''தென் தமிழகக் கடலோரத்தில் மணல் வளத்தை வாரிக் குவிக்கும் தாதுமணல் நிறுவனங்கள் கழிவு நீராக வெளியேற்றும் ரசாயனக் கழிவால், கடல் நீர் ரத்தச் சிவப்பாக மாறிவிட்டது. பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு ஆதாரமான கடல் ஆமைகள், நண்டுகள், சிங்க இறால், கடல் பூச்சிகள் போன்றவை அதிவேகமாக அழிந்துவருகின்றன. சதுப்புநிலக் காடுகள், சவுக்கு, பனை, தென்னை மரங்கள் நாசமாக்கப்பட்டுள்ளன. மீனவர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு, புற்றுநோய், கர்ப்பப்பை சிதைவு, கல்லடைப்பு, தோல் நோய், மூளை வளர்ச்சி குன்றல் போன்ற கொடிய நோய்கள் பீடிக்கப்பட்டு, கடற்கரைகளில் சுதந்திரமாக நடமாடக்கூட முடியாமல் அகதிகளைப் போல வாழ்கிறார்கள் மக்கள்.
இவை எதுவும் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல. நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாதுமணல் கொள்ளையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குமூலங்கள் இவை.
ஒருமுறை அழிக்கப்பட்டால் மீளப்பெறவே முடியாத இயற்கையின் அரிய கொடையான தாதுமணலில், அணு உலை, உருக்குத் தொழிற்சாலை, விண்கல உபகரணங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் கார்னெட், இல்மனைட், ரூடைல், சிர்கான், மோனோசைட் போன்ற கனிமங்கள் உள்ளன. சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உருவான இந்தக் கனிமங்கள், ஆறுகளின் வழியாக இந்தக் கடற்படுகையில் சேகரமாகியுள்ளன.
இத்தகைய அரிய மணல் வளம்கொண்ட கடலோர நிலங்களைத்தான் அரசாங்கம் தனியாருக்குத் தாரைவார்த்திருக்கிறது. 'இருக்கன்துறை’ என்ற கிராமத்தில், 100 ஏக்கர் அரசு நிலம் ஆண்டுக்கு வெறும் 16 ரூபாய்க்கும், 40 ஏக்கர் நிலம் வெறும் 9 ரூபாய்க்கும் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜனுக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இரண்டு இட்லிகள் 40 ரூபாய் ப்ளஸ் டாக்ஸ் விற்கும் நாட்டில், 100 ஏக்கர் நிலத்தை வெறும் 16 ரூபாய்க்குக் குத்தகைக்குவிட்டுள்ளனர். இப்படி இந்தியா முழுவதும் இரும்பு, நிலக்கரி, பாக்சைட், கிரானைட், தாதுமணல் போன்ற கனிம வளங்கள் உள்ள 7.50 லட்சம் ஏக்கர் நிலங்கள், முதலாளிகளுக்கு சொற்பமான தொகைக்கு வழங்கப்பட்டுள்ளன.
நிலக்கரி, பருத்தி, தங்கம், காபி, மிளகு போன்ற இந்திய நாட்டின் வளங்கள் ஆங்கிலேயர்களால் கொள்ளைபோனதை எதிர்த்து நடந்ததுதான், இந்தியாவின் சுதந்திரப் போராட்டம். 'இயற்கை வளங்களைப் பணத்தால் மட்டுமே மதிப்பிடும் தனியாருக்கு, கனிமவளங்களை வெட்டியெடுக்கும் உரிமை வழங்கக் கூடாது’ என்பதே விடுதலைப் போரின் விளைவால் உருவான அரசின் கொள்கை. ஆனால், 90-களில் கொண்டு வரப்பட்ட தனியார்மயக் கொள்கையால் இது மாற்றப்பட்டு, இன்று பன்னாட்டு நிறுவனங்கள் 100 சதவிகிதம் கனிமத் தொழிலில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் 100-க்கும் அதிகமான கிரானைட் குவாரிகளில் சட்டவிரோதமாக கிரானைட் வெட்டி எடுக்கப்படுகிறது. கோடிகளில் விலை வைத்து ஏற்றுமதி செய்யப்படும் கிரானைட் கற்களை இங்கு சொற்ப ஆயிரங்களுக்கு கைப்பற்றி வியாபாரம் செய்து வந்தன பி.ஆர்.பி. உள்ளிட்ட பல கிரானைட் நிறுவனங்கள். 27 ரூபாய்க்கு ஒரு டன் இரும்புத் தாதுவை அரசிடம் வாங்கி, சர்வதேசச் சந்தையில் 7,000 ரூபாய்க்கு விற்கிறார்கள் கனிம வளக் கொள்ளையர்கள். நாட்டின் கனிம வளங்களை அதிகமாகச் சுரண்டுவோருக்கு 'சிறந்த ஏற்றுமதியாளர்’ விருது தந்து கௌரவமும் சேர்க்கிறது மத்திய அரசு!
இந்தக் கனிமவளக் கொள்ளைக்கு சட்டபூர்வ அனுமதி அளிக்கும் கொள்கைதான் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் கடந்த 23 ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் 'புதிய பொருளாதாரக் கொள்கை.’ நாட்டின் பெரும்பான்மை மக்களை அகதிகள் ஆக்கும் இந்தக் கொள்கையின் இரு முகங்கள்தான் தாதுமணல் கொள்ளையும், கூடங்குளம் அணு உலையும். இதை நேரடியாகத் தங்கள் சொந்த அனுபவத்தில் உணர்ந்துள்ள தென் தமிழகக் கடலோர மக்கள், முழுவீச்சுடன் போராடி வருகின்றனர். எனினும், இது அவர்களின் தனிப்பட்ட பிரச்னை அல்ல. இயற்கை வளங்களைக் காப்பாற்றப் போராடுவது அனைத்து மக்களின் கடமை. இந்தப் போராட்டத்தில் அரசாங்கம் எதிரே வந்தால், அரசையும் எதிர்க்கலாம்; அரசமைப்பையும் மாற்றலாம். இதற்குத் துணைநிற்க வேண்டியது நாட்டுப்பற்றுள்ள ஒவ்வொரு குடிமகனின், மனிதனின் கடமை!''
விகடன்
No comments:
Post a Comment