பசி வந்தபின்பு சாப்பிடுங்கள். அப்போதுதான் சரியாக உண்ண முடியும். பசிக்கு சாப்பிடுங்கள். ருசிக்கு சாப்பிடாதீர்கள்.
உணவில் ருசி அவசியம்தான். ஆனால் ருசிக்கு மட்டுமே உண்ணாதீர்கள், அது வயிற்றுக்கு சரிவராது. சிலருக்கு சரியாக பசி எடுக்காது. அப்படி இருப்பவர்கள் மூன்று வேளை உணவையும் சரியான நேரத்துக்கு சாப்பிட்டுவிடுங்கள். பசி இல்லையென உண்ணாமல் இருக்காதீர்கள், அது வயிற்றில் அமிலசுரப்புக்கு காரணமாகிவிடும்.
திட்டமிட்டு உண்ணுங்கள். நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் சரிவிகித அளவில் கிடைக்கும்படி உணவு இருக்கவேண்டும். உப்பு, இனிப்பு, கொழுப்பு இந்த மூன்று பூக்களும் நம் உடலுக்கு முதல் எதிரி என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அதற்காக இவற்றை முற்றிலும் தவிர்க்கவும் கூடாது. அளவோடு எடுத்துகொள்ள வேண்டும். காரத்தையும் அளவோடு சேர்த்துக்கொள்ளுங்கள்.
வயதுக்கேற்ற எடையும் உயரத்துகேற்ற எடையும் நமக்கு இருக்க வேண்டும். அதிகரிக்கும் உடல் எடை பல வியாதிகளுக்கு காரணமாக அமைகிறது. எனவே எடை விஷயத்தில் மிகவும் கவனமாக இருங்கள். வயிறு முட்ட சாப்பிடாதீர்கள், முக்கால் வயிறு சாப்பிட்டாலே போதும். குறிப்பாக காலை உணவை தவிர்க்காதீர்கள். அதுவே ஆரோக்கியத்தை பாதிக்கும். இரவு உணவுக்கும் காலை உணவுக்குமான இடைவெளி ஏறக்குறைய 12 மணி நேரம். நீங்கள் காலை உணவையும் தவிர்த்தால் மூளை மிகவும் சோர்வடைந்துவிடும். இதனால் நரம்புகளின் இயக்கங்கள் பாதிக்கப்பட்டு வியாதிகளுக்கு வரவேற்பு சொல்வதாக ஆகிவிடும். அதுபோல் இரவு உணவையும் தவிர்க்காதீர்கள். அது உடல் பருமனுக்கு காரணமாகிவிடும்.
பழங்கள், காய்கறிகள், கீரைகள்,தேன், பருப்பு வகைகள் போன்றவைகளை அதிகமாக உண்ணுங்கள். எண்ணையில் பொரித்தவை, நெய்யில் செய்தவை, வெள்ளை சீனி போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்கப் பாருங்கள். உணவே மருந்து என்பதே நிஜம். உணர்ந்து உண்ணுங்கள், ஆரோக்கியத்தை பேணுங்கள்!
No comments:
Post a Comment