Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, November 3, 2013

நாளைய இந்தியா-7 சக்தி கொடு!


இந்தப் பிரபஞ்சத்தில் அணுக்கள் முதல் நட்சத்திர மண்டலம் வரையிலான அனைத்து செயல்முறைகளும் எரிசக்தியோடு தொடர்புடையவை. அடிப்படை வெப்ப இயக்கவிசை விதிகள் அவற்றுக்குக் கட்டியம் கூறுகின்றன. எனவே, அனைத்து மனிதகுல வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் மையமாக இருந்தது / இருப்பது எரிசக்தி என்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.
மனித நாகரிகத்தின் வரலாறு என்பது எரிசக்தி ஆதாரங்களைக் கண்டுபிடித்து, அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள அதிகரித்து வரும் திறமையையே பிரதானமாகக் குறிக்கிறது.
மனித வரலாற்றின் வெகு சமீபகாலம் வரை, மிருகங்கள் மற்றும் மனிதர்களின் உடல் தசையாற்றலே நடைமுறை வாழ்க்கையின் வேலைகளை இயக்கும் பிரதானமான மூல ஆற்றலாக இருந்துவந்தது. அந்த ஆற்றலுக்கான தேவை அதிகரித்ததுதான் உலகில் உருவான அடிமைத்தனத்துக்குக் காரணம். பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட நிலக்கரி, தொழிற்புரட்சிக்கு சக்தியூட்டுவதாக அமைந்தது. அதன்பிறகு 150 வருடங்களுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்ட பெட்ரோலியம், மனிதகுலத்தின் வியத்தகு வளர்ச்சிக்கு வித்திட்டு, மனிதர்களின் எண்ணிக்கை ஆறு மடங்காக உயர்ந்து, இன்று இருக்கும் 600 கோடியை எட்டக் காரணமாகியது.
தீர்ந்துவிடக்கூடிய ஆதாரம்:

கச்சா எண்ணெய் தீர்ந்துவிடக்கூடிய ஆதாரம் என்பதால், உலகில் அதன் இருப்பு குறைந்து வருகிறது. ஆனால், எரிசக்தியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது எரிசக்தியின் நிலையான விலையேற்றத்துக்கு இட்டுச் செல்கிறது. மேன்மேலும் அரிதாகிவரும் எரிசக்தி ஆதாரத்துக்கான கடும் போட்டி, உலக நாடுகளிடையே சச்சரவுகளையும் அதிகரிக்கிறது.
உலகின் முன்னேறிய, தொழில்மயமான நாடுகள் அப்படியொரு நிலையை எட்டியதற்கு துல்லியமான காரணம், ஆற்றல்மிக்க எரிசக்தி ஆதாரங்களை, பயன்பாட்டுக்கு உரித்தான எரிசக்தியாக மாற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்கியதுதான். பாரம்பரிய எரிசக்தி' (கன்வென்ஷனல் எனர்ஜி) என்று தற்போது அழைக்கப்படும் ஆதாரங்களிலும், அவற்றைச் சார்ந்த உள்கட்டமைப்புகளிலும் அவர்கள் செய்த முதலீடுதான் கச்சா எண்ணெய் சார்ந்த எரிசக்தியை பிரதானமாக சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்திலும், ஓரளவிற்கு மட்டுமே அணுசக்தியைப் பயன்படுத்தும் நிலையிலும் அவர்களை வைத்திருக்கிறது. முதன்முதலில், புதுப்பிக்க இயலாத படிம எரிபொருள் ஆதாரங்களை பயன்படுத்தியவர்கள் என்ற முறையில், அவர்களின் புத்தி சாதுரியத்துக்கே அவர்கள் சிறைப்பட்டுப் போனார்கள்.
மிகப்பெரிய பிரச்னை:

வளர்ந்துவரும் நாடுகள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை, , வளர்ச்சிக்குத் தேவையான எரிசக்தி கிடைக்காமல் இருப்பதுதான். ஏனைய ஆதாரங்களான நிலம், தண்ணீர் போன்றவற்றில் பற்றாக்குறைகள் இருந்தாலும் அவற்றுக்கு மாற்றாகக் கணிசமான அளவு எரிசக்தியைப் பயன்படுத்தித் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளமுடியும் என்பதால் ஒரு வகையில் எரிசக்தியே முதன்மையான ஆதாரம் ஆகிறது. ஆயினும், முன்னேற்றப் பாதைக்குத் தாமதமாக வந்துள்ள வளரும் நாடுகள், முன்னேறிய நாடுகளைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றி, கச்சா எண்ணெய் மூலமாகத் தங்களின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்துவிடலாம் என்று நம்பிக்கொண்டிருக்க முடியாது. அவர்களின் ஒரே நம்பிக்கை, புதுப்பிக்கத்தக்க, பாதுகாப்பான எரிசக்தி ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதில்தான் இருக்கிறது. அப்படி ஒரு ஆதாரம் தெள்ளத் தெளிவாக பட்டப்பகல் வெளிச்சமாக இருக்கிறது அது சூரியஒளி எரிசக்தி. ஒவ்வொரு சதுர மைல் அளவிலும் ஆண்டுதோறும் படுகின்ற சூரிய ஒளிச்சக்தி, தோராயமாக 40 லட்சம் கச்சா எண்ணெய் பீப்பாய்களுக்குச் சமமானது.
சூரிய ஒளி சக்தி:

மேற்கூறிய தகவலை மனக் கண்ணோட்டத்தில் கொண்டு வர, இந்தியாவின் மொத்த எரிசக்தி நுகர்வைக் கருத்தில் கொள்ளுங்கள். நாளொன்றுக்கு, இந்தியா 1 கோடியே 20 லட்சம் கச்சா எண்ணெய் பீப்பாய்களுக்குச் சமமான அளவு எரிசக்தியைப் பயன்படுத்துகிறது. அதை 3 சதுர மைல் அளவில் படும் சூரிய ஒளிச்சக்திக்கு சமமானது என்றும் கொள்ளலாம். இந்தியாவுக்கு, 2025ம் ஆண்டுவாக்கில் இன்று உபயோகிக்கும் அளவைப் போல் ஐந்து மடங்கு எரிசக்தி தேவைப்படும்.
நிலப்பரப்பின் மீது படும் சூரிய ஒளியில் 10 சதவிகிதத்தை மட்டுமே உபயோகிக்கக்கூடிய எரிசக்தியாக மாற்ற முடியும் என்று அனுமானித்தால் கூட, இந்தியாவின் இன்றைய மொத்த எரிசக்தித் தேவைகளை வெறும் 30 சதுர மைல் மீது படும் சூரிய ஒளிச்சக்தி கொண்டு பூர்த்தி செய்யமுடியும். சூரிய ஒளிச்சக்தியை பயன்படுத்தும் முறை தற்போது இருந்தாலும், அதைத் திறம்படக் கையாண்டு, வர்த்தக ரீதியில் லாபகரமாக, பிற எரிசக்தி ஆதாரங்களுக்கான முழுமையான மாற்றாகப் பயன்படுத்தத் தேவையான தொழில்நுட்பங்கள் இன்று உலகில் இல்லை.
வரவேற்க வேண்டிய மாற்றம்:

இந்தியா தனது தற்போதைய கச்சா எண்ணெய் தேவைகளில் சுமார் 70 சதவிகிதத்தை இறக்குமதி செய்து வருகிறது. 200910ல் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு 4 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அந்தச் செலவு இன்றைய சூழலிலேயே இந்தியாவுக்குக் கட்டுப்படியாகாத விஷயம். விலையானது மேலும் உயரங்களைத் தொடும்பட்சத்தில், சொல்லவே தேவையில்லை. ஆனால், எரிசக்த்தி தேவைகள் நாட்டின் பொருளாதாரத்துக்கு இணையான வேகத்தில் வளர்ந்து வருகின்றன. இந்தியாவிடம் அணுசக்தித் தொழில்நுட்பமோ, அணுசக்தி எரிபொருட்களோ இல்லை. சமீபத்தில் அணுசக்தித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அனுமதி கோரியதில், பிச்சை கேட்கும் அளவுக்குத் தன்னை தரம் தாழ்த்திக் கொண்டது இந்தியா.
இந்தியா இனியும் யதார்த்ததைப் புறக்கணிக்க முடியாது. அதன் பொருளாதார வளர்ச்சியும், முன்னேற்றமும் தொடர்வது, சூரிய ஒளிச்சக்தியைப் பயன்படுத்த தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும், அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தைக் கொண்டு தொழிற்சாலைகள், போக்குவரத்து, வர்த்தக மற்றும் வீட்டு எரிசக்தித் தேவைகளை சந்திப்பதிலும்தான் அடங்கியுள்ளது. இந்தியா இன்று பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பங்களில் கிட்டதட்ட அனைத்தும் உலகின் பிற நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டவை. தன் வாழ்வின் ரத்த ஓட்டமாக அமையப்போகும் சூரிய ஒளிசக்தித் தொழில்நுட்பத்தை இந்தியா கண்டுபிடிக்குமானால், அது ஒரு வரவேற்கத்தக்க மாற்றமாக இருக்கும். உலகில் தொழில்நுட்ப உருவாக்கம் பெரும்பாலும், வைராக்கியம், தொலைநோக்குப் பார்வை, சில சமயங்களில் கடுமையானத் தேவை ஆகியவற்றின் காரணத்தால் உருவாக்கப்பட்டு வந்துள்ளது. மனத்தில் வைராக்கியம் இருந்தால் குறுகிய காலத்துக்குள் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு அணுகுண்டை உருவாக்கிய 'தி மன்ஹாட்டன் புராஜக்ட்', நிலவுக்கு மனிதனை அனுப்பியது ஆகியவை சில உதாரணங்கள்.
தேவைக்கேற்ற முயற்சி:

இது இவ்வளவு சிறப்பான யோசனை என்கிற பட்சத்தில் ஏன் மற்ற நாடுகளோ அல்லது பெருநிறுவனங்களோ இதைச் செய்யாமல் இருக்க வேண்டும்? என்ற கேள்வி தோன்றுவது இயற்கையே. முதலில், தனியார் துறைக்கு, அது எவ்வளவு பெரிய பன்னாட்டு நிறுவனமாக இருந்தாலும், நிதி திரட்டுவதில் ஒரு பெரிய அரசாங்கத்துக்கு இருக்கும் கொள்திறன் கிடையாது. இரண்டு, எரிசக்தியைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு இருக்கும் உடனடித் தேவை, மற்ற பெரிய அரசாங்கங்களுக்கு இல்லை. மேலும், முன்பு குறிப்பிட்டதைப் போல் அவர்கள் கச்சா எண்ணெய் சார்ந்த பாரம்பரிய அமைப்புகளில் பெருமளவில் முதலீடு செய்துள்ளனர். இது சம்பந்தப்பட்ட இன்னொரு கேள்வி: ஏனைய விஷயங்களில் தாராளமயமாக்கப்பட்ட சந்தைசார் பொருளாதாரம் சிறப்பாக செயல்படும் என்று இதுவரைக் கூறிவந்தோம். அப்படியானால், இதற்கான தீர்வை உருவாக்க ஏன் சந்தைப் பொருளாதாரத்தைச் சார்ந்து இருக்கக் கூடாது? என்பது.

No comments:

Post a Comment