குற்றாலம் பக்கம் உள்ள ஆய்க்குடி அமர்சேவா சங்கம்
கழுத்திற்கு கீழுள்ள அவயங்கள் செயல்படாத இருபெரும் சக்திகளான ராமகிருஷ்ணன், சங்கரராமன் ஆகியோரை முறையே தலைவராகவும், செயலாளராகவும் கொண்டு செயல்பட்டுவரும் உடல் ஊனமுற்றோரை முன்னேற்றும் மையம்.
இந்த மையத்தில் ஆட்டிசம் என்ற மனவளர்ச்சி பாதித்த குழந்தைகள் துவங்கி உடல் ஊனமுற்றவர்கள் வரை பல்வேறு தரப்பினருக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது.
இந்த மையத்தில் முதுகுதண்டு பாதிப்படைந்தவர்களுக்காக சிறப்பு சிகிச்சை வழங்கப்படுகிறது. மரம் ஏறும் போதும், கட்டட வேலை செய்யும் போதும் தவறி விழுந்த தொழிலாளர்கள்தான் பெரும்பாலும் இங்கு சிகிச்சை பெறுகின்றனர்.
படுத்த படுக்கையாக கிடக்க வேண்டும், சிறுநீர் கழிப்பது மலம் வெளியேற்றுவது கூட இவர்களால் முடியாது. அந்த உணர்வே இல்லாமல் இருப்பார்கள். யாருடைய உதவியோடுதான் இவைகள் நடைபெற வேண்டும். கொசு கடித்தால் கூட பார்த்துக் கொண்டு இருக்க முடியுமே தவிர அடிக்க முடியாது, யாரையாவது கூப்பிட்டுதான் அடிக்கவேண்டும் அல்லது விரட்ட வேண்டும்.
இவர்களுக்கு நீண்ட கால சிகிச்சை தேவை, கொஞ்சம் சோர்ந்து போனாலும் படுக்கை புண் ஏற்பட்டு மரணம் வரை கொண்டு போய்விட்டுவிடும். இதனால் பெரும்பாலும் இறந்துவிடுவதே மேல் என்று எண்ணுவார்கள். அந்த அளவிற்கு நோயின் தன்மை இருக்கும்.
இவர்களுக்கு சிகிச்சை வழங்க தேவையான சிகிச்சை மையங்களும் மிகக்குறைவாகவே உள்ளன. தவிர மிகவும் செலவும் ஆகும். இந்த நிலையில் முதுகு தண்டு வட சிகிச்சையை இலவசமாகவும், சிறப்பாகவும் தருவது அமர் சேவா சங்கம் மட்டுமே.
இதைக் கேள்விப்பட்டு கடந்த வாரம் நேரில் போய் பார்த்த போது அந்த சிகிச்சை மையத்தில் இளைஞர்கள் சிலர் வேரறுந்த மரம் போல பார்க்கவே மிகப்பரிதாபமாக கட்டிலில் விழுந்து கிடந்தனர்.
கண்களையும், கழுத்தையும் அசைத்து அசைத்து தங்களுக்கு ஏற்பட்ட வேதனையான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
அப்போது அவர்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை வழங்கவேண்டிய நேரம், கால்களை பிடித்து மெலிதாக மடக்கி நீட்டவேண்டும், இதே போல விரல்கள் பாதங்கள், கைகள் என்று பொறுமையாக செய்ய வேண்டும்.
யார் இதைச் செய்யப்போகிறார்கள் என்று எண்ணியிருந்த போதுதான் தென்றல் போல அந்த அந்நியநாட்டு பெண் நுழைந்தார்.
பெயர் லாரா.
லண்டனைச் சேர்ந்தவர் அங்குள்ள பிரபலமான மருத்துவமனையில் சீனியர் பிசியோதெரபிஸ்டாக உள்ளார்.
இணையதளத்தில் அமர் சேவா சங்கம் பற்றி படித்து கேள்விப்பட்டு இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக தன் சொந்த செலவில் அடிக்கடி வந்து செல்பவர்.
இளம் வயது, கை, கழுத்து, விரல் என்று எந்த இடத்திலும் எந்தவிதமான அணிகலன்களும் இல்லாத எளிமையான தோற்றம், மற்றும் இனிமையான முகத்துடன் காணப்பட்ட லாரா வளாகத்தில் உள்ள சாதாரண விருந்தினர் விடுதியில் தங்கிக் கொண்டு, பொது சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டு இங்குள்ள நோயாளிகளுக்கு இலவசமாக தொண்டுள்ளத்துடன் சேவை செய்து வருகிறார்.
நீண்ட நாள் தங்கியிருப்பார் போலும் நோயாளிகள் புரிந்து கொள்ளும் வகையில் தட்டுத்தடுமாறி தனக்கு தெரிந்த தமிழிலேயே பேசுகிறார்.
அவர் பேசும் மொழி சில இடங்களில் புரியாவிட்டாலும் அவரது கண்களிலும் முகத்திலும் கொப்புளிக்கும் அன்பு மொழி அனைவருக்கும் புரிகிறது. எந்தவித கூச்சமும், தயக்கமும் இல்லாமல் சொந்த அண்ணன், தம்பியின் காலை பிடிப்பது போல கால், கைகளை பிடித்து பிடித்து பயிற்சி கொடுப்பதை பார்க்கும் போது நெஞ்சம் நிறையவே நெகிழ்ந்தது.
சிரித்த முகத்துடன் ஒவ்வொரு நோயாளிகளிடமும் அவரவர் நோய்த்தன்மைக்கு ஏற்ப சிகிச்சை கொடுத்துவிட்டு கிளம்பும் போது இரண்டு மணி நேரத்திற்கு மேலாகிவிடுகிறது. இது போல அதிகாலை மற்றும் மாலை தேவைப்பட்டால் மதியமும் இவர்தரும் பயிற்சி பெரிதும் பயன்படுவதாக இங்குள்ளவர்கள் நன்றியோடு குறிப்பிட்டனர்.
ஆனால் அந்த நன்றியையோ வேறு எதையுமே எதிர்பார்க்காமல் தான் சார்ந்த மனித சமூகத்திற்கு தனக்கு தெரிந்ததை செய்யும் கடமையாகவே செய்யும் இவர் தனது பெயரை சொல்லக் கூட தயங்கினார்.
இவர்களைப் போல நானும் படுக்கையில் விழுந்து கிடக்க பெரிதாக எதுவும் செய்யவேண்டாம், கட்டிலில் இருந்து புரண்டு படுத்தாலே போதும் ஆனால் அப்படி எல்லாம் இல்லாமல் நல்லபடியாக இருக்கிறேன். அதற்கு நன்றியாக ஆறு மாதகாலம் லண்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கிறேன் பின்னர் அங்கு சம்பாதித்த பணத்தை செலவழித்துக் கொண்டு முறையான அனுமதி பெற்று இங்கு வந்து என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன், இதை தொண்டு என்றெல்லாம் சொல்லி என்னை பெரிய ஆளாக்கிவிடாதீர்கள் இது எனது கடமை.
யாராவது ஸ்பான்சர் செசய்தால் மட்டுமே பக்கத்து ஊர் மருத்துவ முகாமிற்கு செல்லும் "தொண்டுள்ளம்' கொண்டவர்களை பார்த்த நமக்கு இப்படி நாடுவிட்டு நாடுவந்து தொண்டு செய்யும் லாரா ஒரு ஆச்சர்யமாகவேபட்டார். உங்களுக்கு...
No comments:
Post a Comment