2013ல் தமிழகம்... ஜெயேந்திரர் விடுதலை, திமுக- காங். உறவு முறிவு, அம்மா உணவகம் மற்றும் மின்வெட்டு!
சென்னை: காஞ்சி சங்கராச்சாரியார்களுக்கு சங்கரராமன் கொலையிலிருந்து கிடைத்த விடுதலை, இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாடு, அம்மா உணவகம் முதல் குடிநீர் வரையிலான தமிழக அரசின் அதிரடித் திட்டங்கள்.. மறக்க முடியாத மின்வெட்டு .. 2013ம் ஆண்டில் தமிழகத்தைக் கலக்கிய முக்கிய நிகழ்வுகளில் சில இவை. தமிழகம் முழுவதும் வரலாறு காணாத அளவில் அதிமுக முதல் திமுக வரை அத்தனைக் கட்சிகளும் ஒரே குரலில் மத்திய அரசை நிர்ப்பந்தித்த காரணத்தால், இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவிலிருந்து பின்வாங்கினார் பிரதமர் மன்மோகன் சிங். அதேபோல பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட அத்தனை பேரையும் விடுவித்து புதுச்சேரி நீதிமன்றம் பரபரப்பை ஏற்படுத்தியது.
2013ல் தமிழகம் எப்படி இருந்தது...திரும்பிப் பார்க்கலாம்
சங்கராச்சாரியார் விடுதலை
9 ஆண்டு கால சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயசேந்திரர் உள்ளிட்ட 21 பேரும் அதிரடியாக விடுதலையானார்கள். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை காவல்துறை சரியான முறையில் நிரூபிக்கவில்லை என்று புதுச்சேரி கோர்ட் தெரிவித்தது. நவம்பர் 27ம் தேதி இந்தத் தீர்ப்பு வெளியானது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு ...
கெஜட்டில் தமிழக காவிரிப் பாசன விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கெஜட்டில் வெளியிட்டது மத்திய அரசு.
மரக்காணத்தில் ஜாதி மோதல்...
மரக்காணத்தில் நடந்த ஜாதி மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஜாதி மோதலில் சில உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பாமக தலைவர்கள் அடுத்தடுத்துக் கைது செய்யப்பட்டதால் வட தமிழகம் பரபரப்பானது.
புத்தூரில் நடந்த பரபரப்பு என்கவுண்டர்
சிபிசிஐடி போலீஸார் தமிழகத்திலும், ஆந்திர மாநிலம் புத்தூரிலும் நடத்திய பரபரப்பு என்கவுண்டர் சம்பங்களால் சலசலப்பு ஏற்பட்டது. இதில் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகிய முக்கிய குற்றவாளிகள் பிடிபட்டனர். ஆனால் போலீஸ் பக்ருதீன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட விதம், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்ச்சைகளும் வெடிக்கத் தவறவில்லை.
காங்கிரஸ் உறவை முறித்த திமுக
காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்துக் கொண்டது திமுக. வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது என்றும் திமுக அறிவித்து விட்டது. மார்ச் மாதத்தில் திமுக, காங்கிரஸ் உறவு முடிவுக்கு வந்தது.
சொந்த மண்ணில் மண்ணைக் கவ்விய ஆனந்த்
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் நடந்தன. அதில் மண்ணின் மைந்தரான விஸ்வநாதன் ஆனந்த், நார்வே நாட்டு இளம் வீரர் மாக்னஸ் கார்ல்சனிடம் தோற்றுப் போய் பரிதாபமாக வீழ்ந்தார்.
தனி ஈழம்.. ஐ.நா. வாக்கெடுப்பு கோரி தீர்மானம்
அதேபோல இந்த ஆண்டு நடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின்போது இலங்கையை நட்பு நாடாக இந்திய அரசு கருதக் கூடாது, இலங்கைத் தமிழர்களுக்கு தனித் தாயகம் அமைப்பது தொடர்பாக ஐநா. பொது வாக்கெடுப்பை நடத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா.
நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் கடத்தல்
வழக்கம்போல இந்த ஆண்டும் ஏராளமான தமிழக மீனவர்களைக் கடத்திக் கொண்டு போனது இலங்கை கடற்படை. 200க்கும் மேற்பட்ட மீனவர்களை அது கடத்திக் கொண்டு போய் சிறை வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்க கப்பல் சிக்கியது
அக்டோபர் 12ம் தேதி தூத்துக்குடி அருகே எம்.வி. சீமன் கார்ட் ஓஹியோ என்ற அமெரிக்காவுக்குச் சொந்தமான கப்பலை பறிமுதல் செய்தனர் அதிகாரிகள். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதில் இருந்த 35 ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்திய சினிமா நூற்றாண்டு விழா
தமிழக அரசின் சார்பில் சென்னையில் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. ஆனால் அதில் முக்கியக் கலைஞர்கள் அவமதிக்கப்பட்டதாகவும், புறக்கணிக்கப்பட்டதாகவும் சர்ச்சை வெடித்து சலசலப்பை ஏற்படுத்தியது.
மீண்டும் விஸ்வரூபம் எடுத்த மின்வெட்டு
இந்த ஆண்டிலும் மின்வெட்டு பெரும் பூதாகரமாக வெடி்துக் கிளம்பியது. தமிழகம் முழுவதும் பல மணி நேர மின்வெட்டு மீண்டும் திரும்பியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
செயல்படத் தொடங்கிய கூடங்குளம்
பெரும் சர்ச்சைகள், பரபரப்புகள், போராட்டங்கள், எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதலாவது பிரிவு தனது செயல்பாட்டைத் தொடங்கியது.
எனக்குப் பின் ஸ்டாலின்.. கருணாநிதி பரபரப்பு அறிவிப்பு
இந்த ஆண்டுதான் திமுக தலைவர் கருணாநிதி தனது அரசியல் வாரிசு யார் என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தினார். எனக்குப் பின் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின்தான் வருவார் என்பதை கோடிட்டுக் காட்டி திமுக தலைவர் கருணாநிதி பேசிய பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய கருணாநிதி இப்படித் தெரிவித்தார்.
அறுத்து.. மீண்டும் நிறுத்தப்பட்ட அண்ணா ஆர்ச்
மறைந்த எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் பிரமாண்டமாகவும், கம்பீரமாகவும் கட்டப்பட்ட சென்னை அண்ணா நகர், அண்ணா வளைவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. முன்னதாக இந்த ஆர்ச்சை அறுத்து அகற்ற முயன்றனர். ஆனால் அது முடியாமல் போனதால், அதை கைவிட்டு விட்டு புதுப்பித்து மீண்டும் திறந்தது அரசு.
ராமதாஸுக்கு அடுத்தடுத்துத் தடை
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து சாதி சங்கங்களின் கூட்டத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஏற்பாடு செய்ததைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த மாவட்டத்துக்குள் ராமதாஸ் உள்ளிட்ட சாதி சங்கத் தலைவர்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது. அதேபோல மதுரைக்குள்ளும் அவர் நுழைய தடை விதிக்கப்பட்டது.
விரக்தியில் ரிடையர்ட் ஆன பண்ருட்டி ராமச்சந்திரன்
அதேபோல, தேமுதிகவின் அவைத் தலைவராக இருந்து வந்த பண்ருட்டி ராமச்சந்திரன், அரசியலுக்கும், தேமுதிகவுக்கும் ஒரேயடியாக தலை முழுகி விட்டுப் போய் விட்டார்.
No comments:
Post a Comment