அவசர உதவிக்கு 108 உதவுகிறது என்றால், மருத்துவ உதவிக்கு மட்டுமல்லாமல் உளவியல் ஆலோசனைக்கும் கைகொடுக்கிறது 104. மருத்துவம் சார்ந்த தகவல், மருத்துவ - உளவியல் ஆலோசனை, சுகாதாரம் சார்ந்த புகார் ஆகியவற்றுக்குத் தொடர்புகொள்ளும் வகையில் 2013 டிசம்பர் மாதம் முதல் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது இந்தச் சேவைப் பிரிவு. இதுவும் 24 மணி நேர சேவைப் பிரிவுதான். தமிழகத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் இந்த எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
104-க்குத் தொடர்பு கொள்கிறவர்களின் பாலினம், வயது, முகவரி, ஊர் குறித்த அடிப்படை விவரங்களைப் பதிவு அலுவலர் கேட்பார். ஒவ்வொரு அழைப்பாளருக்கும் ஒரு பதிவு எண் வழங்கப்படும். அவர்கள் அடுத்த முறை தொடர்புகொள்ளும்போது, இந்த எண்ணைத் தெரிவித்தாலே போதும். பதிவுசெய்த பிறகு, மருத்துவ ஆலோசனை அலுவலருக்கு அழைப்பு மாற்றப்படும்.
தகவல்கள் பலவிதம்
அரசு மருத்துவமனைகள், ரத்த வங்கிகள், அரசு மருத்துவமனைகளில் இருக்கும் மருத்துவ வசதிகள், தாய் சேய் நல மையங்கள், உறுப்பு தானம் குறித்த தகவல்கள், தொற்று நோய்கள், விஷ முறிவு, மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் உள்ள வசதிகள் போன்ற சுகாதாரத் துறை தொடர்பான அனைத்துத் தகவல்களையும் இந்தச் சேவை மூலம் பெறலாம்.
மருத்துவ ஆலோசனை
தகவல்கள் மட்டுமல்லாமல் மருத்துவ - உளவியல் ஆலோசனைகளையும் 104 மூலம் பெறலாம். மருத்துவ அலுவலர் முதலில் நோய் பற்றிய அடிப்படைக் கேள்விகளைக் கேட்பார். பிறகு அதற்கான உடனடி மருத்துவ ஆலோசனையைச் சொல்வார். தேவைப்பட்டால் செய்ய வேண்டிய மருத்துவச் சிகிச்சைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் போன்றவை குறித்து விளக்குவார். எக்காரணம் கொண்டும் அழைப்பாளர்களுக்கு மருந்து, மாத்திரைகளை இவர்கள் பரிந்துரைப்பது இல்லை. மருத்துவ ஆலோசனைகளை மட்டுமே சொல்கிறார்கள்.
மருத்துவ அதிகாரியின் உதவி தேவைப்படும்போது மருத்துவர்களிடம் பேசி ஆலோசனை பெறும் வசதியும் இங்கு உண்டு. அவசரச் சிகிச்சை என்றால் இந்த எண்ணிலிருந்து 108 சேவைக்கு அழைப்பு மாற்றப்படுகிறது.
“பொதுவாக இரவு நேரத்தில்தான் அதிக அழைப்புகள் வருகின்றன. குழந்தை திடீரென்று அழுகிறது என்ன செய்வதென்று தெரியவில்லை என்று பலர் கேட்பார்கள். முதலில் அவர்களுடைய பதற்றத்தைத் தணித்து, குழந்தை எந்தெந்த காரணங்களுக்காக அழும் என்று சொல்வோம். என்ன செய்தால் அழுகையை நிறுத்தலாம் என்றும் ஆலோசனை வழங்குகிறோம்” என்கிறார் மருத்துவ அலுவலர் பவானி.
வழிகாட்டும் ஆலோசனை
இப்படி ஆலோசனை வழங்குவது ஒவ்வொரு மருத்துவ அலுவலருக்கும் ஏற்ப மாறுபடுமா, இல்லையா என்ற சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறது இங்கே நடைமுறைப்படுத்தப்படும் அட்டவணை. கிட்டத்தட்ட 600 வகையான நோய்கள் அட்டவணைப் படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றுக் கான அறிகுறிகள், சிகிச்சை முறைகள் ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு அலுவலரும் இந்த அட்டவணையை மையமாக வைத்தே பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்குவதால், ஆலோசனைகளில் எந்தத் தடுமாற்றமும் மாறுதலும் ஏற்படுவதில்லை.
தற்போது தொற்றுநோய்கள், மழைக்கால நோய்கள், காய்ச்சல், மெட்ராஸ் ஐ (Madras Eye) ஆகியவை குறித்த அழைப்புகள் அதிகமாக வருவதாகச் சொல்கிறார்கள் 104 சேவையில் பணிபுரியும் மருத்துவ ஆலோசகர்கள்.
மனதுக்குள் எழும் கேள்விகள்
மனநலம் தொடர்புடைய அழைப்பாக இருந்தால், அவர்களுக்கு ஆலோசனை வழங்க உளவியல் ஆலோசகர்கள் இருக்கிறார்கள். தனிநபர் குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை, தயக்கம், பயம், உடல்நிலை மாற்றங்கள், மது மற்றும் போதையின் பிடியில் சிக்கியிருப்பது, காதல் தோல்வியால் விரக்தி, தற்கொலை எண்ணம், திருமண உறவுகள் சார்ந்த பிரச்சினைகள், உறவுச் சிக்கல்கள், பால்வினை நோய்கள் போன்றவை குறித்த அழைப்புகளே மனநலம் சார்ந்து அதிகம் வருகின்றனவாம்.
“தொலைக்காட்சிகளில் வரும் நள்ளிரவுக் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் பல ஆண்களைத் தவறாக வழிநடத்துகின்றன. அவற்றில் இருந்து பெறுகிற தவறான தகவல்களை வைத்துக்கொண்டு தேவையில்லாத பயத்தால் இங்கே அழைக்கிறார்கள். அவர்களிடம் பொறுமையாகப் பேசி உண்மையை அறிவியல்பூர்வமாகப் புரியவைக்கிறோம். உடலுக்குள் நடக்கும் மாறுதல்களைச் சொல்லும்போதுதான், தேவையற்ற கற்பிதங்கள் மறையும்.
தற்கொலை எண்ணத்துடன் பேசுகிறவர்களை ஒரே நொடியில் மாற்றிவிட முடியாது. அவர்களுக்கு ஆதரவு தருவது போலப் பேசி, அவர்களின் எண்ணத்தை மாற்ற முயல்வோம்” என்கிறார் மருத்துவ ஆலோசகர் இளையராஜா.
தயக்கம் தவிர்ப்போம்
பெண்களிடமிருந்து மது மற்றும் போதை தொடர்பான அழைப்புகள்தான் அதிகமாக வருகின்றன. கணவர் தினமும் குடித்துவிட்டு வருகிறார், அவரை எப்படித் திருத்துவது என்று கேட்கிற பெண்களுக்கு ஆலோசனை வழங்குவதுடன் அருகில் இருக்கும் மறுவாழ்வு மையங்கள் குறித்த தகவல்களையும் தருகிறார்கள்.
உடல்நலக் குறைவு என்றால் மருத்துவமனைக்குச் செல்லத் தயங்காதவர்கள் மனநலம் என்றதுமே வெளியே சொல்லக்கூடத் தயங்குகின்றனர். மனநல மருத்துவமனைக்குச் செல்வதைப் பெரும் குற்றமாகவே பலர் நினைக்கின்றனர்.
“காதல் தோல்வியால் கையை பிளேடால் கிழித்துக்கொண்ட ஒரு இளைஞர் போன் செய்தார். கையை அறுத்துக்கொண்ட நீங்கள், ஏன் முகத்திலோ கண்ணிலோ கிழித்துக் கொள்ளவில்லை என்று நான் அவரிடம் கேட்டேன். உடனே அவர் சிரித்துவிட்டார். உங்களுக்கு உங்கள் முகமும் அதன் அழகும் முக்கியம், அப்படியிருக்கும்போது இன்னொருவருக்காக நீங்கள் கையைக் கிழித்துக்கொள்வது எத்தனை மடத்தனமான செயல் என்று சொல்லிப் புரியவைத்தேன்.
தன் மகனே தன்னைத் தவறாக செல்போனில் படம் எடுத்து வைத்திருப்பதாக ஒரு அம்மா சொன்னார். அந்த அம்மாவிடம் பொறுமையாகப் பேசி விவரங்களைக் கேட்டறிந்த பிறகு, அவருடைய மகனை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுமாறு ஆலோசனை சொன்னேன். இப்போது அவருடைய மகன் கொஞ்சம் கொஞ்சமாக நலம் பெற்று வருகிறான்” என்று சொல்லும் இளையராஜா, குழந்தைகள் தொடர்பாக வரும் மனநலச் சந்தேகங்கள் பெற்றோரின் அறியாமையை வெளிப்படுத்துகின்றன என்கிறார்.
“படிப்பில் கவனமின்மை, அதீதத் துறுதுறுப்பு, படுக்கையை நனைத்தல் போன்றவை குழந்தைகளின் மனநலம் குறித்த பொதுவான சந்தேகங்கள். ஆனால், தங்கள் குழந்தை ஒரே நாளில் உலகை வென்றுவிட வேண்டும், அனைத்திலும் சாதிக்க வேண்டும் என்று குழந்தைகளின் குதூகலத்தைக் கேள்விக்குள்ளாகும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுடைய நினைப்பும் சிந்தனையும் எத்தனை விபரீமானது என்பதைச் சொல்லிப் புரியவைக்கிறோம்” என்கிறார்.
குறைகளைச் சொல்லலாம்
சுகாதாரத் துறை தொடர்பான அனைத்துப் புகார்களும் இங்கே பதிவு செய்யப்படுகின்றன. மருத்துவமனைக்கு டாக்டர்கள் வருவதில்லை, சிகிச்சை அளிப்பதில் தாமதம், சுகாதாரம் இல்லை, தெருக்களில் தேங்கும் கழிவுநீர், கொசுத்தொல்லை போன்ற பலதரப்பட்ட புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
“எந்தப் புகாராக இருந்தாலும் அவற்றைப் பதிவுசெய்து சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரிகளுக்கோ, இதற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி களுக்கோ தகவல் தெரிவிக்கிறோம்” என்கிறார் சேவை மேம்பாட்டு அலுவலர் வெங்கடேசன். இதுவரை வந்திருக்கிற புகார்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தியிருக்கும் இவர்கள், அவை உடனுக்குடன் சரிசெய்யப்படுகின்றனவா என்றும் கண்டறிகிறார்கள். இதற்காகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் தலைமை அரசு அதிகாரி தொடங்கி கடைமட்ட ஊழியர் வரை அனைவரின் தொடர்பு எண்கள் அடங்கிய கையேட்டையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
கட்டணமில்லா அழைப்பாக்கலாமே
108 சேவையைப் போல இல்லாமல் 104 சேவையில் சம்பந்தப்பட்ட நபரே தங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம். இந்தச் சேவை இன்னும் கிராமப்புற மக்களை அவ்வளவாகச் சென்றடையவில்லை. நகர்ப்புறப் பகுதிகளிலிருந்தே அதிக அழைப்புகள் வருகின்றன. 108 சேவையைப் போலவே இதையும் கட்டணமில்லா அழைப்பாக்கினால் பொதுமக்கள் பயன்பெற வசதியாக இருக்கும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
எல்லா நேரமும் உதவி
# மருத்துவமனைகள், மருத்துவம் சார்ந்த அனைத்துத் தகவல்களையும் பெறலாம்
# மருத்துவ ஆலோசனை, உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும்
# மருத்துவம் சார்ந்த புகார்களையும் பதிவு செய்யலாம்
# மனநல மருத்துவர், உளவியல் ஆலோசகர், மருத்துவ ஆலோசனை அதிகாரி உள்ளிட்டோரது உதவி கிடைக்கும்
# 24 மணி நேரமும் எல்லா நாட்களும் செயல்படும்
No comments:
Post a Comment