இந்தியாவில் மலை ரயில் பாதைகள் அமைக்கப்பட்டதில் மிகப்பெரிய அரசியல் பின்னணி உள்ளது. அதாவது இந்தியாவின் மலைப்பகுதிகளில் தங்களின் காலனியாதிக்கத்தை நிறுவுவதற்காகவும், அதன் மூலம் அவ்விடங்களில் இராணுவ தளத்தை அமைக்கவும் திட்டமிட்ட ஆங்கிலேயர்கள் மலைப்பாதைகள் அமைக்க முடிவெடுத்தார்கள்.
இதற்காக டார்ஜீலிங், சிம்லா, காங்ரா பள்ளத்தாக்கு, மாத்தேரான், ஊட்டி ஆகிய பகுதிகளை தேர்ந்தெடுத்தனர். இவற்றில் டார்ஜீலிங் ஹிமாலயன் ரயில்வே, நீலகிரி மலை ரயில், கல்கா- சிம்லா ரயில்வே ஆகிய மூன்றும் யுனெஸ்கோவால் உலக பண்பாட்டு சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவையும் மற்ற இரண்டு மலைப்பாதை ரயில்களும் இன்றும் நல்ல நிலையில் இயங்கி வருகின்றன. அதோடு பொறியியல் தொழிற்நுட்பம் மற்றும் கட்டுமானத்திற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றன.
நீலகிரி மலை ரயில்
மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி இடையே இந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் – குன்னூர் வரை நீராவி இஞ்சினும், பின்னர் டீசல் இஞ்சினும் பயன்படுத்தப்படுகிறது. அதோடு மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே மிகவும் சரிவான பாதை என்பதால் தண்டவாளத்தின் நடுவே பல்சக்கரம் அமைத்துள்ளனர். இந்த ரயில் 208 வளைவுகள், 16 குகைகள் மற்றும் 250 பாலங்களை கடந்துசெல்வதால் பயணதூரம் 46 கி.மீ.தான் என்றாலும் பயண நேரம் சுமார் ஐந்தரைமணி நேரமாகும். மேலும் செல்லும் வழியெங்கும் பசுமையான காடுகளும், சத்தமிடும் பட்சிகளும், கடந்தோடும் நீரோடைகளும், காட்டு மிருகங்களும் என இனிமையான பயண அனுபமாக இருக்கும்.
டார்ஜீலிங் ஹிமாலயன் ரயில்வே
டார்ஜீலிங் மலை ரயில் பாதை (1879-1881)-ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கியது. இது முதலில் சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டாலும், 2-ஆம் உலகப்போரின் போது ஆயுதங்களுடன் சிப்பாய்களும் இந்த ரயிலில் பயணம் செய்து வந்தனர். அதன் பின்னர்தான் இந்த அழகிய ரயில்பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது. இமயமலை அடிவாரத்தில் உள்ள சிலிகுரியில் இருந்து புறப்படும் இந்த ரயில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,200 மீட்டர் உயரத்தில் பயணிக்கிறது. அதோடு குட்டி குட்டி பெட்டிகளை பழமையான நீராவி இஞ்சின் இழுத்துச் செல்ல இறுதியில் 86 கி. மீ பயணம் செய்து டார்ஜீலிங்கை அடைகிறது.
கல்கா-சிம்லா ரயில்வே
கல்கா-சிம்லா ரயில்வே பாதை அமைக்கப்பட்டதன் பின்னணி மிகவும் சுவாரசியமானது. அதாவது ஆங்கிலேயர்கள் சிம்லாவின் குளிர்ச்சியான தட்பவெப்பநிலை காரணமாக தங்களுடைய கோடைக்கால தலைநகராக சிம்லாவை மாற்றிக்கொண்டனர். அதோடு இராணுவ அலுவலகமும் அங்கே நிறுவப்பட்டதால் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது. எனவே இமயமலை அடிவாரத்தில் சிம்லா மற்றும் கல்கா ஆகிய இரு நகரங்களுக்கிடையே இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டு 1903-ஆம் ஆண்டிலிருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது.
மாத்தேரான் மலை ரயில்
மகராஷ்டிர மாநிலத்தின் பாரம்பரிய ரயில் பாதையாக மாத்தேரான் மலை ரயில் பாதை அறியப்படுகிறது. 1907-ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் இந்த ரயில் மாத்தேரான் மற்றும் நேரல் நகரங்களை இணைக்கிறது. இந்தப் பாதையில் ஒரே ஒரு சுரங்கவழியே காணப்படுகிறது. அந்த சுரங்கம் ‘ஒரு முத்த சுரங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது இந்த சுரங்கத்தை கடக்க ஆகும் நேரத்தில் நீங்கள் உங்கள் காதல் துணைக்கு ஒரு முத்தத்தை கொடுத்துவிடலாமாம்!!!
காங்க்ரா பள்ளத்தாக்கு ரயில்வே
காங்க்ரா பள்ளத்தாக்கு கவின் கொஞ்சும் இயற்கை காட்சிகளுக்கும் பெயர்பெற்றது. இந்த காங்க்ரா பள்ளத்தாக்கு ரயில் பாதையில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட 971 பாலங்களும், 2 சுரங்கங்களும் அமைந்துள்ளன. இது பதான்கோட் மற்றும் ஜோகிந்தர் நகருக்கு இடையே 163 கி.மீ தூரம் பயணிக்கிறது. எங்கு பார்த்தாலும் இயற்கையின் அற்புத காட்சிகள் நம்மை கிறங்கடிக்கும் என்பதால் காங்க்ரா பள்ளத்தாக்கு ரயில் பயணம் மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்.
No comments:
Post a Comment