Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, November 16, 2014

டெல்லி சென்னை இடையே அதிவேக புல்லட் ரயில்

புதுடில்லி: உலகிலேயே, இரண்டாவது நீளமான, அதிவேக ரயில் பாதையை, டில்லி - சென்னை இடையே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதை பயன்பாட்டிற்கு வந்தால், ஆறு மணி நேரத்தில், டில்லியில் இருந்து சென்னை வந்து விடலாம்.



புதிய ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சுரேஷ் பிரபு, தற்போது, பிரதமர் நரேந்திர மோடியுடன் வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தாலும், அமைச்சராக பதவியேற்ற பின், டில்லியில் இருந்த சில நாட்களில், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதுபற்றிய விவரங்கள், தற்போது ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி, உலகிலேயே, இரண்டாவது நீளமான, அதிவேக ரயில் பாதை, டில்லி - சென்னை இடையே, 1,754 கி.மீ., தூரத்திற்கு அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மணிக்கு, 300 கி.மீ.,:

இந்த அதிவேக ரயில் பாதை செயல்பாட்டுக்கு வந்தால், மணிக்கு, 300 கி.மீ., வேகத்தில், அதில் ரயில்கள் செல்ல முடியும். அதனால், ஆறு மணி நேரத்தில், டில்லியில் இருந்து சென்னைக்கு வந்து விடலாம். இந்த ரயில் பாதையை அமைக்க, 2 லட்சம் கோடி ரூபாய் செலவாகும். உலகிலேயே நீண்ட தூரத்திற்கு, அதிவேக ரயில்களை இயக்கும் நாடான சீனாவுடன் இணைந்து, இந்த அதி நீளமான, அதிவேக ரயில் பாதை திட்டத்தைச் செயல்படுத்த தீர்மானிக்கப் பட்டுள்ளது. அதனால், டில்லி - சென்னை அதிவேக ரயில் பாதை திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிப்பதற்காக, ரயில்வே துறையைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள், வரும், 24ம் தேதி, சீனா, பீஜிங் சென்று, அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சு நடத்த உள்ளனர். திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், ஆய்வு செய்ய உள்ளனர். இந்த பேச்சுக்களுக்குப் பின், அதிவேக ரயில் கழகம் மற்றும் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் அதிகாரிகள், சீன ரயில்வே சர்வே மற்றும் வடிவமைப்பு குழுவினருடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளனர். அதன்பின், அதிவேக ரயில் பாதை அமைப்பதற்கான பயிற்சிகளைப் பெற, இந்திய ரயில்வே அதிகாரிகள் சீனா செல்வர். அவர்களின் பயிற்சிக்கான செலவுகளை, சீன அரசே ஏற்றுக் கொள்ளும். செப்டம்பர் மாதத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆய்வு பணிகள்:

சீனாவில் அதிகாரிகள் பயிற்சி பெற்று திரும்பியதும், டில்லி - சென்னை இடையே, அதிவேக ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் துவங்கும். அனேகமாக, இந்தப் பணி, அடுத்த ஆண்டின் முற்பகுதி யில் துவங்கலாம் என, ரயில்வே அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.ரயில்வே துறை மேம்பாட்டிற்காக, சீனாவின் உதவியை நாடுவது, கடந்த மாதம் தான் துவங்கியது. குறிப்பாக, மைசூரு - பெங்களூரு - சென்னை ரயில் பாதையில், ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது தொடர்பான பணிகளுக்காக, இந்தியன் ரயில்வே மற்றும் சீனாவின் ரயில் எர்யுவான் பொறியியல் குரூப் நிறுவனத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தத்திற்குப் பிறகே துவங்கி உள்ளன. அதேநேரத்தில், மும்பை - ஆமதாபாத் வழித்தடத்தை, நாட்டின் முதல் அதிவேக ரயில் பாதையாக மாற்றுவதற்கான ஆய்வுகளை, ஜப்பான் நிறுவனம் ஒன்று ஏற்கனவே மேற்கொண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடைமுறைக்கு வருமா?

* அதிவேக ரயில்களை இயக்குவதில், சீனா முன்னணியில் உள்ளது. இங்கு, 2007 ஏப்ரலில், அதிவேக ரயில் சேவை துவங்கியது.
* சீன தலைநகர் பீஜிங் - குவாங்ஜு நகரங்கள் இடையே அமைக்கப்பட்டுள்ள, அதிவேக ரயில் பாதையானது, 2,298 கி.மீ., நீளம் கொண்டது.
* உலகிலேயே சீனாவில் தான், 11 ஆயிரத்து, 28 கி.மீ., நீளத்திற்கு, அதிவேக ரயில் பாதைகள்
உள்ளன.
* சீனாவில், மணிக்கு, 200 கி.மீ., மற்றும் அதற்கும் மேலான வேகத்தில், அதிவேக ரயில்கள் இயக்கப்படுகின்றன.
* டில்லி - மும்பை, மும்பை - சென்னை, சென்னை - கோல்கட்டா, கோல்கட்டா - டில்லி மற்றும் மும்பை - கோல்கட்டா இடையே, வைரநாற்கர அதிவேக ரயில் பாதைகளை ஏற்படுத்த வேண்டும் என்பது, பிரதமர் நரேந்திர மோடியின் திட்டம். அதில், ஒன்றே, டில்லி - சென்னை அதிவேக ரயில் பாதை திட்டம்.
* நாடு முழுவதும், ஒன்பது வழித்தடங்களில், அதிவேக ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதன் முதல் கட்டமாக, டில்லி -- ஆக்ரா வழித்தடத்தில், 160 கி.மீ., வேகத்தில் செல்லும், அதிவேக ரயிலின் சோதனை ஓட்டம், ஜூலையில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
* இந்தியன் ரயில்வேயில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல ரயில்வே திட்டங்கள், நிதிப் பற்றாக்குறை காரணமாக, இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அதிவேக ரயில் பாதை திட்டங்களுக்காக மதிப்பிடப்பட்டுள்ள செலவுகளை பார்த்தால், அந்தத் திட்டங்கள் எல்லாம் நடைமுறைக்கு வருமா என்ற சந்தேகம் எழுகிறது. எல்லாம் நடைமுறைக்கு வந்தால் நன்மையே.

No comments:

Post a Comment