சர்ச்சை சாமியார் ராம்பால் ஆசிரமத்தில் இருந்து அதிரவைக்கும் அளவுக்கு ஆயுதக் குவியல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஹரியானா போலீசார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் போலீசார் கைது செய்ய வந்த போது துப்பாக்கிச் சூடு நடத்தியும் வெடிகுண்டுகளை வீசியும் ராம்பாலின் ஆதரவாளர்கள் 'போர்' தொடுத்தனர். இதனால் ராம்பால் மீது தேசத் துரோக வழக்கு பாய்ந்தது.
நட்சத்திர ஹோட்டல் கட்டமைப்புடன் ராம்பால் ஆசிரமம்! நிலவறையில் இருந்து அதிரவைக்கும் ஆயுதக் குவியல்!!
பின்னர் கடுமையான எச்சரிக்கைகளைத் தொடர்ந்து ராம்பால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் தற்போது போலீஸ் கஸ்டடியில் இருக்கிறார். இந்த நிலையில் ராம்பாலின் பிரம்மாண்ட கோட்டை ஆசிரமத்தில் ஹரியானா சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் நேற்று சோதனை நடத்தினர்.
சண்டிகர்-ஹிசார் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 12 ஏக்கர் பரப்பளவில் ராம்பாலின் ‘சத்லோக்' ஆசிரமம் அமைந்துள்ளது. அதன் நுழைவாயிலில் பக்தர்களை பரிசோதிக்க ‘மெட்டல் டிடெக்டர்' வைக்கப்பட்டுள்ளது.
ஆசிரமம், கோட்டை போன்று கட்டப்பட்டுள்ளது. சுற்றிலும் உயர்ந்த காம்பவுண்டு சுவர்கள் உள்ளன. கண்காணிப்பு கோபுரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பக்தர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சாமியாருக்கு தனியார் கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிக்கின்றனர். அவர்கள் தங்குவதற்கு சிறப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. ஆசிரமத்தின் மையப்பகுதியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரமாண்ட பிரார்த்தனை அரங்கம் கட்டப்பட்டது. அது, 50 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்டது.
அரங்கத்தின் நடுவில், உயரமான மேடை போன்ற அமைப்பு உள்ளது. அங்கு குண்டு துளைக்காத கூண்டு பொருத்தப்பட்டுள்ளது. அதனுள் அமர்ந்துதான் சாமியார் ஆன்மிக போதனைகளை நிகழ்த்துவார்.
பிரார்த்தனை அரங்கத்தை சுற்றிலும் உறுதியான கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு புறம் ஆண்களுக்கும், மறுபுறம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சாமியாரின் போதனைகளை திரையில் காண்பிக்க 3டி புரொஜக்டர் வசதியும் உள்ளது.
ஆசிரமத்தில், 24 குளு குளு அறைகள் உள்ளன. அவை நட்சத்திர ஓட்டல் அறைகளைப் போன்று உள்ளன. அனைத்திலும் குளியலறை இணைப்பு உள்ளது. ஓர் அறையில் ‘மசாஜ்' படுக்கை உள்ளது. மற்றொரு அறையில் ‘ட்ரெட்மில்' வசதி உள்ளது.
4 மாடி கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில், குளு குளு வசதியுடன் கூடிய ஒரு பிரமாண்ட நீச்சல் குளமும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆசிரமத்தில் பிரமாண்ட சமையல் அறை உள்ளது. அதில், ஒரு லட்சம் பேருக்கு ஒரு மாதத்துக்கு சமைத்துப்போட தேவையான பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அங்கு ரொட்டி சுடும் எலெக்ட்ரானிக் எந்திரம் உள்ளது. அதில், ஒரே நேரத்தில் ஆயிரம் ரொட்டிகள் தயார் செய்யலாம்.
இதுதவிர நவீன மருத்துவமனையும் உள்ளது. 10-க்கும் மேற்பட்ட பஸ் மற்றும் வாகனங்களும் உள்ளன.
மேலும் 315 பிஸ்டல்கள், 2 டபுள் பேரல் துப்பாக்கிகள், 3 ரிவால்வர்கள், 19 ஆசிட் நிரப்பப்பட்ட ஏர்கன்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன் ஏராளமான தோட்டாக்களும் கையெறி குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆயுத அறை சாமியார் ராம்பால் அமர்ந்து போதனை செய்யும் உயர்ந்த மாடத்துக்கு கீழே இருப்பதால் யாருக்கும் சந்தேகம் எழாத வகையில் உள்ளது.
மேலும் 800 லிட்டர் பெட்ரோலை பதுக்கி வைத்திருந்ததும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வளவு ஆயுதங்களை ராம்பால் பதுக்கி வைத்தது ஏன் என்பது குறித்து ஹரியானா போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவரை ராம்பால் ஆசிரமத்தில் பதுங்கியிருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 865 ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Samiyarukkum satvigathil nambiklai illai polum.naveena Indiavin rusputin
ReplyDelete