சென்னை மாதிரியான பெரு நகரங்களில் கடற்கரை, பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் சந்தித்துப் பேசுவதை இன்றைய இளைய தலைமுறையினர் விரும்புவதில்லை. தனிமையையும் கட்டற்ற சுதந்திரத்தையும் விரும்பும் இன்றைய தலைமுறையினருக்கு இம்மாதிரியான பொதுவெளிகள் ஒருவிதமான அசெளகர்யத்தையே கொடுத்துவந்துள்ளது.
மனதாரப் பேசிக்கொள்ள இதுவரை இருந்துவந்த வெற்றிடத்தைப் போக்க சில ஆண்டுகளுக்கு வந்தவையே காஃபி ஷாப்புகள். இப்போது நண்பர்கள், காதலர்கள் என யாராக இருந்தாலும் உட்கார்ந்து மணிக் கணக்கில் ஆத்மார்த்தமாகப் பேசிக்கொள்ளும் இடங்களாக காபி ஷாப்கள் மாறி வருகின்றன.
சென்னையில் மட்டும் காபி ஷாப்கள், காபி டே, காபி கபே சிறியது பெரியது என சுமார் 500 கடைகள் இருக்கின்றன. எங்கேயாவது ஒரு இடத்தில் தினந்தோறும் காபி ஷாப்கள் முளைத்து கொண்டே இருக்கவும் செய்கின்றன. சூரிய உதயம் ஆரம்பிக்கும் பொழுதில் தொடங்கப்படும் காபி ஷாப்கள் இரவு 11 மணி வரை தாண்டியும் பரபரப்பாகவே காட்சியளிக்கின்றன.
கண்களைப் பறிக்காத விளக்குகள், செவிக்கு இன்பம் தரும் மெல்லிய இசை, நாசியை வருடும் வாசனை, மேஜையை அலங்கரிக்கும் பூக்கள், மூலைக்கு மூலை மேஜை சேர்கள் – இதுதான் காபி ஷாப்களின் உள் அலங்காரங்கள். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம், ஒரு காபியோ, கூல் டிரிங்க்ஸோ வாங்கி விட்டு எவ்வளவு மணி நேரம் ஆனாலும் அரட்டை அடிக்கலாம். அன்னியர்களின் பிரவேசம் கிடையாது, உறுத்தலான பார்வைகள் கிடையாது. போலீஸ் வருவார்களோ என்ற பயம் கிடையாது. அவரவர் வேலையில் தடங்கல்கள் என்ற பேச்சுக்கெல்லாம் காபி ஷாப்களில் இடமில்லை.
இவ்வளவு தனிமை தரும் இங்கு செல்ல வேண்டுமானால், நம் பாக்கெட்டுகளில் காந்தித் தாத்தா பளிச்செனச் சிரிக்க வேண்டும். சாதாரண நாயர் கடை காபிக்கு 10 ரூபாய் இருந்தால் போதும். பெரிய ஓட்டல்கள் என்றால் சில பத்து ரூபாய்கள் வேண்டும். ஆனால், இதுபோன்ற காபி ஷாப்கள் என்றால் நூறுகளில் பணம் வேண்டும். கும்பகோணம் டிகிரி காபி முதல் கோல்டு காபி வரை வகை வகையாக காபிகள் கிடைக்கும். அப்படியே லஞ்ச், டின்னர் முடிக்க உணவு வகைகள், ஜூஸ்கள், பீட்சா, பர்க்கர் என நொறுக்குத் தீனிகளுக்கும் பஞ்சம் கிடையாது.
குறைந்த விலையில் காபி, ஜூஸ், உணவுகள் எத்தனையோ ஒட்டல்களில் கிடைத்தாலும் நிறைய பணம் வசூலிக்கும் காபி ஷாப்புகளுக்கு ஏன் வர வேண்டும்? இதற்கு ஒரே காரணம் தனிமை. இங்கு கிடைக்கும் தனிமை காரணமாகவே நண்பர்கள், காதலர்கள் காபி ஷாப் வர ஆர்வம் காட்டுகிறார்கள். யுவன், யுவதிகளும் காபி ஷாப்களுக்கு வருவதைச் சமூக அந்தஸ்தின் குறியீடாகவும் நினைக்கிறார்கள்.
அது மட்டுமா..? பிசினஸ் டீலிங் முடிக்கவும் இன்று நிறைய தொழிலதிபர்கள் நாடி வருவது காபி ஷாப்களைத்தான்.
இப்படி ஒரு தரப்பினரின் காபி ஷாப்களின் மோகம் காரணமாக இத்தொழில் இன்று லாபகரமாகவும் மாறி விட்டது. ‘‘இன்றைக்கு காபி ஷாப்புக்கு 20 – 30 வயதுக்குட்பட்டவர்களே அதிகம் வருகின்றனர். பெரிய ஓட்டல்கள் எல்லாம் மிகவும் காஸ்ட்லியாகி விட்டது. பட்ஜெட்டுக்கு ஏற்ற இடமாக இருப்பதால்தான் இளைஞர்களும், இளம் பெண்களும் இங்கு வருகின்றனர். நம் சேவையில் திருப்தி இருந்தால் மட்டுமே வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் வருவார்கள். இல்லையென்றால் வர மாட்டார்கள். முக்கியமாகத் தனிமைக்காகவே இங்கு வருகிறார்கள். பெரிய ஓட்டல்களில் பிரைவேசி சாத்தியம் இல்லை. அடிக்கடி வந்தால், ஏன் வருகிறார்கள் என்று ஆராயத் தொடங்கி விடுவார்கள். பிசினஸ் டீலிங் மட்டுமல்ல, இன்று கல்யாண டீலிங் கூட காபி ஷாப்களில் நடக்கின்றன. மாப்பிள்ளை, பெண் வீட்டார் மட்டும் வந்து பேசி, உணவு உண்டு இங்கேயே கல்யாண தேதியைக்கூட முடிவு செய்துவிட்டு போகிறார்கள். காபி ஷாப் என்பது சென்னையில் தவிர்க்க முடியாததாகிவிட்டது ’’ என்கிறார் சென்னை ஆழ்வார்பேட்டையில் கடந்த 5 ஆண்டுகளாக் காபி ஷாப் நடத்தி வரும் மன்சி.
ஜாலியான அனுபவம்
காபி ஷாப்புக்குச் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் சென்னையைச் சேர்ந்த சரண்யா என்ன சொல்கிறார்?
காபி ஷாப் செல்வது என்றாலே மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளும். லைட் மியூசிக், மைல்டான லைட்டிங் எல்லாமே நமக்கு ஜாலியான அனுபவத்தைக் கொடுக்கும். ஆபிஸ், வேலை எல்லாவற்றையும் மறந்து நண்பர்களோடு காபி ஷாப் போகும்போது அங்கு கிடைக்கும் அனுபவமே தனிதான். மாலை நேரங்களில் ஒரு ஓட்டலுக்குச் சென்று காபி குடிக்கும்போதே, அந்த மேஜையை ஆக்கிரமிக்க நம் அருகிலேயே சிலர் வந்து நிற்பார்கள். இதனால் நம் தனிமைகூடப் பாதிக்கும். அதனாலேயே உடனடியாக அந்த இடத்தை நாம் காலி செய்ய வேண்டிய நிலை வரலாம்.
ஆனால், காபி ஷாப்பில் நிலைமை அப்படி இல்லை. இங்கு வந்தால் நம் வீட்டில் ஒரு பாதுகாப்புடன் இருப்பது போன்ற உணர்வு வந்துவிடும். நண்பர்களுக்குள் பிரச்சினை என்றாலும் சரி, குடும்பப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, இங்கு உட்கார்ந்து பேசிச் சென்றால், எல்லாமே சுபம்தான் என்கிறார் இவர்.
No comments:
Post a Comment