Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, October 28, 2013

நபி(ஸல்) அவர்களின் இறுதிப்பேருரை

நபி(ஸல்) அவர்கள் புனித மதினா நகர் விட்டு திருமக்கா நகர் நோக்கி ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொண்டார்கள். பெருமா நபியவர்களுடன் ஒரு லட்சத்து இருபத்தி நாலாயிரம் தோழர்களும் ஒன்று சேர்ந்து பயணம் செய்தார்கள். இதுவே பூமான் நபியின் இறுதி ஹஜ்ஜாகும். மக்காவுக்கருகிலுள்ள  ஹஜ் பூர்த்தியாகும்– உங்கள் வேண்டுதல்கள் யாவும் மறை போற்றும் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும்
அரபாத் மைதானத்தில் — முத்திரை பதித்த முத்துரை தந்த முத்து முஹம்மது நபி ( ஸல் ) அவர்கள் ஆற்றிய பேருரை  மண்ணக வரலாற்றில் பொறிக்கப்பட்டப் பொன்னெழுத்துக்கள். அந்த விளக்கவுரை… தமிழ் வடிவை இங்கே தருகிறேன்.
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே.
அவனையே துதிக்கின்றோம்,
அவனிடமே மன்னிப்புக் கோருகின்றோம்.
அவனிடமே நாம் திரும்ப இருக்கின்றோம்.
நம் தீமைகளிலிருந்தும் நாம் செய்கின்ற காரியங்களில் ஏற்படுகின்ற தீங்குகளிலிருந்தும் அவனிடமே பாதுகாவல் தேடுகின்றோம்.
அல்லாஹ் நேர்வழிப்படுத்துகின்ற எவரையும் வழி கெடுக்க இயலாது. அல்லாஹ் நேர்வழிப்படுத்தாத எவரையும் நேர்வழிப்படுத்திடவும் முடியாது.
நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை.
அவன் ஒருவனே, அவனுக்கு இணையேதுமில்லை,
அகில உலகங்கள் ஆட்சி அவனுக்கே உரியது,
அனைத்து புகழும் அவனுக்கே உரியது.
உயிர் கொடுப்பவனும் அவனே, உயிர் எடுப்பவனும் அவனே.
அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்துபவனும் அவனே.
நிச்சயமாக அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லவே இல்லை. அவன் ஒருவனே.
அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியவனும் அவனே,
பகைக்கூட்ட மனத்தையும் இல்லாமலாக்கியவனும் அவனே.
அவனே அவனின் அடியாருக்கு வெற்றியை நல்கினான்.
மனிதர்களே !
என் வார்த்தைகளை செவி தாழ்த்திக் கொள்ளுங்கள். ஏனெனில் இதே இடத்தில் உங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என நான் எண்ணவில்லை.
இது எந்த நாள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது தியாகத்துக்குரிய புனித நாள்.( யவ்முல் நக்ர்) .
இது எந்த மாதம் என்பது உங்களுக்கு தெரியுமா? இது புனிதமிக்க (துல்கஜ்) மாதம்.
இது எத்தகைய இடம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது புனிதமிக்க ( மக்கா ) நகர்.
இந்த நாளைப் போன்றே, இந்த மாதத்தைப் போன்றே இந்த நகரத்தைப் போன்றே– உங்கள் உயிரும் உங்கள் உடமையும் உங்களுக்கு புனிதமானவை.
ஏ ! மனிதர்களே !
நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர் ஒருவர் மற்றவரைப் புரிந்து கொள்ளும் பொருட்டு உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்.உங்களில் எவர் மிகவும் பய பக்தி உள்ளவராக இருக்கின்றார்களோ அவர்கள்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக்க கண்ணியவான் என்று அல்லாஹ் கூறுகிறான்.எனவே
ஓர் அரபி ஓர் அரபி அல்லாதவனை விட உயர்ந்தவன் அல்லன்:
ஓர் அரபி அல்லாதவன் ஓர் அரபியை விட உயர்ந்தவனும் அல்லன்: ஒரு வெள்ளையன் ஒரு கறுப்பனைவிட உயர்ந்தவனும் அல்லன்:
ஒரு கறுப்பன் ஒரு வெள்ளையனைவிட உயர்ந்தவனும் அல்லன்: மனிதனுக்குள்ள உயர்வெல்லாம் அவனின் இறை பக்தியை பொறுத்தே அமைந்திருக்கிறது.
மனித சமுதாயம் அனைத்தும் ஆதமுடைய சந்ததிகளே. ஆதமோ மண்ணிலிருந்து படைக்கப்பட்டவர். எனவே பிறப்பு, நிறம், சொத்து ஆகியவற்றால் எவரும் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்லர். நீங்கள் உங்கள் இறைவனிடத்திலே உங்கள் செயல்களுக்காக பதில் கூற வெண்டியவர்களாக இருக்கிறீர்கள். நான் அவனுடைய கட்டளைகளை உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டேன்.
பிறருக்குரிய பொருளை அமானிதமாக பெற்றுக்கொண்டிருப்பவர்கள் அப்பொருள்களுக்குரியவர்களிடம் அதனை சேர்த்துவிட வேண்டும். வட்டிக்காக கொடுக்கப்பட்டவை ரத்து செய்யப்படுகிறது. ஆனால் உங்கள் மூலதனம் உங்களுக்குரியதே.
நீங்கள் பிறருக்கு அநீதி இழைக்க வேண்டாம். உங்களுக்கும் அநீதி இழைக்கப்படவேண்டாம்.
அறியாமைக் காலத்தின் பழக்க வழக்கங்கள் என் காலடியில் அழிக்கப்படுகின்றன.
அறியாமைக் காலத்தின் இரத்தப்பழி ரத்து செய்யப்பட்டுவிட்டது.
முதன் முதலாக எங்களை சார்ந்த ராபியா பின் காரிஸ் உடைய கொலைக்காக பழி வாங்குவதை நான் மன்னித்துவிட்டேன்.
ஒருவர் செய்யும் குற்றத்திற்கு இன்னொருவர் பொறுப்பாக மாட்டார். பிள்ளை செய்த குற்றத்திற்கு பெற்றோர் பொறுப்பாக மாட்டார். பெற்றோர் செய்த குற்றத்திற்கு பிள்ளை பொறுப்பாக மாட்டார். அறியாமை காலத்தின் வட்டிப்பழக்கம் (முழுவதும் ) தடை செய்யப்பட்டுவிட்டது.
முதலாவதாக எங்களின் குடும்பத்தைச் சார்ந்த அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபுக்கு சேர வேண்டிய வட்டித்தொகை முழுவதும் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
மனிதர்களே!
பெண்களுடன் உறவாடுவது பற்றி அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு சில உரிமைகள் உண்டு. அவ்வாறே அவர்களுக்கும் உங்கள் மீது சில உரிமைகள் உண்டு. உங்கள் மனைவிகளை அன்புடனும் சாந்தத்துடனும் நடத்துங்கள். கற்பைப் பேணி, பணிவுடன் நடந்து கொள்வது அவர்கள் கடமை. தம்பதியானோர் வேறொருவருடன் தகாத உறவு கொண்டால் கல்லால் அடிக்கப்பட வேண்டும். கணவனின் உடமையிலிருந்து அவனுடைய அனுமதி இன்றி யாருக்கும் எதையும் கொடுப்பதற்க்கு மனைவிக்கு உரிமை கிடையாது.உங்கள் வாரிசு யாரென்றும் அவர்களுக்குரிய பங்கு எவ்வளவு என்றும் அல்லாஹ் கூறி இருப்பதே உங்களுக்குப் போதுமானது. இதற்கு நீங்கள் மாறு செய்யாதீர்கள்.
உங்கள் அடிமைகள் உங்களிடத்தில் அல்லாஹ்வின் பொறுப்பாக இருக்கின்றார்கள்.
அவர்களை நல்லவிதமாக நடத்துங்கள்.
நீங்கள் எதை உண்ணுகிறீர்களோ அதையே அவர்களுக்கும் உண்ணக்கொடுங்கள்.
நீங்கள் உடுத்துவதைப் போன்றே அவர்களுக்கும் உடுத்துங்கள். கடன்களைத் திருப்பித் தந்து விடுங்கள்.
அன்பளிப்புகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளுங்கள்.
கடன் கொடுத்தவரின் இழப்பிற்கு ஜாமீன் ஏற்றவரே பொறுப்பாவார். எனக்குப்பின் நீங்கள் வழி தவறி விடாதீர்கள்.
உங்களுக்குள் ஒருவருக்கொருவர் சண்டை இட்டுக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வினுடைய சட்டத்தை உங்கள் மத்தியில் நீதமாக நிலை நிறுத்தக்கூடிய தலைவராக ஒரு மூக்கறுபட்ட அபிசீனிய அடிமை நியமிக்கப்பட்டாலும் அவருக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளுங்கள்.
மனிதர்களே!
உங்கள் மார்க்கத்தின் வரம்பு முறைகளை மீறி நடக்காதீர்கள். அப்படி மீறியதால்தான் உங்களுக்கு முன்னுள்ள பல சமுதாயங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. மனிதர்களே! இந்த பூமியில் தன்னுடைய அதிகாரத்தை மீண்டும் நிலை நிறுத்தும் எண்ணத்தை ஷைத்தான் இன்று இழந்துவிட்டான். என்றாலும் அற்ப விசயங்களில் கூட நீங்கள் அவனை பின் பற்றினால் அது அவனுக்கு மகிழ்ச்சியளிக்கும். எனவே உங்கள் விசுவாசத்திலே அவனைப்பற்றி எச்சரிக்கையாய் இருங்கள்.
மனிதர்களே!
என்னுடைய உபதேசங்களை நன்றாகக் கேளுங்கள். நான் என்னுடைய செய்தியை உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டேன். உங்களிடையே அல்லாஹ்வுடைய வேதத்தையும் மார்க்கக் கடமைகளில் என் வழியையும் விட்டுச் செல்கிறேன். அவற்றைக் கடைப் பிடிக்கும்வரையில் நீங்கள் வழி தவற மாட்டீர்கள்.
மனிதர்களே!
நான் கூறுவதை உள்ளத்தில் பதித்துக்கொள்ளுங்கள்.
ஒரு முஸ்லீம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரர்.
எல்லோரும் ஒரே சமத்துவ – சகோதரத்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதை நன்கறிந்து கொள்ளுங்கள்.
ஒருவர் மனமார அளிப்பதைத் தவிர — வேறெந்த முறையிலும் பிறருடைய பொருளை அடைவது தடுக்கப்பட்டுள்ளது.
ஒருவர் மற்றொருவர் உரிமையை பறிக்கக்கூடாது.
மனிதர்களே!
நீங்கள் நன்றாக செவி தாழ்த்திக்கேளுங்கள்.
அல்லாஹ்வை நம்புங்கள்.
தினமும் ஐந்து வேளை தொழுது வாருங்கள்.
ரமலான் மாதத்தில் நோன்பு வையுங்கள்.
உங்கள் சொத்தின் மீதான ஜக்காத் என்னும் ஏழை வரியை தயங்காமல் வழங்கி வாருங்கள்.
அல்லாஹ்வுடைய இல்லத்திற்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளுங்கள். உங்களின் ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்ளுங்கள். இதனால் அல்லாஹ்வுடைய சுவனபதியில் நீங்கள் நுழைவீர்கள்.
இங்கே உள்ளவர்கள் இங்கே இல்லாதவர்களுக்கு இச்செய்தியை அறிவியுங்கள். கேட்பவர்கள் இங்குள்ளோரைவிட தங்கள் உள்ளத்தில் இச்செய்திக்கு சிறப்பான இடமளிக்கக் கூடுமன்றோ? இவ்வாறு பேசி முடித்த பெருமானார் அவர்கள் விண்ணை நோக்கித் தம் கைகளை உயர்த்தி, ‘ என் இறைவனே!’  நான் என் தூதுத்துவத்தை எடுத்துரைத்துவிட்டேனா? என்று கேட்க, கூடியிருந்த மக்கள் அனைவரும் ஒரே குரலில் தாங்கள் எடுத்துரைத்துவிட்டீர்கள் என்று பதில் கூறினார்கள்.  இறைவனே! ‘ நீயே இதற்கு சாட்சி ‘ என்ற வார்த்தைகளுடன் பெருமானார் அவர்கள் தம் சொற்பொழிவை முடித்தார்கள்.
இலக்கணங்களும் இலக்கியங்களும் இலட்சியங்களும் இலட்சங்களுக்காக மிக விவரமாக பேசப்படுகின்ற இன்றைய கணியுகக் கால கட்டத்திலே,
ஒருபுறம் பசி! மறுபுறம் பட்டினி!!
பாவி மக்களை வாட்டி வதைக்கத்தான் செய்கிறது!!!
இத்தரை மீதினில் முத்திரை பதித்த பத்தரை மாற்றுத் சுத்தத்  தங்கம் ஹாத்தமுன் நபியின் விவேகமான அருள் சுரந்த பொருள் பொதிந்த வாழ்க்கை நெறிமுறைகள் நம்கண்முன் பரந்து கிடக்கின்ற போதும், கூர்முனை முறிந்த நிலையில் அல்லவா நமது சமுதாயத்தின் எதிர்காலம் மழுங்கி மங்கலான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது!
கல்வியைக் கூட கனிவாக முடிக்காமல் மீதியைத் தேடி பாதியில் ஓடும் என் இளைய சமுதாயமே!
பாலை நில உச்சி வெயிலில் உஷ்ணத் தாக்குதலில் வெந்து – நொந்து நொறுங்கும் என் இனிய சமுதாயமே!
சமுதாயக் கண்களாம் பெண்களைக் கசக்கிக் காசாக்கும் வரதட்சணை வலையில் வரிந்தாடும் ஆண்மகனே !
சின்னத்திரை சாயத்தால்  வண்ணத்திரை மாயத்தால் கூட்டணி போற்றும் ஒட்டுண்ணி அரசியல்  குடுகுடுப்பைக்காரர்களின் திக்குத் தெரியாத மாய வலையில்  சிக்கிச் சிதறித்  தவிக்கும் என்னினமே!
நீங்கள் பிறருக்கு அநீதி இழைக்க வேண்டாம் என்பதல்லவா பெருமானாரின் அன்பான வாக்கு! நம்மில் எத்தனை பேர் இதைப் பின்பற்றுகிறோம்?
அண்ணலெம் பெருமானார் அவர்கள் வட்டி ரத்து செய்யப்பட்டதாக எடுத்துரைத்தார்களே! இதையாவது நம்மால் செய்ய முடிகிறதா?
பிறர் பொருளை அமானிதமாக வாங்கிக்கொண்டு திருப்பிக் கொடுக்கின்றோமா?.
பழிக்குப்பழி வாங்குவதை விட்டோமா?
அறியாமைக் கால மூடப்பழக்கங்கள் அண்ணலார் காலத்திலே அழிக்கப்பட்டுவிட்டனவே! ஆனால் இப்பொது என்ன நடக்கிறது உலகத்திலே?
மனைவிமார்களை எப்படி கண்ணியமாக நடத்த வெண்டும் என்று கண்ணிய சீலர் எடுத்துரைத்தார்களே! இங்கே நாம் காணும் பெண்கள் அவலநிலை என்ன? கல்லடியும் சொல்லடியும் அல்லவா தினம் தினம் அவர்கள் பட்டுக்கொண்டிருக்கிறார்கள்!.
உங்களுக்குள் ஒருவருக்கொருவர் சண்டை இட்டுக் கொள்ளாதீர்கள் என்பதல்லவா பெருமானார் வாக்கு!
தலைமைக்குக் கட்டுப்படுகிறோமா?
முஸ்லிமும் இன்னொரு முஸ்லிமும் சகோதரனல்லவா? சமத்துவமும் சகோதரத்துவத்தையும் ஏன் காண முடியவில்லை? எங்கே?
உபகார குணம் குன்றி அபகார குணம் குன்றுபோல் தலைனிமிர்ந்து நிற்கிறதே!
ஐவேளை தொழுகை, ரமழான் நோன்பு, ஏழைவரி எனும் ஜக்காத், முறையான ஹஜ் நிறைவேற்றினோமா?
கண்ணினும் கண்ணான இஸ்லாமியக் கண்மணியே!
நீ யார்?– நீ கற்று வந்த பாடம் என்ன?– உன் உன்னத பின்னணி என்ன?— உன் பரம்பரை பாரம்பரியம் என்ன?— உன் சமுதாயத்துக்கு நீ என்ன செய்தாய்?— என்பதை சிந்தித்து செயலாற்ற வேண்டிய கால கட்டமல்லவா இது !
அறியாது நின்றவர்கள்– ஒன்றுமே தெரியாது நின்றவர்களெல்லாம் இன்று இமயத்தின் உச்சியில் ஏறி நின்று உன்னைப்பார்த்து எள்ளி நகையாடுகிறார்களே!
உன் பாட்டனாரிடம் இடுப்பில் துண்டுகட்டி- கைகட்டி ஏவலாளிகளாய் நின்றவர்களின் மக்கள் உனக்கு இன்று முதலாளிகள்!இல்லையா?இதை எப்படி உன்னால் பொறுத்துக்கொள்ள முடிகிறது ? ஜீரணித்துக்கொள்ள முடிகிறது? இடையிலே என்ன தவறு நடந்தது?
கோடி கோடியாகக் கொட்டப்பட்டு கருவாக்கி உருவாக்கப்பட்டக் கல்விச் சாலைகள் உனக்காக வாவாவென்று வாஞ்சையோடு அழைத்தும் நீ அதனை உதறித் தள்ளிவிட்டு கிழக்குக்கும் மேற்குக்கும் பறந்து கொண்டிருக்கிறாயே!
தேக்குமர உடலும் தினவெடுத்த தோளும் வீறுகொண்ட நெஞ்சும் மிளிருகின்ற நண்பனே!
மது, மாது, சூதுவாது, கூட்டுவட்டி, லஞ்ச லாவண்யம்,                    கண்கவர் கல(ர்)ப்படம், பெண் வீட்டுக்கு வர தட்சணையாய் சீதனம், பொய் புழுகு, பொறாமை, பகைமை, கொல்லும் கோள், வசைபாடும் வஞ்சகம்– இவை எதுவுமே இல்லாத அண்ணல் நபியின் அமுத மொழிகள் வழிகாட்டும் தூய சமுதாயம் படைத்திட ஆர்ப்பரிக்கும் அலையென அசைந்தாடி ஓடிவா! வறுமையின் மடியிலே வாடுகின்ற ஏழைகள் வயிற்றுப்பசித் தீர்க்க வாஞ்சையோடு நாடிவா!
உள்ளொளிகாட்டிடும் உயர்மறையின் உயரிலக்கணத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டிய அண்ணல் நபி நாயகத்தின்  தேமதுர நெறிமொழிகள் வாயிலாக அழகிய வழிகாட்டுதலைப் பெற்றிருக்கும் நாம் அவர்கள் தொட்டு விட்டுச்சென்ற உயரிய வழிமுறைகளை அடிதொடர்ந்து ஒழுகி இம்மையிலும் மறுமையிலும் நல்பேற்றினை பெற்றிட எல்லார்க்கும் பொதுவான எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருள் நம்மீதும் நம் சமுதாயத்தின் மீதும் என்றும் நின்று நிலவாட்டுமாக ! ஆமீன் !!!
நபிமணி சொன்ன, நெறிமுறை என்ன?
நாழும் பேணுவோம்! நன்மை நாடுவோம்!
இந்த புவிமீதிலே!! இந்த வான் மீதிலே !!!

No comments:

Post a Comment