படித்துக் கொண்டே பார்ட்டைமில் ரூ.40 ஆயிரம்!
விபத்துக்குப் பின்னே விஸ்வரூப வெற்றி...நம்பிக்கையின் நிஜ உருவம் நிவேதா!
''இன்டர்னல் எக்ஸாம் வருது. ரெண்டு அசைன்மென்ட் வேற இன்னும் சப்மிட்
பண்ணல. புராஜெக்ட் வொர்க்கும் பெண்டிங்ல இருக்கு. டைமே பத்தலப்பா...''
என்று புலம்பல்ஸில் இருக்கும் காலேஜ் கேர்ள்ஸ்... ப்ளீஸ் மீட் மிஸ் நிவேதா!'எக்ஸ்னோரா’வில் பொறுப்பான பணி, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், 'ஈவன்ட் மேனேஜ்மென்ட்’களுக்குச் செல்பவர், வெப் டிசைனர் என நீளுகிறது பட்டியல். இந்த 'பார்ட் டைம்' பணிகளால் மாதத்துக்கு நாற்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார் நிவேதா!
''வாவ்!'' என்ற வார்த்தையில்தான் ஆரம்பித்தது அவருடனான நம் உரையாடல்.
'' 'அதனாலதான் முடியல... இதனாலதான் செய்யல’னு சாக்குகள் கண்டுபிடிக்கற குணத்தை மட்டும் அடிச்சு விரட்டிட்டா, நம்மால... நாம நினைச்சதை கண்டிப்பா சாதிக்க முடியும்!'' என்று எடுத்ததுமே நம்பிக்கை தரும் வார்த்தைகளில் தொடங்கும் நிவேதா, தன்னை வலுவிழக்கச் செய்த ஒரு விபத்தை சாக்காக சொல்லி, சோம்பேறியாக சாயாமல், 'வீழ்வேனென்று நினைத்தாயோ?’ என மீண்டு வந்திருப்பவர் என்பது அவரை மேலும் பெருமையோடு பார்க்க வைக்கிறது!
''அப்பா... ஜார்ஜ் தாமஸ், தடயவியல் துறையில் வேலை செஞ்சு விருப்ப ஓய்வு வாங்கினவர். அம்மா... சரளா, கான்ட்ராக்ட்ஸ் மேனேஜர். அண்ணன் எம். என்.சி. கம்பெனியில ஜெனரல் மேனேஜர். இதுதான் என் குடும்பம். சின்ன வயசுல இருந்தே ஸ்போர்ட்ஸ்ல ரொம்ப ஆர்வம். ஸ்கூல் படிக்கும்போது த்ரோபால், வாலிபால், ஸ்விம்மிங், ஸ்கேட் டிங், டென்னிஸ்னு எல்லா ஸ்போர்ட்ஸ் லயும் பெஸ்ட் பிளேயர். கீ-போர்டு, பரத நாட்டியம்கூட கத்துக்கிட்டேன்.
'ஆல் ரவுண்டர்தான் நீ’னு எல்லாரும் பாராட்டினாலும், என்னோட அடையாளமா நான் பெருமைப்பட்டு சொல்றது, 'டய்க்வாண்டோ'தான் (ஜிணீமீளீஷ்ஷீஸீபீஷீ)! கராத்தே மாதிரியான, கொரிய நாட்டு தற்காப்புக் கலைதான் இந்த 'டய்க்வாண்டோ’. இதுல மாவட்ட அளவுல 28 பதக்கங்கள், மாநில அளவுல 8 பதக்கங்கள், தேசிய அளவுல 2 வெள்ளிப் பதக்கங்கள்னு சாதனை படைச்சிருக்கேன். 'அடுத்து இன்டர்நேஷனல் லெவலுக்கும் முயற்சி பண்ணணும்’னு தீவிரமான பயிற்சியில இறங்கினேன். ஆனா... விதி எனக்குக் கொடுத்த அடி, பயங்கர அதிர்ச்சி!'' என்றவர், அந்தச் சம்பவத்தை பகிரும்போது தளர்கிறது அவர் குரல்.
''அப்போ ப்ளஸ் டூ படிச்சுட்டு இருந்தேன். குடிச்சுட்டு பைக் ஓடிட்டு வந்த ஒருத்தர், என் டூ வீலர் மேல ஒரு வளைவுல மோத, என் வலது தோள்ல ஆழமான அடி. படுத்தபடுக்கை ஆகிட்டேன். 'இனி ஸ்போர்ட்ஸ்ல ஈடுபடக் கூடாது’னு டாக்டர் சொன்னப்போ, நொறுங்கிட்டேன். பப்ளிக் எக்ஸாம் வேற நெருங்கிட்டு இருந்தது. ஓடியாடித் திரிஞ்ச நான் படுக்கையிலயே கிடந்ததால உடம்பும், மனசும் சோர்ந்து போச்சு. அப்போதான், 'உடம்பாலதானே சாதனைகள் பண்ண முடியாது... மூளையை வெச்சு சாதிக்க முடியுமே’னு எனக்கு நானே தெம்பு சொல்லி, மெள்ள எழுந்தேன்'' என்பவர், அந்த எண்ணத்தை அசராத உழைப்பின் மூலம் செயல்படுத்தியிருக்கிறார்.
''எனக்கு நடந்த விபத்தைப் பத்தி ஒரு எச்சரிக்கை கட்டுரையா எழுத, அது எங்க ஸ்கூல் 'ஆண்டு மலர்’ல வெளிவந்துச்சு. 'மனசு நினைக்கறதை தெளிவா, அழகா உன்னால வார்த்தைகள்ல கொடுக்க முடியுது. நீ தொடர்ந்து நிறைய எழுது’னு எங்க பிரின்ஸிபால் ஊக்குவிச்சதுதான் முதல் புள்ளி. தொடர்ந்து, பல பத்திரிகைகளுக்கும் எழுத ஆரம்பிச்சேன். மனசுல இருந்த ஆற்றாமைய எல்லாம்... என் எழுத்து கொஞ்சம் கொஞ்சமா துடைச்சுச்சு.
இதுக்கு இடையில உடம்பும் குணமாக, பிளஸ் டூ-வுல நல்ல மதிப்பெண்களோட தேர்வாகி, இன்ஜினீயரிங் காலேஜ்ல சேர்ந்தேன். இன்னொரு பக்கம் என்னோட எழுத்து ஆர்வமும் தொடர்ந்துச்சு. இதுவரை என்னோட 800 கட்டுரைகள் இன்டர்நேஷனல் இதழ்கள் பலதுலயும் வெளிவந்திருக்கு. அழிந்து வரும் விவசாயம், சுற்றுச்சூழல் கேடு, புற்றுநோயாளிகள், ஊழல்னு அந்தக் கட்டுரைகளுக்கான என்னோட தேடல் எல்லாம், அதுவரை வாழ்க்கையைப் பத்தி எனக்கிருந்த புரிதலை புதுசாக்குச்சு.
'என் வாழ்க்கைக்கான உத்திரவாதமா ஒரு வேலையைத் தேடிக்கறதுக்காக படிக்கற இந்த இன்ஜினீயரிங் படிப்பு எனக்கு வேண்டாம். சமூக முன்னேற்றத்துக்கு என்னாலான பங்களிப்பை தர்ற மாதிரியான வேலைச் செய்யவே எனக்கு விருப்பமா இருக்கு. நான் சோஷியாலஜி படிச்சு, குரூப் ஒன் எக்ஸாம் எழுதறேன்’னு எங்கப்பாகிட்ட கேட்டேன். 'உனக்கென்ன பைத்தியமா?’னு திட்டாம, 'உன்னால முடியும்’னு என்மேல நம்பிக்கை வச்சார் எங்கப்பா. செகண்ட் இயரோட இன்ஜினீயரிங் கோர்ஸுக்கு டாடா சொல்லிட்டு... எம்.ஓ.பி. வைஷ்ணவா காலேஜ்ல பி.ஏ. சோஷியாலஜிக்கு 'ஹாய்’ சொன் னேன்!'' என்றவர்,
''எழுதுறது மட்டுமல்லாம, ஒரு கட்டத்துல சபைகள்ல பேசற ஆர்வமும், துணிவும் எனக்கு வர... பேச்சுப் போட்டிகள்லயும் மாநில, தேசிய அளவுல பரிசுகள் வாங்கினேன். தமிழ், தெலுங்கு, இந்தி, பிரெஞ்சு, இங்கிலீஷ்னு ஐந்து மொழிகள் தெரிஞ்ச எனக்கு, அந்த மொழியறிவு என் எழுத்துலயும், பேச்சுலயும் பலமா இருந்துச்சு. இதுக்கு இடையில தன்னார்வ தொண்டு அமைப்பான 'எக்ஸ்னோரா’ யூத் விங்ல வேலைக்குச் சேர்ந்தேன். நியூஸ் லெட்டர், பிரஸ்மீட்னு அங்க இருக்கற ஏ டு இஸட் வேலைகளை சேவையா பார்த்துட்டு இருக்கேன்'' என்றவர்,
''இன்னொரு பக்கம், 'வெப் டிஸைனிங்’ கோர்ஸ் கத்துக்கிட்டு, பார்ட் டைம் வேலையா பண்ணிக்கிட்டிருக்கேன். தவிர, மேடை நிகழ்ச்சிகள், பொதுநிகழ்ச்சிகளை நடத்தித் தர்ற 'ஈவன்ட் மேனேஜ்மென்ட்’ வேலை பார்க்கறேன். பொதிகை டி.வி-யில 'என்றும் இனிமை’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கறேன். இதை எல்லாம் ஏதோ பொழுதுபோக்கா பண்ணாம, எல்லாத்துலயும் என்னோட பர்ஃபெக்ஷனை நிரூபிக்கறதால... இந்த பார்ட் டைம் வேலைகளால மாசம் 40 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கறேன்! இன்னொரு குட் நியூஸ்... ராஜீவ்காந்தி கொலை வழக்கு பத்தி, அந்த வழக்கை விசாரிச்ச சீனியர் சி.பி.ஐ. ஆபீஸர் ரகோத்தமன் சாரோட வழிகாட்டலோட ஒரு புத்தகம் எழுதியிருக்கேன். அடுத்த மாசம் ரிலீஸ்!'' என்று குஷிபொங்கச் சொன்னார்.
''எனக்கு தினமும் தூக்கம் 5 மணி நேரம்தான். எந்த வேலையும் ஒண்ணோட ஒண்ணு கிளாஷ் ஆகாம பிளான் பண்ணிக்கறேன். விபத்துக்கு முன்னால உடலளவுல மட்டும்தான் சுறுசுறுப்பா இருந்தேன். இப்போ, என் உடல், மூளை, மனசுனு எல்லாமே எனர்ஜெடிக்கா இருக்கு! அதனால, எப்பவுமே பி பாஸிட்டிவ்!''
- 'பளிச்' என வருகின்றன வார்த்தைகள் நிவேதாவிடமிருந்து! அவரிடமிருந்து விடைபெற்ற போது... நம்மிடமும் ஒட்டிக் கொண்டது நூறு சதவிகித சுறுசுறுப்பு!
No comments:
Post a Comment