பிறந்த குழந்தைக்குக் குறைந்தபட்சம் மூன்று மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்' என்றுதான் அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம் என்று அனைத்து வகை மருத்துவர்களும் வற்புறுத்துகிறார்கள். ஆனால், இந்த நவீன உலகில் ’எனக்கு பாலே சுரக்கவில்லை டாக்டர்' என்று சொல்லும் பெண்கள்தான் பெருகி வருகிறார்கள்.
சமீபத்தில் சென்னையில் இதற்கென நடந்த பயிற்சிப் பட்டறையில் மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், கல்லூரி மாணவிகள் என பலர் பங்கேற்றனர். இதை ஏற்பாடு செய்திருந்த இந்தியப் பாரம்பர்ய அறிவியல் நிலையத்தின் இயக்குநர் பாலசுப்ரமணியம் பேசும்போது, ”உடல் ஆரோக்கியத்துக்கான நெல் ரகங்கள் பற்றி தேடியபோது, ஆயுர்வேதம் மற்றும் சித்தா நூல்களில் சுமார் 300 வகையான ரகங்கள் பற்றிய பட்டியல் கிடைத்து ஆச்சர்யமானோம். ”வறட்சியான பகுதியில் விளையக்கூடிய நெல் ரகங்கள், எளிதாக செரிமானமாகிவிடும். அதிக நீர் தேங்கும் பகுதியில் விளையும் நெல் ரகங்கள் செரிமானமாவதற்கு அதிக நேரம் எடுக்கும். அறுவடை செய்த நெல்லை அரிசியாக்கினால், 6 மாதங்கள் கழித்தே பயன்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் 3 மாசங்கள் கழித்தாவது பயன்படுத்த வேண்டும். கருங்குறுவை என்ற ரகம் தோல் வியாதி, விஷக்கடி போன்றவற்றுக்கு ஏற்றது. கிச்சிலி சம்பா உடல் ஆற்றலுக்கும், சீரக சம்பா செரிமானத்துக்கும் உகந்தது' என்பது போன்ற குறிப்புகளும் ஆயுர்வேதம் மற்றும் சித்தா நூல்களில் உள்ளன'' என்று பெருமையோடு சொன்னார்.
அரிசி ரகங்கள் ஆய்வுகள் குறித்துப் பேசிய எத்திராஜ் மகளிர் கல்லூரியின் உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை உதவிப் பேராசிரியர் மேனகா, ”இந்த ஆய்வுக்கு கருங்குறுவை, நீலம்சம்பா, காலா நமக், குள்ளகார், பெருங்கார், மாப்பிள்ளைச் சம்பா, குடவாலை, கவுனி ஆகிய 8 பாரம்பர்ய ரகங்களை எடுத்துக்கொண்டோம். ஒப்பீட்டு ஆய்வுக்காக இன்று மக்கள் அதிகமாக பயன்படுத்தும் வெள்ளைப் பொன்னி அரிசியையும் எடுத்துக்கொண்டோம். ஆய்வின் முடிவுகள், பாரம்பர்ய நெல் ரகங்களைக் கொண்டாட வைக்குமளவுக்கு இருக்கின்றன. உதாரணமாக... கருங்குறுவை ரகத்தில், வெள்ளைப் பொன்னியைவிட நாலு மடங்கு இரும்புச் சத்து கூடுதலாக உள்ளது. நீலம்சம்பா ரகத்தில் கால்சியம் கூடுதலாக உள்ளது. குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது வழக்கம். இதற்குப் பதிலாக நீலம்சம்பா அரிசியை சாப்பிடப் பரிந்துரைக் கும் அளவுக்கு, இதில் கால்சியம் சத்து உள்ளது. எங்கள் ஆய்வின் முடிவுகள், ஆயுர்வேதம், சித்தா இரண்டிலுமே ஏற்கெனவே இருக்கும் குறிப்புகளுடன் பொருந்திப் போவது ஆச்சர்யமே!
பொதுவாக வீடுகளில் நாம் பயன் படுத்தும் அரிசி வகை களில் ரத்தத்தில் சர்க்கரையை அதிகப் படுத்தும் காரணிகள் அதிகமாக இருக்கின்றன. வெறும் வயிற்றில் இருக்கும் போது சராசரியாக 80 - 90 என்ற அளவில்தான் சர்க்கரை யின் அளவு இருக்க வேண்டும். ஆனால், ஆய்வில் பங்குபெற்ற மாணவிகளுக்கோ... 100க்கு மேல் இருந்தது'' என்றவர்,
''நமது உடல், பெரும் பெரும் நோய்களுக்கு இலக்காவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவைதான் பாரம்பர்ய ரக அரிசிகள் என்று தெரிந்தபிறகு, அவற்றை நாடாமல் இருப்போமா என்ன?!'' என்கிற பாஸிட்டிவ் கேள்வியுடன் முடித்தார் மேனகா.
பாரம்பர்ய நெல் ரகங்களின் விலை குறித்து நாகப்பட்டினம் மாவட்டம், வளநாடு தற்சார்பு வேளாண் நிறுவனத்தின் செயல் இயக்குநர் சுபாஷினி யிடம் கேட்டோம். ''சென்னை உள்பட பல இடங்களிலும் இயற்கை விளைபொருள் அங்காடிகள் (Organic Stores) செயல்படுகின்றன. இங்கெல்லாம் பாரம்பர்ய ரக அரிசி வகைகள் விற்பனைக்குக் கிடைக்கும். இல்லை என்றால் பாரம்பர்ய நெல் ரகங்களை பயிர் செய்யும் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களைத் தொடர்புகொண்டு நேரடியாக வாங்கிக்கொள்ளலாம்'' என்றவர், தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பாரம்பர்ய அரிசி வகைகளின் உத்தேச விலையையும் பட்டியலிட்டார்.
No comments:
Post a Comment