ஜீவித்த முதல் நொடி தொடங்கி வாழும் கடைசி நொடி வரையிலும் கணக்கிட்டுப் பார்த்தால் பல்வேறு வடிவங்களில் பல்லாயிரம் லிட்டர் கணக்கான பாலை உட்கொள்கிறோம். இந்தியாவின் தேசிய பானமாக இருக்கும் தேநீரின் அத்தியாவசியமான மூலக்கூறு பால்தான். மனித வாழ்வியலோடு இரண்டறக் கலந்த அம்சமாக விளங்குகிற பாலில், தண்ணீர் கலப்படம் செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவமே, சமீபத்தில் பரபரப்புச் செய்தி. இதன் தொடர்ச்சியாக பாலில் தண்ணீர் மட்டுமல்ல... மைதா மாவு, அரிசி மாவு, சீன பவுடர், யூரியா போன்றவையும் கலக்கப்படுகின்றன என்று வெளியான பட்டியலோ, பால் விரும்பிகளை விழி பிதுங்க வைத்தது. இந்நிலையில் பொதுவாகவே பால் நல்லதா என்கிற ஆராய்ச்சியில் இறங்கினோம்.
“குழந்தை கால்சியம் மற்றும் புரதச்சத்தோடு வளர்வதற்காகத்தான் தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. அதே போல கன்றுக்குட்டியின் ஊட்டச்சத்துக்கென சுரக்கும் மாட்டின் பாலை மனிதன் அபகரித்தது மிகத் தவறானது’’ என்று தொடங்கி விரிவாக விளக்குகிறார் சித்த மருத்துவர் காசிப்பிச்சை.
மாடும் மனித வாழ்வியலும்
மனித இனம் விவசாயம் புரிந்து உற்பத்திச் சமூகமாக மாறிய காலத்திலிருந்து மாடு மனித வாழ்வியலோடு கலந்து விட்டது. விவசாயத் தேவைகளுக்கு மாடு பயன்படுவது போல, அதன் கழிவுகள் மண்ணுக்கு உரமாக மண்ணைச் செழிக்க வைக்கின்றன. விவசாயத்துக்கு உற்ற துணையாக விளங்கும் மாட்டினை வழிபடும் பொருட்டு மாட்டுப்பொங்கல் கொண்டாடும் சமூகத்தினர் நாம். மாட்டிலிருந்து பால் கறந்து அதை வணிகமாக்கியது நம் மரபில் இல்லாத ஒன்று. அன்றைய காலத்தில் காளைகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மாட்டின் பால் கன்றுக் குட்டிகளுக்குத்தான் என்கிற கருத்தியல் எல்லோரிடமும் இருந்தது. தாய் இல்லாத குழந்தை மற்றும் உணவு உட்கொள்ள முடியாத முதியோர்களுக்கு மட்டும்தான் பால் கொடுக்கப்பட்டது.
இதைக் கொண்டு பார்க்கும்போது மாட்டுப் பால் என்பது நம் உணவு முறையில் இல்லாத ஒன்று. 1935ல், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கால்நடைத்துறை உயர் அதிகாரியாக இருந்த லிட்டில் உட் என்பவர் LIVESTOCK OF SOUTHERN INDIA என்ற நூலை எழுதியுள்ளார். ‘பாலுக்காக இங்கு மாடுகள் வளர்க்கப்படவில்லை. பால் என்பது ஒரு வணிகப்பொருள் அல்ல’ என்று அந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார். இன்றைய நிலை என்ன? காளை மாடு வளர்ப்பதைக் காட்டிலும் பசு மாடுகளே அதிகளவுக்கு வளர்க்கப்படுகின்றன. காரணம்... பாலுக்குப் பின்னால் இருக்கும் மிகப்பெரிய சந்தை. இன்றைய தலைமுறையிடம், ‘மாட்டின் பயன் என்ன?’ என்று கேட்டால் பால் கறத்தல் என்கிற பதில் மட்டுமே வரும்!
வேதனையளிக்கும் வெண்மைப்புரட்சி
எந்த ஓர் உயிரினத்துக்கும் தனது கன்றின் எடைக்கு பத்தில் ஒரு பங்குதான் பால் சுரக்கும். நம் மண் சார்ந்த நாட்டு மாடுகளிலிருந்து அதிகபட்சமாக நான்கரை லிட்டர் பால்தான் கறக்க முடியும். அந்த பாலைக் கொண்டு, நாடெங்கிலும் நிலவிய பாலின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. 1970ல், ‘வெண்மைப்புரட்சி’ என்கிற பெயரில் முட்டை, வெண்பன்றி, பால் ஆகியவற்றின் உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போதுதான் 20 லிட்டருக்கும் மேல் பால் கொடுக்கக்கூடிய அயல்நாட்டு மாடுகளான ஜெஸ்ஸி, சிந்து, எச்.எஃப், பிரவுன் ஸ்விஸ், ரெட் டேன் ஆகிய இனங்கள் கொண்டு வரப்பட்டு, நம் மாடுகளோடு கலப்பினம் செய்யப்பட்டன.
எந்த ஓர் உயிரினத்துக்கும் தனது கன்றின் எடைக்கு பத்தில் ஒரு பங்குதான் பால் சுரக்கும். நம் மண் சார்ந்த நாட்டு மாடுகளிலிருந்து அதிகபட்சமாக நான்கரை லிட்டர் பால்தான் கறக்க முடியும். அந்த பாலைக் கொண்டு, நாடெங்கிலும் நிலவிய பாலின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. 1970ல், ‘வெண்மைப்புரட்சி’ என்கிற பெயரில் முட்டை, வெண்பன்றி, பால் ஆகியவற்றின் உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போதுதான் 20 லிட்டருக்கும் மேல் பால் கொடுக்கக்கூடிய அயல்நாட்டு மாடுகளான ஜெஸ்ஸி, சிந்து, எச்.எஃப், பிரவுன் ஸ்விஸ், ரெட் டேன் ஆகிய இனங்கள் கொண்டு வரப்பட்டு, நம் மாடுகளோடு கலப்பினம் செய்யப்பட்டன.
குளிர்ப்பிரதேசங்களில் வளர்ந்த இந்த மாட்டினங்கள் வெப்ப மண்டலப் பகுதிக்கு ஏற்புடையவை அல்ல. இன்று 45 லிட்டர் வரையிலும் இந்த மாட்டினங்கள் பால் தருகின்றன என்றால், இதைச் சாத்தியப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். பால் அதிகம் சுரப்பதற்கு மாட்டின் ஹார்மோனை தூண்டி விடுவதற்காக ஆக்ஸிடோசின் எனும் ஹார்மோன் ஊசி போடப்படுகிறது. பிரசவத்தின்போது கர்ப்பப்பை விரிவடைவதற்காக போடக்கூடிய அந்த ஊசியைப் போடும்போது அந்த மாடு பிரசவ வேதனையோடுதான் பாலை கொடுக்கிறது. ஹார்மோன் ஊசிகளால் சுரக்கும் பாலை குடிக்கும் நமக்கு என்ன ஆகும்? யோசித்துப் பாருங்கள்.
முன்பெல்லாம் 15 வயதுக்கு மேல்தான் பெண் குழந்தைகள் பூப்பெய்துவார்கள். இப்போதோ 9 வயது குழந்தைகள் கூட பூப்பெய்தி விடுகிறார்கள். இதற்குக் காரணம் ஹார்மோன் ஊசியால் சுரந்த பாலைக் குடிப்பதுதான். ஆண்களுக்கோ நேர் எதிர்வினையாக மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. ஆண்மைக்குறைவுக்கு லாட்ஜில் வைத்தியம் பார்க்கும் வைத்தியர்களை தேடி பலர் செல்லக் காரணமும் இதுதான். பெரிய பட்டியலே போடும் அளவுக்கான நோய்களை கொடுப்பதுதான் வெண்மைப்புரட்சியின் சாதனை.
பால் தேவையா?
இயற்கை நியதிப்படி அதனதன் பால் அதனதன் கன்றுகளுக்கு மட்டுமே. மனிதர்களுக்கான பால் தாய்ப்பால்தான். பாலை அருந்த வேண்டிய தேவை நமக்கு என்ன இருக்கிறது? நன்றாக யோசித்தால் ‘பழக்கத்துக்கு அடிமையாகுதல்’ என்பதுதான் முக்கியக் காரணமாக இருக்கும். பாலில் கொழுப்புச்சத்து மற்றும் கலோரிகள் அதிகம். அதை ஜீரணிப்பதற்கு கடின உடலுழைப்பு தேவை. இன்று உடலுழைப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது. நமது வாழ்வியல் சூழல் மாறும்போது அதற்கேற்ற உணவு முறையைத்தான் பின்பற்ற வேண்டும். இறுதியாகச் சொல்லப் போனால் மாட்டுப் பால் நமக்கான உணவு கிடையாது. அதோடு, நம் மண்ணுக்கே தொடர்பில்லாத கலப்பினப் பசுக்களில் இருந்து கறக்கப்படும் கேடு நிறைந்த பால் தேவையே இல்லை!தேவையற்ற உணவுப்பொருளான பாலுக்கு பின்னே இருக்கும் மிகப்பெரும் சந்தை... அந்த சந்தைக்கென தயாரிக்கப்படும் பாக்கெட் பால், பால் பவுடர் போன்றவற்றால் ஏற்படும் விளைவு கள் மற்றும் பால் கலப்படம் குறித்து அடுத்த இதழில் ஆராய்வோம்!
பால் அவசியம் இல்லை!
கால்சியம் சத்துக்காக பால் பரிந்துரைக்கப்படுகிற நிலையில், உணவி யல் நிபுணர் ஷைனி சுரேந்திரனிடம் இது குறித்து கேட்டோம்...‘‘காலம் காலமாக ‘பால் நல்லது’ என சொல்லப்பட்டு வருகிறது. இது மனிதனுக்கு அத்தியாவசிய தேவை அல்ல. பசும்புல் சாப்பிட்டு வளர்கிற மாடுகளை விடவும் செயற்கைத் தீவனங்கள் தின்று வளர்கிற மாடுகளே அதிகம். பல ஊசிகளைப் போட்டு சுரக்கிற பால் நிச்சயம் கேடு விளைவிக்கக் கூடியது. சரும நோய்கள், ஆஸ்துமா, அலர்ஜி போன்ற பிரச்னை உள்ளவர்கள் பாலை தவிர்க்க வேண்டும். பால் தவிர்த்த பலரது உடல்நிலை முன்னேற்றம் கண்டிருக்கிறது.
Lactose intolerance என்கிற தன்மைஉடையவர்கள் பாலை அவசியம் தவிர்க்க வேண்டும்... பால் செரிமானம் ஆகாது. பாலில் கால்சியம், பொட்டாசியம், புரதம், பாஸ்பரஸ், வைட்டமின் A, D, B12 ஆகிய சத்துகள் இருக்கின்றன. இந்த சத்துகளுக்காகத்தான் பால் குடிக்கிறோம் என்றால், ராகி, சாமை, தினை, வரகு போன்ற சிறுதானியங்கள், மீன், முட்டை, இறைச்சி, கறிவேப்பிலை, கீரை, புதினா, மல்லி, கொண்டைக்கடலை, உளுந்து, ராஜ்மா ஆகியவற்றை தினசரி உணவுகளில் சேர்த்துக் கொண்டாலே இந்தச் சத்துகள் கிடைக்கும்.
இன்று பெரும்பாலானோர் பால் குடிப்பது சத்துக்காக மட்டுமல்ல... டீ, காபி பழக்கத்துக்கு அடிமையானதால்தான். பால் பொருட்களை புறக்கணிப்பதால் நமக்கு எந்த வித இழப்பும் இல்லை என்பது உறுதி. ‘பால் பொருட்களையே உட்கொள்ளாமல் வாழ முடியுமா’ என்றால் அதற்கு நல்ல உதாரணம் வீகன் உணவுப் பழக்கமுள்ளவர்கள். சைவ உணவு உண்பவர்களில் வீகன்ஸ் என்கிற பிரிவைச் சேர்ந்தவர்கள், பால் மற்றும் பால் மூலம் தயாரிக்கப்பட்ட எந்த உணவுப்பொருளையும் உட்கொள்வதில்லை. அவர்கள் நல்ல உடல் நலத்தோடுதான் இருக்கிறார்கள். பால் குடித்தே தீர வேண்டும் என நீங்கள் நினைத்தால் செயற்கைத் தீவனங்கள் இன்றி பசும்புல் சாப்பிடும் மாட்டின் பாலைக் குடிக்கலாம்’’ என்கிறார் ஷைனி.
No comments:
Post a Comment