எங்காவது ஒரு ரூபாய்க்கு தோசை கிடைக்குமா? அதுவும் இந்தக் காலத்தில்… தமிழரசுவின் மினி ஓட்டலில் கடலைச் சட்னி, சாம்பார் சகிதம் சுடச்சுட ஒரு ரூபாய்க்கு தோசை தருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு பக்கத்தில் இருக்கிறது திருவம்பட்டு. பச்சைக் கம்பளத்தை விரித்துப் போட்டதுபோல் சுற்றிலும் வயல்கள்.. அதன் மத்தியில் அமைந்திருக்கும் எழிலான இந்த கிராமத்தில்தான் தமிழரசுவின் ஒரு ரூபாய் தோசைக்கடை உள்ளது. கிராமத்து மணம் கமழும் சிறிய கடை என்றாலும் காலையில் வியாபாரம் களைகட்டி விடுகிறது.
“அந்தக் காலத்துல எல்லாம் தீபாவளி, வருஷப் பொறப்புன்னாதான் எங்க வீடுகள்ல இட்லி, தோசையைப் பாக்க முடியும். மத்த நாள்ல பழைய கஞ்சியோ கூழோதான். நம்ம புள்ளைங்க தினமும் இட்லி, தோசை சாப்பிடணும்கிறதுக்காக இந்த கடையை ஆரம்பிச்சேன். ஆனா, இப்ப இந்த ஊரு சனமே வந்து சாப்பிட்டுப் போகுது’’ அகவை அறுபதைக் கடந்த தமிழரசு தனது மலிவு விலை தோசைக்கடைக்கு அறிமுகம் கொடுத்தார்.
கடையின் ஒரு பகுதியில் பெரிய தோசைக் கல்லில் ஒரே நேரத்தில் பத்துப் பதினைந்து தோசைகளை வரிசைகட்டி வார்த்துக் கொண்டிருந்தார் தமிழரசுவின் மருமகள் ஷீலா. இன்னொரு பக்கம் ஷீலாவின் கணவர் ஜீவா, மந்தார இலையில் பார்சல் கட்டிக் கொண்டிருந்தார்.
கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்து தோசைக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு தமிழரசுவிடம் பேச்சுக் கொடுத்தோம்…
நான் சின்னப் புள்ளையா இருந்தப்ப கருக்கல்லேயே கழனிக்கு போயிடுவேன். காலையில பத்து மணிக்கு அம்மா கூழ் கொண்டாருவாங்க. அதைக் குடிச்சிட்டு வேலை செய்வோம். மத்தியானத்துக்கு பழைய சோறும் வெங்காயமும். ராவிக்கு (இரவு)தான் சுடுசோறு. இட்லி, தோசை எல்லாம் தீபாவளிக்கு தீபாவளிதான்.
கல்யாணம் முடிஞ்சதும் ஓட்டல் கடை ஆரம்பிக்கலாம்னு முடிவு செஞ்சேன். வீட்டுக்காரியும் தலையாட்டினா. 1984ல ரோட்டோரமா குடிசை போட்டு கடை ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல 10 பைசாவுக்கு தோசை குடுத்தோம். அப்புறம் 25 பைசா, 50 பைசா, 75 பைசான்னு ஏத்திக்கிட்டே வந்து 2000ல ஒரு ரூபாயாக்குனோம். அதுக்குப் பின்னாடி 13 வருஷமா விலை ஏத்தல. ஊர்க்காரங்க சப்போர்ட் இருந்தா நீங்ககூட ஒரு ரூபாய்க்கு தோசை குடுக்கலாம். மொத்தத்துல, இது நமக்கு நாமே திட்டம் மாதிரித்தான்… பெருமிதமாய் சொன்னார் தமிழரசு.
“ஒரு ரூபாய்க்கு தோசை குடுத்தா கட்டுப்படி ஆகுமா?’’ என்ற கேள்விக்கு பதில் சொன்னார் ஷீலா. “கிராமத்துல வெளையுற உளுந்து, நெல்லு எல்லாமே கம்மியான ரேட்டுக்கு எங்களுக்கு குடுக்குறாங்க. அதனால எங்களுக்கு கையக் கடிக்காது. சனங்ககிட்டயிருந்து அரிசி, உளுந்து சல்லிசா வாங்கி, அவங்களுக்கே கம்மி விலைக்கு தோசை குடுக்குறோம். வீட்டாளுங்களும் சாப்பிட்டது போக தினத்துக்கு முந்நூறு, நானூறு ரூபாய் கையில நிக்கும். பணம், காசுக்கு அதிகமா ஆசைப்படாம, மக்கள் நினைச்சா எல்லா ஊர்லயும் இதுபோல தோசைக்கடை போடலாம்’’ என்றார் ஷீலா.
வெங்காய விலை எகிறிக் கிடப்பதால் காரச்சட்னியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தி ருக்கிறார்கள். கடலைச் சட்னியும், சாம்பாரும் ஏழெட்டு தோசைகளை உள்ளே தள்ள வைக்கிறது. டிப்ஸ் கொடுக்கும் காசில் காலை டிபனை முடித்துவிடலாம் திருப்தியுடன்.
No comments:
Post a Comment