பீகாரில் உள்ள ரோட்டாஸ் மாவட்டத்தில் உள்ள சென்டுவர் கிராம விவசாயிகள் இம்முறை பெய்த மழையால் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் இம்மழையில் தங்கமும் கொட்டுகிறது.
இம்மாதம் வழக்கம்போல் சென்டுவர் கிராமத்தைச் சுற்றியுள்ள குன்றுகளின் கீழ் வழிந்தோடிய மழை நீரை சுத்திகரிப்பதற்காக பிடிக்கச் சென்ற போது சிறு சிறு தங்க துகள்கள் மற்றும் விலை மதிப்பு மிக்க பல்வேறு கற்கள் கிடைத்துள்ளன.
பனாராஸ் ஹிந்து பல்கலைகழகத்தைச் சார்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இக்கிராமத்தின் மேலுள்ள குன்றுகளில் கனிம வளங்கள் உள்ளனவா என்று ஆராய்ச்சி செய்தனர். 1986 முதல் 1990 வரை நடைபெற்ற ஆராய்ச்சியில் ஒரு சில தங்க துகள்கள் தென்பட்டாலும் நிதியுதவி இல்லாததால் அவ்வாராய்ச்சி இடையில் நிறுத்தப்பட்டது.
இப்பகுதி பழங்காலத்தில் முகலாய மன்னர்கள் உள்ளிட்ட பல்வேறு மன்னர்கள் ஆண்ட பகுதி என்றும் ‘ஷெர் ஷா சூரி’ காலத்தில் மிக முக்கிய வர்த்தக நகரமாக விளங்கியது என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சூழலில் அக்குன்றுகள் மீது ஆராய்ச்சி முடிவுற்ற பிறகு அம்மண் பலவீனமடைந்திருக்க கூடும் என்றும் அதன் பிறகு பல வருடங்களாக பெய்யும் மழையின் காரணத்தால் அக்குன்றில் உள்ள புதையல்களில் இருந்து அவ்வப்போது சில தங்க துகள்கள் மற்றும் விலை மதிப்பு மிக்க கற்கள் வெளியாகியிருக்கலாம் என்றும் தெரிகின்றது. சிலருக்கு கிராம் கணக்கில் தங்கம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விபரங்கள் வெளியானதை அடுத்து தற்போது அப்பகுதியை பீகார் அரசு தன் கட்டுப்பாட்டில் எடுத்து முறையான அகழ்வாராய்ச்சி செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment