இந்த விளம்பரப் பலகையில் பொருத்தப்பட்டுள்ள ஒரு ”உறிஞ்சி வடிகட்டி”, காற்றின் ஈரப்பதனில் உள்ள நீரை உறிஞ்சி எடுத்து சுத்தமான குடிநீராக கொடுக்கிறது.
”யூடெக்” என்று அழைக்கப்படுகின்ற லிமா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் ஆய்வாளர்கள், மாயோ பெரு டிராஃப்ட் எஃப் சி பி என்னும் விளம்பர நிறுவனத்துடன் சேர்ந்து இந்த முயற்சியை செய்துள்ளனர்.
தமது கற்பனையை யதார்த்தமாக்கும் திட்டம் என்று இதனை வர்ணித்துள்ள யூடெக் நிறுவனம், தமது மக்களின் தண்ணீர் தேவையை, தொழில்நுட்பத்தின் மூலம் தீர்த்து வைப்பதே தமது நோக்கம் என்று கூறுகிறது.
ஒரு நாளைக்கு 96 லீட்டர்கள் என்ற கணக்கில் இதுவரை 9 000 லீட்டர்கள் குடிநீரை இந்த தகரம் பொருத்தப்பட்ட விளம்பரப் பலகை, காற்றில் இருந்து வடித்துக் கொடுத்திருப்பதாக அந்த நிறுவனம் கூறுகிறது.
நகரத்துக்கு தெற்கே புஜாமா என்னும், கிட்டத்தட்ட பாலைவனமான ஒரு கிராமத்தில் இந்த விளம்பரப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கிராம மக்களுக்கு குடிநீர் கிடைப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது.
அந்தப் பகுதியில் மழையே இல்லாமல் கடுமையான வெப்பம் மிகுந்த காலநிலை காணப்படுகின்ற போதிலும், அங்கு காற்றில் ஈரப்பதன் 98 வீதமாக இருப்பதாக யூடெக் கூறுகிறது.
மிகவும் சுலபமாக அந்த பலகை நீரை உறிஞ்சி வடிகட்டி குடிநீராகக் கொடுப்பதாக அந்த பல்கலைக்கழக பேச்சாளரான ஜெசிக்கா ருவஸ் கூறுகிறார்.
”அந்தப் பகுதியில் உள்ள கடலில் நிறைய நீர் இருந்தும் அதனை குடிநீராக மாற்றுவதற்கான முறைமையும் மிகவும் செலவு மிக்கது. ஆகவே எதிர்காலத்தில் இந்தத் திட்டத்தால் நிறைய பலன் கிடைக்கலாம்” என்றும் அவர் கூறுகிறார்.
இந்த பலகையில் உள்ள 5 பொறிகள் அடங்கிய ஒரு இயந்திரம், காற்றில் இருந்து நீராவியை பிரித்து எடுத்து திரவமாக மாற்றுகிறது; அந்த நீர் ஒரு தாங்கியில் நிரம்ப, அதனை எவரும் ஒரு குளாய் மூலம் பிடித்துக்கொள்ளலாம்.
இந்த ஒரு அலகை பொருத்துவதற்கு1200 டாலர்கள் செலவாகும்.
எதிர்காலத்தில் இந்த பொறி மிகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்த திட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் நம்புகிறார்கள்.
No comments:
Post a Comment