்கள் அதிகளவில் வெளியாகின்றன. இது ஒட்டுமொத்த காற்று மாசுபாட்டுக்கான காரணிகளில் 23 சதவீதமாகும். புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய விரைவில் ஆவியாகும் தன்மையுடைய கரிமச் சேர்மங்கள், இந்த புதைப் படிம எரிபொருளில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
மதச் சடங்குகள்
இந்துக்களின் திருமணத்தின்போது செய்யப்படும் ஹோமம், இறுதிச் சடங்கின்போது சடலத்தை எரியூட்டுவதால் வெளியேறும் வாயு, முஸ்லிம், புத்த மதத்தினர், தங்களின் வழிபாட்டுத் தலத்தில் பத்தியை கொளுத்துதல் போன்றவற்றால் காற்று மண்டலத்தில் கலக்கும் கரியமல வாயு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் குறித்து 2011 2012 வரை ஆய்வு செய்யப்பட்டது.
சடலத்தை எரியூட்டும்போது, அதிகளவில் பழுப்பு கார்பன் ஏரோஸெல் வாயுக்கள் வெளியாவதாக தெரியவந்துள்ளது. இந்த வாயுக்கள் புவி வெப்பமயமாதலுக்கு காரணிகளாக உள்ளன. இவை சூரிய வெப்பத்தை தன்னுள் ஈர்த்து, அதிக அளவு வெப்பத்தை வெளியிடுகின்றன.
இதனால், இமயமலை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து பனிப்பாறைகள் உருகுகின்றன.
இது குறித்து ஆய்வாளர் ஷம்ஸ் பர்வேஸ் கூறுகையில், “2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மட்டும் 30 லட்சம் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. ஆண்டுக்கு 1 கோடி திருமணங்கள் நடைபெறுகின்றன.
எனவே, மதச் சடங்குகளின்போது உருவாகும் வாயுக்களின் அளவு நாம் நினைத்துப் பார்க்காத அளவுக்கு மிகவும் அதிகம் என்பதை உணர வேண்டும்” என்றார்.
No comments:
Post a Comment