தலையணை – நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மனதை மயக்கும் அமைதியான சூழல் கொண்ட பகுதி.
கோடையின் வெப்பம் எவ்வளவு இருந்தாலும் இங்கு ஓடும் மலையாற்றின் தண்ணீர் குளுமை மாறுவதில்லை. பார்ப்பதற்கே ரம்மியமான சூழலில் இந்த பகுதி காணப்படுகிறது.
தெளிவான கண்ணாடியை போன்று ஆற்றின் நீர் காணப்படுகிறது. மலை பகுதி என்பதால் பாறைகள் நிறைந்தும், சிறு சிறு அருவிகள் நிறைந்தும் காணப்படுகிறது.
ஆகவே கோடையின் கொடிய வெப்பத்திலிருந்து இந்த குளுமையையை அனுபவிக்க சுற்று வட்டாரத்தை சேர்ந்த பலரும் இங்கு வருகின்றனர்.
மாவட்டத்தின் குற்றாலும், அகஸ்தியர் அருவி போன்று சுற்றுலா பயணிகளுக்கு இந்த இடம் பரிட்சயமான இடம் அல்ல. பெரும்பாலும் சுற்றுவட்டார பகுதி மக்கள் மட்டுமே இதனை அறிவர்.
இந்த இடம் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் எல்லைக்குள் உள்ள பகுதி. மேலும் இந்த பகுதியில் மான், மிலா உள்ளிட்ட விலங்குகளும் கோடை காலங்களில் யானை உள்ளிட்டவையும் நடமாடும் பகுதியாகும்.
சமீபத்தில் வனவிலங்குகளை பாதுகாக்க இந்த பகுதிக்கு பொதுமக்கள் செல்வதை உச்சநீதிமன்றம் தடை செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
இங்கு ஒவ்வொரு மரத்தின் மீதும் மரத்தின் வகை, இனம் உள்ளிட்டவை குறித்த பெயர் பலகையும் மக்கள் அறிந்துகொள்வதற்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பகுதிகளில் நடமாடக்கூடிய விலங்குகள் பற்றியும் எச்சரிக்கை பலகைகள் மற்றும் அவற்றின் நிறம், தோற்றம் அவை எந்த இடத்தில் காணப்படும் உள்ளிட்ட குறிப்புகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
இங்கு செல்வதற்கு மலையடிவாரத்தில் உள்ள களக்காடு வன இலாகா அலுவலகத்தில் அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு செல்ல வேண்டும்.
எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி மரங்கள் நிறைந்த காடு என்பதால் அங்கு சமைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மது பாட்டில்கள் கொண்டு செல்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
இங்கு மிகப்பெரிய நூலகம் மற்றும் துயிலகம் ஒன்றும் உள்ளது. ஆனால் அவை எப்பொழுதும் மூடியே வைக்கப்பட்டுள்ளன.
பெண்கள் உடை மாற்றும் அறை மற்றும் சுற்றுபகுதிகளை உயரத்திலிருந்து பார்க்கக்கூடிய வகையில் கோபுரம் ஆகியவையும் உள்ளன.
இங்கிருந்து சுமார் 2 கிமீ தூரத்தில் பச்சையாறு அணை உள்ளது. சுமார் 15 கி.மீ தூரத்தில் செங்கல்தேரி என்ற இடம் உள்ளது. இங்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உயரமான இந்த பகுதிகளில் தான் கொடிய விலங்குகள் உள்ளன.
இந்த பகுதியை குறித்து இந்த மாவட்டத்தின் மக்கள் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
மலைப்பகுதி என்பதால் இங்கு போடப்படும் சாலைகளும் மலை வெள்ளத்தில் விரைவில் பழுதாகி விடுகின்றன. இதனால் இப்பகுதிக்கு செல்லும் பாதையும் சற்று கரடு முரடாகத்தான் காட்சியளிக்கின்றன.
ஒருமுறை சென்றால் மீண்டும் செல்ல தூண்டும் பகுதியாக தலையணை உள்ளது.
No comments:
Post a Comment