இளம்வயதிலேயே நரை, டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கும்போது பரு, பொடுகு, கம்ப்யூட்டரையும் டி.வியையும் பார்த்துக் களைத்ததால் கண்களுக்கடியில் நிரந்தரமாகிப் போன கரு வளையங்கள்... இன்றைய தலைமுறை இந்தப் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. ரசாயனப் பூச்சுகள் நிறைந்த அழகுசாதனப் பொருட்களே இதற்கெல்லாம் முதல் காரணம். ‘‘வீட்டிலேயே இதற்கெல்லாம் நிவாரணம் இருக்கிறது’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த மாதவி.
‘‘அடிப்படையில நான் ஒரு பியூட்டிஷியன். அழகுக்கலை படிக்கிறபோதே, அனாவசியமான கெமிக்கல் கலந்த எந்தப் பொருளையும் உபயோகிக்கக்கூடாதுனு ஒரு கொள்கையை ஏற்படுத்திக்கிட்டேன். பயிற்சியை முடிச்சதும், மகளிர் குழு மூலமா என் பிசினஸ் வெற்றிகரமா ஆரம்பிச்சது. எனக்குத் தனிப்பட்ட முறையில நானே தயாரிச்சு உபயோகிக்கிற சீயக்காய் தூள், பொடுகு விரட்டும் பேக், முகத்துக்கான பேக், கருவளையத்தை நீக்கும் பொடிகளைத்தான் வாடிக்கையாளர்களுக்கும் உபயோகிப்பேன்.
அதோட பலனைப் பார்த்துட்டு, நிறைய பேர் வீட்டுக்குக் கேட்க ஆரம்பிச்சாங்க. அப்பதான் அதை ஒரு பிசினஸா செய்யற எண்ணம் வந்தது. சீயக்காய், பொடுகு நீக்கும் பொடி, உடம்பு தேய்ச்சுக் குளிக்கிற பொடி, பருவை விரட்டும் பொடி, கருவளையங்களை நீக்கும் பொடின்னு எல்லாத்தையுமே விற்பனைக்குக் கொடுக்க ஆரம்பிச்சேன். இதெல்லாம்தான் கடைகள்ல கிடைக்குதேனு கேட்கலாம்.
அப்படிக் கிடைக்கிற எல்லாமே சரியான பக்குவத்துல, சரியான கலவையில தயாரிக்கப்படறதில்லை. சில வகை மூலிகைகளோட சிலதை சேர்க்கக் கூடாது. அப்படிச் சேர்த்தா, எதிர்மறையான விளைவுகள் வரலாம். எந்தெந்தப் பொருள்களை, எந்த அளவுல சேர்க்கணும்னு முறைப்படி படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டு, பல வருஷம் உபயோகிச்ச அனுபவத்தோட நான் செய்யறேன்’’ என்கிற மாதவி, தனது தயாரிப்புகளுக்கான பொருள்களை தேடித் தேடி வாங்கிச் சேர்க்கிறார்.
‘‘எல்லாருக்கும் அழகா இருக்கணும்ங்கிற எண்ணம் நிச்சயம் இருக்கும். ஆனா எல்லாருக்கும் பார்லர் போக விருப்பமோ, நேரமோ இருக்கும்னு சொல்ல முடியாது. அவங்களுக்காகத்தான் இந்தத் தயாரிப்புகள். முதல்ல உங்களுக்குத் தேவையானதை செய்து ட்ரை பண்ணிப் பாருங்க. உங்க தோற்றத்துல தெரியற மாற்றத்தைப் பார்த்துட்டு, மத்தவங்களும் கேட்க ஆரம்பிப்பாங்க. அப்போ, இதை ஒரு பிசினஸா எடுத்துச் செய்யலாம். அழகும் லாபமும் நிச்சயம்’’ - அனுபவத்தை வைத்துச் சொல்கிறார் மாதவி.
முதலீடு: ரூ. 2 ஆயிரம் (5 வகையான பொடிகளுக்கு)
லாபம்: 50 சதவீதம்
பயிற்சிக்கு: 300 ரூபாய் (ஒரே நாள் பயிற்சி)
- ஆர்.வைதேகி
No comments:
Post a Comment