Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, November 17, 2013

தொடாமலே மின்சாதனங்களை இயக்கும் நவீன சுவிட்ச்


கையால் தொடாமலேயே மின்சாதனங்களை இயங்கச் செய்யும் புதுமையான சுவிட்சை கண்டுபிடித்துள்ளார் கிராமத்து பொறியாளர் ஹரிராம்சந்தர். இவர் வடிவமைத்துள்ள இந்த டச்லெஸ் சுவிட்ச், இன்பிரா ரெட் (அகச்சிவப்பு கதிர்) தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.

இளம் பொறியாளர்
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அம்பலவாணபுரத்தைச் சேர்ந்த இளம் பொறியாளர் ஹரிராம்சந்தர். 23 வயதாகும் இந்த பி.டெக். (எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன்) பட்டதாரிக்கு பள்ளியில் படிக்கின்ற காலம்தொட்டே விஞ்ஞானத்தின் மீது ஓர் ஈர்ப்பு. இத்தனைக்கும் அவரது பெற்றோர் ஒன்றும் படித்தவர்கள் கிடையாது. அவரது மறைந்த தந்தை முருகன், சாதாரண மில் தொழிலாளிதான். தாயார் முத்துலட்சுமி வீட்டை கவனித்து வருகிறார்.
“விளையும் பயிர் முளையிலேயே தெரியும்” என்பதற்கேற்ப பள்ளியில் படிக்கின்ற காலத்திலேயே சிறு சிறு அறிவியல் சாதனங்களை வடிவமைக்க தொடங்கினார். பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில் கலந்துகொண்டு மாநில அளவில் 2-ம் இடத்தையும் வென்றார். பிளஸ்-2 படித்தபோது செல்போன் ரீ சார்ஜ் கூப்பன் முறையில் மின்சாரத்தை பயன்படுத்தக் கூடிய புதுமையான கார்டை கண்டுபிடித்து சாதனை படைத்தார்.
முயற்சிகள் தோற்பதில்லை
அறிவியல் மீதான அவரது தாகம் பள்ளிப் படிப்புடன் தணிந்து போய்விடவில்லை. சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் பி.டெக். (எலெக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ரூ மென்டேஷன்) சேர்ந்தபோது ஆர்வம் இன்னும் அதிகரிக்க அதற்கான சரியான தளமும் அவருக்கு அங்கு கிடைத்தது.
பேராசிரியர்கள், பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஆதரவு காரணமாக முழு ஆய்வு முயற்சியில் இறங்கினார் ஹரிராம்சந்தர். அவர் சிந்திய வியர்வைக்கு வெற்றிகிடைக்காமல் இல்லை. இரண்டாம் ஆண்டு படித்தபோது, தண்டவாளத்தில் விரிசலை கண்டுபிடிக்கும் நவீன கருவியை உருவாக்கினார். தண்டவாளத்தில் எங்கேயாவது விரிசல் இருந்தால் ரயிலின் டிரைவருக்கும், தகவல் மையத்துக்கும் எச்சரிக்கை அனுப்பக் கூடியது இந்த நவீன சாதனம்.
டச்லெஸ் சுவிட்ச்
இப்படியே புதுப்புது அறிவியல் சாதனங்களை உருவாக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்த அவரது பார்வை சுவிட்ச் பக்கம் திரும்பி யது. அறிவியல் சாதனங்களும் புதிய பரிமாணம் பெற வேண்டும் என்பது இவரது அடிப்படைச் சிந்தனை. ஈரக்கையோடு மின்விளக்கு, மின்விசிறி, மிக்சி போன்ற மின் சாதனங்களுக்கான சுவிட்ச்களை போடும் போது சில நேரம் ஷாக் அடிக்கலாம்.
சுவிட்ச் மீது கை படாமல் அதை இயக்கினால் என்ன? ஹரிராம்சந்தரின் மனதில் சிந்தனை பிறக்க, அந்த சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் முயற்சியில் இறங்கினார். முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்தது. கையால் தொடாமலேயே மின் சாதனங்களை இயக்கும் நவீன சுவிட்சை (டச்லெஸ் சுவிட்ச்) கண்டுபிடித்திருக்கிறார். இது குறித்து இளம் விஞ்ஞானி ஹரிராம்சந்தர் கூறியதாவது:
புதிய தொழில்நுட்பம்
இன்பிரா-ரெட் எனப்படும் அகச்சிவப்பு கதிர் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது இந்த சாதனம். இந்த சுவிட்சின் மேல்புறம் 2 செ.மீ. அல்லது 5 செ.மீ. தூரத்தில் இரு விரல்களை காட்டினால் போதும். சுவிட்ச் ஆன் ஆகிவிடும்.
சுவிட்சில் பொருத்தப்பட்டுள்ள டிரான்ஸ்மிட்டரில் இருந்து வெளிவரும் அகச்சிவப்பு கதிர்கள் விரல் பகுதி வரை வந்து பின்னர் கீழே திரும்பும். அதை அங்கு உள்ள ரிசீவர் பெற்றுக்கொண்டு சுவிட்சை இயக்கிவிடும். பயோ-மெட்ரிக் போன்று முன்கூட்டியே விரல் பதிவை பதிவுசெய்யத் தேவையில்லை. யாருடைய விரல்களைக் காட்டினாலும் சுவிட்ச் இயங்கும்.
200 ரூபாய்க்கு வாங்கலாம்
ஈரக்கையோடு சுவிட்சை போடும்போது நேரிடும் மின்சார ஷாக் பற்றிய அச்சம் இனி தேவையில்லை. சாதாரணமாக நாம் பார்க்கும் சுவிட்ச் வடிவங்கள் என்றில்லாமல் விருப்பமான ஓர் உருவமாக வடிவமைத்தும் பயன்படுத்தலாம்.
சாதாரண சுவிட்சுகளுடன் ஒப்பிடும்போது இது மிகக்குறைந்த அளவே மின்சாரத்தை எடுக்கும். தற்போது இது போன்ற சுவிட்சுகள் சந்தையில் ரூ.6 ஆயிரம் அளவுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. நான் கண்டுபிடித்துள்ள டச்லெஸ் சுவிட்சை வெறும் ரூ.200-க்கு விற்க முடியும். சுவிட்ச் தயாரிப்பு துறையில் இந்த புதிய சுவிட்ச் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.
தொடரும் ஆராய்ச்சிகள்
இந்த நவீன சுவிட்சை வணிக ரீதியில் தயாரிப்பதற்கு ரூ.1 கோடி செலவில் தொழிற்சாலை அமைக்க சென்னையைச் சேர்ந்த சரோஜ் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் ஹரிராம்சந்தர் மகிழ்ச்சி பொங்க கூறினார். தற்போது அவர் மதுரவாயல் டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக பணிபுரிந்து வருகிறார்.
பூமி வெப்பமாவதை தடுக்கும் தொழில்நுட்பம், மனதின் எண்ண ஓட்டத்தை கொண்டு பொருட்களை இயங்கச் செய்வது (மைன்ட்ஆபரேடிங் சிஸ்டம்), தண்ணீர் தேவையுள்ள தாவரங்கள் செல்போனில் அழைக்கும் தேர்டுசென்ஸ் ஆப் பிளானெட், கழுத்து உடையாமல் தடுக்கக்கூடிய அட்வான்ஸ்டு புல்லட்புரூப் ஹெல்மெட் என விரிந்து கொண்டிருக்கிறது ஹரிராம்சந்தரின் ஆராய்ச்சிகள். சமூக பிரச்சினைகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக தீர்வு காண வேண்டும். ஆப்பிள், கூகுள் போன்று மிகப்பெரிய நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பது இவரின் லட்சியம்.

No comments:

Post a Comment