இன்றைய உலகில் நாம் பல டிஜிட்டல் சாதனங்களையே நம்பி இருக்கிறோம். அவை இயங்காமல் போனால், உடனே நம் அன்றாடப் பணிகள் முடங்கிப் போகின்றன. இதனாலேயே இதற்கு மின் இணைப்பு தருவதிலும், அவற்றைச் சீராக வைத்துக் கொள்வதிலும் நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. நம் கம்ப்யூட்டருக்கான மின்சக்தி தரும் சாதனங்களை எப்படி, எந்த வகையில் அமைத்து இயக்க வேண்டும் என இங்கு காணலாம். அவற்றின் மூலம் கிடைக்கும் மின்சக்தியின் தன்மை குறித்தும் சில விவரங்களை இங்கு பார்ப்போம்.
ஸ்பைக்ஸ், சர்ஜஸ் என்பவை எதைக் குறிக்கின்றன?
டிஜிட்டல் சாதனங்களுக்கு வரும் மின்சாரம் சீராக இருக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட வழக்கமான வோல்டேஜ் அளவை விட்டு அதிகமாக இருந்தால் அது அதிக வோல்டேஜ் (Over Voltage) ஆகும். அதுபோல் வோல்டேஜ் அளவு குறைவாக வருவது குறைவான வோல்டேஜ் (Under Voltage) ஆகும்.
அதிக வோல்டேஜ் பிரிவில் ஸ்பைக்கும், சர்ஜும் வருகின்றன. இந்த இரண்டுக்கும் இடையே சிறு வேறுபாடு உண்டு. மிக அதிக வோல்டேஜ் திடீரென வந்து உடனடியாக மறைந்து போவதை ஸ்பைக் என அழைக்கிறார்கள். Impulse என்றும் இதைக் குறிப்பிடலாம். மிக அதிக வோல்டேஜ் சற்று அதிகமான நேரம் (பொதுவாக நொடியில் 1/20 பங்கு) இருந்தால் அதை சர்ஜ் எனக் குறிப்பிடுகின்றனர்.
வோல்டேஜ் அளவு ஆபத்தான அளவுக்கு, சற்று காலத்திற்கு, குறுகிய நேரத்திற்குக் குறைந்து போவது Brownout ஆகும். Sags என்றும் இதைக் கூறுவார்கள். இதைப் பார்த்துதான் கம்ப்யூட்டர்கள் பயப்பட வேண்டும். சுத்தமாக மின் இணைப்பு துண்டாவதை Blackout எனலாம். எலக்ட்ரோமேக்னடிக் அல்லது ரேடியோ அலை அல்லது வேறு ஏதாவது சிக்னலால் மின் இணைப்பில் இரைச்சல்கள் போன்றவை கலந்து விடலாம். இதை Line Noises என அழைக்கின்றனர். மிகக் குறைந்த நேரத்தில் ஏற்புடைய அளவை விட மிகக் குறைந்த அளவுடன் கூடிய வோல்டேஜ் இதனால் கிடைக்கும்.
பவர் கண்டிஷனிங்: மின்சாரம் எப்போதும் சீராக வரும் என்று சொல்ல முடியாது. ஏற்ற, இறக்கத்துடன், இரைச்சல் போன்றவற்றை சுமந்து கொண்டுதான் மின்சாரம் நமக்குக் கிடைக்கிறது. Spikes, Surges, Brownouts, Blackouts, Noise என்பவை எல்லா சாதனங்களுக்கும், குறிப்பாக கம்ப்யூட்டர்களுக்கு கேடு விளைவிப்பவை. இவை இல்லாமல் சீரான மின்சாரத்தை வழங்க சில சாதனங்கள் உள்ளன. அவை கொடுக்கிற பாதுகாப்பை Power Conditioning அதாவது மின்சாரத்தை நிலைப்படுத்துதல் எனக் குறிப்பிடுகின்றனர்.
பவர் கண்டிஷனிங் செய்ய என்ன தேவை?
பவர் கண்டிஷனிங் செய்திட பல சாதனங்கள் நமக்குக் கிடைக்கின்றன. இவை Surge Supressors, Spike Busters, Isolation Transformers, Servo Stabiliser, Constant Voltage Transformers or Uninterruptible Power Supply System என அழைக்கின்றனர். நாம் பயன்படுத்தும் சாதனத்திற் கேற்பவும், நமக்கு மின்சாரம் எப்படி வழங்கப்படுகிறது என்பதற்கேற்பவும் தேவையான சாதனத்தை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
எந்த சாதனம் சிறந்தது?
மேற்படி சாதனங்களுள் சிறந்தது யுபிஎஸ் என்ற Uninterruptable Power Supply சாதனமே. ஸ்பைக், சர்ஜ், பிரவுன்அவுட், பிளாக்அவுட் போன்றவற்றை கையாளும் திறன்பெற்றது இந்த யு.பி.எஸ். ஆகும்.
மின்சாரம் தடைபடும் பொழுது எப்படி யுபிஎஸ்ஸால் மின்சாரத்தை வழங்க முடியும்?
நல்ல கேள்வி. யு.பி.எஸ்.ஸில் பேட்டரி உண்டு. அத்துடன் பேட்டரி சார்ஜர் மற்றும் இன்வெர்ட்டர் ஆகியவையும் யு.பி.எஸ். ஸில் உண்டு. பேட்டரியில் இருந்து வெளியாகிற Direct Current மின்சாரத்தை கம்ப்யூட்டருக்குத் தேவையான Alternating Current மின்சாரமாக மாற்றுகிற வேலையை இன்வெர்ட்டர் செய்கிறது. வழக்கமான மின் இணைப்பு தடைப்பட்டவுடன்,பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர் மூலம் இதனால் கம்ப்யூட்டருக்கு மின்சாரம் கிடைக்கிறது.
பேட்டரி தனது சக்தியை இழந்தால் என்ன செய்ய?
மின் இணைப்பு துண்டானவுடன், கம்ப்யூட்டருக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் பொறுப்பு பேட்டரியின் மேல் விழுகிறது. மின்சக்தியைத் தரத் தொடங்கும் பேட்டரி கொஞ்சம் கொஞ்சமாக தனது மின்சக்தியை இழந்து கொண்டிருக்கும். இந்த நேரத்தில் வழக்கமான மின்சாரம் வந்துவிட்டால் கவலையில்லை. யுபிஎஸ்ஸில் உள்ள பேட்டரி சார்ஜர், பேட்டரியை சார்ஜ் செய்ய ஆரம்பித்து விடும்.
மின் இணைப்பு துண்டாகி, பேட்டரியினால் கம்ப்யூட்டர் இயங்கி கொண்டிருக்கிறது. வழக்கமான மின் இணைப்பு இன்னும் வரவில்லை என வைத்துக் கொள்வோம். குறிப்பிட்ட அளவுக்கும் கீழ் பேட்டரியின் சக்தி இறங்கி விட்டால், பலத்த ஒலியை எழுப்பி உங்களை யுபிஎஸ் எச்சரிக்கும். அப்போது கம்ப்யூட்டரை ஆப் செய்யுங்கள். யுபிஎஸ்ஸையும் ஆப் செய்யுங்கள்.
எவ்வளவு நேரம் யுபிஎஸ்ஸால் மின் இணைப்பு துண்டான சூழ்நிலையில் தாக்கு பிடிக்க முடியும்?
அது உங்களது யுபிஎஸ்ஸின் பேக்கப் நேரத்தைப் பொறுத்தது. 5 நிமிட பேக்கப் யு.பி.எஸ்.ஸால், மின்சாரம் துண்டான பின்பு 5 நிமிடங்கள் தாக்கு பிடிக்க முடியும். அதிக நேரம் பேக்கப் கொண்ட யுபிஎஸ் என்றால் அதன் விலை சற்று கூடுதலாக இருக்கும். பேட்டரியும் பெரியதாக இருக்கும்.
பேட்டரி நேரம் போக யுபிஎஸ்ஸில் வேறு ஏதாவது கவனிக்க வேண்டிய விஷயம் உள்ளதா?
எவ்வளவு Kilo Volt Ampere திறன் கொண்ட யுபிஎஸ் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு கம்ப்யூட்டருக்கு 0.5கே.வி.ஏ. யுபிஎஸ் போதும். பல கம்ப்யூட்டர்களை யுபிஎஸ்ஸில் இணைப்பதாக இருந்தால் அதிக கேவிஏ கொண்ட யுபிஎஸ்ஸை வாங்க வேண்டும்.
என்ன பேட்டரியைப் பயன்படுத்துகிறார்கள்?
கார்களுக்கு பயன்படுத்துகிற பேட்டரி, லெட்-ஆசிட் பேட்டரி, நிக்கல்-காட்மியம் மற்றும் மூடப்பட்டு பராமரிப்பு தேவையற்ற பேட்டரி எனப் பல வகைகளில் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றுள் மோசமானது கார் பேட்டரி. பெரும்பாலான சிறு யுபிஎஸ்களில் SMF (Sealed Maintenace Free) பேட்டரிகளே பயன்படுத்தப்படுகின்றன. 5 முதல் 7 வருடங்கள் வரை இவை உழைக்கும்.
யு.பி.எஸ். ஸில் பிரிவுகள் உண்டா?
Online, Offline or Line interactive என மூன்று வித யுபிஎஸ்கள் கிடைக்கின்றன. மின் இலாகா வழங்கும் மின்சாரம் நேரடியாக கம்ப்யூட்டருக்கு ஆஃப் லைன் யுபிஎஸ்ஸில் வழங்கப்படுகிறது. மின்சாரம் தடைப்பட்டால் மட்டுமே பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர் மூலம் கம்ப்யூட்டருக்கு சீரான மின்சாரம் செல்லும். மின் இலாகா வழங்கும் மின்சாரம் கிடைத்துக் கொண்டிருந்தாலும், ஆன் லைன் யுபிஎஸ் எப்பொழுதுமே பேட்டரி மற்றும் இன்வெர்ட்டரை சார்ந்தே உள்ளது. இவை வழங்குகிற மின்சாரம் மட்டுமே கம்ப்யூட்டருக்கு அனுப்பப்படும். Ferroresonat Transformer கொண்ட இன்டெராக்டிவ் யுபிஎஸ் சீரான வோல்டேஜை கம்ப்யூட்டருக்கு வழங்கும்.
எது மலிவானது?
ஆஃப்லைன் யுபிஎஸ்தான் மலிவானது. ஆன்லைன் யுபிஎஸ்ஸின் விலை சற்று கூடுதல். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட விலையில் இன்டராக்டிவ் யுபிஎஸ் கிடைக்கும்.
பிரின்டரை யுபிஎஸ்ஸில் இணைக்கலாமா?
யு.பி.எஸ் ஸின் திறன் மற்றும் இணைக்கிற பிரின்டரைப் பொறுத்து இதற்கான விடை உள்ளது. பொதுவாக லேசர் பிரின்டரை யு.பி.எஸ்.ஸில் இணைக்கக் கூடாது. மற்ற பிரின்டர்களை இணைக்கலாம். ஆனால் உங்களிடம் அதிக கே.வி.ஏ. கொண்ட யுபிஎஸ் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment