உத்திரமேரூர்:சாலவாக்கம் அருகே உள்ள கைத்தண்டலம் கிராமத்தில், 370 வகையான மூலிகை மரங்களை பயிரிட்டுள்ளார் ஒரு விவசாயி.
உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் அடுத்துள்ளது ஒழையூர் ஊராட்சி. இவ்வூராட்சிக்கு உட்பட்ட கைத்தண்டலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மாசிலா மணி. 5 ஏக்கர் நிலத்தை பக்குவப்படுத்தி, எழில்சோலை என்ற பெயரில், கடந்த 2009ம் ஆண்டில், பல வகை மூலிகை செடிகளை பயிரிட துவங்கினார்.
வளர்ப்பு:
தற்போது மூலிகை மரங்கள், நட்சத்திர மரங்கள், கல்விக்கூடங்களில் வளர்க்கப்படும் நிழல் தரும் மரங்கள் மற்றும் செர்ரி உள்ளிட்ட பல்வேறு வித பழவகை மரங்களும், வாசனை பொருட்களுக்கு பயன்படுத்தப் படும் மர வகைகளையும் வளர்த்து வருகிறார்.பாரிஜாதம், பவளமல்லி, மனோரஞ்சுதம், செண்பக பூ போன்ற மலர் செடி வகைகளும், வெற்றிலை, பாக்கு, காப்பி உள்ளிட்ட செடி வகைகளும், இத்தோட்டத்தில் வளர்க்கப் படுகிறது.மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகள் இத்தோட்டத்தில் நிறைந்துள்ளதால், இப்பகுதியை சுற்றி பல ஏக்கரில் விவசாய நிலங்களில், பூச்சித்தாக்குதல் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் இத்தோட்டத்தில் உள்ள அரிய வகை மரங்களை ஆவலோடு வந்து பார்த்து செல்கின்றனர்.
மாசிலாமணி கூறியதாவது:சாதாரண விவசாயியாக இருந்த நான், 2007ம் ஆண்டு மரம் வளர்ப்போர் சங்கத்தின் மாவட்ட தலைவராக, வனத்துறையின் மூலம் தேர்வு செய்யப்பட்டேன். அப்போது, விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களில் மரக்கன்றுகள் நட ஊக்குவித்து வந்தோம். இதனால் முன்மாதிரி விவசாயியாக இருக்க தீர்மானித்து கலப்பிணை பண்ணை உருவாக்கி, அதில் அரிய வகை மரங்களை வளர்த்து வருகிறேன்.இத்தோட்டத்தில், சந்தனம், செஞ்சந்தனம், வேங்கை, வில்வம், மகாவில்வம், வன்னி, பதிமுகம், நாகலிங்கம், ரோசொட்டு, சிசுமரம், மகிழம்மரம் உள்ளிட்டவைகளும், ஆப்பிள், உத்திராட்ச மரம், போதிமரம், திருவோடு உள்ளிட்ட அரிய வகை மரங்களும் உள்ளன.இதே போன்று, கருந்துளசி, காட்டாமணக்கு, கடல் அத்தி, கருநொச்சி, வாகநாரம், கருந்தொண்ணை, கல்யாணமுருங்கை, வெள்ளருக்கு, திருவாட்சி, கோதகத்தி, புன்னை, இளமஞ்சு போன்ற பல்வேறு மருத்துவ குணம் கொண்ட செடிவகைகளையும் மரங்களையும் வளர்த்து வருகிறேன்.
கூடுகட்டி...:
மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, திருமண விழாக்களில் அன்பளிப்பாகவும், பள்ளிகள் மற்றும் கோவில்களுக்கு இலவசமாகவும் கொடுக்கிறேன். செர்ரி, புதுவைபலா உள்ளிட்ட மரங்கள் உள்ளதால் பல வகையான பறவைகள் தோட்டத்திற்க்குள் வந்து கூடு கட்டி வாழ்கின்றன. தற்போது, இங்கு 370 வகையான மர வகைகள் உள்ளன. இன்னும், 3 ஆண்டுகளுக்குள், 1000 வகையான மரங்களை இத்தோட்டத்தில் உற்பத்தி செய்ய உள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment